03222023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

உருவாகிறது இரண்டாவது பூமி(I)

வாழ்வில் பல கேள்விகளுக்கு 100 விழுக்காடு உறுதியான விடை கிடைப்பதில்லை. உலகம் தோன்றியதெப்படி? பூமி உருவானதெப்படி? உயிர்கள் என்று, எப்போது, எங்கு தோன்றின? என்பவைகளுக்கு அறுதியிட்டு கூறுமளவுக்கு விடைகள் இல்லை. மத நம்பிக்கை கொண்டவர்கள் மதக்கோட்பாடுகளின் அடிப்படையிலான நம்பிக்கைகளையும், நதி மூலம் ரிஷி மூலம் என்று அறிவியல் கண் கொண்டு அலசுவோர் அவை கூறும் கோட்பாடுகளையும் ஏற்று கொள்;கின்றனர். நெருப்புக் கோளத்திலிருந்து, நீரிலிருந்து மற்றும் வாயுவிலிருந்து உலகம் தோன்றியது என பல கோணங்களில் புரிதல்கள் மற்றும் தோற்றங்கள் உண்டு. பூமி மற்றும் உயிர்கள் தோன்றியதற்கான விடைகாணும் ஆய்வில் ஒன்றை தான் இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கேட்க இருக்கிறோம்.

 

வானவியல் வல்லுனர்கள் 424 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பாலுள்ள ஒரு விண்மீனை சுற்றி இரண்டாவது பூமி உருவாகிறது என்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். அண்மையில் உருவான, சூரியனை விட சற்று பெரிதான வயதில் இளைய ர்னு 113766 என்ற விண்மீனை சுற்றி மிகப்பெரிய வெப்பமான தூசி மண்டலம் காணப்படுகிறது. இந்த தூசி மண்டலம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இறுகி கிரகங்களாக உருவாகிறது என்று அறிவியலாளர்கள் ஐயப்படுகின்றனர். நீரை திரவநிலையில் வைத்திருக்க ஏதுவான தட்பவெப்ப சூழ்நிலையுள்ள விண்மீன் அமைப்பு, வாழ்வதற்கு உகந்ததாக நம்பப்படும் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. செவ்வாய் கிரகம் போன்ற அல்லது அதைவிட பெரிய அளவான உலகை உருவாக்குவதற்கு போதுமான பொருட்கள் இம்மண்டலத்தில் இருப்பதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். சுமார் 10 மில்லியன் ஆண்டுகள் வயதான இவ்விண்மீன், பாறைத்தன்மை கொண்ட கிரகங்களை உருவாக்கும் சரியான தருணத்தில் உள்ளது என்ற ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு முடிவுகள் வானியற்பியல் இதழில் வெளியாகவுள்ளன.

 

இவ்வமைப்பு பூமியை உருவாக்கும் காலம் மிக சரியானது என்று மேரிலேண்ட் பல்டிமோரிலுள்ள ஜான்ஸ் ஹேப்கின்ஸ் பல்கலைகழக பயனுறு இயற்பியல் ஆய்வகத்தின் ஆய்வுக்குழு உறுப்பினர் காரே லிசே கூறினார். இந்த விண்மீன் அமைப்பு மிக அண்மையில் உருவாகியதாக இருந்தால் கோள் உருவாகும் தட்டு வாயுவால் நிறைந்திருந்து, வியாழன் கோளை போன்று வாயு நிரம்பிய பெரிய கோள்களை உருவாக்கி இருக்கும். இது உருவாகி அதிக காலமாகியிருந்தால் வானியல் ஆய்வில் ஸ்பிட்ஸர் கருவி நீண்டகாலம் முன்பே உருவான பாறையான கோள்களை காட்டியிருக்கும். இவ்விண்மீன் அமைப்பு பூமியை போன்ற கிரகத்தை உருவாக்குவதற்கான தூசிப் பொருட்களின் சரியான கலவையை, அதன் தட்டில் கொண்டுள்ளது என்று லிசே கூறினார்.

 

ஸ்பிட்ஸர் மின்காந்த அகசிவப்பு நிறமாலை மானியை பயன்படுத்தி ர்னு 113766 விண்மீனை சுற்றியுள்ள பொருட்கள் இளைய சூரிய குடும்பங்கள்; மற்றும் வால்நட்சத்திரங்களை உருவாக்கும் பனிப்பந்து போன்ற பொருட்களை விட பதமானவை என்பதை இவ்வாய்வு குழுவினர் முடிவு செய்தனர். சூரிய குடும்பத்தின் ஆதிகால உள்ளடக்கங்களை அப்படியே மெருகு குலையாமல் கொண்டிருப்பதால் அவை விண் 'குளிர்பதனப்பெட்டிகள்' என கருதப்படுகின்றன. ஆனால் ர்னு 113766 சுற்றியுள்ள பொருட்கள் முதிர்ச்சியடைந்த கிரகங்கள் மற்றும் விண்கற்களில் காணப்படுவது போல பதமான பொருட்கள் அல்ல. "இத்தூசுமண்டலத்தில் காணப்படுகின்ற பொருட்களின் கலவை பூமியில் காணப்படும் எரிமலை குழம்பை நினைவூட்டுகிறது" என்ற லிசே "இவ்வமைப்பில் உருவாகியுள்ள தூசியை முதலாவதாக பார்த்தபோது ஹவாய் தீவிலான மௌனா கியா எரிமலை நினைவுக்கு வந்தது" என்றார். இவ்வமைப்பு பாறைகள் மற்றும் இரும்பு தாதுக்கள், படிகங்களுக்கு சமமானவை.

 

முன்பு இவ்வாண்டில் 20.5 ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள மங்கலான சிவப்பு விண்மீன் கிளிசி 581 யை சுற்றி உருவாகியுள்ள பூமி போன்ற இரண்டு கிரகங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்ததாக அறிவித்தனர். கிளிசி 581சி மற்றும் கிளிசி 581டி என அழைக்கப்படும் இவ்விருகிரகங்களும் கிளிசி விண்மீனிலிருந்து, நீரை திரவநிலையில் வைத்திருக்கும் சரியான தொலைவில் அமைந்துள்ளன. ஆனால் இத்தகவல்களை உறுதி செய்ய இன்னும் பல கண்காணிப்புகள் தேவைப்படுகிறது.

http://tamil.cri.cn/1/2007/11/19/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.