05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

குழந்தைகள் முன்பு சண்டையிடாதீர்கள்

 இது பொதுவாக எல்லா பெற்றோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தான் இந்த கட்டுரை.

குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைத்தான் பிரதிபலிக்கின்றன. பெற்றவர்கள் பேசும் விதம், நடந்து கொள்ளும் செயல் போன்றவற்றை பார்த்து குழந்தைகளும் சிலவற்றைக் கற்றுக் கொள்கின்றன.

பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது பிள்ளைகளும் குதூகலத்துடன் விளையாடி மகிழ்கின்றன. அதுவே அவர்கள் கவலையுடன் இருக்கும்போது பிள்ளைகளும் சோர்ந்து விடுகின்றனர்.

பெற்றோர் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அவர்களது மனதிற்குள் இனம்புரியாத கவலை பற்றிக் கொண்டு அவர்களை எந்த செயலிலும் ஊக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

சில குழந்தைகள் பெற்றவர்களை பெரிதும் சார்ந்து இருக்கின்றன. அதாவது அவர்களது அன்பில் போட்டி போடுவது, சண்டையிடுவது, அவர்களுடன் பெரிதும் நேரத்தை செலவிடும் குழந்தைகளைத்தான் பெரும்பாலும் தம்பதிகளின் சண்டை பாதிக்கிறது.

அதுவல்லாமல் விளையாட்டு, டிவி என்று பெ‌ற்றவ‌ர்களை ‌வி‌ட்டு ‌சி‌றிது தள்ளி இருக்கும் சில குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு தனது பெற்றவர்களின் சண்டைப் பற்றிய அக்கறை இல்லாமலும் இருக்கின்றன.

ஆனாலும் எந்த வகையான குழந்தைகளாக இருந்தாலும் பெற்றவர்கள் தொடர்ந்து சண்டையிடும்போது அவர்களைக் கவனிக்கும் குழந்தைகளின் மனதில் ஒரு வடு ஏற்பட்டுவிடுகிறது.

அது அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. எனவே குழந்தைகள் எதிரில் சண்டையிடாதீர்கள் என்பதுதான் எங்களது வாதம்.

அதுமட்டுமல்லாமல் சண்டையின் போது நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளையும் அவர்கள் எளிதில் உள்வாங்கி அதனை மற்றவர்களிடம் பயன்படுத்துவார்கள். இதுவும் தவறான வளர்ப்புக்கு அடிப்படையாகிறது.

சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அழுவதும், அடம்பிடிப்பதும், மற்ற குழந்தைகளை போட்டு அடிப்பதும், கிள்ளுவதும் கூட பெற்றவர்களின் இதுபோன்ற சண்டைச் சமாச்சாரத்தால் கூட இருக்கலாம்.

எனவே பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பெற்றவர்களின் நடவடிக்கை இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு நடக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை.

கருத்து வேறுபாடு, தவறான காரியங்கள் போன்று எந்த பிரச்சினை இருந்தாலும் குழந்தைகள் இல்லாத நேரத்திலோ அல்லது இரவில் குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டோ அது பற்றி தம்பதிகள் விவாதிப்பதுதான் சிறந்தது. அந்த விவாதம் கூட குழந்தைகளை தொல்லை கொடுக்காத வகையில் அமைய வேண்டும்.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/0808/02/1080802007_1.htm