Sun07122020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் புகையோடு விளையாடி, எமனோடு உறவாடி...

புகையோடு விளையாடி, எமனோடு உறவாடி...

  • PDF

''விளையாட்டு வினையாகும்னு சொல்வாங்க. நானே அதைப் பல தடவை பல பேருக்குச் சொல்லியிருக்கேன். ஆனா, எனக்கு நானே அப்படிச் சொல்லிக்கிற துர்பாக்கிய நிலைமை வரும்னு நினைக்க லீங்க. சின்ன வயசுல பசங்களோடு சேர்ந்து திருட்டு தம்மடிக்க எங்கேயாச்சும் ஓரமா ஒதுங்குவோம். ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்தவெச்சுப் புகைவிட்டதுமே, நாமளும் பெரியவங்க ஆகிட்டோம்கிற மாதிரி ஒரு மிதப்பு வரும். உலகத்தையே கால்ல போட்டு மிதிச்ச மாதிரியான நினைப்பு. அதுல வாழ்க்கையைத் தொலைச்சவங்க எத்தனையோ பேரில் நானும் ஒருத்தன். விளையாட்டா ஆரம்பிச்ச பழக்கம் இப்ப வினையாகிப்போச்சு. என்னைப் பத்தி சில வார்த்தைகளை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்புறேன். இது வளரும் சமுதாயத்துக்கு ஒரு பாடமாக அமையும். தயவுசெஞ்சு காது கொடுத்துக் கேளுங்க. நான் பேசுறது புரியுதா?''


-'ஆர்ட்டிஃபிஷியல் எலெக்ட்ரோ லாரிங்ஸ்' எனப்படும் விசேஷக் கருவியை தாடையில் அழுத்தி அழுத்திப் பேசுகிறார் சர்புதீன். ஒரு ரோபோவின் குரல் போல் ஒலிக்கும் அவரது பேச்சைப் புரிந்துகொள்ளச் சிரமமாக இருக்கிறது.

''இந்த மெஷின் இல்லைன்னா வெறும் காத்துதான் 'புஸ்ஸ§ புஸ்'ஸ§னு வரும். குழந்தைங்க அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்துடுவாங்க'' என்று உலர்ந்த சிரிப்பை உதிர்ப்பவர், அதே எலெக்ட்ரானிக் குரலோடு தொடர்கிறார்... ''97ல ஒரு நாள், தொண்டையில் எச்சில் விழுங்குறப்போ லேசா வலி இருந்துச்சு. பேசுறப்போ குரல் வேற லேசா கம்ம ஆரம்பிச்சுது. ஜலதோஷம் பிடிச்சிருக்கும்னு ஏதாவது மாத்திரையை வாங்கிப் போடுவேன். அப்போதைக்குச் சரியாகிடும். ஆனா, மறுபடி குரல் கம்மும். இதே போல அடிக்கடி நேரவும், டாக்டர்கிட்டே போய்க் காட்டினேன். தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறதா சொன்னார்.

அந்தச் சதையை எடுத்து பயாப்ஸி செஞ்சு பார்த்தப்போதான் அந்தப் பயங்கரம் தெரிய வந்தது. அது கேன்சர் கட்டின்னும், ஆரம்ப நிலையில் இருக்கிறதாகவும் சொன்னாங்க. கேன்சர் செல்கள் குரல்வளை முழுக்க இருக்கிறதால, அது மத்த இடங்களுக்குப் பரவறதுக்கு முன்னாடி உடனடியா ஆபரேஷன் பண்ணி எடுக்கணும்; அப்பதான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க. வேற வழி? 12 மணி நேர ஆபரேஷனுக்குப் பிறகு, என்னோட குரல்வளையை இழந்துட்டேன்!'' கையில் வைத்திருந்த பாட்டில் நீரை பிரயத்தனப்பட்டு உள்ளுக்குள் செலுத்திக்கொண்டுவிட்டு, (இயல்பாகத் தண்ணீர் குடிக்க முடியாது!) மீண்டும் பேசத் தொடங்குகிறார்...

''பேசுற சக்தியை இழந்துட்டா ஏற்படுற சிரமங்களை விவரிக்கிறது ரொம்பக் கஷ்டம். நம்மால சிரிக்கவோ, அழவோ, நமது தேவைகளைச் சொல்லவோ முடியாம போகிற கொடுமை இருக்கு பாருங்க, அதைவிட நரகம் வேறில்லை. ஒவ்வொரு தடவையும் நம் எண்ணங்களை, நம் தேவையை எழுதிக் காட்டித்தான் புரியவைக்கணும். பஸ்ஸில் நான் போக வேண்டிய இடத்தை எழுதிக்காட்டிதான் டிக்கெட் வாங்குவேன். ஒரு சில பேர், 'வாயில என்ன கொழுக்கட் டையா வெச்சிருக்கே..? வாயைத் திறந்துதான் கேளேன்யா!'னு சிடுசிடுக்கும்போது அவமானத்தால கூனிக் குறுகிப்போவேன்.

அந்தக் கொடுமை என்னைப் போல அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும். நான் ஏதாவது 'சைகை' மூலமா கேட்கிறப்போ, சில பேர் பதிலையும் சைகை மூலமாகவே சொல்வாங்க. எனக்குப் பேசத்தான் வராது, காது கேட்கும்னு அவங்களுக்குத் தெரியாது. எனக்கோ அவங்க சைகை பாஷை புரியாது. இதையெல்லாம் நினைக்கிறப்போ, இப்படி ஒரு வாழ்க்கை தேவையானு தோணும். வீட்டுக்கு வந்து குமுறிக் குமுறி அழுவேன். தூக்குல தொங்கிடலாமானுகூட நினைச்சிருக்கேன். இத்தனை ரணத்துக்கும் காரணம், ஆறாவது விரல் மாதிரி என்னோடு ஒட்டிக்கிட்டு இருந்த சிகரெட்தான்!

நான் மட்டுமில்லே, என்னை மாதிரி இன்னும் எத்தனையோ பேர் அறியாத வயசுல விளையாட்டா சிகரெட் புகைக்க ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா தங்களை அழிச்சுட்டு வர்றாங்களே... அதைத் தடுத்து நிறுத்துறதுக்காக நம்ம மிச்ச சொச்ச ஆயுளைச் செல விட்டா என்னனு ஒரு கட்டத்துல தோணிச்சு. தொண்டைப் புற்று நோயாளிகளுக்காக Laryngectomees Welfare Association என்ற அமைப்பை ஆரம்பிச்சு, கடந்த பத்து வருஷமா புகைப் பழக்கத்துக்கு எதிரா போராடிட்டு வர்றேன். ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரைக்கும், அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டோடு சேர்ந்து இந்தியா முழுக்க விழிப்பு உணர்வுப் பயணம் போறேன்.

இயந்திரத்தின் உதவியோடு பயமுறுத்தும் எலெக்ட்ரானிக் குரல்ல நான் பேசுறதைக் கேட்டு ஆயிரக்கணக்கான பேர் புகைக்கிற பழக்கத்தை நிறுத்தி இருக்காங்க. 2005லேர்ந்து 2015 வரை, இந்தப் பத்து வருட காலத்துக்குள் புகைப் பழக்கத்தால் சாகப்போறவங்க எண்ணிக்கை 84 மில்லியனா இருக்கும்னு உலக சுகாதார நிறுவனம் சொல்லுது. போன வருஷம் மட்டுமே 1.5 மில்லியன் பேர் புகைப் பழக்கத்தால் கேன்சர் வந்து செத்திருக்காங்க. அதுல பாதிப் பேர் 50 வயசுக்கும் கீழானவங்க. பெரியவங்க புகை பிடிக்குறப்போ பக்கத்துல இருந்த பாவத்தினால, சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோட எண்ணிக்கை 700 மில்லியன்!

இந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது. பிப்ரவரி 4ம் தேதியை கேன்சர் தினமா அறிவிச்சிருக்கு உலக சுகாதார நிறுவனம்! இந்த வருடத்தை, பெரியவங்க சிகரெட் பிடிக்குறப்போ அந்தப் புகையால் பாதிக்கப்படுற அப்பாவிக் குழந்தைகளுக்கான விழிப்பு உணர்வு ஆண்டாக, உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சிருக்கு.

எய்ட்ஸ§க்கு எதிரா அரசாங்கங்கள் பிரசாரம் நடத்தி, மக்களுக்குப் பலவிதங்களிலேயும் விழிப்பு உணர்வு ஊட்ட முயற்சி செய்து வருகின்றன. ரொம்ப நல்ல விஷயம். ஆனா, அதே அளவு அக்கறையையும் முனைப்பையும் கேன்சர் விஷயத்திலும் காட்ட வேண்டிய நேரம் இது!

புகைப் பழக்கத்தால பாதிக்கப் பட்ட என்னைப் போன்ற ஆளுங் களைப் பார்த்தாவது எல்லோரும் தயவுசெஞ்சு சிகரெட்டைத் தூக்கிப் போடுங்க! நாம இப்ப சந்தோஷமா அனுபவிக்கிற இந்த விஷயம் நாளைக்கு நம்ம கழுத்தை நெரிக்கிற எமனா மாறிடும். நம்மை மட்டு மில்லே... நம்மைச் சுற்றியுள்ள ஒரு பாவமும் அறியாத மற்றவர்களின் வாழ்க்கையையும் சின்னாபின்ன மாக்கிடும். வேண்டாம், அது மகா பாவம். மற்றவர்களின் ஆரோக்கியத் தைச் சிதைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை!''

நம் கண்களை ஊடுருவிப் பார்க்கும் சர்புதீனின் விழிகளில் சிவப்பு எச்சரிக்கை தெரிகிறது!

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=11105

நன்றி : விகடன்