Language Selection

வே. மதிமாறன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முற்போக்காளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதே தவறு என்று சொல்கிறீர்களா?

-எஸ். ரமேஷ்.

 

ம்முடைய கருத்தை வெகுஜன ஊடகங்களில் சொல்வது ஒரு நல்ல வாய்ப்புதான். ஆனால் பெரும்பான்மையான முற்போக்கு முகாமை சேர்ந்த எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை பிரபலப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தை விடவும் தன்னை பிரபலபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள்.

 அவர்கள் எழுத்தும் அதைதான் உணர்த்துகிறது. தான் சார்ந்து இருக்கிற கொள்கைகளுக்கு குழி தோண்டுவதாக இருந்தாலும் பரவாயில்லை. தன்னை அங் கீ கரித்தால் போதும், என்கிற தொனி துக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் பிரபலமாகுகிறார்கள். அவர்கள் எழுதிய விஷயங்கள் மறந்தே போகிறது.

 

 

பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்காக எழுதுவதாகவும், பத்திரிகை  நடத்துவதாகவும் ஆரம்பிக்கிற இளைஞர்கள், ஒரு பார்ப்பனர் அரையாண்டு சந்தாவாக ரூ. 50 கட்டினாலோ அல்லது பார்ப்பனர்கள் தன்னை பாராட்டி விட்டாலோ தங்கள் பார்ப்பன எதிர்ப்பை மூட்டை கட்டி விட்டு - அணு உலை எதிர்ப்பு, சுற்று சூழல், நவீன கவிதை, என் கவுண்டர் கொலைகள் எதிர்ப்பு, அலிகள் முன்னேற்றம், ஒலிம்பிக், சினிமா, உலக அதியசங்கள் என்று.. அதாவாது பார்ப்பனர்கள் மனது கோணாமால், பார்ப்பனர்களோடு சேர்ந்து  ‘ஒரு என்.ஜி.ஓ பிராஜக்ட்’ மாதிரி கும்மி அடிக்கிறார்கள்.

 

இந்தியாவிற்கு என்றே இருக்கிற பிரேத்தியேகமான, முதன்மையான பிரச்சனையான ‘சாதி ஆதிக்கம், தீண்டாமை, இந்து மத தீங்கு போன்றவற்றை எழுதாமல் முற்போக்காளர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்’  என்ற சந்தர்ப்பவாதத்திலேயே துவங்குகிறார்கள், இன்றைய இளைஞர்களும்.

 

கொள்கைக்காக பத்திரிகை என்று ஆரம்பித்து, பிறகு பத்திரிகை நடத்துவதே கொள்கையாக மாறிபோகிறார்கள்.

 

ரஷ்ய புரட்சிக்கு பின் தலைவர் லெனின் தலைமையில் அமைந்த சோசலிச குடியரசை எதிர்த்து உலகம் முழுக்க உள்ள முதலாளித்துவ நாடுகளும், முதலாளிகளும் தங்கள் பத்திரிகைகளில் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு உள்ளூரில் இருந்த எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் பணம் மற்றும் ஆயுதம் கொடுத்து உதவின.

 

1918 முதல் 1922 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தமும், அன்னிய தலையிடும் தலைவர் லெனின் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ‘முடிந்தது சோவியத் குடியரசு’ என்று முதலாளித்துவ பத்திரிகைகள் உலகம் முமுவதும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

 

இந்த நெருக்கடியான காலத்தில் தலைவர் லெனின் பல வெளிநாட்டு பத்திரிகையாளர்களை தானே விரும்பி அழைத்துச் சந்திக்கிறார், ஒரு நிபந்தனையுடன்.

 

“எனது பதில்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பத்திரிகைகளில் முழுமையாக வெளியிடப்படும் என்று எழுத்து மூலம் தரப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்ற நிபந்தனையின பேரில் எனக்கு அளிக்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுதான் அந்த பேட்டியை துவங்குகிறார்.

 

பேட்டியில் முழுக்க முழுக்க முதாலாளித்துவ நாடுகளையும் முதலாளிகளையும் அவர்களின் ஊடகங்களையும் காறி உமிழ்ந்து, சவாலுக்கு அழைக்கிறார் தலைவர் லெனின்.

 

அமெரிக்க பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியிருந்து சில வரிகளை உதாரணத்திற்கு தருகிறேன்.

 

“அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருட்டு முதலாளிகளை ருஷ்ய விவசாயிகள் வீரத்தோடு எதிர்த்து நிற்கின்றனர்”

 

“முதலாளிகளால், பூர்ஷ்வா வர்க்கத்தால் ‘அதிகப்பட்சம்’ இன்னமும் சில லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகளைச் சுட்டுக் கொன்று ஏதாவது ஒரு தனிப்பட்ட நாட்டில் சோசலிசத்தின் வெற்றியைத தள்ளிப் போட முடியும். ஆனால் முதலாளித்துவத்தைக காப்பாற்ற அவர்களால் முடியாது.”

 

“சோவியத் அரசாங்கங்களைத் தவிர மற்றெல்லா அரசாகங்களும் ஒடுக்குமுறை, வெகு ஜனங்களை ஏமாற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன.”

 

வெகு ஜன ஊடகங்களை நம் கொள்கைகளை சொல்வதற்கு எப்படி பயன்படுததுவது என்று தலைவர் லெனின் காட்டிய வழி இது.

 

நமது முற்போக்கு எழுத்தாளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதை தவறு என்று சொல்லவில்லை. அதில் எழுதுகிற காரணத்திற்காகவே, அந்த இதழ்களின் வர்த்தக நோக்கத்திலான கீழ்த்தரமான செய்திகளை இவர்கள் வெளியில் கூட கண்டிப்பதே இல்லை. (பல எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை எப்படி வேண்டுமானாலும் வெட்டி, மாற்றினாலும் பரவாயில்லை. பிரசுரமானல் போதும் என்கிற பரிதாப நிலையில் வெகுஜன ஊடகங்களில் ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்கள்.)

தான் சார்ந்திருக்கிற கொள்கைக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடும்போது கூட அவர்கள் ஒரு பற்றற்ற ஞானியைப் போல் நடந்து கொள்கிறார்கள்.

 

இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.

13 08 2008

http://mathimaran.wordpress.com/2008/08/13/articale-108/