"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.



மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிசனையே அதிகம் மேலிடுகிறது.

அப்படியென்றால், மாநகரத்துவாசிகள் பளீரிடும் பற்கள் தெரிய சிரிப்பதும், கிராமத்து மக்கள் கரையேறிய பற்களுடன் தெரிவதும்தான் எனக்கு பிடிக்குமா? என்ற கேள்வி எழும்.

நியாயமான கேள்விதான். இன்றைக்குள்ள பன்னாட்டு நிறுவனங்களின், பல விதமான நுகர்வுப்பொருட்கள், இயற்கையில் இருந்து நாம் நேரடியாக பயன்படுத்திய, பதப்படுத்து பயன்படுத்திய பொருட்களைவிட சில அம்சங்களில் மேம்பாடு கொண்டவை என்பதும் உண்மைதான். அதனால்தான் ஆலங்குச்சி, வேலங்குச்சி, வேப்பங்குச்சி, கரித்தூள் என பல்துலக்க் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தலைக்கு குளிக்க சீயக்காய்த்தூளும் இன்றைக்கு பயன்படுத்தப்படாத நிலை.

எல்லாமே வேகமாகிப்போன உலகில் , அவசரமாகிப்போன நமது வாழ்க்கையில் யார் இயற்கையோடு மெனக்கெடுவது. எல்லாமே ரெடிமேட், நேரடியாக பயன்படுத்த ஆயத்த நிலையில் கிடைக்கும்போது, எதற்கு குச்சியை வைத்து பற்களை துலக்கவேண்டும். மேலும் பற்பசைகளும் இன்னபிற பற்களை மினுமினுக்கச்செய்யும் பொருட்களும்தான் சந்தையில் கிடைக்கின்றனவே, அவற்றை வாங்கி பயன்படுத்தி பளீரிடும் புன்னகைக்கு சொந்தக்காரர்களாகலாமே.

அப்படி போடு அருவாள என்று நினைப்பவர்களுக்கு, ஐயா சாமி, ஆபத்து சாமி என்கின்றனர் வல்லுனர்கள். இன்றைக்கு சந்தையில் உள்ள, பற்களை தூய்மைப்படுத்தும், வெண்மைப்படுத்தும் பொருட்களில் 90 விழுக்காட்டு பொருட்களில் அளவுக்கு மீறிய ப்ளீச் எனப்படும் தூய்மை செய்யும் வேதியல் பொருள் இருப்பதாக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இருந்தால் சீக்கிரம் நம் பற்கள் வெண்மையாகிவிடுமே என்றெல்லாம் இங்கே பக்கவாத்தியம் வாசிக்க முடியாது.



இந்த வேதியல் பொருள் தலைமுடியை தங்க நிற்மாக மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இது நமது பற்களில் பயன்படுத்தப்படும்போது, வாயில் புண்கள் ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் உண்மை. சிகையலங்காரத்துறையில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருள், பற்களை வெண்மையாக்கும் திரவங்கள் என்று விளம்மபர்ப்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனையாகும் பொருட்களிலும் உள்ளதாம்.

இன்றைக்கு திரைப்படங்களில், தொலைக்காட்சியில் நம் உள்ளம் கவர்ந்த நட்சத்திரங்கள் பளீரிடும் வெண்மையான பற்கள் தெரிய சிரிப்பதை பார்த்து நாமும், அதேபோல் வெண்மையான பற்கள் வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த நட்சத்திரங்கள் பணம் அதிகம் செலவழித்து, பல மருத்துவரிடம் சென்று முறைப்படி பற்களை வெண்மையாக்கக்கியிருக்க, நமக்கு சந்தையில் நாமே பயன்படுத்தி வெண்மையாக்கக்கூடிய பொருட்கள் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடவா போகிறோம்.

அண்மையில் வர்த்தகத்தர நிறுவனம் என்ற நிறுவனத்தின் ஆண்டு மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாம் இதுவரை கேட்ட தகவல்கள் தவிர, ஒரு சில பொருட்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 230 மடங்கு அதிகமான ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால், பற்களை வெண்மையாக்கி, பளீரென வைத்துக்கொள்ள விரும்புவது தவறல்ல, ஆனால், அதை ஒரு நல்ல பல் மருத்துவரின் ஆலோசனையின் படியும், அவரது வழிநடத்தலின் படியும் செய்யுங்கள் என்பதுதான். கடந்த சில ஆண்டுகளில் முக அழகு தொடர்பான துறையில், பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள பல் மருத்துவரை நாடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த வேதியல் பொருட்கள் பற்களை வெண்மையாக்கும் அதேவேளை வாயில் புண் ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஈருகளை பாதிக்கும், பற் கூசுதலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்களை வெண்மைபடுத்தும் பொருட்களை சோதித்ததே த்வைர, இன்னும் பற்பசைகலை ஆய்வு செய்யவில்லை. அதையும் பரிச்சொதித்தால் அதில் என்னென்ன தீங்கேற்படுத்தும் வேதியல் பொருட்கள் இருக்குமோ.

இப்படி பற்களை வெண்மையாக்கும் முயற்சியில் பல் மருத்துவரை நாடாமல் நாமே சொந்தமாக இறங்கிவிட்டால் முதலில் நாம் பயன்படுத்தும் வெண்மையாக்கும் பொருட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருளின் இருப்பு 0.1 விழுக்காடு மட்டுமே இருக்கவேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

சுகாதாரக் கட்டுபாடுகள் மிகக்கடுமையானதாக இல்லாத நாடுகளின் சந்தைக்கென இப்படியான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பற்களை வெண்மையாக்க கிளம்பி, அந்த பற்களையே இழக்க கூடாதல்லவா.

தங்கப்பல்லைக் கட்டினாலும், தந்த்தாதல் ஆன பற்களை பொருத்தினாலும், சொந்தப்பல் போல வருமா.

பல்லு போனா சொல்லு போச்சி.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=7845