Language Selection

லலித் மேத்தா — 36 வயதான பொறியாளர்; சமூக சேவகர். விகாஸ் சாயோக் கேந்திரா (ஙகுஓ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜார்கந்த் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீஉஎகு) நடக்கும் ஊழல்மோசடிகளைத் தடுக்க, உண்மை விவரங்களைச் சேகரித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் செயின்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் தேதியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் தேதியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் காட்டுப் பகுதியில் லலித்மேத்தா கோரமாகக் கொல்லப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.


அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்மோசடி, வீண்விரயங்களை அரசு அதிகாரிகள் கண்டறிந்து தணிக்கை செய்யும் முறைக்கு மாற்றாக, மக்களிடம் கருத்து கேட்டு தாங்களே தணிக்கை செய்யும் நடைமுறையை அண்மைக்காலமாகத் தன்னார்வக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனைச் ''சமூகத் தணிக்கை முறை'' என்று அவை குறிப்பிடுகின்றன. பிரபல பொருளாதார நிபுணரான ஜீன் ட்ரேஸ் என்பவரது வழிகாட்டுதலின் கீழ் இத்தகைய சமூகத் தணிக்கைக்காகவே இத்தன்னார்வக் குழுவினர் கருத்து கேட்பும் கள ஆய்வும் செய்ய முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து, குண்டர்களை ஏவி முன்னணியாளர் லலித்மேத்தாவைக் கொன்றொழித்துள்ளனர்.


இதை மூடிமறைக்க போலீசும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் மே 31ஆம் தேதிதான் லலித்மேத்தா மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்று கூசாமல் புளுகினர். ''தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக வதந்தியைப் பரப்பி, மாநில அரசு மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் இக்குழுவினர் அவதூறு செய்துள்ளனர். ஊழல் நடந்ததற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. படிப்பறிவற்ற பழங்குடி மக்களை ஏமாற்றி, இவர்கள் பொய்யான புகார் மனு தயாரித்து விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இத்தன்னார்வக் குழுவுக்கு வரும் நிதியைக் கையாண்ட லலித்மேத்தா அக்குழுவில் ஏற்பட்ட பணத்தகராறினால் கொல்லப்பட்டிருக்கலாம்'' என்று ஊழல் கூட்டாளிகளான போலீசும் அதிகார வர்க்கமும் அறிக்கை வெளியிட்டனர்.


விசாரணையைத் திசைதிருப்பும் போலீசு கும்பலின் வக்கிரமான இந்த அறிக்கையை பல்வேறு அமைப்புகளும் பிரமு கர்களும் கண்டித்து, பாலமாவ் நகரில் கடந்த ஜூன் மாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள், தன்னார்வக் குழுக்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் எதிர்த்து வந்த போதிலும், லலித்மேத்தாவின் கொலைக்கு காரணமான ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, மக்கள் நீதிமன்றத்தில் இவர்களைத் தண்டிப்போம் என்று இப்பகுதியில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகளை வெளியிட்டனர். தலைநகர் டெல்லியிலும் லலித்மேத்தா படுகொலைக்கு எதிராகத் தன்னார்வக் குழுக்களும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மையப் புலனாய்வுத் துறையின் விசாரணையைக் கோரின. காங்கிரசு தலைவி சோனியா காந்தியும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக லலித்மேத்தா கொல்லப்பட்டுள்ளார் என்று முதலைக் கண்ணீர் வடித்தார். இத்தனைக்கும் பின்னரே இப்போது ஜார்கந்த் மாநில அரசு மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


தாராளமயமாக்கலால் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டு, அரசின் புள்ளி விவரப்படியே ஏறத்தாழ 26 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தியாவில், கூலிஏழை விவசாயிகளின் அதிருப்தியைத் தணிக்கவும், வாழ்விழந்த விவசாயிகள் நாடோடிகளாகி நகரங்களில் குவிவதைத் தடுக்கவும், விவசாயிகளின் கலகங்களைத் திசைதிருப்பி நிவாரணங்கள் மூலம் வடிகால் வெட்டவும் உலகவங்கியின் உத்தரவுப்படி காங்கிரசு கூட்டணி அரசால் 2005ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கவர்ச்சித் திட்டம்தான், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். இத்திட்டப்படி, வேலையற்ற கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை தரப்பட்டு, அவர்கள் வேலை செய்த அளவுக்கேற்ப கூலி தரப்படும்.


''கடந்த 2006ஆம் ஆண்டில் இத்திட்டம் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு, வறுமையில் உழலும் 3 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளன. பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் நாடெங்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டில் இத்திட்டத்தால் தாழ்த்தப்பட்டபழங்குடியினரும், குறிப்பாக கிராமப்புற பெண்களும் தொடர்ச்சியாக 85 நாட்களுக்கு வேலையும் கூலியும் பெற்று, வறுமையின் கோரப் பிடியில் சிக்காமல் மீண்டுள்ளனர். வேலை கொடுப்பதும் கூலி கொடுப்பதும் வெளிப்படையாக நடப்பதாலும் வேலை செய்வோருக்குச் சட்ட ரீதியாகப் பாதுகாப்புகள் உள்ளதாலும் ஊழலோ மோசடியோ நடக்க வாய்ப்பில்லை ஆண்டுக்கு ரூ. 16,000 கோடிக்கு மேல் செலவிடப்ப டும். இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நாடெங்கும் மேலும் விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளோம்'' என்று இத்திட்டத்தின் அருமை பெருமைகளை அடுக்குகிறார், மைய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சரான ரகுவந்த் பிரசாத் சிங்.


ஆனால், இத்திட்டம் எங்கெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் ஊழலும் மோசடியும் புழுத்து நாறுகிறது. ஏரிகுளங்களைத் தூர் வாருதல், மராமத்து வேலைகள், சாலை போடுதல் முதலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றை ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் சுருட்டிக் கொண்டு பொய் கணக்கு காட்டி ஏய்ப்பது; இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு, அனைவருக்கும் வேலை கொடுத்ததாக வருகைப் பதிவேட்டில் மோசடி செய்வது; எந்த அளவிற்கு மண் அள்ளப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளே அளந்து பார்த்து அதற்கேற்ப கூலி கொடுக்கப்படுவதால், அளவீட்டில் மோசடி செய்வது; வேலைக்கு வருவோரிடம் மண் வெட்டி, கடப்பாரை, மண் அள்ளும் இரும்புச் சட்டி முதலான சாதனங்களைக் கொடுக்காமல், அவற்றை ஒப்பந்ததாரர்கள் மூலம் வாடகைக்கு விட்டு, கூலியில் குறைத்துக் கொள்வது; ஒப்பந்ததாரர்கள் மூலம் இயந்திரங்களைக் கொண்டு திட்டப் பணிகளைச் செய்து, இத்தனை பேர் இத்தனை நாட்களுக்கு வேலை செய்ததாகப் பொய்க் கணக்கு காட்டி ஏய்ப்பது என்பதாக எல்லையற்ற ஊழலும் மோசடிகளும் இத்திட்டத்தில் தொடர்கின்றன. எனவேதான் இம்மோசடி ஊழல்களை அம்பலப்படுத்துவோர் மீது அதிகார வர்க்கமும் ஒப்பந்ததாரர்களும் வெறியோடு பாய்ந்து தாக்குகின்றனர்.


தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகப் பீற்றிக் கொள்ளப்படும் இராஜஸ்தான் மாநிலத்தில், இத்திட்டத்தில் நடக்கும் ஊழல்முறைகேடுகளைப் பற்றி ஜலவார் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய முற்பட்ட தன்னார்வக் குழுக்கள் மனித உரிமை அமைப்புகளின் முன்னணியாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். லலித் மேத்தாவின் கொலைக்கு முன்னதாக, கடந்த மே 9ஆம் தேதியன்று ஒரிசாவின் கோரபுட் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயண் ஹரேகா என்ற பஞ்சாயத்துத் தலைவர் இத்திட்டத்தின் மூலம் கொள்ளையடித்து வந்த ஒப்பந்ததாரர்களை அம்பலப்படுத்தியதால் கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில், கோபிசெட்டிப் பாளையம் அருகே இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு வேலை செய்தோருக்கு குறைவான கூலி வழங்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இன்னும் சில பகுதிகளில் இயந்திரங்களை வைத்துப் பணிகள் நடப்பதாகப் புகார்கள் பெருகத் தொடங்கியதும், அதிகாரிகள் சில ஊர்களின் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்படியாகத் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது, ஊழல் உறுதித் திட்டமாகி விட்டது.

 

· தனபால்