Language Selection

புதிய ஜனநாயகம் 2008

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.


ஏரிகளை ஆக்கிரமித்து, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிகவளாகங்கள், ""கோல்ப்'' மைதானங்கள், மேட்டுக்குடி குடியிருப்புகள் போன்றவை ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டு, பெரும்பாலான ஏரிகள் காணாமல் போய்விட்டன. எஞ்சிய ஏரிகளோ தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி குப்பைக் கூளங்களாய்க் கிடக்கின்றன. இவை கர்நாடக அரசின் கண்களை உறுத்தியவுடன், அவற்றைச் சுத்தம் செய்து பராமரிக்கத் தன்னால் முடியாது என நொண்டிச்சாக்கு சொல்லி, தற்போது அவற்றைத் தனியாருக்கு விற்க ஆரம்பத்துள்ளது.


இவ்வாறு விற்கப்பட்ட ஏரிகளில் ஒன்றுதான் நாகவரா ஏரி. பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி தற்போது ""லும்பனி கார்டன்'' என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏரி தங்கள் வசம் வந்தவுடன் அந்நிறுவனத்தினர் ஏரியைச் சுற்றித் தடுப்புச்சுவர் எழுப்பி யாரும் ஏரிக்குள் நுழையா வண்ணம் தடுத்துவிட் டதோடு, ஏரிக்குள் நுழைய 30 ரூபாய் நுழைவுக்கட்டணமும் வசூலிக்க ஆரம்பத்துள்ளனர். அது மட்டுமன்றி, ஏரிக்குள் வெளிநாடுகளில் உள்ளதைப்போல நீர் மேல் ஓடும் ஸ்கூட்டர்கள், அதிவேகப் படகுகள், ""காபி டே'' போன்ற நட்சத்திர உணவகங்கள், மிதக்கும் உணவகங்கள், நவீன சிறுவர் விளையாட்டுக்கள் எனப் பல அம்சங்கள், அவற்றிற்கெனத் தனித்தனியே கட்டணங்கள் என்று மக்களின் பொதுப் பயன்பாட்டிலிருந்த அந்த ஏரி முழுவதையும் லாபம் தரும் பொழுது போக்குப் பூங்காவாக (""தீம் பார்க்'') மாற்றிவிட்டனர்.


இந்த ஒரு ஏரி மட்டுமன்றி, பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளான அகாரா, ஹெப்பல், வெங்கயநாகரே உள்ளிட்ட இன்னும் மூன்று ஏரிகளையும் தனியார் நிறுவனங்களுக்கு 15 வருட ஒப்பந்தத்தினடிப்படையில் குத்தகைக்கு விட்டுள்ளனர். இவ்வாறு ஏரியைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் நேச்சுரல் சிஸ்டம்ஸ், ஈஸ்ட் இந்தியா ஓட்டல்ஸ், பார்சி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும் தான்.


ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனங்கள், ஏரியைத் தூர்வாருவது, கழிவுநீரை வெளியேற்றுவது மற்றும் ஏரியைப் பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்தால் மட்டும் போதும். ஆனால் அதற்கு ஈடாக அவர்கள் ஏரியைச் சுற்றிலும், ஏன் ஏரிக்குள்ளும் கடைகள் அமைக்கலாம்; நீர் விளையாட்டுக்கள், பூங்காக்கள், உணவகங்கள் என எது வேண்டுமானாலும் திறந்து மக்களிடம் காசைக் கறக்கலாம்; பொதுச்சொத்தான இந்த ஏரியைச் சுற்றி சுவர் எழுப்ப அவர்கள் விரும்பும் தொகையை மக்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக வசூலிக்கலாம் என்று தாராள சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.


முதல் கட்டமாக நான்கு ஏரிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், அடுத்தகட்டமாக மேலும் 25 ஏரிகளிலும், படிப்படியாக 50 ஏரிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு ஏரிகளைத் தனியார்மயமாக்குவதற்கென்றே ""ஏரிகள் வளர்ச்சிக் குழுமம்'' என்ற நிறுவனமொன்றை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது.


150 ஏக்கர் பரப்பளவில் அதாவது சுமார் 67.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்த ஒரு ஏரிக்கு, அதுவும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இடத்திற்கு தனியார் நிறுவனங்கள் தர வேண்டிய குத்தகைத் தொகை வருடத்திற்கு வெறும் 72 லட்ச ருபாய் மட்டுமே. இவ்வளவு மலிவான விலையில் நகரின் முக்கியப் பகுதியில் இடம் கிடைப்பதால் அனைத்து ரியல் எஸ்டேட் கொள்ளையர்களும் நாக்கைத்தொங்கப் போட்டுக் கொண்டு ஏரிகள் பாதுகாப்புக் குழுமத்தை மொய்க்கத் தொடங்கியுள்ளனர்.


ஏரிகள் தனியாருக்கு விற்கப்படுவதால் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள், ஏரிகளையே நம்பி வாழ்ந்துவரும் மீனவர்கள்தான். இதுவரை இவர்கள் வனத்துறையிடம் உரிமம் பெற்று ஏரிகளில் மீன்பிடித்து வந்துள்ளனர். ஆனால், தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோய்விட்டது.


இவர்களோடு இந்த ஏரிகளை நம்பித் தொழில் நடத்திவரும் நூற்றுக்கணக்காண சலவைத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் வரை, ஏரிகள் பொதுப் பயன்பாட்டிலிருந்ததால் அவற்றில் துணிகளைத் துவைத்துத் தங்களது பிழைப்பை நடத்தி வந்த இவர்கள், தற்போது தங்களது தொழிலை நடத்த வழிதெரியாமல் தவிக்கின்றனர்.


மீன் பிடிப்பதும், துணிகளைத் துவைப்பதும் ஏரிகளை மாசுபடுத்துவதாகக் கூறும் ஏரிகள் வளர்ச்சிக் குழுமத்திற்கு, நீர் விளையாட்டுக் கருவிகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகளும், "காபி டே'' உணவகங்களின் உணவுக் கழிவுகளும் ஏரியை மாசுபடுத்துவது தெரிவதில்லை.


இது பற்றி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டது. அவ்வழக்கில் கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து ஏரிகளையும் பறவைகள் சரணாலயமாகவோ அல்லது உயிரியல் பூங்காவாகவோ அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் நலனை மனதில் கொண்டு, இனிமேல் தூர்வாரப்பட்டு, அழகுபடுத்தப்படும் ஏரிகள் அனைத்தும், பொதுமக்களுக்கும் இயற்கைக்குமான உறவை பாதுகாக்கும் வகையில் அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


மேலும் இந்த அறிக்கை, ஏரிகளை அழகுபடுத்தும் பொருட்டு உணவகங்கள், நீர் விளையாட்டுகள், மற்றும் இதர கட்டுமானங்கள் ஏரிக்குள்ளும் ஏரிக்கருகிலும் கட்டப்படக்கூடாது எனவும், ஏரியைச் சுற்றி பிரம்மாண்டமான மின்விளக்குகள் அமைக்கக் கூடாது எனவும் வலியுறுத்துகிறது.


இந்த அறிக்கையைத் தொடர்ந்து, பெங்களூரு நகரக் குடிநீர் வடிகால் வாரியம் நாகவரா ஏரியையும், வெங்கயநாகரே ஏரியையும் நகருக்குக் குடிநீர் வழங்க ஏற்ற ஏரியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்காக அந்த ஏரியில் படகு சவாரி தடைசெய்யப்படுவதுடன், ஏரிக்கரையில் அமைந்துள்ள உணவகங்களும் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏரி மாசடைவதைத் தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.


ஆனால், இவை யாவும் ஏரிகள் வளர்ச்சிக் குழுமத்தின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. அது அடுத்தகட்டமாக ஏரிகளை குத்தகைக்குவிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


கடந்த 2002ஆம் ஆண்டில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில், பெல்லந்தார் ஏரிக்கருகிலிருந்த விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்த தொழில் வளர்ச்சிக் குழுமம், பின்னர் அவற்றை இன்போஸிஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கியது. தற்போது ஏரிப் பராமரிப்பு எனும் பெயரில் முழு ஏரியும் தனியாருக்குக் கொடுக்கப்படுகிறது.


தனியார்மயம் என்ற பெயரில் ஏற்கெனவே ஆற்றுத் தண்ணீரையும், ஆற்றுப்படுகைகளையும் கொக்கொ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டனர்; "நீரா'' என்ற ஆற்றையே தனியாருக்கு விற்பனை செய்தனர்; தற்போது அடுத்த கட்டமாக ஏரிகள் அனைத்தையும் தனியாருக்கு விற்க ஆரம்பித்துள்ளனர். இப்படியே போனால் நமது நீர் ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் தனியாருக்கு விற்பனை செய்து, நீருக்காக நாம் அவர்களிடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்திவிடுவார்கள், இந்தத் தனியார்மய தாசர்கள்.


· அழகு