Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.

 

 

சரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்" தேசியம். இந்த 'தமிழ்" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

 

வன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்" தேசியத்தில் மட்டுமா உண்டு? இல்லை, 'தமிழ்" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது.

 

குறித்த வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட, ஒரு புலித் தாக்குதலல்ல. சந்தர்ப்ப சூழலுக்குள், தனிமனிதனின் அரசியல் மூலத்தில் இருந்து அதன் பலவீனமான இயலாமையில் வெளிப்படுகின்றது. இது குறித்த விடையம் ஒன்றின் மீது தான் அமைய வேண்டும் என்பதல்ல. அன்று பாரிசில் 'தீக்கொழுந்து" படத்தை இடை நிறுத்தியதை நான் கண்டித்த போது, கலைச்செல்வன் என்னை தாக்க வந்ததும் அசோக் உட்பட பலரும் அதை ஆதரித்து நின்ற அரசியலும் இப்படிப்பட்டது தான். ஏன் அண்மையில் பாரிசில் குகன் கூட, தனது வேலைத்தளத்தில் வேலை செய்தவனை சுட்டதும் இப்படித்தான். இப்படி பல சம்பவங்கள் உண்டு. 

 

சரவணனை தாக்கிய அரசியலுக்கு புலிகள் கொண்டுள்ள தேசியம் தான் காரணம் என்ற வகையிலா இவர்கள் கண்டிக்கின்றனர்? இல்லை. அதாவது இந்த தேசியம் வெறும் தமிழ் இனவாதம் என்பதை சுட்டிக்காட்டி, மக்களின் உண்மையான தேசியத்தையா விமர்சனமாக வைக்கின்றனர்? இல்லை. அவன் வன்முறையில் ஈடுபடத் தூண்டிய அந்த தேசியத்தை மறுத்து, அவனைச் சரியான தேசியம் மூலம் வழிகாட்டத் தவறிய கண்டனப் பேர்வழிகள், இந்த வன்முறைக்கு அரசியல் ரீதியாக உதவியவர்கள், உதவுபவர்கள். 

 

இப்படி கண்டனங்கள் போலித்தன்மை பெற்று, அரசியலற்ற வெற்று வேட்டுத்தனத்தைக் கொண்டு பிழைக்கின்றது. சரவணன் விடையத்தை செய்தியாக்கி, அதைக் கண்டித்தவர்கள் அரசியல் பின்னணியிலும், வன்முறைக்கான சமூக அடிப்படையே உள்ளது. சமூகம் கொண்டுள்ள சமூக அரசியல் தளத்தை இவை மாற்றப் போராடுவது கிடையாது. விளம்பரம், இருப்பு சார்ந்த ஏக்கம், கொசிப்பு இதற்குள் தான், சரவணன் உருட்டப்படுகின்றான்.

 

அரசை ஆதரிக்கின்ற, புலியை எதிர்க்கின்ற பலருக்கு, இது குறுகிய குதர்க்க அரசியலாகின்றது. புலியை எதிர்ப்பவர்கள், இதை புலிக்கு எதிராக கண்டிக்கின்றனர். இப்படி இவை அரசியல் வியாபாரம் செய்யவே, பலருக்கு உதவுகின்றது. இதற்காக சரவணன் அடிவாங்கியுள்ளான்.

 

'தமிழ்" தேசியம் என்பது சிங்களவனுக்கு எதிரானது என்ற அரசியலை, புலிகள் மட்டுமா கொண்டிருந்தனர். இல்லை. கூட்டணி முதல் அன்றைய இயக்கங்கள் வரை, இதையே தமது சொந்த அரசியலாக வைத்தவர்கள். இன்று அதை வைத்த பலர் அரசின் கூலிப்படையாகி விட, அவர்களால் வளர்க்கப்பபட்டவர்கள் புலிக்கு பின்னால் இருப்பது ஆச்சரியமானதல்ல.

 

சரி மறுபக்கத்தில் பாருங்கள். தேசிய மறுப்பு என்று கும்மியடிக்கும் பலர், எந்த தர்க்கத்துடன் தேசியத்தை மறுக்கின்றனர். தேசியத்தை இப்படித் தான் என்கின்றவர்கள் போல், தேசியத்தை மறுப்பவர்களும் கூறுகின்றனர். ஒரே அரசியல் மேடை. இன்று அரசுடன் நிற்பவர்கள் சரி, புலியுடன் நிற்பவர்கள் சரி, என்ன வேறுபாடு தான் அரசியல் ரீதியாக உண்டு? யாராவது மக்களின் உரிமையில் இருந்து சிந்திக்கின்றார்களா? இங்கு இரண்டு தளத்திலும் வன்முறை மூலம்தான், அரசியல் நடைமுறைக்கு வருகின்றனர். மாற்றாக மக்கள் போராட்ட அரசியல் எதுவும் கிடையாது.

 

இப்படி கண்டனத்தின் பின் ஒரு போலிப் புலம்பல் தான் எஞ்சுகின்றது. சரவணன் தாக்கப்பட்ட சம்பவத்தில், அவனின் பேச்சுரிமை மறுக்கப்பட்டது. இது ஒரு மனித உரிமை. இந்த வகையிலா இவர்கள், இந்த கண்டணத்தை செய்தனர்? இல்லை. இது ஒரு மனித உரிமை என்றால், மனித உரிமைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அரசியலையா கண்டித்தவர்கள் கொண்டுள்ளனர். அனைத்து மனிதவுரிமைகளையும் ஏற்காத கண்டணம், உண்மையானதல்ல, போலித்தனமானது.

 

பேச்சுரிமை ஒரு மனித உரிமையாக உள்ள போது, தமிழ் மக்களின் சுயநிர்ணயம் கூட, ஒரு மனித உரிமைதான். தேசியம் கூட மக்களின் அடிப்படை உரிமை தான். இப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை, கண்டித்தவர்களில் எத்தனை பேர் முரணற்ற வகையில் ஏற்றுக்கொண்டுள்ளனர்! அந்த அரசியலை கொண்டுள்ளனர்!!

 

மக்கள் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற, அதைத் தூற்றுகின்ற, அதை குழிபறிக்கின்ற பச்சோந்திகள் கொண்ட கூட்டம் தான், கண்டனங்களையும் வெளியிடுகின்றது. போலித்தனம், பிழைப்புத்தனம், இருப்பு சார்ந்த கண்டனங்கள், இப்படி இதன் பின்னணியில் மக்கள் அரசியல் எதுவும் கிடையாது.

 

சரவணன் சம்பவத்தை முதலில் வெளிப்படுத்த தயங்கி, மற்றொரு சம்பவமாக கூறியே மருத்துவ உதவியைப் பெற்றதாக செய்திகள் வருகின்றது. இங்கு சரவணனின் உறுதியற்றதும், ஊசலாட்டம் கொண்ட, அஞ்சி நடுங்கக் கூடிய உளவியல் எல்லைக்குள், சமரசம் செய்ய வைக்கின்ற அந்த அரசியல் என்ன?. உறுதியாக போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அரசியலை சரவணனுக்கு ஊட்டிய அரசியல் சூழல் எது? மக்கள் போராட்டத்தை மறுக்கும், வெறும் வெற்று வேட்டு கண்டன அரசியல் தான். மக்கள் விரோத அரசியலாக சிதைக்கப்பட்ட நிலையால், சரவணன் போன்றவர்கள் இதை எதிர்கொள்ள முடியாது தடுமாறவைக்கின்றது. அஞ்சி நடுக்க வைக்கின்றது. உளவியல் ரீதியாக பதைபதைக்க வைக்கின்றது.

 

இதையே சொந்தப் பிழைப்புக்காக செய்தியாக்கி, இதை மொட்டையாக கண்டித்தவர்கள் சரவணனின் உளவியல் மீது மறுபடியும் தாக்கி சேதமாக்கியுள்ளனர். சரவணன் இப்படி, இரண்டாம் முறை இவர்கள் மூலம் அடிவாங்கியுள்ளார். 

 

இப்படி ஒரு அரசியல் பின்னணியில் கண்டிப்பது என்பது, மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களையும் அரசியலையும் கேலிக் கூத்தாக்குவதாகும்.

 

பி.இரயாகரன்
06.08.2008