Language Selection

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒருவரை பார்த்தே அவர் இப்படியானவர் என்று சொல்வது ஒரு கலை என்று சொல்வார்கள். ஆனால் நாம் எல்லோருமே அந்த கலையை நேர்த்தியாக தெரிந்தவர்போல பார்த்த சீக்கிரத்தில் ஒருவரை பற்றிய ஒரு உருவத்தை தீட்டி விடுவதுண்டு. அல்லது அந்த நபரின் பேச்சு, அங்க அசைவுகள் இவற்றை வைத்து அவரது குணத்தையே நாம் முடிவு செய்வதுமுண்டு. அதனால் ஒருமுறை பார்த்து பேசியதை வைத்தே அவர் ஆணவம் கொண்டவர், அவர் ஏமாற்றுக்காரர் என்று நாம் சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் அந்த மனிதர் இதற்கு நேர்மாறான குணம் கொண்டவராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர் நமது அனுமானங்கள், தீர்மானங்களுக்கு சற்றும் பொருந்தாதவராகத்தான் இருப்பார். இப்படித்தான் நாம் அவ்வப்போது, பலமுறை ஒருவரை பற்றிய தவறான கருத்தை, தவறான எண்ணத்தை கொள்கிறோம். ஏன் இதை இங்கே சொல்கிறோம் என்றால், எந்த நபரில் ஒரு தலைவர் இருக்கிறார், எந்த நபரில் ஒரு ஆன்மீகவாதி இருக்கிறார் எந்த நபரில் ஒரு சான்றோர் இருக்கிறார் என்பது நமக்கு பார்த்தவுடனேயே தெரிவதில்லை.

  

அப்படித்தான் இங்கே சீனாவில் பெய்சிங் மாநகரின் கிழக்கு பகுதியில், டோங்ஷூ மாவட்டத்திலுள்ள மாவூ என்ற கிராமத்தில் இருக்கும் வூ யூலூ என்பவர் பார்ப்பதற்கு மிக எளிமையான தோற்றத்துடன் காணப்படுகிறார். 1970 களின் துவக்கத்தில் துவக்கப்பள்ளி கல்வியோடு படிப்பை தொடரமுடியாத நிலையில் விவசாயத்தில் தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கிய வூ யூலூ பின்னர் 70களின் பிற்பாதியில் வேளான் கருவிகளை தயார் செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் தற்போது 44 வயதாகும் வூ யூலூ சீன செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரபலமான நபராகியிருக்கிறார். என்ன செய்தார் இத்தனை பிரபலமாக என்று கேட்கிறீர்களா. நிச்சயாமாக லாட்டரி சீட்டில் திடீர் கோடீஸ்வரராக அவர் மாறவில்லை, அல்லது ஏதோ ஒரு போட்டியில் வெற்றியாளாராகி பிரபலமடையவுமில்லை. ரிக்ஷா இழுக்கும் ரோபோ ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். ஆமாம் ஆளை அமர்த்தி கைவண்டியை இழுத்துச் செல்லும் வாகனத்தை இவர் உருவாக்கிய எந்திர மனிதன் இழுத்துச் செல்கிறது. அதாவது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து இயற்பியல், கணிப்பொறியியல் இவற்றில் பட்டம் பெற்றவர்களை வைத்து பெரிய நிறுவனங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் ரோபோக்களை ஆரம்பக்கல்வியோடு படிப்பை தொடரமுடியாமல் குடும்பத்தின் சுமையைக் குறைக்க வேலைக்குச் சென்ற சாதரண ஒரு தொழிற்சாலை பணியாளரான வூ யூலூ உருவாக்கியிருக்கிறார்.

 

70களின் இறுதியில் வேளான் கருவிகளை தயாரிக்கும் ஆலையில் வேலை கிடைத்தபின் தனது வருமானத்தில் ஒரு சிறிய பங்கை பழைய தையல் எந்திரங்களின் உதிர் பாகங்களையும், எஃகு கம்பிகளையும் வாங்கி மனித அசைவுகளை செய்யக்கூடிய இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். மனிதர்களின் அங்க அசைவுகளை செய்யக்கூடிய இயந்திரம் ஆம் அப்போதைக்கு இந்த சாதாரண இரு வேளான் கருவி தொழிற்சாலை பணியாளருக்கு ரோபோ, எந்திர மனிதன் என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு இயற்பியலோ, பொறியியலோ எதுவும் முறைப்படி தெரியாது, அதன் சூத்திரங்களும், கோட்பாடுகளும் அவர் அறிந்திருக்கவில்லை.

 

ஆனால், மின்சாரம் எந்திரங்களை, மோட்டார்களை ஓடச்செய்கிறது என்பதை அவர் அறிவார். ஆக இந்த மின்சாரத்தை பயன்படுத்தி அசைவுகளை செய்யமுடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இப்படி தனக்கு தெரிந்ததை வைத்து, வேலை, வேளான்மை இவற்றுக்கான நேரம் தவிர்த்து இதர சமயங்களில் பயன்படுத்த பழைய பொருட்கள் பலவற்றை வாங்கி, அவற்றைக் கொண்டு தனது மனிதர்களின் அசைவுகளை செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்க ஆரம்பித்தார். இப்படி அவர் முதலில் செயத்தொடங்கிய இயந்திரம் முடமாகவே இருந்தது ஆகவே தொடர்ந்து தனது முயற்சிகளை தீவிரமாக்கி 1982ல் தன்னுடைய முதல் அசையும் இயந்திரத்தை அல்லது இயந்திர மனிதனை தயாரித்தார் வூ யூலூ. வூ லாவோடா என்று அதற்கு பெயரும் வைத்தார். வூ லாவோடா என்றால் வூவின் முதல் மகன் என்று பொருள். இப்படி அவர் ஆர்வமுடன் தனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பழைய உதிரி பாகங்களைக் கொண்டு ரோபோவை உருவாக்கத் தொடங்கிய வூ யூலூ, இன்று வரை ஆதாவது கடந்த 25 ஆண்டு காலத்தில் 26 ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.

 

தனது வீட்டிலேயே தனது இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆலை அல்லது கூடத்தை வைத்துள்ள வூ யூலூ, சந்தித்த இடர்பாடுகள் ஏராளம். பொழுதுபோக்காக செய்த ஒரு விடயம் பின்னாளில் ஆர்வமுடன் மேற்கொண்ட ஒரு செயலாக மாறியது ஆனாலும் அவரது கடமைகளை அவர் மறக்கவில்லை. ஆனால் இந்த இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆர்வம் அவரை கடனாளியாகவும் மாற்றியது. இயந்திரம், சோதனை என்றாலே விபத்துகள் ஏற்படுவது இயல்புதானே. வூ யூலூ மட்டும் விதிவிலக்கா என்ன. மனிதர் விபத்துகளை எதிர்கொண்டு கடனாளியே ஆனாலும் தனது ஆர்வத்தை விட்டுவிடாமல் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.