அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி சி.பி.எம். கட்சிக்குள்தான் தற்போது மையம் கொண்டுள்ளது. அக்கட்சியின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, நாடாளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தின் மூலம், அக்கட்சியில் நிலவும் கோஷ்டி சண்டையும் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று திரும்பப் பெற்றன. அதையொட்டி அரசுத் தலைவரிடம் கொடுத்த பட்டியலில் சி.பி.எம். கட்சி எம்.பி.க்களின் வரிசையில் நாடா ளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதையறிந்த சோமநாத் பொங்கியெழுந்து விட்டார். ""அவைத் தலைவரான நான் எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன்; எனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்த்தது தவறு'' என்று சீறினார். மற்றவர்களால் ""மாண்புமிகு சபாநாயகர்'' என்று அழைக்கப்படும் தன் பெயரை ""தோழர்'' என்று பட்டியலில் சேர்த்து கட்சி தன்னை இழிவுபடுத்தியதைக் கண்டு சோமநாத்துக்கு மகாகோபமாம்!
சி.பி.எம். கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளதால், கட்சி முடிவுப்படி சோமநாத் சட்டர்ஜி பதவி விலக வேண்டும் என்பது கட்சியின் பொதுச் செயலரான பிரகாஷ் கரத்தின் நிலை. ஆனால், கோஷ்டித் தகராறு காரணமாக, இத்தகவலை சோமநாத்திடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க கரத்துக்கு சங்கடம். எனவே, என்ன செய்வது என்பதை சோமநாத் சட்டர்ஜியே முடிவு செய்வார் என்று அறிவித்து விட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் சோமநாத் சட்டர்ஜி பதவி விலகி விட வேண்டும் என்பது கரத்தின் விருப்பம். ஆனால், சட்டர்ஜியோ, பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து கொண்டு அரசைக் கவிழ்ப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார். சபாநாயகர் பதவியைத் தூக்கியெறிவதைப் பற்றி வாய்திறக்க மறுத்தார்.
இதற்கிடையே, அரசியல் தரகு வேலை செய்வதில் நிபுணரான சி.பி.எம். கட்சியின் சீதாராம் யெச்சூரி, ""பட்டியலில் சோமநாத்தின் பெயரைச் சேர்த்தது தற்செயலாக நடந்துவிட்ட தவறு; சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலை மக்களவை இணைய தளத்திலிருந்து அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விட்டோம்'' என்று சோமநாத்துக்கு பக்கமேளம் வாசிக்கத் தொடங்கினார். பின்னர், ""சோமநாத்தின் அனுமதியில்லாமல் அவரது பெயரை சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் சேர்த்தது தவறுதான் என்றும், அப்படி பட்டியலில் சேர்த்தாலும், அவர் சபாநாயகர் என்பதை அடிக்குறிப்பாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்'' என்றும் கட்சியின் முடிவை விமர்சித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். பத்திரிகைகளோ, கரத் கோஷ்டியுடன் யெச்சூரி கோஷ்டி கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறது என்று அம்பலப்படுத்தின. ""அப்படியெல்லாம் தகராறு ஒன்றுமில்லை'' என்று அறிக்கை வெளியிட்டார் ஒரு "இடதுசாரி' தலைவர். அவர் சி.பி.எம். கட்சியின் தலைவர்களுள் ஒருவரல்ல. வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ராஜாதான் இப்படி அறிக்கை வெளியிட்டார். இப்படி சி.பி.எம். கட்சியின் உள்குத்துகளைப் பஞ்சாயத்து பண்ணி, கோஷ்டிப் பூசலைப் பூசி மெழுகினார் ராஜா.
இந்தச் சமாளிப்புகளையெல்லாம் சோமநாத் சட்டை செய்வதாக இல்லை. அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏகமனதாக சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட தன்னை ஒரு சாதாரண கட்சி உறுப்பினர் போல எப்படி நடத்தலாம் என்பதுதான் அவரது கோபம். பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில், அதன் மரபையும் மாண்பையும் புனிதத்தையும் கட்டிக் காக்கும் வகையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு "ஜனநாயக' அறவழியின் அடிப்படையில் செயலாற்ற தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை சி.பி.எம். கட்சி ஏற்றுக் கொண்ட பின்னரே, அவர் சபாநாயகராகப் பதவியேற்றாராம். விலகல் எம்.பி.க்களின் பெயர்ப் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்ததன் மூலம் சி.பி.எம். கட்சித் தலைமை நாணயம் தவறிவிட்டதாம். அதனால்தான் அவருக்குக் கோபமாம்.
சோமநாத் இப்படி முறுக்கிக் கொள்வதற்கான காரணத்தை அவரது வர்க்க மற்றும் அரசியல் பின்னணியிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். சோமநாத்தின் தந்தை இந்து மகாசபையின் தலைவராக இருந்தவர். அவரது குடும்பம் வைதீக பார்ப்பன நிலப்பிரபு குடும்பம். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய சோமநாத், 1968இல் சி.பி.எம். கட்சியில் சேர்ந்து 1971இல் நடந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரானார். "ஜனநாயக' மரபுகளை பெரிதும் மதிக்கும் சோமநாத், தனது குடும்பத்திலும் அதைப் பின்பற்றி, தனது பேரனுக்கு பார்ப்பன வைதீக முறைப்படி பூணூல் கல்யாணம் நடத்தி வைத்து "ஜனநாயக'த்தைக் கட்டிக் காத்தவர். மே.வங்கப் போலி கம்யூனிசப் பிதாமகரான ஜோதிபாசுவின் விசுவாச சீடரான இவர், 1996இல் பிரதமர் நாற்காலியில் ஜோதிபாசுவை அமர வைக்க நடந்த முயற்சியை சி.பி.எம். கட்சி ஏற்காத போது, மே.வங்க கோஷ்டியின் பலத்தைக் கொண்டு கட்சியை உடைக்கவும் முற்பட்டார். பின்னர், ஜோதிபாசு அவரைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஜோதிபாசு, மே.வங்க முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகத் தலைவராக இருந்த சோமநாத், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பல ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பறந்து சென்று ஒப்பந்தங்கள் போட்டார். பன்னாட்டு முதலாளிகளுக்கு மே.வங்கத்தை அடிமைப்படுத்தி விட்டார் என்று சி.பி.எம். கட்சியிலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி அவருக்கும் மே.வங்கத்தைச் சேர்ந்த சைபுதீன் சவுத்ரிக்கும் கட்சித் தலைமை நோட்டீசு அனுப்பியது. பின்னர் சைபுதீன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜோதிபாசுவின் தலையீட்டால் சோமநாத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்பேர்பட்ட சோமநாத், சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சித் தலைமை நிர்பந்திக்கத் தொடங்கியதும், அவர் தனது குருநாதர் ஜோதிபாசுவைச் சந்தித்தார். பாசுவும் தனது சீடப்பிள்ளை சோமநாத்தின் நிலைப்பாடு சரிதான் என்றார். அதைத் தொடர்ந்து, ""நான் முதலில் பிராமணன்; அதன் பிறகுதான் கம்யூனிஸ்டு'' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட மே.வங்க போக்குவரத்துத் துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி, ""பா.ஜ.க.வுடன் இணைந்து காங்கிரசை எதிர்ப்பதில் தனக்கு உடன்பாடில்லை'' என்று மே.வங்க கோஷ்டியின் நிலையை எதிரொலித்தார். பிரகாஷ் கரத் அவரிடம் விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பிய பின்னரும் தனது கருத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தனது கருத்தை பத்திரிகைகளுக்குத் தெரிவித்தது தவறுதான் என்று சுபாஷ் சக்ரவர்த்தி "சுயவிமர்சனம்' செய்து கொண்டாராம்.
சி.பி.எம்.இன் மே.வங்க கோஷ்டி, கட்சித் தலைமையுடன் முறுக்கிக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்து, கட்சிக்குள் நடக்கும் குத்துவெட்டுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து, பிற பகுதிகளில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்ற பிரகாஷ் கரத், மே.வங்கத்துக்கு மட்டும் செல்லாததன் மூலம், இந்தக் கோஷ்டிச் சண்டை நாடெங்கும் அம்பலப்பட்டுப் போனது.
இந்தக் கூத்துகள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, மறுபுறம் நம்பிக்கை வாக்கெடுப்பு எனும் இறுதிக்காட்சி நெருங்கியது. நாடாளுமன்ற "மரபை'யும் "மாண்பை'யும் கட்டிக் காக்க, சோமநாத் சட்டர்ஜி மக்களவைக்குத் தலைமையேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் சபாநாயகர் பதவியிலிருந்து அவர் விலகி விடுவார் என்று சி.பி.எம். தலைவர்கள் மிகவும் எதிர்பார்த்தார்களாம். சோமநாத் சட்டர்ஜியோ அவர்களின் முகத்தில் கரி பூசிவிட்டார்.
அரண்டுபோன பிரகாஷ் கரத் தலைமையிலான கோஷ்டி, அவசரமாக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தைக் கூட்டியது. அதில் மே.வங்க கோஷ்டி பங்கேற்காமல் புறக்கணித்தது. ஆனாலும் அரசியல் தலைமைக் குழுவில் பாதிப்பேர் மட்டுமே பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக சோமநாத் சட்டர்ஜியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. கண்ணியமிக்க சிறந்த நாடாளுமன்றவாதியை சி.பி.எம். கட்சி பழிவாங்கி விட்டதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதின. கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், ""நாங்கள் முழுமையான ஆதரவளிக்கிறோம்; மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலக வேண்டாம்'' என்று காங்கிரசு கூட்டணித் தலைவர்கள் சோமநாத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இருப்பினும் சோமநாத்துக்கு நாற்காலி ஆசை எதுவும் கிடையாதாம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபையும் மாண்பையும் காக்கவே கட்சியின் தவறான முடிவுக்குக் கட்டுப்பட மறுத்தாராம். மே.வங்க பிரபல போலி கம்யூனிஸ்டு தலைவரான ஹிரேன் முகர்ஜியின் நூற்றாண்டு விழா ஆகஸ்டு 12ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதால், "கம்யூனிச' உணர்வோடு அதில் பங்கேற்றுவிட்டு, அவ்விழா முடிந்த மறுநாளே சபாநாயகர் மற்றும் அனைத்து பதவிகள் பொறுப்புகளிலிருந்தும் சோமநாத் விலகி விடுவாராம். இத்தகவலை தனது குருநாதர் ஜோதிபாசு மூலம் கட்சிக்கும் தெரிவித்துவிட்டாராம். அவரது கண்ணியத்தை அறிந்து அவரது அபிமானிகள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
அழுகி நாறும் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் "புனிதம்' காக்க சோமநாத் புது அவதாரம் எடுத்தார். ஆனால், கோஷ்டிச் சண்டையால் அழுகி நாறும் சி.பி.எம். கட்சியை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியாமல், அக்கட்சியின் அணிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
· மனோகரன்