உடல் பருமனான ஒருவரைப் பார்த்து "எந்த கடையில் அரிசி வாங்குறீங்க" என்று கிண்டலாக அவரது நண்பர்கள் கேட்பதை நாம் பார்த்திருப்போம். அளவுக்கு அதிகமான பருமனான உடல் கொண்டவரை "மாமிச மலை" என்று அழைப்பதையும் நான் கேட்டிருப்போம். ஏன் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் சற்றே பருமனான உடல்வாகு கொண்டவராக இருந்தால் செல்லமாக "குண்டூஸ்", பீமா, பூசணிக்காய் என்றெல்லாம் அழைக்கும் வழமை நம்மில் இருக்கக்கூடும் அல்லவா நேயர்களே. உடற்பயிற்சி செய்து சிக்கென வைத்திருக்கும் உடல் நாளடைவில் கொஞ்சம் தளர்ந்து தொப்பை எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், நம்மை நாமே இது செல்லத் தொப்பை என்று தேற்றிக்கொள்வதுமுண்டு. ஆனால் இன்றைக்கு உஅலகளவில் உயிர்பலி வாங்கும் நோய்களில் ஒன்றாக உடல் பருமனும் மாறிக்கொண்டிருக்கிறது என்றால் சற்றே மிரட்சியோடு நம்மை கண்ணாடியின் முன் நின்று பார்க்க செய்கிறது.

 

இன்றைக்கு உலகில் எடை கூடியவர்கள் பட்டியலில் ஒரு பில்லியன் பேரும், உடல் பெருத்த நிலையில் 300 மில்லியன் பேரும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அளவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள், அளவுக்கு அதிகமாக பருமனாக உள்ளவர்களையே, உடல் பெருத்தவர்கள் என்று இங்கே குறிப்பிடுகிறோம். இன்னும் விளக்கமாக சொன்னால், உயரத்திற்கு ஏற்ற எடை என்ற குறிப்பிட்ட அளவை சற்று மீறி, கொஞ்சம் கூடுதலாக உடல் எடை உள்ளவர்கள் எடை கூடியவர்கள் என்றும், இந்த உயரத்திற்கு ஏற்ற எடை என்ற கோட்பாட்டுக்கு பொருத்தமே இல்லாமல், அளவுக்கு அதிகமாக, எடை கொண்டவர்கள் உடல் பெருத்தவர்கள் என்றும் புரிந்துகொள்வோம்.

 

ஆக இன்றைக்கு உலகில் சரியான ஊட்டச்சத்தில்லாமல் காணப்படும், நலிந்து போன சமுதாயத்தின் மெலிந்து போன மக்களின் எண்ணிக்கையை விட, எடை கூடியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஊட்டசத்து குறைபாடுள்ளவர்கள் 600 மில்லியன், எடை கூடியவர்கள் 1 பில்லியன் அதாவது 1000 மில்லியன்.

 

எடை கூடியவர்களும், உடல் பெருத்தவர்களும் நம் நாடுகளில் அதிகம் இல்லை, பணக்கார நாடுகளில் தானே அதிகம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கூடுதல் தகவல். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவற்றில் உலகின் பணக்கார நாடுகளின் மக்களே இன்றைக்கு முதலிடத்தில் உள்ளனர். ஆனால் இந்த கெட்ட வழக்கத்தை ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களும் வேகமாக கற்றுக்கொண்டு வருகின்றனர். இதை நான் சொல்லவில்லை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 3ம் நாள் தொடக்கம் 8ம் நாள் வரை நடைபெறும் உடல் பருமன் தொடர்பான சர்வதேச மாநாட்டு அமர்வின் தலைவரான பேராசிரியர் பால் சிம்மட் என்பவரே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ஆம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள், பிரச்சனைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மருத்துவர்கள், வல்லுநர்கள், அதிகாரிகள் என பலர் கூடி உடல் எடை தொடர்பான பல்வேறு அம்சங்களை கலந்தாலோசிக்கின்றனர். அந்த வகையில் 2006ம் ஆண்டின் இத்தைகைய மாநாடு சிட்னியில் கடந்த ஞாயிறு முதல் இந்த வெள்ளி வரை நடைபெறுகிறது. ஏறக்குறைய 2500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்று உடல் பெருத்தலினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

 

உடல் எடை கூடுவதாலோ அல்லது பெருத்து போவதாலோ பாதிப்புகள் ஏற்படும் என்பது ஓரளவுக்கு நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். உடலில் கொழுப்புச் சத்து அதிகமானால் நீர்ழிவு நோய், இதயக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய் ஆகியவை ஏற்படும் என்பதை அறிந்தவர்களுக்கு ஒரு புதிய தகவல், இதெல்லாம் மறைமுகமாக ஒரு புதிய சவாலை உலகிற்கு எழுப்பியுள்ளது என்பதுதான். இந்த உடல் பருமன் தொடர்பான நோய்கள் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை சமாளிப்பதில், அவர்களுக்கு தேவையான, அதிக செலவு கொண்ட சிகிச்சை முறைகளை வழங்குவதில் நாளுக்கு நாள் இன்னல் நிலை உருவாகி வருகிறது, இந்த உடல் பருமன் பிரச்சனை ஒழுங்காக எதிர்கொள்ளபடாமல் போனால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய சிக்கலாக மாறும் அபாயம் உள்ளது என்று பணக்கார நாடுகளே குழப்பமடைந்துள்ள நிலையில், வளரும் நாடுகளின் நிலை என்ன என்று சற்றே யோசித்து பாருங்கள்.

 

மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சில வல்லுனர்களின் கருத்துப்படி இந்த உடல் பரும் பிரச்சனையின் விளைவாக ஏற்படும் மருத்துவச் செலவினங்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல பில்லியன் டாலர்கள் என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

இன்றைக்கு உலகம் உடல் பருமன் என்ற பரவலான ஒரு நோயின் பிடியில் சிக்கியுள்ளது, இந்த பிரச்சனை உலகின் அனைத்து நாடுகளின் மருத்துவ மற்றும் சுகாதார முறைகளையும் திக்குமுக்காடச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளது என்று சிட்னியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இம்மாநாட்டு அமர்வின் தலைவரான பேராசிரியர் பால் சிம்மட்டின் கருத்துப்படி இந்த உடல் பருமன் பிரச்சனை ஒரு கொள்ளை நோய் போல உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. உலக வெப்ப ஏறலைப் போல, பறவைக் காய்ச்சலை போல இது பெரிய ஒரு சவால்.

 

உடல் எடை அதிகரிப்பு தொடர்பாக மருத்துவ அமைப்புகளும், நிறுவனங்களும் உருவாக்கிய உலக அளவிலான பணிக்குழு ஒன்றின் தலைவரான பேராசிரியர் பிலிப் ஜேம்ஸ் என்பவர், இது அறிவியல் ரீதியிலான பிரச்சனையோ அல்லது மருத்துவ ரீதியிலான பிரச்சனையோ அல்ல, இது ஒரு மாபெரும் பொருளாதார பிரச்சனையாகும். உலக அளவில் மருத்துவ அமைப்புகளை இந்த பிரச்சனை திணறடிக்க போகிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சேதியாகும். இந்த உடல் பருமனின் விளைவாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கவும், சிகிச்சையளித்து குணமாக்கவும் ஏராளமான செலவு ஏற்படுவதால் பல நாடுகளின் அரசுகள் இந்த அதிகரித்துவரும் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.