Language Selection

புதிய ஜனநாயகம் 2008

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.


பெரு நாட்டில் ''ஒளிரும் பாதை'' என்றழைக்கப்படும் மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அபமேல் கன்சலாவ் மீது அந்நாட்டின் ஆளும் வர்க்கம் சதிக்குற்றம் சுமத்தி, அவரை நாடு கடத்திச் சான் லாரன்சோ தீவில் சிறை வைத்துள்ளது.


பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்து 2001 முதல் தான் நடத்தி வரும் நரவேட்டையில், உயிருடன் பிடிபட்டவர்களை எல்லாம் கொண்டு வந்து கியூபா எல்லையை ஒட்டிய குவாண்டனாமோ சிறையில் அடைத்து, அமெரிக்க அரசு சித்திரவதை செய்து வருகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஈராக்கியர்களை அபுகிரைப் சிறைச்சாலையில் அடைத்து வக்கிரமான வழிகளில் சித்திரவதை செய்து வருகின்றது.


குவாண்டனாமோ மற்றும் அபு–கிரைப் சித்திரவதைகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கி அமெரிக்க பயங்கரவாதம் உலகெங்கும் அம்பலமானவுடன், அது புது வடிவில் தனது அடக்குமுறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. அதுதான், மிதக்கும் சிறைச்சாலை!


அல்காய்தா, தாலிபான் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டோ, அல்லது பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரிலோ கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்படுவதில்லை. நீதிமன்றத்திலும் முன்னிறுத்தப்படுவதில்லை. யு.எஸ்.எஸ். பெலிலை, யு.எஸ்.எஸ். பட்டான் உள்ளிட்ட 17 அமெரிக்கப் போர்க்கப்பல்களில் அவர்கள் அடைக்கப்பட்டு பெருங்கடல்கள் நெடுக அலைய விடப்படுகின்றனர். அக்கப்பல்களில் நடத்தப்படும் வன்கொடுமைகளால் குற்றுயிராக்கப்பட்டு, அவர்களில் தாக்குப்பிடித்தவர்கள் மட்டும் அமெரிக்க விசுவாச நாடுகளின் கரைகளில் இருக்கும் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். கைதானவர்களின் எண்ணிக்கையை மறைக்கவும், கைதானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை மறைக்கவும் இந்தப் புது உத்தியை மேற்கொண்டு வருகிறது, பயங்கரவாத அமெரிக்கா.


ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இயங்கிவரும் ''ரிப்ரீவ்'' எனும் மனித உரிமை அமைப்பால் மிதக்கும் சிறைகள் பற்றிய நெஞ்சை உறையச் செய்யும் பல கொடுமைகள் அண்மையில் வெளிவரத் தொடங்கி உள்ளன. அமெரிக்க அரசு முதலில் இச்செய்திகளை வதந்திகள் என மறுத்தது. ஆனால், அமெரிக்க இராணுவத்தின் இரகசிய அறிக்கைகள், ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுக்களின் அறிக்கைகள் மற்றும் கைதிகளின் வாக்குமூலங்கள் ஆகியன மிதக்கும்சிறைகள் இருப்பதை உறுதி செய்கின்றன.


அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளரான கமான்டர் ஜெப்ரீ கார்டன், ''அமெரிக்க போர்க்கப்பல் எவற்றிலும் சிறை வசதி ஏதுமில்லை'' என்றார். அவரே ''அவ்வாறு கைதிகளை அடைப்பது கைதானவுடன் சில நாட்களுக்கு மட்டும்தான்'' என்றும் ''சில நேரங்களில் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவர்'' என்றும் பூசி மெழுகி இருக்கிறார்.


அமெரிக்க அதிபர் புஷ் 2006இல் ''இரகசியச் சிறைகள் எல்லாமே காலியாகத்தான் உள்ளது'' என்றும், ''மிதக்கும் சிறைக்கொடுமை கைவிடப்பட்டு விட்டது'' என்றும் சொல்லியபோதிலும், 2006க்குப் பிறகு மட்டும் 200 முறை அவ்வாக்குறுதி மீறப்பட்டு சிறைக்கொடுமைகள் தொடர்கின்றன என்று மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்துகின்றன.


குவாண்டனாமோ சிறையில் இருக்கும் ஒரு கைதி தனது சக கைதியைப் பற்றி சாட்சியம் சொல்லும்போது, ''கப்பல் மூலம் அழைத்து வரப்பட்ட அவருடன் சேர்த்து 50 பேர்கள் அடுத்த கொட்டடியில் இருந்தனர்'' என்றும் ''அவர்களைக் கப்பலின் கீழ்த்தளத்தில் அடைத்துப் பூட்டி இருந்தனர்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களைக் கப்பல் சிறைகளில், குவான்டனாமோவை விடக் கொடுமையாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்துள்ளனர்.


கப்பல்களில் அடைக்கப்பட்ட கைதிகள் கண்காணாத இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர். யு.எஸ்.எஸ். ஆஷ்லான்ட் எனும் கப்பல் சோமாலியா நாட்டின் கடற்கரையில் 2007இல் ரோந்தில் ஈடுபட்டது. அல்காய்தாவினரைப் பிடிக்கும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த அக்காலக்கட்டத்தில், சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா படையினரால் அல்காய்தா என சந்தேகத்தின்பேரில் பிடிபட்டவர்கள் அமெரிக்க உளவமைப்புகளான சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ.யின ரால் பிடித்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்நாடுகளின் சிறையில் இருந்து அப்போது காணாமல் போனவர்கள் மட்டும் 100 பேர். அப்போது ஏடன் வளைகுடாவில் ரோந்து வந்த கப்பல்களிலும், ஆஷ்லாண்டு கப்பலிலும் வைத்து இவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறது ரிப்ரீவ்–வின் அறிக்கை.


இந்தியப் பெருங்கடலில் 25 சதுர மைல் பரப்பில் அமைந்திருக்கும் டிகோ கார்சியா தீவு, பிரிட்டிஷ் – அமெரிக்க இராணுவத்தளமாகும். 15 கப்பல்கள், இராணுவ வீரர்களைத் தவிர மனித நடமாட்டமே இல்லாத இத்தீவைச் சுற்றிப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு, அவற்றில் அமெரிக்காவால் வேட்டையாடப்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளரான கமான்டர் ஜெப்ரீ கார்டன், ''அத்தீவுக்கருகில் நிலைகொண்டிருக்கும் சிறைக்கப்பல்கள் குறித்து ஏதும் சொல்ல முடியாது'' என்று கூறிவிட்டார். ஆனால், பயங்கரவாதம் குறித்த ஐ.நா.வின் சிறப்புப் பிரிவின் தலைவரான மான்பிரெட் நோவாக், ''இத் தகைய சித்திரவதைக் கப்பல்கள் டிகோ கார்சியா தீவுக்கருகில் உள்ளன'' என்று 2005 ஜூனிலேயே சொல்லி இருக்கிறார்.


அத்தீவில் அமெரிக்கப் போர் விமானங்கள் விசாரணைக் கைதிகளுடன் இரண்டு முறை தரையிறங்கிய விசயம் வெளியே தெரிய வந்துள்ளது. தற்போது அமெரிக்க அயலுறவு அமைச்சகம் அவ்வாறு தரையிறங்கிய விமானங்கள், அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் ஆகியவற்றின் பட்டியலைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.


அமெரிக்காவில் அல்காய்தா எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜான் வாக்கர் லிந்த், 2001 இறுதியில் கைது செய்யப்பட்டு யு.எஸ்.எஸ். பலிலியம் கப்பலில் அடைக்கப்பட்டு, பின்னர் 2002 ஜனவரியில் பட்டான் கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதும் அம்பலமாகியுள்ளது.


டிகோ கார்சியா தீவைத் தவிர சி.ஐ.ஏ.வின் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் தாய்லாந்து, ஆப்கான், போலந்து, ருமேனியா நாடுகளில் இயங்கி வருகின்றன. மேலும் சிரியா, மொராக்கோ, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளிலும் கைதிகள் இரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு, அமெரிக்கப் படையினரால் வதைக்கப்பட்டு வருகின்றனர். தொழிலும் வர்த்தகமும் சுரண்டலும் அடிமைத்தனமும் மட்டுமல்ல; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறைசித்திரவதைக் கொடுமைகளையும் உலகமயமாக்கியுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.


இன்றுவரை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாத 26 ஆயிரம் பேர் இரகசியச் சிறையில் இருப்பதாய் அமெரிக்க அரசு சொல்லி இருப்பினும், 2001 முதல் கைது செய்யப்பட்டவர்கள் 80 ஆயிரம் என்கிறது மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை. அந்த 80 ஆயிரம் பேரும் எங்கே உள்ளனர்? அவர்களின் கதி என்ன? என்பதை அமெரிக்கா முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் எனும் குரல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி யுள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதி அமெரிக்காதான் எனும் உண்மையும் பலருக்குப் புரியத் தொடங்கி யுள்ளது.


· இளநம்பி