நமது உடலில் மின்சாரம் இருக்கிறது என்று சொன்னால் பலருக்கு சிரிப்பு வரும். உடலில் பாய்ந்தால் ஆளை தூக்கியெறியும் மின்சாரத்துக்கு குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொன்னால் இன்னும் பலமாக சிரிப்பார்கள். என்ன நேயர்களே, உண்மைதானே. ஆனால் இந்த இரண்டு விடயமும் உண்மையே. ஆம் நமது உடலில் மின்சாரம் இருப்பதும் உண்மை, மின்சாரத்துக்கு குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதும் உண்மை. நம் உடலில் உள்ள மின்சாரத்தை நாம் மிக அரிதான் சமயங்களில் உணரமுடியும். ஸ்டேட்டிக் எலக்ட்ரிசிட்டி நிலை மின்சாரம் என்று சொல்வார்கள். நம் உடலில் தக்க வைக்கப்பட்டுள்ள மின்சாரம் இந்த நிலை மின்சார வகைதான். பல நேரங்களில் அது மிகக்குறைந்த அளவாய் இருப்பதால் உணர இயலுவதில்லை. குறைந்த படசம் 500 ஓல்டுக்கு மேல் இந்த நிலைமின்சாரம் தேங்கியிருந்தால் அதைத் தெளிவாக உணர முடியும். ஐநூறு ஓல்ட்டா ஆச்சரியமோ பயமோ கொள்ளவேண்டாம். 20 ஆயிரம் வொல்ட்-க்கு அதிகமாகக்கூட நம் உடலில் நிலைமின்சாரம் தேங்குவது சாத்தியம் என்கிறார்கள். அவ்வளவு மின்சாரம் உடலில் தேங்கும்போது உடலிலிருந்து தீப்பொறி பறப்பதுக்கூட சாத்தியம் என்கிறார்கள். தரை விரிப்பில் காலணியுடன் நடந்து இரும்பு கதவை அல்லது கதவின் தாளை தொட்ட அனுபவம் உண்டா, மின்சாரம் தாக்கிய உணர்வு ஏற்படும். அது கதவில் உள்ள மின்சாரம் அல்ல, நமது உடலில் உள்ள மின்சாரம், நிலை மின்சாரத்தின் வெளிப்பாடு ஆகும்.

 

சரி, மின்சாரத்தின் குணப்படுத்தும் ஆற்றலைப் பற்றி உங்களுக்கு சொல்கிறோம். உளநல சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களை, புத்தி பேதலித்தவர்களை சிகிச்சையளிக்கும் முறையில் மின்சாரம் பயன்படுத்துவதுண்டு. மின் அதிர்வு சிகிச்சை என்று இதை சொல்வார்கள். இதைப் பற்றி சொல்லபோவதாக நினைக்கவேண்டாம். நாம் சொல்லப்போவது, நமது உடலில் உள்ள மின்சாரத்தோடு எப்படி மின்சாரம் கூட்டு சேர்ந்து தனது குணப்படுத்தும் ஆற்றலை வெற்றிகரமாக வெளிப்படுத்துகிறது என்பதை பற்றியது.

 

நமது உடல் காயங்கள், சிராய்ப்புகள் ஏற்படும்போது, அதனை சரிசெய்ய மின்னாற்றலை ஒரு வழிமுறையாக தழுவிக்கொள்கிறது, ஏற்றுக்கொள்கிறது என்று அறிவியலர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது மின்னாற்றலை தகுந்த முறையில் பயன்படுத்தி காயங்களை விரைவாக குணப்படுத்த முடியும் என்கின்றனர் அறிவியலர்கள். மின்னாற்றலை மருத்துவத்தில் எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியும் என்ற கோணத்தில் காலம் காலமாக இருந்துவரும் ஆர்வத்தை தணிப்பதாக இந்த கண்டறிதல் அமைகின்றது. உடலில் காயங்கள் அல்லது புண்கள் ஏற்படும் இடங்களைச் சுற்றி மெலிதான மின்புல இருப்பதாகவும், இந்த மின்புலத்தை கட்டுப்படுத்தி இக்காயங்கள் அல்லது புண்கள் உள்ள பகுதியின் செல்களைக்கொண்டு இவற்றை திறக்கவோ, மூடவோ செய்யமுடியும், அதுவும் விஞ்ஞானத்தை வளர்க்கப் போறன்டி என்ற பாடலில் என். எஸ். கிருஷ்ணனிடம் டி.எம் மதுரம் தனக்கு வேண்டிய நவீன கருவிகளைப் பற்றி ஒரு நீண்ட பட்டியல் சொல்லும் போது ஒரு பட்டனை தட்டிவிட்டா ஒரு தட்டுல இட்டிலியும் என்பதைப் போல் ஒரு பட்டனை, ஒரு சொடுக்கியை தட்டினால் புண்களை திறக்கவும் மூடவும் முடியும் என்கிறார்கள்.

 

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜெர்மானிய உடலியல் நிபுணர் அல்லது மருத்துவர் எமில் தூ போய் ரேமண்ட் என்பவர் தனது கையில் வெட்டுக் காயம் ஏற்படுத்தி அதைச் சுற்றியுள்ள மின்புலத்தை அள்விட்டுப் பார்த்தது முதல் மின்னாற்றலை நேரடியாக உடலில் செலுத்தி அதன் குணப்படுத்தும் ஆற்றலை பயன்படுத்த முடியும் என்ற திசையில் ஆர்வம் போதிய அளவு இல்லை என்றே பொதுவாக சொல்கின்றனர்.

 

என்றாலும் கடந்த ஜூலை 27ம் நாள் நேச்சர் என்ர இதழில் வெளியான ஒரு கட்டுரையில் அமெர்தீன் பல்கலைகழகத்தின் அறிவியலர்கள் உள்ளடங்கிய குழுவினர் மின்னாற்றலின் குணப்படுத்தும் பாங்கினை எடுத்தியம்பியதோடு, அதன் பின்புலத்திலான மரபியலி ரீதியிலான நுட்பங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

 

புண்களின் விளிம்புகள் அல்லது ஓரங்களிலிருந்து மின்சாரம் பாயத்தொடங்குகிறது என்பதை இவர்கள் உடலின் மேற்தோல் பகுதியைக் கொண்டு நிரூபித்துள்ளனர். திசுக்களில் உள்ள சோடியம் அயான்களின் +வ் ஆற்றலும், குளோரைட் அயான்களின் -வ் ஆற்றலும் இணைந்து கிட்டத்த்ட்ட நாம் பயன்படுத்து சிறிய ரக பேடரிகள் உள்ள மின்சாரத்தை விட 15 மடங்கு குறைவான மின்னாற்றலை ஏற்படுத்துவதாக இவர்கள் கண்டறிந்துள்ளனர். இது இயற்கையாக உடலில் ஏற்படும் ஒரு நிகழ்வு, காயம் ஏற்பட்ட உடனே அதைச்சுற்றி இந்த மின்சார ஆற்றல் செயல்படத் தொடங்குகிறது என்கிறார்கள் மின் ஷவ் மற்றும் காலின் மெக்கேய்க் எனும் பேராசிரியர்கள். மேலதிக ஆய்வுகளில் தோல் திசுக்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எபிதீலியல் செல்கள் புண்கள் உள்ள பகுதியிலான மின்புலத்தை அல்லது மின்னோட்டத்தை உணர்ந்து அதை தொடர்கிறது என்றும், அதில் ஒரு வகை செல்களை மின்புலத்தை நோக்கி செலுத்துகின்றன, மற்றொன்று வேறு பக்கம் செல்லும்படியான சமிக்ஞைகளை நிறுத்துகிறது என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

ஆக இந்த் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், நமது உடலில் காயங்கள் ஏற்பட்டால் மின்னாற்றலை பயன்படுத்தி காயத்தை சீக்கிரத்தில் குணப்படுத்தலாம் என்பதே. என்ன இதை பரவலாக்கம் செய்ய இன்னும் கொஞ்சம் காலமாகும். அதற்குள் காற்றாடி பறக்கவிடும்போது நூல் கைவிரலை அறுத்து விட்டது, அதை சீக்கிரம் குணப்படுத்துகிறேன் என்று மின்சாரத்தை தொட்டுப் பார்க்க நீங்கள் தவிர்க்கவேண்டும். குணப்படுத்தும் ஆற்றல் இருப்பது உண்மை ஆனால் மின்சாரம் பாய்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.