09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

மஞ்சள்

குழம்புக்கு கறிக்கும் நிறம் வருவதற்காக மஞ்சள் சேர்க்கப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள். மஞ்சளுக்கு நிறம் மட்டுமல்ல, மணமும் உண்டு, குணமும் உண்டு.

 

கையிலோ காலிலோ விளையாடும் போது காயம் பட்டுவிட்டால் உடனே அம்மா சிறிது மஞ்சள் பொடியை காயத்தின் மீது தூவி சேலை முந்தானையைக் கிழித்து ஒரு கட்டுப் போட்டு விடுவாள். ரெண்டே நாட்களில் காயம் குணமாகிவிடும். பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் அரைத்து உடம்பெங்கும் தேய்த்துக் குளிப்பார்கள். இதனால் தேவையில்லாத இடங்களில் மயிர் முளைப்பது கட்டுப்படுகின்றது என்பது மட்டுமல்ல, கொப்புளங்களும் பருக்களும் வருவதில்லை. சருமமும் பொலிவு பெறுகின்றது. சுமங்கலிப் பெண்களின் சின்னமான குங்குமமும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டது தான்.

 

இப்போது புற்று நோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தரப்பயன்படும் மஞ்சள், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய புரதத்தை தடுக்கக் கூடியது என்கிறார்கள். மஞ்சளினால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை புற்று நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதனைக் கூடங்களில் செல்வளர்ச்சி மூலம் ஆராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். இந்த ஆராய்ச்சி முறைப்படி விரும்பி முன்வரும் புற்று நோயாளிகளுக்கு CUR CUMIN எனப்படும் மஞ்சள் பொருளால் செய்யப்பட்ட 500 மில்லிகிராம் மாத்திரைகளை ஒரு வாரத்திற்குக் கொடுத்து அது NF KAPPA B என்னும் புரதத்தைச் செயலிழக்கச் செய்கின்றா என்று பார்ப்பார்கள். இந்தப் புரதம் தான் உணவுக் குழாயில் புற்று நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாகின்றது. லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் விரைப்புற்றுநோய், சருமப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

மனிதர்களிடம் நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகள் மூலம் அல்ஸெமிர் எனப்படும் நினைவிழப்பு நோய்க்கு ஒரு மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வேறு சில விஞ்ஞானிகளோ மஞ்சளில் வீக்கத்தை வற்றச் செய்யும் பண்பு இருப்பதால் அதைக் கொண்டு CROHN நோய் எனப்படும் குடல் நாளநோய் வராமல் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

 

ஆசியக் கண்ட நாடுகளில் வசிக்கும் மக்களிடையே இத்தகைய நோய்கள் குறைவாக இருப்பதால் மஞ்சள் கலந்த கறி காரணமாக இருக்குமா என்று ஆராயப்பட்டது. தொண்டையில் நீண்டகாலம் வீக்கம் இருக்கும் போது தொண்டைச் சுவரில் உள்ள செல்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இத்தகைய நிலை உள்ளவர்களில் 10 விழுக்காட்டினருக்கு புற்றுநோயாக மாறுகின்றது. இது BCRECஇன் உணவுக் குழாய் புற்று நோய் எனப்படுகின்றது. இப்போது புற்றுநோய் எதிர்ப்புப் பண்பு உள்ள வெவ்வேறு பொருட்கள் எவ்வாறு புற்றுநோயை உண்டாக்கக் கூடிய NF-KAPPA B என்ற புரதத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை ஸ்வான்ஸீ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். புற்று நோய் எதிர்ப்புப் பண்வு உள்ள பொருட்களில் மஞ்சள் முக்கியமானது.

 

இதற்காக கறிமசாலா கலந்த உணவை உண்டுவிட்டு கூடவே ஒயின்குடித்தால் பயனில்லை என்று GAREIT JENKINS என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். உங்களுக்குத் தான் தெரியுமே மேலை நாட்டவர்கள் உணவு உண்பதற்கு முன்பு சிறிது ஒயின் குடிப்பார்கள் உணவு உண்டுகொண்டே நடுநடுவே ஒயின் குடித்து தொண்டையை நனைப்பார்கள் கடைசியாக உண்டு முடித்த பிறகு ஆங்கிலத்திலே WASHING DOWN என்பார்களே. அதாவது தொண்டையிலே இருக்கின்ற உணவை உள்ளே இறக்குவதற்கா ஒயின் குடிப்பார்கள். நீங்கள் என்னதான் மஞ்சள் மஞ்சளாக கறி செய்து சாப்பிட்டாலும் குடிமகனாகிவிட்டால் தொண்டைப் புற்றுநோய் உங்களை தாக்காமல் விடாது.

 

மேலும் மஞ்சள் கலந்த மசாலா உணவு வேண்டும் என்பதற்காக தினமும் மஞ்சல் தின்று கொண்டே இருந்தாலும் ஆபத்துதான். ஏனென்றால் பல மசாலா உணவுப் பொருட்களில் குறிப்பாக இந்திய உணவுகளில் ஏராளமாக கொழுப்புச் சத்து கலந்துள்ளது. தினமும் நிறைய இந்த உணவு உண்டால் இதய நோய் வரலாம் என்கிறார் டாக்டர் ஜென்கின்ஸ். ஆகவே கொழுப்புச் சத்து குறைவாக உள்ள உணவில் மஞ்சல் கலப்பது அல்லது மஞ்சளை மாத்திரையாக தயாரித்து உட்கொள்வது நல்லது என்று கருதப்படுகின்றது.

 

http://tamil.cri.cn/1/2005/08/24/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.