09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்திய அணு உலைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் தங்க முலாம் பூசிய விலங்கு! : சர்வதேச அணுசக்தி முகாமை, இந்திய அணுசக்தித் துறையை அமெரிக்காவிற்காகக் கண்காணிக்கும் போலீசாகச் செயல்படும்

மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருந்தால், இந்தியாஅமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு (123 ஒப்பந்தம்) என்ன நேர்ந்திருக்கும்? அவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டிருக்குமேயொழிய, அவ்வொப்பந்தம் காலாவதி ஆகிப் போயிருக்காது. ஏனென்றால், பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் காங்கிரசு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.


இடதுசாரிக் கட்சிகளில் கூட, இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக முழுக் கருத்தொற்றுமை இருக்கிறதா என்பதும் சந்தேகத்திற்குரியதுதான். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக "மார்க்சிஸ்டு' கட்சித் தலைவர்களுக்குள் வெடித்த கோஷ்டிச் சண்டை, இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகத்தான் அமைந்தது.


அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலே தேவையில்லை எனும்பொழுது, ஓட்டுக்கட்சிகளின் ஆதரவு / எதிர்ப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பது வெட்டி வேலை.


அதனால்தான், மன்மோகன் சிங், தனது ஆட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்துவிட்டதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இந்தியாவிற்கும், சர்வதேச அணுசக்தி முகமைக்கும் இடையே முடிவாகியுள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தை, அம்முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற கடந்த ஜூலை 18 அன்று அனுப்பி வைத்தார். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, இதே தேதியில்தான் (ஜýலை 18, 2005) அமெரிக்காஇந்தியா இடையே இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது; அவ்வொப்பந்தத்தின் மூன்றாமாண்டு நிறைவு நாளில், இந்தியாவிற்கான அணுஉலை கண்காணிப்பு ஒப்பந்தத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்ததன் மூலம், 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை எள்ளி நகையாடியிருக்கிறார், மன்மோகன் சிங்.


''இந்தியாவின் அணு உலைகளை இராணுவப் பயன்பாட்டுக்கானது; சமூகப் பயன்பாட்டுக்கானது எனப் பிரிப்பது; சமூகப் பயன்பாட்டுக்கான அணு உலைகளையும்; அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கனநீரைத் தயாரிக்கும் ஆலைகளையும்; அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்களையும், இந்தியா தானாக வலியப் போய் சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதிப்பதாக'' மன்மோகன் சிங் புஷ்ஷிடம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான் இந்தியாவிற்கும், சர்வதேச அணுசக்தி முகமைக்கும் இடையே இந்தியாவிற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அது அம்முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.


இங்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதற்கான ஒப்புதலை அணு மூலப் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிடமிருந்து அமெரிக்கா பெற்றுத் தரும். இதன் பிறகு, அணுசக்தி கூட்டுறவு தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள ''123 ஒப்பந்தத்திற்கு'' அமெரிக்கா நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளிக்கும். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே இவையனைத்தையும் முடித்துவிடத் துடிக்கிறார், மன்மோகன் சிங்.


···


இந்தியா அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடு என்பதோடு, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடும் கூட. எனவே, சர்வதேச அணுசக்தி முகமையில் இந்தியாவிற்கெனத் தனித்ததொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அணுஆயுத வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனாவிற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இந்தியாவிற்கும் வழங்கப்பட்டிருப்பதாக, இவ்வொப்பந்தத்தின் அருமை பெருமைகளை எடுத்து விட்டு வருகிறது, மன்மோகன் சிங் கும்பல்.


இந்திய அணு உலைகளுக்குத் தேவைப்படும் யுரேனியத்தைத் தடையின்றி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான், சர்வதேச அணுசக்தி முகமையோடு கண்காணிப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது; அதையும் மீறித் தடை ஏற்பட்டால், அதனை நீக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கவும்; இந்திய அணு உலைகளை அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் இயக்குவதற்குத் தேவையான யுரேனியத்தை சேமித்து வைத்துக் கொள்ளவும் இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு உரிமைகள் வழங்கியிருக்கிறது; மேலும், இந்தியாவின் அணு ஆயுத, இராணுவ நோக்கங்களுக்குள் சர்வதேச அணுசக்தி முகமை தலையிடாத வண்ணம் இவ்வொப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.


இது எந்தளவிற்கு உண்மையானது எனத் தெரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இந்திய அணுசக்தி கமிசனின் தலைவர் அனில் ககோத்கரிடம், ''யுரேனியம் வழங்குவதில் தடை ஏற்பட்டால், அதைச் சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்க இந்தியாவிற்கு உரிமை உண்டு என ஒப்பந்தம் கூறினாலும், அந்த உரிமைகள் என்னென்ன என்பது பற்றி ஒப்பந்தத்தில் தெளிவாக, வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லையே?'' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனில் ககோத்கர், ''சரி செய்யும் நடவடிக்கைகளை, குறிப்பாகச் சொல்லப்படாத இறையாண்மையுடைய செயல்கள் என்றுதான் நான் வருணிப்பேன்; சமயம் வரும்பொழுது, அவை பற்றி நாங்கள் முடிவெடுப்போம்'' எனப் பதில் அளித்தார்.
(தி ஹிந்து, 20.7.08, பக்: 13) இதற்குப் பெயர் பதில் இல்லை; சமாளிப்பு!


ஐந்து அணு ஆயுத வல்லரசு நாடுகளும், தாங்கள் விரும்பினால், தங்களது அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளன. அதேபோன்று உரிமை இந்தியாவிற்கும் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதனைப் பயன்டுபடுத்துவது என்பது ஏழுமலை தாண்டி, ஏழு கடல் தாண்டி... என மாயாஜாலக் கதைகளில் வருவது போன்று பல தடைகளை உள்ளடக்கியிருக்கிறது.


இந்திய அணு உலைகளுக்குத் தடங்கல் இன்றி யுரேனியம் கிடைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மன்மோகன் சிங் அரசு திரும்ப திரும்பக் கூறி வருகிறது. இதன் மூலம் சர்வதேச அணுசக்தி முக மையை, யுரேனியத்தை வாங்கி விற்கும் தரகு வியாபார நிறுவனம் போலச் சித்தரித்து வருகிறது. இது உண்மைக்கு மாறானது. சர்வதேச அணுசக்தி முகமை அணு உலைகளைக் கண்காணிக்கும் அமைப்பு தானே தவிர, சர்வதேச யுரேனியம் வியாபாரத்திற்கும் அதற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. அணு மூலப் பொருள் விற்கும் நாடுகள் இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் ஏதேனும் தடை ஏற்படுத்தினால், அது பற்றி இந்தியா சர்வதேச அணுசக்தி முகமையிடம் முறையிடலாம். அப்பாவி பக்தன் தனது பிரச்சினைகளைத் தெய்வத்திடம் முறையிடுவது போல.


சமூக வாழ்க்கையில் தெய்வத்தைவிட, பூசாரியே அதிகாரம் உள்ளவனாக இருப்பதைப் போல, சர்வதேச அணுசக்தி முகமையைவிட அமெரிக்காவும், அது செல்வாக்கு செலுத்தும் அணு மூலப் பொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் தான் யுரேனியம் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அதனால்தான், இந்திய அணு உலைகளை சர்வதேச அணு முகமையின் கண்காணிப்பில் இருந்து திரும்பப் பெறும் உரிமையைப் பயன்படுத்துவீர்களா எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபொழுது ''அப்படிப்பட்ட தேவை எழாது'' என சர்வதேச அணுசக்தி முகமையோடு பேச்சு வார்த்தை நடத்திய முனைவர் குரோவர் பதில் அளித்தார். இதனை நல்ல நம்பிக்கை எனச் சொல்வதா, இல்லை சரணாகதி எனச் சொல்வதா?


சர்வதேச அணுசக்தி முகமையால் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இணைப்பு என அழைக்கப்படும் ஒப்பந்தத்தின் மூன்றாவது பகுதி இந்தியா எந்தெந்த அணு உலைகளைச் சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்புக்கு ஒப்படைக்கப் போகிறது என்பது பற்றியது. ஆனால், இந்திய வெளியுறவுத் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நகல் ஒப்பந்தத்தில், அந்தப் பகுதி விவரம் ஏதும் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. இந்த இணைப்புப் பகுதி சர்வதேச அணுசக்தி முகமைக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையா என்ற கேள்விக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலேதும் இல்லை.


இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் அணு உலைகளைக் கண்காணிப்பில் இருந்து திரும்பப் பெறும் உரிமை; யுரேனியத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமை; யுரேனியம் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் உரிமை ஆகியவை ஒப்பந்தத்தின் முகவுரையில் (முதல் பகுதி) தான் காணப்படுகிறதேயொழிய, முக்கியமான இரண்டாம் பகுதியான செயலாக்கப் பிரிவில் காணப்படவில்லை. இப்படி விடுபட்டிருப்பது தற்செயலானதா என்ற சந்தேகத்திற்கும் தெளிவான பதில் இல்லை.


123 ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, அணு உலைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவிற்குப் பாரிய கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. அதேசமயம், இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளும், யுரேனியமும், பிற அணுப் பொருட்களும், தொழில்நுட்பக் கருவிகளும் சர்வதேச அணுசக்தி முகமையின் நிரந்தரக் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்; அக்கண்காணிப்பை ரத்து செய்யும் உரிமை இந்தியாவிற்குக் கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கு யுரேனியம் கிடைக்காமல், அவை கிடப்பில் போடப்பட்டிருந்தாலும்கூட, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ள முடியாது. அணு உலையோடு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து அகற்றப்படும் வரை கண்காணிப்பு தொடரும்.


சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட ''சுதேசி'' அணு உலைகளை, இந்தியா தன்னிச்சையாகக் கண்காணிப்பில் இருந்து திரும்பப் பெற்று விட முடியாது. இந்த ஒப்பந்தத்தின் 32ஆவது விதி, ''இந்தியா சர்வதேச அணுசக்தி முகமையிடம், அதனின் கண்காணிப்பை ரத்து செய்யக் கோர வேண்டும்; இரண்டாவதாக, அந்த அணு உலை எந்தவிதமான அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இனி பயன்படாது என்பதை இந்தியாவோடு சேர்ந்து, சர்வதேச அணுசக்தி முகமையும் தீர்மானிக்க வேண்டும்'' என நிபந்தனை விதிக்கிறது.


இந்த ஒப்பந்தத்தின் 14ஆவது விதி, சுதேசி அணு உலையாக இருந்தாலும் ஒருமுறை கண்காணிப்புக்கு விட்டுவிட்டால், அதனை நிரந்தரமாகக் கண்காணிக்கும் உரிமையை சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்குகிறது. ''பாதுகாப்பு நோக்கம்'' என்ற அடிப்படையில், இந்தியாவின் சுதேசி அணு உலைகளை நிரந்தரமாகக் கண்காணிப்பதை இந்த விதி நியாயப்படுத்துகிறது. மேலும், ''இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, இந்தியாவின் சுதேசி அணு உலைகளை கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ள முடியாது'' என இந்த 14ஆவது விதி மறைமுகமாகத் தடை விதிக்கிறது.


இந்திய அரசு கூறி வருவதைப் போல, அணு உலைக்கு ஆயுட்காலம் முழுவதும் யுரேனியம் வழங்கினால், அதனை ஆயுட்காலக் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவிற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை. மாறாக, அதற்கு நேர் எதிரான திசையில்தான் ஒப்பந்தம் பயணிக்கிறது. ''யுரேனியம் இறக்குமதிக்குத் தடை ஏற்பட்டாலும், நிரந்தரக் கண்காணிப்புக்கு உட்பட வேண்டும்'' என்பதுதான் இந்த ஒப்பந்தம் சொல்லும் செய்தி.


···


இந்தியாஅமெரிக்கா இடையேயான அணுசக்தி கூட்டுறவை (வியாபாரத்தை!)க் கட்டுப்படுத்த ''ஹைட்'' சட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது, அமெரிக்கா. அணு உலைகளைத் தடங்கல் இன்றி இயக்கும் அளவிற்கு யுரேனியத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமையை, சர்வதேச அணுசக்தி முகமை இந்தியாவிற்குப் பெயரளவில் வழங்கியிருக்கிறது. ஆனால், ஹைட் சட்டமோ இந்த உரிமையை முற்றாக மறுக்கிறது.


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டுவது, புத்துருவாக்கம் செய்வது ஆகிய உரிமைகள் இந்தியாவிற்கு வழங்கப்படுவதை ஹைட் சட்டம் மறுக்கிறது. அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தைப் புத்துருவாக்கம் செய்யும் உரிமை வழங்கப்பட்டாலும், அதற்காக சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் புதிதாக ஆலை அமைக்க வேண்டும். ஆலை அமைக்கப்பட்ட பிறகும் கூட, ஏதாவது நொண்டிச் சாக்கைச் சொல்லி புத்துருவாக்கம் செய்யும் உரிமையை மறுக்கலாம் போன்ற மென்னியைப் பிடிக்கும் நிபந்தனைகள் ஹைட் சட்டத்தில் உள்ளன.


பி.கே. ஐயங்கார், ஏ.கோபால கிருஷ்ணன், ஏ.என்.பிரசாத் — இம்மூன்று அணு விஞ்ஞானிகளும், ''யுரேனியத்தை புத்துருவாக்கம் செய்யும் உரிமையை இந்தியாவிற்கு மறுப்பதன் மூலம், தோரியத்தைப் பயன்படுத்தி அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் இந் தியாவின் மூன்றாம் கட்டத் திட்டத்தை அமெரிக்கா முடக்கிவிடச் சதி செய்கிறது'' எனக் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.


123 ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை, யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப் பொருட்களை, ''இந்தியப் பிராந்தியத்தில் இருந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றும்'' உரிமையை ஹைட் சட்டம் அமெரிக்காவிற்கு வழங்குகிறது. இந்த அகற்றும் உரிமை, இராணுவம் தலையீடு செய்வதற்கு இணையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. வீரேந்திர குமார் எச்சரிக்கை செய்கிறார்.


ஆனால், மன்மோகன் சிங் கும்பலோ, ''ஹைட் சட்டம் நம்மைக் கட்டுப்படுத்தாது; சர்வதேச அணு சக்தி முகமையோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தம்தான் இந்தியாவைக் கட்டுப்படுத்தும்'' எனப் பூசி மெழுகி வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமையும்கூட நியாயமான, நடுநிலையான அமைப்பு அல்ல. ஈரானைக் கண்காணிக்கும் பிரச்சினையில் அச்சர்வதேச நிறுவனத்தின் அமெரிக்க அடிவருடித்தனம் அப்பட்டமாக அம்பலப்பட்டுப் போனது.


சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தாமல், இந்தியா ஒதுக்கி வைத்துள்ள இராணுவ அணு உலைகளில் கூட, தனது வானாளவிய அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சர்வதேச அணுசக்தி முகமை மூக்கை நுழைக்கும் காட்சியை நாம் எதிர்காலத்தில் காண முடியும். மற்ற ஏழை நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதைத் தடை செய்ய அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் என்றால், இந்தியாவிற்கு இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதே உண்மை!


···


இந்தியாஅமெரிக்கா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் மூலம், 2020க்குள் 40,000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற முடியும் என அனில் ககோத்கர் கூறுகிறார். ஆனால், அமெரிக்கா மனது வைத்தால்தான் இந்தியா இந்தச் "சாதனையை'ப் படைக்க முடியும். இதற்குப் பதிலாக, இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரி, நீர் ஆதாரங்களைப் பயன்படுத்திக் குறைவான முதலீட்டில், அணு மின்சாரத்தை விட மலிவான உற்பத்திச் செலவில் 2020க்குள் 1,20,000 மெகாவாட் மின்சாரத்தை, அமெரிக்காவின் தலையீடின்றி தயாரிக்க முடியும் என 123 ஒப்பந்தத்தை எதிர்க்கும் அணு விஞ்ஞானிகளே கூறுகிறார்கள். பிறகு ஏன், அமெரிக்க அடிமைத்தனம் என்ற பொன்விலங்கை இந்திய அரசு மாட்டிக் கொள்ள விரும்புகிறது?


மன்மோகன் சிங் என்ற அமெரிக்க அடிவருடியின் தனிப்பட்ட விருப்பமாக இதனைப் பார்க்க முடியாது. அம்பானி சகோதரர்கள் மட்டுமின்றி, இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார்கள். இந்தியத் தரகு முதலாளிகளுக்கு அமெரிக்க டாலரும், அமெரிக்க ஐரோப்பியச் சந்தையும் வேண்டும். ஆசியக் கண்டத்தில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு இன்னுமொரு அடியாள் தேவை. இந்த இரண்டு தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளும் முகமாகத்தான் இந்தியஅமெரிக்க இராணுவ ஒப்பந்தமும், அதன் அடிப்படையில் அணுசக்தி ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இராணுவக் கூட்டாளி என்ற தகுதியைப் பெறுவதற்காகவே, சுயேச்சையாகச் செயல்பட்டு வந்த அணுசக்தித் துறையும்; இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அரைகுறை உரிமையும் முற்றிலுமாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளன!

· குப்பன்