புரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு பகுதிப் பொறுப்பாளராகத் தன்னை உயர்த்திக்கொண்ட தோழர் ராஜேந்திரன், சிறுநீரகக் கோளாறினால் சிகிச்சை பலனின்றி கடந்த 19.07.08 அன்று தனது 25வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.
இந்துவெறி பாசிச பயங்கரவாதமும் அரசு பயங்கரவாதமும் கவ்வியுள்ள கோவை நகரில், போலீசு மற்றும் இந்துவெறி குண்டர்களின் அச்சுறுத்தல் அட்டூழியங்களுக்கு நடுவே, கடந்த மூன்றாண்டுகளாகப் புரட்சிகர அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து அமைப்பாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்தான் தோழர் ராஜேந்திரன். பஞ்சாலைத் தொழிலாளியான அவர், வேலைநேரம் போக நாள் முழுவதும் பிரச்சாரஅமைப்பு வேலைகளை உற்சாகத்துடனும் உறுதியுடனும் செய்து வந்தார். சிறுநீரகக் கோளாறையொட்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்த போதிலும், நோயின் வேதனை வெளியே தெரியாமல் இன்முகத்துடன், தன்னைச் சந்திக்க வருவோரிடம் தொடர்ந்து அரசியல் பிரச்சாரம் செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் புரட்சியின் மீது அவர் கொண்ட மாளாக் காதல் சற்றும் குறையவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நினைவிழக்கும் வரை அவரது உதடுகள் இயக்க வேலைகளைப் பற்றியும், ""தோழர், தோழர்'' என்றும் உச்சரித்துக் கொண்டேயிருந்தன.
நோய் வாய்ப்பட்டு மரணம் நிச்சயிக்கப்பட்ட போதிலும் புரட்சியின் மீது அவர் கொண்ட பற்றுறுதி, கடின உழைப்பு, பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவிலும் புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்வதில் அவர் கொண்ட சளையாத ஆர்வம் ஆகிய உயரிய கம்யூனிசப் பண்புகளை உறுதியாகப் பற்றி நின்று, அவரது இலட்சியக் கனவை நிறைவேற்றப் புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!
— புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கோவை.