Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த கேள்வி இலங்கையின் இன்றைய சூழலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தாக மாறிவிட்டது. அன்னிய தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகவே, இன்றைய அரசியல் போக்கு வலிந்திழுக்கின்றது. எப்படி யுத்த வெறியர்களின் யுத்தத்தை இன்று மக்களால் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றதோ, அதேபோல் இந்த அன்னிய தலையீட்டையும் தடுத்து நிறுத்தும் நிலையில் மக்கள் இல்லை.

அன்னிய தலையீடு நிகழும் போது மக்களின் சமூக பொருளாதார எதிர்காலம், இன்று உள்ளதைவிடவும் மிக மோசமாகும். இன்று நிகழவுள்ள அன்னிய தலையீட்டை தீர்மானிப்பதில், புலிகள் மற்றும் பேரினவாதத்தின் குறிப்பான நடவடிக்கைகளே தீர்மானகரமான ஒன்றாக மாறியுள்ளது. நாளாந்த மக்கள் மீதான பாரிய படுகொலைகள் முதல் பெரியளவில் அகதியாகும் நிகழ்ச்சிகள் மூலம் இந்த அன்னிய தலையீட்டுக்கான சூழல் சிருஸ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை விவகாரத்தில் அன்றாடம் அன்னிய நாடுகளின் தொடர்ச்சியான அரசியல் எதிர்வினைகள் அனைத்தும், சமகாலத்தில் தீர்க்கமான ஒரு தலையீடடுக்கான அரசியல் முடிவை நோக்கி நகர்த்துகின்றது.

 

இலங்கைப் பிரச்சனையை புலிகளும் இலங்கை அரசும், தமக்கிடையில் சுமுகமாக தாமே பேசித் தீர்க்கத் தவறுகின்ற ஒவ்வொரு நிமிடமும், அன்னிய தலையீடு எதார்த்தமான ஒன்றாக மாறி வருகின்றது. இந்த தலையீடு பேரினவாதத்தின் விட்டுக்கொடுப்புக்கு எதிரானதாகவும், புலிப்பாசிசத்துக்கு எதிரானதாகவும் அமையும். ஆனால் இது மக்கள் சார்பானதாக அமையாது ஏகாதிபத்தியம் சார்பானதாக அமையும். அதாவது இது தமிழ்மக்கள் பெயரில், ஏகாதிபத்தியம் தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பர். இது புலியின் விருப்பத்தையும், பேரினவாதத்தின் பேரினவாத நிலையையும் மறுதலிக்கும். மிகச் சிறந்த உதாரணமாக இந்திய ஆக்கிரமிப்பு 1987 இல் நடந்த போது, இந்தியா தாம் விரும்பிய ஒரு தீர்வை எப்படி முன்வைத்ததோ, அப்படியான ஒரு நிலையில் நிகழும். ஆனால் இந்த தலையீட்டுக்கான சூழல், முன்பு இந்தியா தலையிட்டது போல் அல்லாது, உலகம் தழுவியதாகவே அமையும்.

 

ஏன் அன்னிய தலையீடு இன்னமும் இலங்கையில் நடக்கவில்லை

 

இலங்கையில் இன்றுவரை ஒரு அன்னியத் தலையீடு நடக்கவில்லை என்றால், அதற்கு காரணம் பேரினவாதத்தின் பேரினவாத நிலையே ஒழிய, புலிகள் நிலையல்ல. புலிகளின் அன்றாட நடவடிக்கைகள், அன்னிய தலையீட்டை நடத்தும் வகையில், அதை தூண்டும் வகையில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது. அன்னிய தலையீட்டை நியாயப்படுத்தும் வகையில், அதற்கு பக்கபலமாகவே புலி நடவடிக்கைகள் அமைகின்றது. அதேநேரம் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு தாம் விரும்பிய ஒரு தீர்வைக் கூட முன்வைக்க மறுக்கின்ற ஒரு சூழல் தான், அன்னிய தலையீட்டை பின் போடவைக்கின்றது. இந்த அரசியல் எதார்த்தம் சார்ந்த உண்மை ஊடாகத்தான், நாம் அன்னிய தலையீட்டை எதிர்கொள்ளும் அரசியல் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

 

பேரினவாதம் தமிழ் மக்களுக்கு தான் விரும்பும் ஒரு அரசியல் தீர்வை வைத்தாலே, அன்னிய தலையீடு உடனடியாக நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தீர்வை பேரினவாதம் புலிகளுக்கு வைக்க வேண்டிய அவசியத்தை அடிப்படையாக கொண்டதல்ல. அது போல் தமிழ்மக்கள் முன் வைப்பதையும் அது கோரவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்தின் முன் இதை வைக்க கோருகின்றது. இந்தத் தீர்வை புலிகளுக்கு அல்ல, தமிழ் மக்களுக்கு அவர்களின் பெயரில் வைப்பதன் மூலம், புலிகளை தனிமைப்படுத்தி அதை அமுல்படுத்த அன்னிய தலையீடு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அன்னிய தலையீடு பேரினவாதத்தின் நிலையால் தடைப்பட்டுள்ளதே ஓழிய, புலியின் நடவடிக்கையால் அல்ல.

 

பேரினவாதம் தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு தீர்வைத்தன்னும் வைக்க மறுக்கின்ற நிலையில் தான், புலிகளின் அரசியல் இருப்பு தப்பிப் பிழைக்கின்றது. இதுவே அன்னிய தலையீட்டை பின்போடுகின்றது. இதுவே சர்வதேச ரீதியாக புலித்தடையை மென்மையானதாக்குகின்றது. இதற்கு வெளியில் எதுவுமல்ல.

 

புலிகளின் உப்புச்சப்பற்ற பாசிச அரசியல் இதை தடுத்து நிறுத்தாது. அதனால் ஊளையிடவும், பொய்யையும் புரட்டையும் வக்கிரமாக புனையவும் முடியும். அவையும் உடனுக்கு உடன் அம்பலமாகி தலைவிரி கோலமாகிவிடுவதே நிகழும்.

 

அன்னிய தலையீட்டை வலிந்திழுக்கும் புலி நடவடிக்கை

 

அன்னிய தலையீட்டை வலிந்திழுக்கும் வகையில், புலி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக ஒரு பேச்சுவார்த்தையைக் கூட வெற்றிகரமாக நடத்த தெரியாதவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவியபடி தாமாகவே அம்பலமாகின்றனர். இராணுவ நடிவடிக்கையை மட்டும் நம்பி ஓடுபவர்கள், அதன் மூலம் அன்னிய தலையீட்டை வலிந்து கோருகின்றனர். அதற்கு ஏற்றாற் போல் நடவடிக்கைகளை தொடருகின்றனர்.

 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை பேச புறப்பட்டவர்கள், பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நியாயமான ஜனநாயக உரிமையையே பேசமறுத்து, தமது குறுகிய சொந்த நலன்களைப் பேசியதன் மூலம், மூக்கு அடிபட விழுந்து மண்ணைக் கவ்வினர். புலியின் நலன்கள் மக்களின் நலன்கள் அல்ல என்ற உண்மையைக் கூட, தமது சொந்த நடத்தை மூலம் நிறுபவர்கள் தான் புலிகள். இந்த நிலையில் மக்களை ஏமாற்றி மக்கள் நலன் பேசுவதாக காட்டும் பிழைப்புவாத கட்சிகளின் நிலையில் நின்று கூட, அரசியல் பேசத்தெரியாதவர்கள் என்பதையும் கூட நிறுவிவருகின்றனர்.

 

இந்த அவலமான படுதோல்வியான அரசியல் நிலையில், தமிழ் மக்கள் சார்பாக அரசியல் பேச அருகதையற்றவர்கள் தான் புலிகள் என தாமாகவே நிறுவினார்கள். புலிகள் மீதான இன்றைய சர்வதேசத் தடைகள், அமைதிக்கான காலத்தில் பேச்சு வார்த்தையையொட்டி வந்ததே ஒழிய யுத்த காலத்தில் அல்ல. சர்வதேச ரீதியான ஏகாதிபத்திய தலையீட்டுக்கு கம்பளம் விரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பதில், அதை தீவிரமாக ஆணையில் வைத்து செயற்படுகின்றனர். கொலை, கடத்தல், பலாத்காரமாக பணம்திரட்டல்கள், அடாவடித்தனங்கள், இதைத் தவிர வேறு எதையும் புலிகள் அரசியலாக பேசுவதோ செய்வதோ கிடையாது. உலக மக்களை வென்று எடுக்கும் வகையில், ஏகாதிபத்தியத்தை தனிமைப்படுத்தும் வகையில் புலி நடவடிக்கைகள் எவையும் அமையவில்லை. மாறாக இதற்கு எதிரிடையாக ஏகாதிபத்திய தர்க்கத்தை உலக மக்கள் ஏற்கும் நிலைமைக்கு ஏற்ற, புலி நடவடிக்கை தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

 

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைக் கோரும் ஏகாதிபத்தியம்

 

இதை தமிழ் மக்கள் சார்பாக புலிகள் கோரவில்லை. ஏகாதிபத்தியம் திடீரென இதை முன்னிலைப்படுத்தி கோரத் தொடங்கியுள்ளது. ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. உண்மையில் தீர்வுத் திட்டம் ஒன்றுக்கான மாதிரியை, ஏகாதிபத்தியம் இலங்கை பேரினவாத அரசாங்கத்திடம் முன்மொழிந்துவிட்டது. அதை இலங்கை பேரினவாத அரசாங்கம் தானாக முன்மொழிந்து, அதை பகிரங்கமாக வைப்பதையே ஏகாதிபத்தியம் எதிர்பார்த்து கிடக்கின்றது. கொத்தி கிழித்து குதறித் தின்னும் கழுகாக காத்துகிடக்கும் ஏகாதிபத்தியம், போடும் தமது திட்டத்தின் அடிப்படையில் னெற இலங்கையில் செயல்படுகின்றது. இந்த வகையில் தான் அரசுடனும் எதிர் கட்சியுடனும் சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்துகின்றன. இந்தியாவுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டு திட்டங்கள் திட்டப்படுகின்றன. இதனடிப்படையில் தான் சர்வகட்சி மாநாடு ஊடாக, தீர்வை நோக்கி காய் நகர்த்தப்படுகின்றது.

 

ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரையான வல்லூறுகள், தமது இராணுவ தலையீட்டை அடிப்படையாக கொண்டே பேரினவாதத்திடம் தீர்வை முன்வைக்க கோருகின்றனர். இதுதான் உடனடியான தலையீட்டின் மையப்புள்ளி. இதற்கு வெளியிலும் உண்டு என்பதை மறுபதற்கில்லை. பேரினவாதம் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதை வலியுறுத்துகின்ற போது, புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துகின்ற வகையில் இந்த விடையம் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றது. புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை, அரசுக்கு ஏகாதிபத்தியம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த தொடங்கியுள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான புலி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு, ஏகாதிபத்திய சதித்திட்டங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

 

அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க கோரும் போது, இந்த விடையத்தை நாம் கவனத்தில் எடுக்கத் தவறினால், அன்னிய தலையீட்டுக்கான வலையில் அரசியல் ரீதியாக நாம் சிக்கிவிடுவது நிகழும். பேரினவாதத்துக்கு எதிரான அரசியல் ரீதியான யுத்ததந்திர கோசம் என்ற அடிப்படையில், தீர்வை முன்வைக்கக் கோரும் போது பேரினவாதத்தின் விட்டுக் கொடுப்புக்கு எதிரான ஒரு சூழலில் மட்டும் சரியானது. அதாவது பேரினவாதத்துக்கு எதிராக இதை முன்னிறுத்தம் போது, பேரினவாதத்தை அம்பலப்படுத்தும் எல்லைக்குள் மட்டும் இது ஒரு பொதுக் கோரிக்கையாகின்றது. பேரினவாதம் புலியின் பாசிச சூழலைப் பயன்படுத்தி, தனது பேரினவாத முகத்தை மூடிமறைக்க இனவாதத் தீர்வை புலியின் பாசிச இராணுவவாதத்தின் பின்னால் முன்வைக்கும் போது, அதை தனிமைப்படுத்த வேண்டியது சமூக அக்கறையுள்ளவர்களின் அரசியல் கடமையாகவுள்ளது. இதை புலிகளால் ஒரு நாளும் செய்யமுடியாது.

 

புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை, ஏகாதிபத்தியம் தனது கோசமாக்கியுள்ளது

 

இன்று இதை ஏகாதிபத்தியம் முன்வைக்கின்ற அளவுக்கு, ஏகாதிபத்தியம் புலிப்பாசிசத்தை பயன்படுத்தி முன்னேறிச் செல்லுகின்றது. இதை முன்வைத்து, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்கக் கோருகின்றது. தீர்வு புலிகளுக்கு அல்ல என்பதை மீண்டும் தெளிவாக்குகின்றது. புலிகள் வேறு, மக்கள் வேறு என்ற அரசியல் உண்மையை, நாங்கள் மட்டுமே (சமரும் தமிழ் சேக்கிள் மட்டுமே இதனடிப்படையில் தொடர்ச்சியாக கருத்தை முன்வைத்து எழுதி வந்தது) கடந்தகாலத்தில் கூறிவந்தோம். புலியெதிர்ப்பு தேசியத்தை எதிர்த்து, தேசியமும் புலியும் ஒன்று என்றனர். தமிழ் மக்களின் தேசியத்தை புலிக்கு மாற்றாக முன்னெடுக்க மறுத்தனர். இதன் மூலம் தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்பதை மறுத்தனர்.

 

இதையே பேரினவாத அரசும் கூறியது. புலிகள் தமிழ் மக்களும் தாமும் ஒன்றென்றனர். ஆனால் புலிகள் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்று கூறி அதை மறுத்தனர். தமக்கு மட்டும் தான் ஜனநாயகம் என்றனர். இப்படி தமிழ் மக்களையும் புலியையும் அனைவரும் ஒன்றாக பார்த்தனர். கடந்த காலத்தில் மக்கள் விரோத அரசியல் பலம் பெற்றது இப்படித்தான். மக்கள் சார்பாக இதை வேறுபடுத்தி பார்க்க யாரும் முன்வரவில்லை.

 

நாங்கள் மட்டும் இதை மறுத்து, அரசியல் ரீதியாக இரண்டையும் வேறுபடுத்தி அரசியல் ரீதியாக கருத்துக் கூறி வந்தோம். அரசியல் ரீதியாக ஜனநாயகம் தேசியம் இரண்டையும் கோரிய பிரிவுகள், புலி வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வெளியில் பொதுத்தளத்தில் இந்த உண்மையை அனைவரும் மறுத்து நின்றனர். இந்த நிலையில் பொதுத்தளத்தில் மக்கள் வேறு புலிகள் வேறு என்ற அரசியல் அடிப்படை, எமக்கு ஒரு அரசியல் வழியை வழிகாட்டலை வழங்கியது. இதனடிப்படையிலான அரசியல் கருத்தினை முன்னிலைப்படுத்தினோம்.

 

ஆனால் இன்று நிலைமைகள் அப்படியல்ல. ஏகாதிபத்தியமும் இந்தியாவும் கூட புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறத் தொடங்கிவிட்டது. இதை பின்பற்றி புலியெதிர்ப்புக் கும்பலும் கூட, அதை கூறத் தொடங்கிவிட்டது. அரசும் அதை கொள்கை அளவில் ஏற்று, அதுவும் புலியை தனிமைப்படுத்துவதில் முன்னேறுகின்றது. புலிகளும் புலிப் பினாமிகளும் மட்டும், தமிழ் மக்களும் புலிகளும் ஒன்று என்கின்றனர். புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை அவர்களுக்கு புரிந்ததே. ஆனால் அதைக் களைய எந்த அரசியல் முன்முயற்சியுமின்றி, தமது சொந்த அரசியல் அழிவுக்கு செங்கம்பளம் விரித்த வண்ணமுள்ளனர். இந்த நிலையில் அன்னிய தலையீட்டுக்கான சூழலை தயாரிப்பதில், புலிகள் வேறு மக்கள் வேறு என்ற அரசியல் உண்மையை, தனக்கு சார்பாக அன்னிய தலையீட்டுக்கு ஏற்ற ஒன்றாக புலிகள் அல்லாத அனைத்து தளமும் வரிந்து கொண்டுள்ளது.

 

புலி வேறு தமிழ் மக்கள் வேறு என்று நாங்கள் கூறுவதும், அவர்கள் சொல்வதும் ஒன்றா?

 

இல்லை. யாருமே இந்த உண்மையை சொல்லாத ஒரு அரசியல் நிலையில், நாங்கள் மக்கள் கூறியது அரசியல் பதம் ஜனரஞ்சமாக பொருந்துகின்றது. இதை மக்களின் எதிரிகளும் புலிக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கியவுடன், மக்கள் யார் என்ற கேள்வியூடாக எதிரியை தனிமைப்படுத்தி, அரசியல் யுத்ததந்திரத்தை குறிப்பாக்க வேண்டியுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்று ஏகாதிபத்தியம் இன்று கூறுவது கூட, மக்களுக்கு எதிரானதே.

 

நாங்கள் இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் வகையில், அரசியல் கோரிக்கையின் உள்ளடகத்தில் மிக நுட்பமாக இதை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. அரசியல் மட்டத்தில் தமிழ்சமூகம் வழிபாட்டு முறைக்கும் வால் பிடிப்பதற்கும் அப்பால், எதையும் சுயமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாத முடக்குவாதத்தில் சிக்கி மந்தைக் கூட்டமாக உள்ளது. இந்த நிலையில் இந்த வேறுபாட்டை விளங்க வைப்பதில் மேலும் கடினமான ஒரு பணியாக மாறிநிற்கின்றது. சிந்திக்கத் தெரிந்தவர்கள் கூட நிகழும் மாற்றத்தை இலகுவாக சுயாதீனமாக இனம் கண்டு, அதை அம்பலப்படுத்தும் வகையில் ஆளுமையற்றவராக உள்ள இன்றைய எமது சமூக நிலைமை, எமது அரசியல் பணியை மேலும் கடினமாக்குகின்றது.

 

ஏகாதிபத்தியம் இன்று மக்கள் வேறு புலிகள் வேறு என்று கூறுவதை, நடைமுறை ரீதியாக புரிந்து கொள்வதற்கு, காலமும் சொந்த அனுபவமும் பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக சமூக நல நோக்கில் பார்ப்பவர்களுக்கு, சிந்திப்பவர்களுக்கு, செயற்படுபவர்களுக்கு முன் இதைத் தெளிவுபடுத்துவது அவசரமான அவசியமான பணியாக எம்முன்னுள்ளது.

 

நிலைமை மிக வேகமாக அதிரடியாக மாறுகின்றது. எதிரி பல தளத்தில் தனது முந்தைய வழிமுறையை கைவிட்டு, புதிய அணுகுமுறையை கையாளுகின்றான். புலிக்கும் மக்களுக்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டை, தனக்கு சார்பானதாக இயல்பானதாக மாற்றுகின்றான். இதன் மூலம் புலியை மட்டுமல்ல, தமிழ் மக்களை ஒடுக்கிவிட முனைகின்றான். இந்த எதார்த்தம் சார்ந்த அரசியல் உண்மையையும், இதையொட்டிய வேகமான மாற்றங்களையும் நாம் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டியவராக உள்ளோம். புலிகள் மாறமுடியாத பாசிசக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு, செயலற்ற முடக்குவாதத்தில் மலடாகி நிற்கின்றனர். புலிகள் தமது இராணுவவாத வக்கிரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, உலகமே கண்ணை மூடி பால் குடிப்பதாக நம்புகின்றனர்.

 

இந்த நிலையில் நாங்கள் எந்த மாற்றத்தையும் தீர்மானிக்கக் கூடிய நிலையில் இல்லாதவர்கள். ஆனால் அரசியல் ரீதியான முன்முயற்சி உள்ளவர்கள் என்ற வகையில், முன்பு நாங்கள் வைத்த அரசியல் கோசங்களை அப்படியே தொடர்ந்தும் முன்வைக்க முடியாமல் போகின்றது. மக்களின் எதிரிகள் அரசியல் சதிகளை கையாள்வதில் மிகவும் நுட்பமாக வேகமாக முன்னேறுகின்றான். இங்கு எதிரி என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசு வரையிலான அனைவரையும் நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

 

மாற்றம் வேகமாக விரைவாக நடக்கின்றது. புலிகளை தனிமைப்படுத்தி அழிக்கும் எல்லாவிதமான அரசியல் தந்திரத்தையும், உத்தியையும் அரசியல் ரீதியாகவே நகர்த்திய வண்ணம் உள்ளான். இந்த நிலையில் புலிகள் வேறு, மக்கள் வேறு என்று நாம் எதை எப்படிக் கூறுகின்றோம் என்று பார்ப்போம்.

 

நாங்கள் மக்கள் என்று கூறுவது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான். ஒடுக்கும் மக்களை அல்ல. ஒடுக்கபட்ட மக்களின் அதிகாரத்தைத் தான் முன்னிலைப்படுத்துகின்றோம். சமூக ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்கின்ற எந்தப் பிரிவையும், அதன் அரசியல் அபிலாசைகளையும் நாங்கள் மக்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்குவதில்லை. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைகின்ற அரசியலைத் தான், அதை தலைமை தாங்க முனைகின்ற மக்களைத் தான் மக்கள் என்கின்றோம்.

 

ஒடுக்குமுறைகளை களைய மறுக்கின்ற, புலிகள் அல்லாத எந்த அரசியலையும், அதை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்களையும் கூட்டத்தையும் நாங்கள் மக்கள் என்று கூறுவதில்லை. ஏகாதிபத்தியம் தமிழ்மக்கள் என்று கூறுவது, சமூக ஓடுக்குமுறையை அப்படியே பாதுகாக்கக் கூடிய, புலிகள் அல்லாத இன்னுமொரு ஆளும் மக்கள் விரோதக் கூட்டத்தைத் தான் அவர்கள் தமிழ்மக்கள் என்கின்றனர். அவர்களின் மக்கள் விரோத தலைமையை, புலிக்கு மாற்றாக முன்வைக்கத் தான், தமிழ்மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்றனர். இது டக்கிளஸ்சோ, கருணாவோ, ஆனந்தசங்கரியோ, புதிதாக ஒரு கும்பலோ அல்லது புலியில் இருந்து உருவாகும் மக்கள் விரோத மாற்றுக் கும்பலைத்தான், அவர்கள் தமிழ்மக்கள் என்கின்றனர்.

 

இன்று நிலவுகின்ற பிற்போக்கான சமூக ஓடுக்குமுறையை இயல்பாக கொண்ட மக்கள் கூட்டத்தைத் தான், ஏகாதிபத்தியம் தமிழ்மக்கள் என்கின்றனர். அதை அப்படியே தலைமை தாங்கக் கூடிய ஒரு மக்கள் விரோதப் பிரிவையே தமிழ்மக்கள் என்கின்றனர். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அமைப்பில் மாற்றங்கள் எதுவுமற்ற, புலியல்லாத மாற்றுத் தலைமை உருவாக்குவதற்கான அரசியல் அடிப்படையில், தமிழ்மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்றனர். இது புலியின் அரசியல் அடிப்படையில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபடாது. ஏகாதிபத்தியம் மக்கள் என்று கூறுவது, புலிகளுக்கு எந்த விதத்திலும் மேன்மையானதல்ல. புலிகள் நிலவுகின்ற இந்த பிற்போகான சமூக அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்க முனைகின்றனர் என்றால், அதையே ஏகாதிபத்தியம் மற்றொரு தலைமையூடாக அடைய புலிகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகின்றனர். புலியின் பாசிசத்துடன் கூடிய மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட இராணுவவாதம் முதன்மைக் கூறாகி, உலகளாவிய ஏகாதிபத்திய போக்கு இணக்கமற்றதாகி விட்டமையால் தான், புதிய தலைமையை மாற்றாக முனவைக்கின்றது. இதனடிப்படையில் தான் தீர்வை ஏகாதிபத்தியம் கோருகின்றனர். நாங்கள் இருக்கின்ற புலிகளின் பிற்போக்கு சமூக அமைப்புக்கு பதில், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது கையில் அதிகாரத்தை கோருவதை அடிப்படையாக கொண்டு அதை முன்னிலைப்படுத்துகின்றோம். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஒடுக்குமுறையை களைகின்ற, அரசியல் அடிப்படையில் தான் நாங்கள் மக்கள் என்கின்றோம்.

 

இந்த நிலையில் நாங்கள் மக்கள் என்ற பொதுவான அரசியல் கோசத்தை மேலும் நுட்பமாக்கி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் என்று அரசியல் கோசத்தை முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது. புலிகள் வேறு, ஏகாதிபத்தியம் கூறும் மக்கள் வேறு, ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு என்று தெளிவாக கூறவேண்டியுள்ளது. மக்கள் தமது சொந்த அதிகாரத்தை நிறுவவும், அவர்களின் சொந்த அரசியல் தலைமைத்துவத்தை முன்னிறுத்தி வலியுறுத்துவது இன்று அவசியமாகிவிட்டது. புலித் தலைமைக்கு மாற்றாகவும், ஏகாதிபத்திய தலைமைக்கு மாற்றாகவும் இதை முன்னிலைப்படுத்தி கோரவேண்டியுள்ளது. இதன் மூலம் தான் உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை சாத்தியம். உண்மையான விடுதலைப் போராட்டமும் நடக்கமுடியும்.

 

இந்த அரசியல் உள்ளடகத்தையும், அதன் அரசியல் நோக்கத்தையும் துல்லியமாக முன்னிலைப்படுத்தி, மற்றய போக்குகளை வேறுபடுத்தி அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் தான் ஏகாதிபத்தியம் இந்தியாவும் முன்வைக்கும் தீர்வை இனம் காட்டி அம்பலப்படுத்த வேண்டும். நாம் தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்க கோரி இலங்கை அரசை நாம் அம்பலப்படுத்தி வந்தோம். இந்தக் கோரிக்கை பொது அரசியல் தளத்தில், புலிகள் உட்பட யாரும் கோராத ஒரு நிலையில் சரியானதாக இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியமே இன்று அதைக் கோருகின்ற நிலையில், பொதுக் கோரிக்கையாக அதை தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக கையாள முடியாது. நாங்கள் அரசியல் கோரிக்கையை சுயநிர்ணய அடிப்படையில், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் குறைந்தபட்சம் முன்வைக்க வேண்டும் என கோரவேண்டும். புலிகள் தெளிவாக தீர்வு என எதையும் கோரவில்லை. இருந்தபோதும் அவர்களின் குறுகிய புலித் தீர்வு வேறு. ஏகாதிபத்தியம் கோரும் தீர்வு வேறு, நாங்கள் கோரும் சுயநிர்ணயம் சார்ந்த தீர்வு வேறு. இந்த சுயநிர்ணயம் என்பதை யாரும் தமக்கு விரும்பியவாறு கொச்சைப்படுத்தி விளக்கமுடியாது. அது அடிப்படையில் தேசிய பொருளாதாரம் என்ற மையமான அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது. உலகமயமாதலை சுயநிர்ணயம் தனது கோரிக்கையின் ஊடாக அனுமதிக்காது. அனுமதித்தால் அங்கு அது சுயநிர்ணயமாக இருப்பதில்லை.

 

ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்த அதிகாரத்தையும், தமது சொந்த விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டு போராடுவதை மறுக்கின்ற அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுடன், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையுமாகும். இதைப் புரிந்து இதன் அடிப்படையில் நாம் முன்முயற்சி கொண்ட அரசியல் போராட்டத்தை நடத்துவது, இன்றைய சமகாலத்தில் முதன்மை பெற்ற ஒன்றாகவுள்ளது.

பி.இரயாகரன்
21.08.2006