இது எம்மிடம் எமது இணையத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்வி. அதில் ஒரு ஈமெயில் தந்த போது, அவர்களுக்கான பதில் திரும்பிவிட்டது. இதே கேள்வியை சத்தியக்கடாதாசியிலும் பதிவிடப்பட்டுள்ளது. முழுமையான கேள்வி
'இரயாகரன், சோபாசக்தி, மற்றும் சிறீரங்கனுக்குஉங்களிடம் ஒரே கேள்வி சுற்றிவளைக்காது பதில் தரவும்.
ரி.பி.சி. வானொலியின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா? (பதில் விளக்கத்திற்காக மேலும் சில துணைக்கேள்விகள்.
நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக.
ஐ.பி.சியையும், ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக. (சோபா சக்திக்கு, பதில் தராவிட்டால் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து நக்கல் நளினங்களைத் தவிர்க்கவும்)"
1.உங்கள் ஆரோக்கியமான அவசியமான கேள்விக்கு நாங்களும் கடமைப்பட்டுள்ளோம்.
2.நாம் சுற்றி வளைத்து சமாளித்து பதிலளிப்பது கிடையாது.
3.சோபாசக்தியின் நக்கல் நளினங்கள் அரசியல் ரீதியானவை. அவரின் கருத்தின் ஆழம் மேலும் அரசியல் செறிவுடன் வளரும் போது, இந்த நக்கல் நளினங்கள் கருத்தை மேலும் வளப்படுத்தும். அதை அவர் செய்வார் என்று நம்புகின்றோம்.
இனி உங்களின் கேள்விக்கு வருவோம்.
'ரி.பி.சி. வானொலியின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
ஐ.பி.சியையும், ரி.பி.சியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?"
இந்த கேள்வியை எம்மை நோக்கி கேட்க முன்னம், மக்கள் நலன் என இவர்கள் எதை முன்னெடுக்கின்றனர் என்று நீங்களே உங்களிடம் கேட்டு பார்த்திருக்கலாம்.
ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு பதில் தருவது அவசியம். 'இல்லையென்றால் வேறுபாட்டை விளக்குக" என்று கூறுவதை ஒரு பக்கத்துக்கு மட்டும் கேட்பதை தாண்டியதே எமது பதில்.
மக்கள் நலனை ஒழித்துக்கட்டுவதில் இரண்டும் ஒன்று தான். ஆனால் வேறுபாடு அவர்கள் சொல்லுகின்ற உள்ளடகத்தில் உண்டு. அவர்கள் கையில் எடுத்துள்ள தேசியம், ஜனநாயகம் இரண்டிலும், நேர்மையாக மக்களுக்காக செயற்படுவதில்லை. இரண்டையும் முரணாக நிறுத்தி வைத்துள்ள இவர்கள், படுபிற்போக்கு வாதிகள். இவை இரண்டையும் ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. உண்மையில் மக்களை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
மக்கள் நலனைக் கடந்த எதையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. மக்கள் நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் ஆதரிக்க முடியாது. இதை அவர்கள் எதிர்ப்தரப்பில் நின்று சொன்னாலும், இந்த உண்மையை நாம் தெளிவாக கொண்டு வருகின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை உண்மையாக பிரதிநிதித்துவம் செய்யாத அனைத்தும் படுபிற்போக்கானவை, எதிர்ப் புரட்சிகரமானவை. அதில் ஒன்றை முன்னிறுத்தி மற்றொன்றை பின்னால் நிறுத்துவதில்லை. இது பொதுவான கருத்துத் தளத்தில்.
மறுபக்கத்தில் அரசு மற்றும் புலிகளை எடுத்தால், அரசு தான் தமிழ் மக்களின் பிரதான எதிரி. புலிகள் அல்ல. அரசை ஆதரிக்கும் அனைத்தும் பிரதான எதிரியாக இருப்பதில், ஏன் புலியை விட முதன்மை எதிரியாக இருப்பதில் வியப்பேதுமில்லை. இதை ஒட்டி விரிவான கட்டுரை எழுதி முடித்துள்ளேன், சரி பார்த்த பின் இரண்டொரு நாளில் பிரசுரமாகவுள்ளது. அது இதை மேலும் துல்லியமாக தெளிவாக்கும்.
சிங்கள் பேரினவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதாகச் சொல்லி புலிகள் போராடுகின்றனர் என்றால், புலி எதிர்ப்பு அணி புலிகள் தமிழ் மக்களை ஒடுக்குவதாகச் சொல்லி போராடுகின்றனர். ஆனால் மக்களுடன் இணைந்து, அந்த மக்களின் சொந்த விடுதலையை நடத்த முனைவதில்லை. அதை தெளிவாக அரசியல் அடிப்படையில் எதிர்க்கின்றனர். இவை அனைத்தும் பிற்போக்கானவை எதிர்ப்புரட்சிகரமானவை.
எங்கே குழப்பம் மயக்கம் ஏற்படுகின்றது என்றால், நாங்கள் புலியுடன் நண்பர்களாக இருக்க முடிவதில்லை. மாறாக அவர்களால் கொலை அச்சறுத்தலுக்கு சதா உள்ளாகி வாழ்பவர்கள். மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அணியுடன் நாம் நட்பாக இருக்க முடிகின்றது. இது பலரை அரசியலுக்கு அப்பால் உறவாட வைக்கின்றது. இவர்களால் உடனடியாக கொலை அச்சுறுத்தல் இருப்பதில்லை. இந்த எதார்த்தம் சார்ந்த சூழலில் இருந்து, நாம் எமது தனிமனித உணர்வில் இருந்து சிந்திக்கும் போது, அங்கு அரசியலை மறந்து போகின்றோம். 1983 முதல் 1986 வரை ஒரே இயக்கத்தில் அரசியலை பேசியவர்களை வேட்டையாடி கொன்ற உண்மை, சொல்லும் செய்தி என்றும் தெளிவானது. இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ள பலர் கடந்த இந்தக் கொலைகளில் பங்கு கொண்டவர்கள் அல்லது அதை ஆதரித்தவர்கள். அதை இன்றும் அரசியல் ரீதியாக விமர்சிக்காதவர்கள். அதே அரசியல் வெறுப்புடன், அரசியல் பேசுபவர்களையும் அந்த மக்கள் அரசியலையும் வெறுக்கின்றனர். மக்கள் அரசியல் பேசுபவர்கள், மக்கள் நலனை உயர்த்த கோருவதை மட்டும் தான் கோருகின்றனர்.
எம்மிடம் கேள்வி கேட்க முன் அவர்களிடம் கேட்கலாமே, மக்கள் நலனை முன்னெடுக்க சொல்லி. நாங்கள் சொல்வது தவறு என்றால், நேரடியாக கருத்தை இட்டு விமர்சியுங்கள் என்று கோரிப்பாருங்கள். அவர்களிடம் அந்த அரசியல் நேர்மை துளியளவும் கிடையாது. மக்களுக்கு உண்மையாக இருந்தால், அது தானாக வெளிப்படும்.
நாளை புலிகள் இல்லாத இடத்தில் அரசியல் அதிகாரத்துக்கு இவர்கள் வந்தால், அரசியல் ரீதியாக அவர்களும் மற்றொரு புலிகள் தான். இல்லையென்று யாரும் இதை நிறுவமுடியாது. அவர்கள் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் தான், எமது முடிவை தீர்மானிக்கின்றது.
ரி.பி.சி தேவையா என்றால் மக்கள் நலனின் அடிப்படையில் அவசியமற்றது. ஆனால் அதை புலிகள் ஒழித்துகட்டும் முயற்சியை நாம் அங்கீகரிப்பதில்லை. இந்த வகையில் நாம் முன்பு கருத்துரைத்துள்ளோம். இதேநிலை தான் புலிகளின் வானொலிக்கும் பொருந்தும். நாளை ஏகாதிபத்தியம் அதை தடை செய்தால், நாம் அதை அங்கீகரிப்பதில்லை. இது போன்ற தடைகள் குறித்ததை மட்டுமல்ல, அது மொத்த மக்களையும் அடக்கியொடுக்கும் அரசியல் அடிப்படையைக் கொண்டதே.
பி.இரயாகரன்
18.06.2006