பட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.

 

மதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால்பிடித்துச் செல்லும் சி.பி.எம். கட்சி, காங்கிரசின் எல்லா கழிசடைத்தனங்களையும் கொண்ட கட்சியாக நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. காங்கிரசைப் போலவே சி.பி.எம். கட்சியில் கோஷ்டி சண்டைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. வர்க்க அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடும் கம்யூனிச நடைமுறையைக் கைகழுவிவிட்டு, காங்கிரசு கட்சியைப் போலவே ஓட்டுக்காக சிறுபான்மை பிரிவையும் அக்கட்சி இப்போது கட்டத் தொடங்கிவிட்டது.


வேலூர் கோட்டையிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளனர். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைக்கான இந்நியாயமான போராட்டத்தை ஆதரித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டிப் போராட முன்வராத சி.பி.எம். கட்சி, மத அடிப்படையில் சிறுபான்மைப் பிரிவு என்ற பெயரில் சுவரொட்டி வெளியிட்டுள்ளது. முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் அரசையும் இந்துவெறியர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடாது; அதேசமயம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் காட்டிக் கொள்ளவேண்டும் என்ற சி.பி.எம். கட்சியின் பித்தலாட்ட நடைமுறையின் வெளிப்பாடுதான் இச்சுவரொட்டி. நாளை தாழ்த்தப்பட்டோர் பிரிவு, மலையாளிகள் பிரிவு, ஜைனர்கள் பிரிவு என சாதிமதஇன அடிப்படையில் சி.பி.எம். கட்சி சுவரொட்டி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சி.பி.எம். கட்சியை இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சி என்று நாட்டு மக்கள் நம்பி ஏமாறவும் அடிப்படை இல்லை.


பு.ஜ.தொ.மு., சென்னை.