Language Selection

புதிய ஜனநாயகம் 2008

காரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிராத மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.


கடந்த ஜூலை 7ஆம் நாளன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். முதன்மைச் செயலர் உள்ளிட்டு நான்கு இந்தியத் தூதரக உயரதிகாரிகளும், 6 ஆப்கான் போலீசு உயரதிகாரிகளும், இந்தியாவுக்கு வருவதற்காகக் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த ஆப்கானியர்களும் இக்கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.


இக்கொடிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள தாலிபான் தீவிரவாதிகள், இதற்குமுன் 2005ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்கானில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியரான, கேரளத்தைச் சேர்ந்த ராமன்குட்டி மணியப்பன் என்பவரைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். அதன்பிறகு சில இந்தியப் பொறியாளர்களும் தொழிலாளிகளும் தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு எச்சரித்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியத் தூதரகத்தின் மீதான தாலிபான்களின் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலுக்கும் கட்டுமான வேலை செய்து வரும் இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கும் காரணம் என்ன?


இந்திய அரசு கூறுவது போல, போரினால் சிதிலமடைந்த ஆப்கானில் சீரமைப்புகட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் நட்பு நாட்டவர் மீதான தாலிபான்களின் இலக்கற்ற காட்டுமிராண்டித்தனமான வெறியாட்டமா, இது? இல்லை; இது, இந்திய அரசினது அமெரிக்கக் கைக்கூலித்தனத்தின் எதிர்விளைவு! அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் ஆப்கான் பொம்மையாட்சியை வெட்கமின்றி ஆதரிக்கும் பிற்போக்குத்தனத்திற்குத் தரப்படும் விலை! ஆப்கான் நாட்டுக்கும் மக்களுக்கும், குறிப்பாக தாலிபான்களுக்கும் எதிரான ஆத்திரமூட்டும் வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றிவரும் இந்திய அரசுதான் இத்தாக்குதல்களுக்குக் காரணம்.
உலக மேலாதிக்கபயங்கரவாத அமெரிக்காவின் நல்லாசியைப் பெற்று, அதன் நம்பகமான கூட்டாளியாக மாறும் நோக்கத்துடன், இந்திய அரசு தொடர்ந்து அமெரிக்க மேலாதிக்க, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு விசுவாச சேவை செய்து வருகிறது. அமெரிக்காவின் மேற்காசியப் பேட்டை ரவுடியான இஸ்ரேலுடன் இராணுவப்பயிற்சி உள்ளிட்டுப் பலவகையிலும் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டுள்ளது. ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அந்நாடுகளின் அமெரிக்க விசுவாச துரோகக் கும்பல்களுக்கும் வெளிப்படையாகத் துணைபோகும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்நாடுகளின் ஆக்கிரமிப்புப் போர்களில் இந்திய அரசு நேரடியாக இராணுவத்தை ஈடுபடுத்தாவிட்டாலும், மறைமுகமான வழிகளில் தொடர்ந்து உதவி வருகிறது.


ஆக்கிரமிப்புப் படைகளுக்குச் சமையல் பாத்திரங்கள் கழிவறைகளைக் கழுவுதல், துணி துவைத்தல் முடிவெட்டுதல், கண்ணி வெடிகள் அகற்றுவது முதல் சாலைகள் அமைத்தல், ஆயுதத் தளவாடங்கள்இராணுவ வாகனங்களைப் பழுது பார்த்தல் வரை போரில் ஈடுபடுவதற்கான எல்லாத் தயாரிப்புகளையும் செய்து கொடுக்க இந்நாடுகளுக்கு இந்தியர்கள் அனுப்பப்படுகின்றனர். மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்நாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சேவை செய்து வருகின்றன.


இத்தகைய மறுசீரமைப்புத் திட்டத்தில் ஒன்றாகத்தான், ஆப்கானிஸ்தானில் எல்லைப்புற சாலைகளை அமைக்கும் வேலையை இந்திய அரசு நிறுவனமான''எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவனம்'' செய்து வருகிறது.''பாகிஸ்தானின் தரைவழியை மட்டுமே ஆப்கான் பெரிதும் சார்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் துருக்மேனிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடன் ஆப்கானை இணைக்கும் வகையில் தற்போது நிறுவப்படும் சாலைகளானது அந்நாட்டு மக்களுக்குப் பெரிதும் உதவக் கூடியது'' என்று விளக்கமளிக்கிறது இந்திய அரசு. ஆனால், இது ஆப்கானிய மக்களின் தேவைக்கான கட்டுமானப் பணி அல்ல; உண்மையில், போர் முக்கியத்துவம் வாய்ந்த பணி. மத்திய ஆசியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்கபிரிட்டிஷ் படைகள் ஆப்கான் வழியாக ஈரான் மீது போர்த் தாக்குதல் தொடுக்கவும், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்க மேலாதிக்கவாதிகளுக்கு பயன்படும் வகையில்தான் இச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணை போவதால்தான், ஆப்கானிலுள்ள தாலிபான், அல்கொய்தா மற்றும் பிற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இந்தியா மீது வெறுப்பும் ஆத்திமும் கொண்டுள்ளன.


இக்கட்டுமானப் பணிகள் தவிர, இந்திய அரசு இரகசியம் இராணுவ ஆலோசகர்கள் மூலம் ஆப்கான் பொம்மை அரசின் படைகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகவும், ஆப்கான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 4 இந்தியத் தூதரகக் கிளைகளை நிறுவி உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தாலிபான் இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான சபிஹூல்லா முஜாகத் குற்றம் சாட்டுகிறார். எனவே,''ஆப்கானில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் இந்தியர்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் தொடுப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை'' என்று அவர் கூறுகிறார்.


மறுபுறம், 2001இல் ஆப்கான் ஆக்கிரமிக்கப்பட்டபோது 20,000 பேராக இருந்த ஏகாதிபத்திய நாடுகளின் துருப்புகள், இன்று 70,000 பேராக அதிகரித்துள்ளது. இது தவிர 3,000க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவம் ஆப்கானின் தென்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளில் தாலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஏறத்தாழ 7,000 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஆப்கானை மறுசீரமைப்பது என்ற பெயலில் ஏகாதிபத்திய நாடுகளும், உலக வங்கியும் அளிக்கும் கடனில் 40% தொகையானது ஏகாதிபத்திய கட்டுமான நிறுவனங்களுக்கு இலாபமாகவும் தொழில்நுட்ப ஆலோசனைக் கட்டணமாகவும் அந்நாடுகளாலே உறிஞ்சப்பட்டு விடுகிறது. எஞ்சிய தொகையில் பெரும்பகுதியானது ஆப்கானை ஆளும் பொம்மை அரசின் துரோகக் கும்பலால் விழுங்கி ஏப்பம் விடப்படுகிறது. கடன் சுமையோ ஆப்கான் நாட்டின் மீதும் மக்களின் மீதும் சுமத்தப்படுகிறது. வறுமையில் உழலும் ஆப்கானிய மக்கள் இவற்றைக் கண்டு ஆத்திரமடைந்து, புரட்சிகர ஜனநாயக சக்திகள் வலுவாக இல்லாத நிலையில் தாலிபான்களை ஆதரிக்கின்றனர்.


இதனைச் சாதகமாக்கிக் கொண்டு ஆப்கானின் மேற்கேயுள்ள கந்தகார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாலிபான்கள் வலுவாக வேரூன்றியுள்ளதோடு, ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரலில் ஆப்கானின் பொம்மை அதிபர் கர்சாய் மீது தாலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவரது பாதுகாப்பு உள் வட்டத்துக்குள்ளேயே தாலிபான்கள் ஊடுருவி அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதைக் கண்டு ஆளும் துரோகக் கும்பல் பீதியில் உறைந்து போயுள்ளது.


அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 13ஆம் நாளன்று கந்தகார் நகரின் சார்கோசா சிறைச்சாலையை தாலிபான் தற்கொலைப் படையினர் தாக்கி, சிறையிடப்பட்ட தாலிபான் தீவிரவாதிகள் உள்ளிட்டு 1000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்து தப்பிச் சென்றனர். சிறைக் கைதிகளில் ஒரு சிலரை மட்டுமே பொம்மை அரசால் பிடிக்க முடிந்துள்ளது. தலைமறைவாகிவிட்ட அனைவரும் தாலிபான் படைகளில் சேர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அமெரிக்க இராணுவத்தினர் மீது தாலிபான்கள் கார் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தி பெருத்த சேதத்தை விளைவித்தனர். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல, கடந்த ஜூலை 7 ஆம் நாளன்று இந்தியத் தூதரகத்தின் மீதான தாக்குதலை நடத்தியுள்ளனர். அண்மைக் காலமாக அடுத்தடுத்து நடக்கும் இத்தாக்குதல்களை அனைத்தும் தாலிபான்களின் கை ஓங்கி வருவதை நிரூபித்துக் காட்டுகின்றன.


தாலிபான்களை ஒடுக்க பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆப்கானுக்குக் கூடுதல் படைகளை அனுப்பத் தீர்மானித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில், ஆப்கானுக்குப் படைகளை அனுப்பி ஆக்கிரமிக்கக் கூடாது என்ற பொது மக்களின் கருத்தும் போராட்டங்களும் வலுக்கத் தொடங்கியுள்ளதால், 2010ஆம் ஆண்டுக்குள் தமது படைகளை முற்றாக விலக்கிக் கொள்ள நெதர்லாந்து தீர்மானித்துள்ளது. ஜெர்மனியும் பிரான்சும் தாலிபான்களின் கை வலுவாக உள்ள தெற்குமேற்கு பகுதிகளுக்குத் தமது படைகளை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. ஆனால், இந்திய அரசோ தனது கட்டுமானத் திட்டப் பணிகளுக்குப் பாதுகாப்பாக உள்ள 900க்கும் மேற்பட்ட இந்தியதிபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.


இவ்வாறு, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களையும் ஆப்கானின் ஆளும் துரோகக் கும்பலையும் ஆதரிப்பதுதுணைபோவது என்ற இந்திய அரசின் கேடான நடைமுறையால், தாலிபான்கள் ஆத்திரமடைந்து இந்தியர்களைத் தாக்குவது தொடரவே செய்யும். தனது ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்திற்காக இந்தியர்களைப் பலியிட்டுவரும் இந்தியப் பிற்போக்கு அரசுக்கு எதிராக, இந்தியாவிலும் கொந்தளிப்புகள் பெருகவே செய்யும். அனுதாபத்தின் மூலமோ, குறுகிய தேசியவெறியூட்டுவதன் மூலமோ இந்திய அரசு தனது குற்றங்களை மறைத்துவிட முடியாது.

 

· குமார்