ஏகாதிபத்திய யுத்தங்கள் வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்புகின்றது. அன்று யூக்கோசிலோவோக்கியாவை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உடைத்து அதைச் சிதைத்த போது, அது வெளிப்படையற்ற ஏகாதிபத்திய பனிப்போராகத் தான் அம்பலமாகாது அரங்கேறியது.
இந்த யுத்தங்களுக்கு காரணங்கள் என ஏகாதிபத்தியங்கள் எதைக் கூறினாலும், இந்த யுத்தத்தின் அடிப்படையான நோக்கம் உலகை தமக்கு இடையில் மீளப் பங்கிடுவதுதான். ஏகாதிபத்திய பொருளாதார நலன்கள் தான், இந்த யுத்தங்களுக்கு அடிப்படையான காரணமாகும். அதாவது உலகை சூறையாடி மூலதனத்தை குவித்து வைத்திருக்கின்ற கொள்ளைக்காரக் கும்பலின் நலன்கள் தான், இங்கு யுத்தமாகின்றது. செல்வத்தை பறிகொடுத்த மக்கள், மீளப் பலியிடப்படுகின்றனர்.
தேசபக்தி, ஜனநாயகம், சுதந்திரம் என எல்லாம், மூலதனத்தின் தேவைக்கும் நலனுக்கும் அப்பாற்பட்டதல்ல. இதற்கு ஏற்ப நாடுகளைப் பகிர்வதும், கவிழ்ப்பதும், தான் ஏகாதிபத்திய யுத்த தந்திரம். இந்த யுத்த தந்திரம் தான், அமைதி சமாதானம் பற்றி அனைத்து பீற்றல்களின் பின்னுள்ள நலனாகும். உலக மக்களைத் தமது சந்தைக்கு அடிமைப்படுத்த, சந்தைகளை கைப்பற்றுவதும் இதற்கு ஏற்ப இராணுவ மண்டலங்களை உருவாக்குவதும் தானே, ஏகாதிபத்தியத்தின் நலன்களாகும். ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம் இதற்கு உட்பட்டது தான்.
இப்படி இதற்குள் ஏகாதிபத்தியம் நடத்திய பனிப்போர், வெளிப்படையான ஒரு யுத்தமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி, ஏகாதிபத்தியங்களின் முரண்பட்ட நலன்கள் தீவிரமான இராணுவ வடிவங்களாக மாறிச்செல்லுகின்றது. உலகமயமாக்கல் மூலதனத்தின் ஏகாதிபத்திய முரண்பாட்டை இல்லாதாக்கிவிடவில்லை. இது மேலும் தீவிரமாகிவிட்டது. உலகை மறுபடியும் ஒரு உலகயுத்த விளிம்பிற்கு இட்டுச்செல்லுகின்றது.
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விரும்புவது என்ன? தமது சொந்த பொருளாதார -இராணுவ மேலாண்மையைத் தான். இதுதான் நெருக்கடியின் மையம். தாம் அல்லாத எந்த நாடும், சுதந்திரமாக செயற்படக் கூடாது என்பதே, இவர்களின் உலக சர்வாதிகாரமாகும்.
தம்மை விட மற்றைய ஏகாதிபத்தியங்கள், செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கக் கூடாது என்பது தான், இவர்களின் உலக ஒழுங்காகும். இந்த வகையில் தான் அணுவாயுதத்திலும், தமது மேலாண்மையை பாதுகாக்க விரும்புகின்றது. இந்தியா போன்ற நாடுகள் மேலான அணு மேலாதிக்கத்தை பெறுவதைத் தடுக்க, இவர்கள் திணிப்பது அடிமை ஒப்பந்தங்களையே.
இப்படி தமது இராணுவ மேலாண்மை மூலமும், பொருளாதார மேலாண்மை மூலமும் உலகை அடிமைப்படுத்தி ஆள முனைகின்றது ஏகாதிபத்தியங்கள். தமக்கு ஏற்ற பொம்மை ஆட்சிகளை நிறுவுகின்றன. இதற்கேற்ப இலஞ்சம் கொடுத்தும், கவிழ்ப்புகளைச் செய்தும், உள்நாட்டு முரண்பாடுகளை உருவாக்கியும், தமது பொம்மை ஆட்சிகளை நிறுவுகின்றனர். இதன் மூலம் உலகம் தழுவிய அடிமை ஒப்பந்தங்களைச் செய்கின்றனர்.
இதேபோல் தான் ருசியாவில் நடந்தது. 1980 -1990 களில் ருசியாவின் போலிக் கம்யூனிசத்தை மட்டும் அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் சிதைக்கவில்லை. இதற்கு அப்பால் அதன் பலத்தை உடைக்கும் வண்ணம், ருசியாவை பல துண்டுகளாகவே பிளந்தனர். இதுபோல் ருசியாவின் செல்வாக்கில் இருந்த யூக்கோசிலோவாக்கியாவையும் பல கூறுகளாக பிளந்தனர். செக்கோசிலோவோக்கியாவையும் பிளந்தனர்.
இதன் மூலம் சுயமாக சொந்த பலத்தில் நிற்க முடியாத வகையில், நாடுகளைப் பிளந்து அடிமைப்படுத்தினர். தமது பொருளாதார - இராணுவ கைப்பொம்மைகளைக் கொண்ட ஒரு உலக மேலாதிக்கத்தையே, அமெரிக்க - ஜரோப்பா ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியது.
தமக்கு போட்டி ஏகாதிபத்தியம் என்ற எதிர்மறை அம்சத்தை அனுமதிப்பதில்லை. ஜனநாயகத்தின் பெயரில், பொருளாதார அடிமைத்தனத்தையே உலகமயமாக்கினர். உலகமயமாதல் என்ற அடிமைத்தனத்தை நாடுகள் ஏற்று நடப்பது தான், அமெரிக்க - ஜரோப்பா ஏகாதிபத்தியம் முன்மொழியும் ஜனநாயகம்.
இதை நிறுவ இவர்கள் கெடுபிடி யுத்தத்தை உருவாக்குகின்றனர். இனப்பிரச்சனைகளை, மதப்பிரச்சனைகளைத் தூண்டி, உலகை தமக்கு ஏற்ப பங்கிடுகின்றனர். இதனால் அடிபட்ட பாம்பாக பதுங்கிக் கிடந்த ருசியா, மறுபடியம் ஏகாதிபத்திய கனவுடன் அரங்கில் வெளிப்படையாக நுழைகின்றது.
இந்த ருசிய ஏகாதிபத்தியம் என்ன செய்கின்றது. அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எந்த இன அடிப்படையைத் தூண்டி நாடுகளை பிளந்தனரோ, அதையே தனது சொந்த ஆயுதமாக கொண்டு தனக்கு எதிரான பிரதேசங்களை பிளக்கவும் ஆக்கிரமிக்கவும் சுற்றி வளைக்கவும் தொடங்கியுள்ளது.
அமெரிக்க - ஜரோப்பிய ஏகாதிபத்தியங்கள் கையைப் பிசைந்தபடி நெளிகின்றது. தமது பொருளாதார – இராணுவ கூட்டாளிகளை காப்பாற்ற முடியாது திணறுகின்றனர். தமது செல்வாக்கு மண்டலம் பறிபோகாத வண்ணம், யுத்த நிறுத்தம் முதல் பல அமைதி நாடகங்களை ஆடுகின்றனர். பிரஞ்சு ஜனாதிபதி உலகை ஆளும் அமெரிக்காவுக்கு நிகரான அற்ப கனவுடன், களமிறங்கி அமெரிக்க - ஜரோப்பா ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கு மண்டலத்தை பாதுகாக்க முனைகின்றார்.
உண்மையில் ஏகாதிபத்திய நலன்களே, இங்கு யுத்தத்தின் மூலமாக உள்ளது. உலகின் உழைக்கும் மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பல்களின் நலன்களை பாதுகாக்கவே, நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் அலைகின்றன. ஓநாய்கள் போல் உலக மக்களை கடித்து குதற ஏகாதிபத்தியங்கள் முரண்பாட்டுடன் அலைகின்றன.
உழைக்கும் மக்களின் வாழ்வுக்கு வேட்டுவைக்கவே, இவர்கள் ஜனநாயகம் மனிதவுரிமை சுதந்திரம் என்று கூச்சல் போடுகின்றனர். இவர்களின் நலன்களுக்கு ஏற்ப தாளம் போடும் ஜனநாயக ஆட்சியாளர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிமைப் பொம்மைகளே. எதிர்க்கட்சிகள் கூட, குறைந்தபட்சம் எதிர் ஏகாதிபத்தியத்தின் எல்லைக்கு உட்பட்ட அடிமைகள் தான்.
ஜோர்ஜிய ஆட்சியாளர்கள் அமெரிக்க - ஜரோப்பிய ஏகாதிபத்தியங்களின், பொருளாதார இராணுவ கைப்பொம்மைகள் தான். எதிர்க்கடசியோ ருசியாவின் கைப்பொம்மைகள்.
இப்படி மக்களை மூலதனத்துக்கு விற்பதற்கும், ஏகாதிபத்திய தேவைக்கு ஏற்ப நாட்டை மறுகாலனியாக்கவுள்ள மக்கள் விரோதிகள் தான் இன்றைய ஆட்சியாளர்கள். இவர்களை மக்கள் தெரிவு செய்வது என்பது, கடையில் பொருளை வாங்குவது போல் தெரிவற்ற திணிப்புகள் தான்.
இதன் அரசியல் அடிப்படை சதியும், சூதுமாகும். பொய்யும், புரட்டும், இதன் சமூக விழுமியமாகும். இதுவோ விளம்பரத்துடன் கூடிய, அற்பத்தனத்துடன் மக்கள் மேல் திணிக்கப்படுகின்றது. மனித சமூகத்துக்கு எதிரான, ஏகாதிபத்தியத்துக்கு சேவைசெய்யும் சமூகவிரோத செயல்கள் தான், இவர்களின் அரசியல்.
மக்களின் வாழ்வுக்காக, அவர்களின் சுபீட்சத்துக்காக எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. மாறாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய உள்நாட்டு யுத்தங்களையும், சமூக இழிவுகளையும், சமூக முரண்பாடுகளையும் புகுத்தி, அதன் மூலம் ஆட்சியில் அமர்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்திய பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்குவதுடன், ஏகாதிபத்தியங்களின் பொருளாதார - இராணுவ முரண்பாட்டுக்கு துணைபோகின்றனர்.
இதனால் முழு மக்களின் வாழ்வு பறிபோகின்றது. மக்களின் அவலம் பெருகுகின்றது. உலகை மீளப் பங்கிடும் ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் மூலம், முழு உலக மக்களையும் அழிக்க முனையும் ஒரு முன் முயற்சி தான், இன்றைய ஜோர்ஜியாவில் நடக்கும் யுத்த முன்னோட்டமாகும்.
பி.இரயாகரன்
13.08.2008