07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒடிக் கடிக்கும் வெள்ளாட்டுத்தனம் மக்களின் விடுதலையை மறுக்கின்றது

ஏகாதிபத்தியம் சார்ந்து செயற்படும் புலியெதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மீண்டும் அசுரா அரசியலற்ற நிலையில் புலம்புகின்றார். மாற்று அரசியல் எதுவுமற்ற புலியெதிர்ப்பு தேனீயில் 'வெட்ட முளைக்கும் அசுராவின் தலை" என்று புலம்பி ஊளையிட்டபடி, தான் எதை சொல்ல முனைகின்றேன் என்று தெரியாது வெள்ளாடு போல்

அங்குமிங்கும் ஓடி மேய முனைந்துள்ளார். ஒரு தத்துவம், ஒரு விவாதம் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களுக்கானதே. இதை மறுப்பது இந்தப் புலம்பலின் மையமான சாரமாகும். அதாவது

 

1. புலியெதிர்ப்பை மட்டும் அடிப்படையாக கொண்டதும், மக்களுக்கு எதிரான வகையில் செயல்படுவது.

 

2. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மறுப்பதும், அதை ஆதாரிப்பதும் மக்களுக்கு எதிராக செயல்படுவது.

 

3. மக்கள் மேலான சகல ஒடுக்குமுறையையும் எதிர்த்து தத்துவரீதியிலும், நடைமுறையிலும் போராட மறுப்பது, மக்களை சார்ந்து நிற்பவர்களை எதிர்ப்பது.

 

4. புலியை எதிர்க்கின்ற யாருடனும் கூடி நின்று மக்களை எட்டியுதைப்பது.

 

இதுவே புலியெதிர்ப்பின் சாரம். இதற்கு வெளியில் அவர்களிடம் எந்த அரசியலும் கிடையாது. புலியை ஒழிப்பதே ஜனநாயகம். இவர்கள் ஜனநாயகத்துக்கு வழங்கியுள்ள அதியுயர் அரசியல் விளக்கம் அதுவேயாகும். மக்கள் ஜனநாயகம் என்ற பேச்சுக்கு, புலியெதிர்ப்பு அரசியலில் இடம் கிடையாது. புலியெதிர்ப்பு அரசியலை நுணுகிப் பார்த்தால் இதைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது.

 

இந்த நிலையில் மக்கள் நலன் சார்ந்த கருத்தை இவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. புலம்பத் தொடங்குகின்றது. ரீ.பீ.சீ முதிர் முட்டாள்களுடன் பகிரங்கமான விவாதத்துக்கு அழைக்கின்றனர். நல்ல நகைச் சுவை தான். முதலில் உங்கள் கருத்தின் மேலான எமது கருத்தை போட்டு கருத்துச் சுதந்திரத்தை பேசச் சொல்லுங்கள். அது அரசியல் நேர்மை. மாற்றுக் கருத்தைப் போட்டு விவாதியுங்கள். அதை முதலில் செய்யுங்கள். ரீ.பீ.சீ என்பது புலியெதிர்ப்புக் கருத்துக்கு மட்டும் சுதந்திரம் வழங்குவது தான். தட்டுத்தடுமாறி ஒழுங்காக கதைக்கத் தெரிந்த புலிகள் வந்தால், நீங்கள் ரீ.பீ.சீ படுகின்ற பாடு எம்மால் சகிக்க முடிவதில்லை. ஏறி மிதித்து அது இது பிழை என்று நிறுத்துவது எமக்குத் தெரியும். அதாவது புலிகள் பாணியில் உங்கள் கருத்துச் சுதந்திரம் உள்ளது. புலியெதிர்ப்பு கருத்தை விவாதிப்பதை மாற்றுக் கருத்து என்றால், புதிய அகராதி எழுதவேண்டியது தான். புலியெதிர்ப்பு அல்லாத அரசியல் ரீதியான கருத்தை உங்கள் 'மாற்றுக் கருத்து" தளத்தில் காட்டுங்கள். முதலில் நேர்மையாக உங்கள் பதிலை எமது கருத்தின் மேல் போட வேண்டும். அதை முதலில் செய்யுங்கள். அதை செய்ய மறுப்பவர்களுடன் என்ன விவாதம் வேண்டிக் கிடக்கின்றது. நாங்கள் அதைச் செய்கின்றோம். வாசகனை முட்டாளாக்க கூடாது.

 

இந்த நிலையில் மக்களுக்கு எதிரான தமது குதர்க்கங்களையும், அங்குமிங்கும் ஓடிக் கடிக்கும் அரசியல் வறுமைக்கு எதிராக நாம் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. அண்ணளவாக 6000க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட எனது எழுத்தில் கற்பழிப்பு, ஓரினச்சேர்கை, கருவழிப்பு, ஸ்ராலின் போன்ற சொற்களைத் தேடி எடுத்து அங்காங்கே விதைத்து அவதூறு செய்வதற்கு அப்பால், குறித்த விடையங்கள் மீது பதில் அளிக்கமுடியாத அரசியல் வறுமை மீண்டும் அம்மணமாகிக் கிடக்கின்றது. அண்மையில் டி.சே.தமிழன் எனக்கு எதிராக 'இணையத்துப் பிசாசு எனக்கும் இரண்டு சாத்துப் போட்ட கதை அல்லது நானும் பாசிஸ்டான கதை" என்று எழுதினர். பின் அதை அழித்துவிட்ட கட்டுரையிலும் இதே மாதிரித் தான் மேய்ந்தார். புலி ஆதரவும், புலியெதிர்ப்பும் தமது அரசியல் வறுமையில், நக்குத் தண்ணியில் தத்தளிக்கின்ற நிலையில், இந்த எதார்த்தத்தை தாண்டி எதையும் இவர்களால் மேயமுடியாது.

 

ஸ்ராலின், கற்பு, ஒரினச்சேர்க்கை, கருவழிப்பு போன்ற சொற்களின் பின் தெளிவானதும் துல்லியமானதுமான கருத்துண்டு. அதை வெள்ளாடு போல் ஓடிக் கடிக்காது, அதை எடுத்து எப்படி தவறு என்று விளக்கும் அரசியல் ஆளுமையிருந்தால் அதைச் செய்யுங்கள். சும்மா சும்மா பில்லி சூனியம் செய்வார் போல் புலம்பாதீர்கள். இது தொடர்பான எனது ஒரு சில கட்டுரைகள் பார்வைக்கு

1. இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (ஸ்ராலின் பற்றிய கட்டுரைகள்)

2. பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க "கற்பு|" என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

3. ஓரினச் சேர்க்கை, பெண் விடுதலைத் தத்துவமா?

4. கருஅழிப்பு

 

இது ஒருபுறம் உங்களின் அரசியல் வறுமையையும், பிற்போக்குத் தனத்தையும் தோலுரிக்கின்றது. இதைப்பற்றி சொற்களுக்கு வெளியில் விவாதிக்க வக்கற்றுப் போகின்ற அரசியல் வறுமை அம்மணமாகின்றது. பாசிச புலிகள் கருத்துக்கு பதிலளிக்க முடியாது சுடுகின்றனர். நீங்கள் கருத்துக்கு பதிலளிக்க முடியாது வெள்ளாடு போல் ஒடிக்கடித்து குதறுகின்றீர்கள். உள்ளடக்கத்தில் வேறுபாடில்லை, அதாவது பதிலளிக்க முடிவதில்லை.

 

இன்றைய சமகாலத்தில் எதை மக்களுக்காக நீங்கள் கூறுகின்றீர்கள். அதை முதல் தெளிவுபடுத்துங்கள். அதைவிடுத்து வாயில் வந்த மாதிரி சன்னி கண்ட மாதிரி உளறாதீர்கள். மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் மொழியில், அவர்களை வழிகாட்டுங்கள். புலிகள் மக்களின் முரண்பாட்டுக்கு பதிலளிக்காதது போல் நீங்களும் தேனீ என்ற புலியெதிர்ப்புக் கும்பலுடன் சேர்ந்து வம்பளந்து வக்கரிக்காதீர்கள்.

 

1.மக்களின் விடுதலை என்பது என்ன? அது எப்படி சாத்தியம்?

 

2. சமூக ஒடுக்குமுறைகளை எப்படி ஒழித்துக் கட்டுவது? சமூக முரண்பாடுகளின் பரம எதிரிகள் நாங்கள் என்று உளறுவதில்லை.

 

3.புலியெதிர்ப்பு அரசியல் என்ன? எதிர்ப்பது மட்டும் தான் எமது கடமை என்று சன்னிபிடித்த மாதிரி உளாறதீர்கள்.

 

4.புலியின் அரசியல் என்ன? அதன் வர்க்க அரசியல் மற்றும் அதை முழுமையில் நேர்மையாக முன்வையுங்கள் இதில் இருந்த புலியெதிர்ப்புக் கும்பல் எப்படி வேறுபடுகின்றது. அதையும் சொல்லுங்கள்.

 

இப்படி உங்கள் தனித்துவமான கருத்தை முதலில் புலியெர்ப்புக் கும்பலுக்கு வெளியில் முடிந்தால் வையுங்கள். அதற்கு பின் உங்கள் கருத்தும் புலியெதிர்ப்புக் கருத்தும் ஒன்று என்றால், புலியெதிர்ப்பு கும்பலுக்கு அரோகரா போட்டுக் கொண்டு பின்னால் கைதட்டிக் கொண்டு ஒடுங்கள். புலம்புவதை விடுத்து, ஒடி மேய்வதை விடுத்து உருப்படியான மக்களுக்கு ஏதாவது சொல்ல முடியுமென்றால் அதைச் சொல்லுங்கள். ஏகாதிபத்திய கால்களை நக்கும் ஏகாதிபத்திய கயவாளிப் பயல்களின் பின்னால், மக்கள் விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்து இழிந்து கிடப்போர் பின்னால், அன்னக்காவடியெடுத்து ஆடுவது, பினாற்றுது, புலம்புவது, சொற்களை வைத்து அரசியலைத் திரிப்பது, முன்னைய காலத்தைய மற்றொரு அரசியல் வழியை நிகழ்கால அரசியல் முரணாக காட்டுவதை நிறுத்துங்கள். மக்களுக்கு ஏதாவது சொல்ல முடிந்தால் அதைச் சொல்லுங்கள். அதில் நாங்கள் தவறு இழைத்தால் அதை சுட்டுங்கள். அது மட்டும் தான் அரசியல் நேர்மை.

 

குறிப்பாக சோபாசக்தியை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாது, அவரின் கடந்தகால நிகழ்கால எழுத்தின் மீது பொறுக்கியெடுத்து தாக்கியுள்ளனர். நேர்மையற்ற வழியல் அதை எங்களுக்கு எதிராக நிறுத்த முனைகின்றீர்கள். போகிறபோக்கில் சோபாசக்தியின் புலிக்காலம், பாங்கொங்கில் வாழ்ந்த காலம், பின் நான்காம் அகிலத்தின் காலம், தொடர்ந்த அவரின் காலங்களின் அவரின் வேறுபட்ட அரசியல் காலத்தை மேற்கோள்காட்டி அவரின் கருத்தை மறுதலித்தாலும் ஆச்சரியம் அல்ல. இதையே புலியெதிர்ப்பு அசுரா மற்றவர்கள் போல் செய்ய முனைகின்றார். சோபாசக்தியை புலியென்றும், புலி உளவாளி என்றும் கூட சொல்வதை நாம் கேட்கின்றோம். அப்படியே இருக்கட்டும், ஆனால் அவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுப்பது ஏன்! அவரின் கருத்துக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாமல் போவது ஏன்? ஏன் புலியைப் போல் வெட்கமானமின்றி நடக்கின்றீர்கள்.

 

சோபாசக்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடிவதில்லை. இதற்கு முன்னம் எனக்கு எதிராக கல்வெட்டு எழுதிய சோபாசக்தியை சரி, எம்முடன் முரண்பட்டு கதைக்காமல் திரிந்த சுகனுடனும், நாம் எப்படி இணங்கி போக முடியும் என்று புலி ஆதரவு புலியெதிர்ப்பு அணி இரண்டும், சமகாலத்தில் கேட்கின்றனர்.

 

சோபாசக்தியை போற்றும் டி.சே.தமிழன் எனக்கு எதிராக எழுதி பின் அவசரமாக அழித்த கட்டுரையில் 'இணையத்துப் பிசாசு எனக்கும் இரண்டு சாத்துப் போட்ட கதை அல்லது நானும் பாசிஸ்டான கதை" யில் இதை பற்றி எழுதுகின்றார்.

 

'சமரோடு சமர் புரிந்த காலத்தில் இந்த அன்பரோடு எக்ஸில் நண்பர்கள் கல்வெட்டு என்று பெயரிட்டு இவருக்கு விமர்சனம் வைத்துத் துண்டுப்பிரசுரம் எழுதியது மறந்து இப்ப என்னை புலியை நக்கி அரசியல் செய்வதாய் ஓலமிடும் இவர் - எந்த விமர்சனமும் இன்றி எக்ஸில் நண்பர்கள் சற்று பிளவுபட்டுவிட்டார்கள் என்றறிந்த பின் சோபாசக்தியின் சுகனின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடித்திரிவதன் மர்மந்தான் என்னவோ? சோபாசக்தி சுகனுக்கு கேட்கப்படும் ஓடிவந்து கேள்விகளுக்கு எல்லாம் தானே ஓடி ஓடிவந்து பதிலளிப்பதன் அவசரத்தைப் பார்த்து சிரிப்புத்தான் வருகின்றது? இதைவிட நக்கிப்பிழைக்கும் கேவலமான நிலை உண்டா? இவரது கருத்துக்களை எல்லாம் அன்று நம்பி இவர் பக்கம் இருந்தவர்கள் இப்போது சோபாசக்தியையும் சுகனையும் எந்த வெளிப்படையான விமர்சனமும் தனது மாற்றத்துக்கு வைக்காது வால் பிடிப்பது அறிந்தால். ? யாரை யார் நக்குவதாம்?" இது புலி ஆதரவு டி.சே.தமிழன், மக்கள் சார்பு கருத்து நிலைக்கு பதிலளிக்க முடியாத நிலையில் வைத்த கருத்து.

 

அசுரா மற்றொரு கோணத்தில் சோபாசக்தியிடம் 'றயாகரனையும், ஜமுனா ராஜேந்திரனையும் சோபாசக்தி தனது எழுத்தின் மூலமாக செய்த கிண்டலும் கேலியும் சொல்லிமாளாது. அப்படிப்பட்டவர் தற்போது அவர்களின் நிலைப்பாட்டில் மண்டியிடுவதற்கு முன்பு அவர்களிடம் தான் கடந்த காலத்தில் எழுதியவைகளுக்காக எழுத்துமூலமாக மன்னிப்புக் கோருவதுதானே நியாயமானது. ஆனால் கதைவிடுகிற சோபாசக்தி அவர்களையும் முட்டாளாக்குவதோடு. வாசகர்களையும் முதிர் முட்டாளாக்குவதை எப்படி நாம் பொறுக்க முடியும்?" ... 'இப்ப றயாகரனுக்கும், சோபாசக்திக்கும் ஏதோ தொகுதி உடன்பாட்டு இணக்கம் (வை.கோ.ஜெயலலிதா லெவலில்) ஏற்பட்டு விட்டது" என்கின்றார்.

 

புலிகளும், புலியெதிர்ப்பாளர்களும் வந்தடைந்த முடிவுகள், இப்படி முரணாக ஒன்றையே ஒருமித்த குரலில் வைக்கின்றனர். என்ன அரசியல் ஓற்றுமை. மக்களை நேசிக்க என எதுவுமற்ற இவர்கள், இப்படித்தான் எமது நிலையைப் புரிந்து கொள்கின்றனர். அவர்களின் நோக்கம் சோபாசக்தியின் மக்கள் நலன் சார்ந்த அரசியலைக் கைவிட்டு, மறுபடியும் பழைய மாதிரி எழுதவைப்பதைத் தாண்டி எந்த அரசியலையும் இதனுடாக அவர்கள் செய்யவில்லை. நாங்கள் என்னதான், அதிகமாக சொல்லுகின்றோம்.

 

மக்களைச் சார்ந்து நில்லுங்கள். அதையே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம். அனைத்து கருத்தையும், போராட்டத்தையும் மக்களை சார்ந்து நின்று போராடுங்கள் என்பதே இதன் சாரம். இதைத்தான் புலியிடமும் கோருகின்றோம், புலியெதிர்ப்பிடமும் கோருகின்றோம். இதற்கு ஆளுக்காள் எத்தனையோ விதமான மறுப்புகள் திணிப்புகள்.

 

மக்கள் நலன் பேசுகின்ற கருத்தைப் பிளவுபடுத்தி, அதை மறுக்கின்ற வகையில் எப்படியாவது இதை உடைத்தெறிய வேண்டும் என்ற வக்கிரம் இங்கு கொட்டிக் கிடக்கின்றது. சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் மக்கள் என்ற புள்ளியில் சந்திக்க விரும்புவதை இவர்களால் சகிக்க முடிவதில்லை.

 

இந்த மனக் குமைச்சலைத் தான் புலியும் புலியெதிர்ப்பும் ஒரே விதமாக ஊளையிட வைக்கின்றது. கருத்துத்தளத்தில் சோபாசக்தியோ அல்லது வேறு யாரும் மக்களைப் பற்றி சிந்திப்பதை எந்த வகையிலும் இவர்கள் விரும்புவதில்லை. நான் எப்படி சோபாசக்தியானேன் அல்லது சோபாசக்தி எப்படி றயாகரன் ஆனார் என்று, தனிநபரைச் சுற்றிக் கிண்டி கிளறி புழுத்தேடுகின்றனர். வைக்கின்ற கருத்துக்கு பதிலளிக்க வக்கில்லாமல் போகின்றது. புலி ஆதரவு மற்றும் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் வங்குரோத்து இதைத் தவிர வேறு எதையும் வழிகாட்டுவதில்லை. சோபாசக்தி கடந்து வந்த அரசியல் பாதை பலகட்டங்களின் ஊடாகவே பயணித்தது. அதற்காக முதற் கட்டத்தை முக்கி முனங்கி தூக்கி நிறுத்தமுடியுமா. அதுவும் மக்களை நேசிக்கின்ற போது, கடநத்காலத்தை சுயவிமர்சனத்தின் அடிப்படையில் தான் அதைச் செய்கின்றான். ஒருவன் மக்களை நேசிக்க முனைவது தவறா? அவர்கள் மக்கள் எப்படி எந்தவகையில் நேசிக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். அது தவறு என்றால் அதை விமர்சிக்க வேண்டுமே ஒழிய வம்பளக்க கூடாது. நாங்கள் மக்களை நேசிப்பது தவறு என்றால், எப்படி நேசிக்க வேண்டும் என்று அதைச் சொல்லுங்கள். நக்கல் நளினம் அரசியல் ரீதியானவை என்று நான் எழுதிய போது, அதை முன்பு சோபாசக்தி கல்வெட்டில் செய்ததைக் சுட்டிக்காட்டி அது என்ன என்கின்றனர். ஆம் அதுவும் அரசியல் ரீதியானதே. அதற்கு நான் அன்றே பதிலளித்தோம்.

 

நாங்கள் மக்களை நேசிக்க முற்படுபவர்களுடன் எப்போதும் இணங்கிப் போக முனைகின்றோம். மக்களுக்கு வெளியில் நாங்கள் யாரையும் நேசித்ததில்லை. மக்கள் தான் அனைத்தும். அது தவறு என்றால், அதை சொல்லுங்கள். உங்களுக்கு முடிந்தால் அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து புலம்பக் கூடாது, ஊளையிடக் கூடாது.

 

மக்களை நேசிக்க முற்படும் ஒரு சிறிய முளையைக் கூட யாரும் மிதிப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒரவஞ்சகம் கொண்ட தனிமனித விருப்பு அரசியலைச் செய்பவர்கள் அல்ல நாங்கள். யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்போம். நாளை அவர்கள் மக்களுக்கு துரோகம் இழைத்தால் அதை அம்பலம் செய்வோம். மக்களை நேசிக்கின்றவர்கள் எம்மை அனுசரித்து செல்லுகின்றனரோ இல்லையோ, ஆனால் நாம் நிச்சயமாக அவர்களுக்காக குரல் கொடுப்போம். இது யாராக இருந்தாலும் பொருந்தும். நாளை புலிகள் மக்களை நேசித்தாலும் கூட, ஏன் புலியெதிர்ப்பு அணி மக்களை நேசித்தாலும் கூட அவர்களுக்காகவும் போராடுவோம். இந்த வகையில் மக்கள் சார்பான கருத்துத் தள இணையங்களை இனம் கண்டு படிப்படியாக இணைப்பை வழங்கி வருகின்றோம். மக்களுக்காக எதையும் நாங்கள் செய்வோம். மக்களை நேசிப்பவர்களை பாதுகாப்பது தவறு அல்லது நக்குத்தனம் என்றாலும், அதை நாங்கள் மனதார செய்வோம். நாங்கள் உங்களைப் போல் ஆயுதங்களையே, ஏகாதிபத்தியங்களையே நேசித்து குலைப்பவர்கள் அல்ல. மக்கள் தான் அனைத்தும். இதற்கு வெளியில் விடுதலை, ஜனநாயகம் என்று பினாற்றி புலம்புவர்கள் படுமோசமான போக்கிரிகளாவர்.

 

பி.இராயகரன்
01.07.2006


பி.இரயாகரன் - சமர்