உலகிலேயே மிக வேகமாக உருகும் பனிவயல்கள் இமயமலையில் உள்ளன. இதற்குக் காரணம், இந்தப் பூமி வெப்பமடைவது பனியாறைகள் உருகுவதால் இரண்டு வகையான முற்றிலும் நேரெதிர் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. அது எப்படி?

 

இமயமலையில் உள்ள பனிவயல்கள் ஆண்டொன்றுக்கு 10-15 மீட்டர் வீதம் உருகிச் சரிவதாக உலக இயற்கை நிதியத்தின் அறிக்கை கூறுகின்றது. இவ்வாறு வேகமாக பனிவயல்கள் உருகிச் சரிவதால் பரவலாக வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது. ஆனால் இந்த வெள்ளப் பெருக்கு நிரந்தரமானதல்ல. பல ஆண்டுகளில் நிலைமை மாறி ஆறுகளில் தண்ணீர் வற்றி மேற்குச் சீனா, நேபாளம், வட இந்தியா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பெரிய அளவில் பொருளாதாரப் பிரச்சினைகளும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளும் ஏற்படும் என்று உலக இயற்கை நிதியத்தின் நிபுணர் ஜென்னிஃபர் மோர்கள் கூறுகினார்.

 

சிங்காய்-திபெத் பீடபூமியில் மொத்தம் ஒரு லட்சத்து 4850 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு பனிவயல்கள் உள்ளன. இவற்றில் 23,000 சதுர கிலோமீட்டர் பரப்பு இந்தியாவிலும், 5322 சதுர கிலோமீட்டர் பரப்பு, நேபாளத்திலும் 16,933 சதுர கிலோமீட்டர் பரப்பு பாகிஸ்தானிலும், 49,873 சதுர கிலோமீட்டர் பரப்பு சீனாவிலும் அமைந்ததிருக்கின்றன. இமயமலையில் உள்ள பனி வயல்களில் மிகப் பெரியது 34,660 சதுர கிலோமீட்டர் பரப்பாகும். இந்தப் பனிவயல்களை ஒரு கருவியாக்க கொண்டு புவியின் காலநிலை மாற்றத்தை அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக அளவிட்டு வருகின்றனர். பனி, பனிவயல், உறைபனி ஆகியவை உருகும் நிலையில் இருப்பதால் அவை புவியின் காற்று மண்டத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களினால் உடனுக்குடன் பாதிக்கப்படுகின்றன. இதனால்தான் பூமியின் இதர பகுதிகளை விட பனிப் பரப்புக்கள் தட்ப வெப்ப நிலை மாற்றத்தை வெகு எளிதில் பிரதிபலிக்கின்றன என்று சீன அறிவியல் கழகத்தின் பேராசிரியர் ஷென் யோங்பிங் கூறுகின்றார். யாங்ட்ஸி ஆற்றின் முகத்துவாரத்தில் 1986ல் 899.13 சதுர கிலோமீட்டர் பரப்பாக இருந்த பனிவயல் 2000 மாவது ஆண்டில் 884.4 சதுர கிலோமீட்டராக் குறைந்து விட்டது. பனிவயல் உருகிய இந்தப் போக்கினால் 1990களின் நடுவில் யாங்ட்சி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தது.

 

இமயமலையில் உள்ள பனிவயல்களால் கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா, சல்வீன், மேக்காங், யாங்ட்ஸி, மஞ்சள் ஆறு ஆகிய நதிகளில் நீர் ஓடுகின்றது இந்த நதிகள் இந்தியத் துணைக் கண்டத்திலும் சீனாவிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு குடிநீரும் பாசன நீரும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான நீரும் தருகின்றன.

பனிவயல் நீரோட்டம் குறைவதால் நீர் மின்சார உற்பத்தித்திறன் குறைந்து தொழில் வளர்ச்சி குன்றுவதோடு பாசனநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய விளைச்சலும் குறைகின்றது. பனிவயல் உருகுவது விரைவாகி விட்டதால் அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படும். காலப் போக்கில் உருகி ஓடுவதற்கு பனி இல்லாமல் போய் ஆறுகள் வற்றிவிடக் கூடும் என்று உலக இயற்கை நிதியத்தின் அறிக்கை கூறுகின்றது.

 

மேலும் உருகும் பனிவயலுக்கு வண்டல் மண் ஒரு கரை போல இருக்கின்றது. ஆனால் உருகி ஓடும் நீர் அதிகரிக்கும் போது இந்த வண்டல் மண்கரையினால் தாக்குப்பிடிக்க முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் விவசாய விளைபொருள் சேதமும் உண்டாகின்றது. திபெத்தின் அரு வடிநிலத்தில் சுமார் 229 பனி ஏரிகள் உள்ளன. இவற்றில் 24 ஏரிகள் மிகவும் அபாயகரமானவை. கடந்த 15 ஆண்டுகளில் இந்தப் பனி ஏரிகளில் உறைந்து கிடக்கும் பனி மிகவும் ஆழமான பரப்பில் உருகுவதால் ஏரி நீர் பூமிக்கு உள்ளே இழுக்கப்படுகின்றது. இதனால் சிங்காய்-திபெத் பீடபூமியில் அதிக அளவு நஞ்சை நிலங்கள் வறண்டு விட்டன. இயற்கையின் இந்த மாற்றங்களோடு மனிதர்களின் வரம்பு மீறிய மேய்ச்சல் மற்றும் கட்டுமானப் பணிகளும் இயற்கைச் சூழலைக் கெடுக்கின்றன. ஆகவே காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் கடினங்களைப் போக்க இயற்கைச் சூழலைக் காக்க வேண்டியது மனிதகுலத்தின் கடமையாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.