வேகத்துக்கு உதாரணமாக ஜெட் விமானத்தைச் சொல்வார்கள். ஆனால் ஜெட்டை விட வேகமான ஒரு பூச்சி சீனாவில் இருக்கிறது. இந்தப் பூச்சி பறப்பது இல்லை –நடக்கும். என்ன கிண்டலா என்று கேட்கிறீர்களா. உண்மைதான். இந்தப் பூச்சி நடக்கும், ஆனால் தரையில் அல்ல. 

 

என்ன புதிர் போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. இந்தப் பூச்சி தண்ணீர் மீது நடக்கக் கூடியது. மந்திரவாதிகள்தான் நீரில் மிதப்பார்கள்- நடப்பார்கள். பூச்சியுமா.

 

ஆமாம். தட்டாம் பூச்சி போன்ற வடிவிலான இந்த நீர்ச் சறுக்குப் பூச்சி நீர்ப்பரப்பின் மீது ஸ்கேசட்டிங் செய்வது போல சறுக்கிக்கொண்டு செல்லக்கூடியது. இதன் வேகம் மணிக்கு 640 கி.மீ. அதாவது ஜெட் விமானம் பறக்கும் வேகத்தை விட இது பன்மடங்கு அதிகம். ஒல்லியான எடை லேசாக உள்ள இந்தப் பூச்சி கொஞ்சங்கூட சிரமப்படாமல் ஏரித்தண்ணீர் பரப்பின் மீது சறுக்கிக்கொண்டு செல்கிறது.

 

தண்ணீர் மீது நடந்தாலும் இந்தப் பூச்சியின் கால்களில் ஈரம் படிவதில்லை. கால் நனையாமல் நடக்கும் வல்லமை பெற்றது எப்படி என்று கேட்கிறீர்களா. இந்தப்பூச்சியின் கால்களின் பரப்பில் நுண்ணிய, நீர்புகாத்தன்மை உடைய காணப்படுகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கி கருவியில் வைத்துப் பார்க்கும் போது தான் இந்த மயிர்க்கால்கள் தெரியும். ஒவ்வொரு ரோமமும் சுமார் 50 மைகரோ மீட்டர் நீளமும்,3 மைக்ரோ மீட்டருக்குக் குறைவான விட்டமும் உடையவை. அதாவது மனிதனுடைய ரோமத்தை விட 300 மடங்கு சிறியது. இந்த நுண்ணிய ரோமங்கள் வரிசை வரிசையாக ஒரு பிரஷ்ஷில் இருப்பது போல அமைந்துள்ளன. இந்த நுண்ணிய மயிர் கால்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் காற்றினால் என்ற கூறுகிறார் சீன அறிவியல் அறிஞர் ஜியாங் லீ.

 

நீர்ச்சறுக்கு பூச்சசியின் கால்களுக்கும் தண்ணீரின் பரப்புக்கும் இடையில் இந்தக் காற்றுமெத்தை உருவெடுப்பதால் தட்டுத்தடமாறாமல் மிகவிரைவாக கரைபுரண்டோடும் வெள்ள நீர்ப்பரப்பின் மீது கூட இது சறுக்கிச் செல்ல முடிகிறது. இந்தப் பூச்சி சறுக்கும் போது இதனுடைய கால்கள் சுமார் 300 மடங்கு தண்ணீரை விலக்குகின்றன. இதனால் மிதக்க முடிகிறது. தண்ணீருக்குள் மூழ்கி விடுவதில்லை. மேலும் பூச்சியின் எடையை விட 15 மடங்கு அதிக உடம்பு எடையை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இதன் கால்களுக்கு உண்டு என்று அறிவியல் அறிஞர்கள் ஜியாங் லி மற்றும் கோ ச்சுபெங் கண்டுபிடித்துள்ளனர். பூச்சி மூழ்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இந்த மிதமிஞ்சிய மிதப்பு ஆற்றலினால் நீர்ச் சறுக்கு பூச்சி ஒரு சிமென்ட் தரையில் ரப்பர் பந்து எகிறுவது போல குதித்துக்கொண்டே சறுக்கிக்கொண்டு செல்கிறது. இதனால் பலத்த மழை பெய்தாலும்கூட நீரில் மூழ்குவதில்லை.

 

ஆமாம், ஜெட் விமானத்தை விட படுவேகமாக சறுக்கிச்சென்று என்ன சாதிக்கப் போகிறது இந்தப் பூச்சி. எல்லாம் வயிற்றுப்பாடுதான். நீரில் உள்ள புழுபூச்சிகளை பிடித்துத் தின்பதற்குத்தான் இவ்வளவு அரும்பாடு. அந்த இரையை தொலைவில் இருந்தே கண்டுகொள்ள இந்தப்பூச்சியின் முகத்தில் இரண்டு தொலைஉணர் கருவிகள் ஆன்ட்டெனா போல உள்ளன. தவிரவும், இரண்டு குட்டைக் கால்கள் முற்பகுதியில் இருப்பதால் அவை இரையை இறுகப்பற்றி தின்ன உதவுகின்றன. உடம்பின் நடுவில் உள்ள இரண்டு கால்கள் துடுப்புக்களாகச் செயல்படுகின்றன. இரண்டு பின்னங்கால்கள் திசைமாற்றும் சுக்கானாக இயங்குகின்றன.

 

இந்த நீர்ச்சறுக்குப் பூச்சியின் உடலமைப்பை ஆராய்ந்து நீர்ப்புகாத்தன்மை உள்ள துணிகளைக் கண்டுபிடிப்பதிலும் , குறைவான இழுவை சக்தியுடன் விரைவான உந்துவிசை உள்ள புதுமையான நுண்ணிய நீர்ச்சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் சீன அறிவியல் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.