Language Selection

சுற்றுச்சூழல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காரணத்தால், உயிருள்ள கிரகமாக கூறப்படுவது நமது பூமியாகும். நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பூமிப் பந்தில் இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகான வளங்கள் ஏராளம். கவின் மிகு காட்சிகள் நிறைந்த எழில் கொஞ்சும் உருண்டை பந்து நமது உலகம். உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆன நிலையிலும் சக்கரம் தேயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பூமி, பல அழிவுகளுக்கு முகம் கொடுத்த பின்னும் துவளாமல் உயிர் வளர்த்து, உயிர் வாழ வளம் கொடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 

கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையதாக கூறப்படும் இந்த பூமி ஏற்கனவே 5 அல்லது 6 பேரழிவுகளை, பிரளயங்களை சந்தித்து, கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு பின் காலப்போக்கில் செழுமைக் கண்டு நிலைத்துள்ளது என்று அறிவியலர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த பேரழிவில்தான் டைனோசார்கள் உள்ளிட்ட நாம் இன்று கேள்விபடும் ஆனால் பார்க்க இயலாத விலங்கினங்கள் அழிந்துபோனதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூமி தழைத்து, உயிரினங்களின் தொடர்ச்சி நீண்டுகொண்டுதான் இருக்கிறது. இதற்கு முந்தைய பேரழிவுகள், பிரளயங்களுக்கு காரணம் என்ன என்பது நமக்கு முக்கியம் இல்லை. காரணம் அப்போதைய அழிவுகளில் மனிதனுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அடுத்து வரும் பேரழிவுக்கும் மனிதனுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும், தொடர்பு என்ன அவன் தான் அந்த அழிவுக்கு வித்திடுபவனாகவே இருப்பான் என்பது இன்றைக்கு அறிவியலர்களும், அறிஞர்களும், அரசியல் தலைகளும் ஏற்றுக்கொள்கிற உண்மையாகியுள்ளது. என்ன ஒன்றும் புரியவில்லை என்று கொஞ்சம் குழம்புபவர்களுக்கு மட்டும் இரண்டே வார்த்தையில் பதில் சொல்கிறேன். உலக வெப்பமேறல், குளோபல் வார்மிங்.

 

இந்த உலக வெப்ப ஏறல் என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டு சலிப்பு ஏற்பட்டு, நகைச்சுவை நடிகர் வடிவேலு அடிக்கடி சொல்வது போல், கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாய்ங்க என்று கிண்டலாக மனதிற்குள் சிலர் சொல்லக்கூடும். ஆனால் இன்றைக்கு இதோ இந்த நிகழ்ச்சியில் நீங்கள் செவிமடுக்கும் பிரச்சனையை பற்றி உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நாடுகள் கென்யத் தலைநகர் நைரோபியில் கூடி விவாதித்துக் கொண்டுள்ளனர். பருவ நிலை மாற்றாத்தால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்பதை முக்கியமாக இந்த பருவ நிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்களும், வல்லுனர்களும் கலந்தாய்வு செய்வர். அதேவேளை தொழில்மயமான நாடுகளின் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை கட்டுபடுத்துவது குறித்த உடன்பாடு தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றும் அல்லது கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இம்மாநாட்டில் நிலவுகிறது. கியோட்டோ ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை என்பதை நம்மில் பலர் கேள்வி பட்டிருப்போம். இந்த கியோட்டா ஒப்பந்தம்தான் உலக வெப்ப ஏறலுக்கு காரணமான பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளை இணங்கச் செய்யும் கொள்கை ஆவனமும், கோட்பாட்டு குறிப்புமாகும்.

 

இந்த கியோட்டோ ஒப்பந்தம், கையொப்பமிட்ட நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு பசுங்கூட வாயு வெளியேற்ற அளவை விதிக்கிறது. இந்த அளவுக்குள்ளாகவே தமது பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை இந்த உறுப்பு நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும். ஐ நா அவையின் பருவ நிலை மாற்றம் தொடர்பான வரைவுத் தீர்மானத்துக்கு இணங்க உருவாக்கப்பட்ட உடன்படிக்கையே இந்த கியோட்டோ உடன்படிக்கையாகும். 1997ம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டோவில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 1998ம் ஆண்டு மார்ச் திங்கள் 16 முதல் 1999ம் ஆண்டு மார்ச் திங்கள் 15 வரை கையொப்பமிடுவதற்காக அனுமதிக்கப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு ரஷ்யா 2004ம் ஆண்டு நவம்பர் திங்களில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் சுமார் 166 நாடுகள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ஏற்று அதன் விதியை பின்பற்றுவதை மறுத்து நிற்கும் நாடுகளில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் குறிப்பிடத்தக்கவை. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இந்த் அஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன என்றாலும், உடன்படிக்கை படி இந்த இரு நாடுகளுக்கு விலக்கு உள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தத்தின் படி இந்த இரு நாடுகளும் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுபடுத்தவேண்டிய கட்டாயம் இல்லை.

 

இது ஒரு புறமிருக்க உலக வெப்பமேறல் காரணமான விளைவாக பருவ நிலை மாற்றங்களும், இயற்கைச் சீற்றங்களும் உலகை அலைகழித்து, சீரழித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏதாவது செய்து இந்த அழிவுகள் மேலும் உக்கிரமடைவதையும், உலகம் மீண்டும் ஒரு பிரளயத்திற்கு பலியாவதை தவிர்ப்பதற்காகவும் செய்ய வெண்டியவை என்ன என்பதை ஆய்வு செய்யவே நைரோபியில் கடந்த 6ம் நாள் முதல் 17ம் நாள் வரை பருவ நிலை தொடர்பான மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ள வெப்பமடைந்த நமது உலகம் பற்றிய அறிவியல் ஆய்வுகளை இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அறிஞர்களும், வல்லுநர்களும் மூடிய கதவுகளுக்குள்ளே ரகசியமாக, நெருக்கமாக கண்டு அறியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரகசியமாய் அவர்கள் அறியப்போகும் எந்தத் தகவலும் நமக்கு நிம்மதி பெருமூச்சை வெளிபடுத்த போவதில்லை என்பது வேறு கதை. கடந்த செப்டம்பரில் அமெரிக்க பருவநிலை அறிவியலாளர்கள் வெளியிட்ட ஒரு தகவலை உங்களுக்கு சொன்னால் நீங்களே புரிந்துகொள்வீர்கள், உலக வெப்பமேறல் எந்த நிலையில் இருக்கிறது என்று. உல்க பருவ நிலையில், கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத உயர்வு அண்மைக்காலத்தில் பதிவாகியுள்ளதாம்.

 

கடந்த 30 ஆண்டுகால உலக வெப்பமேறலின் உதவியோடு இந்த வெப்பநிலை உயர்வு சாத்தியமாகியுள்ளது என்கிறார்கள் இந்த அறிவியலர்கள். சரி அதை விடுங்கள், அமெரிக்கா நாசா அமைப்பினர் வெளியிட்ட இரு தகவல், க்ரீண்லான்டில் உள்ள பனிப்பரப்பில் ஆண்டுக்கு 41 கியூபிக் மைல் அளவு பனி உருகிக்கொண்டிருப்பதாக கூறுகின்றது. ஆண்டுக்கு பனிப்பொழிவின் மூலம் 14 கியூபிக் மைல் பனியே இப்பகுதியில் கூடுகிறது. வரவு எட்டணா செலவு பத்தணா என்பது போல்.

 

இது மட்டுமல்ல நேயர்களே, பருவ நிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளை சீக்கிரத்தில் கண்டறிந்து செயபடுத்தாவிட்டால், பூமியின் மூன்றில் ஒரு பகுதியை தீவிர வறட்சி ஆட்கொண்டு அழிக்கும் அபாயமுள்ளது என்று பிரிட்டன் நாட்டு ஹாட்லி பருவநிலை ஆய்வு மையத்தினர் எச்சரிக்கின்றனர்.

கடந்த நூற்றாண்டின் 1 டிகிரி ஃபாரன் ஹீட் அளவு வெப்பநிலை உயர்வுக்கு முற்று முழுதான காரணம் என்றில்லாமல் போனாலும், முக்கியமான காரணம், மின் உற்பத்தி மற்றும் வாகனங்களின் எரிபொருட்களின் எரியூட்டலால் வெளியாகும் உப பொருட்களான, வளிமண்டலத்தில் வெப்பத்தை தடுத்து வைக்கும் அல்லது தக்கவைத்துக்கொள்ளும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள்தான் என்று அறிவியலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைத்தான் கட்டுபடுத்துமாறு 35 தொழில்மயமான நாடுகளை கோருகிறது இந்த கியோட்டோ ஒப்பந்தம்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.