மனிதனால் இயலாதவைகள் அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஏதுவாயின. பலவீனங்கள் பலங்களாயின. ஆனால் எல்லாவித பலவீனங்களையும் நிறைவு செய்யமுடியாத நிலை கண்கூடு. எயிட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் மனித ஆற்றலுக்கு சவாலாகவே இருந்து கொண்டிருக்கிறன. அத்தகைய நோய்களை முழுவதுமாக தீர்க்க முடியாவிட்டாலும் நோயாளிகளை பராமரித்து அவர்களுக்கு தற்காலிக நிவாரண உதவிகள் அளிக்கும் முறைமைகளில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்றைதான் இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கேட்க இருக்கின்றோம். 

 

நோய் என்றாலே பயம். அதுவும் புற்றுறோய் என்றால் சொல்ல வேண்டுமா? அதனால் ஏற்படக்கூடிய வேதனைகளை வருத்தங்களை தெரிந்து வைத்துள்ளோம். மார்பக, சிறுநீரக, தோல் மற்றும் நுரையீரல் என பல புற்றுநோய் வகைகளில் சிலவேளை அது தொடக்க நிலையில் இருந்தாலும் புற்று நோய் என்றாலே மரணபயம் தொற்றி கொள்கிறது. சாதாரணமாக நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டு அது வளர்ந்து, உடைந்து பிற இடங்களுக்கு பரவும். பிற இடங்களில் ஏற்பட்டு நுரையீரலுக்கு பரவும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. இதனை முற்றிலுமாக தீர்க்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத போதிலும் தற்காலிக நிவாரண மருந்துகளாக மாத்திரைகள் மற்றும் கதிரியக்க சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

 

நுரையீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோய்ககு எதிரான ஓர் ஆயுதமாக கதிரலை ஆற்றலை பயன்படுத்த முடியும் என்று புதிய ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன. பிரான்ஸில் அறுவை சிகிச்சை செய்யப்பட முடியாத என்ற முற்றிய நிலையிலான மற்றும் தொடக்கநிலை புற்றுநோயாளிகள் கதிரலை ஆற்றலை பயன்படுத்தி புற்று அல்லது கட்டிகளை அழிக்கின்ற மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொண்டனர். குழாய் போன்ற கருவி வழியாக செலுத்தப்படுகின்ற கதிரலை ஆற்றல் புற்று உருவாகி இருக்கும் பகுதிகளை வெப்பப்படுத்தி கரைத்து அழித்துவிடுகிறது. அதன் விளைவாக முற்றிய நிலையிலான புற்றுநோய் கொண்டிருந்தவர்களில் 70 விழுக்காட்டினர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உயிரோடு இருக்கின்றனர். தொடக்கநிலை புற்றுநோய் கொண்டிருந்தவர்களில் 85 விழுக்காட்டினர் ஓராண்டாகவும், 77 விழுக்காட்டினர் ஈராண்டுகளாகவும் எவ்வித புற்றுநோய் அடையாளங்களும் தென்படாமல் இருக்கின்றனர். அறுவைசிகிச்சை பயனற்றது என எண்ணப்படும் நோயாளிகளின் தற்காலிக நிவாரணத்தில் இம்முறை மிக நல்ல பயன் ஆற்றமுடியும் என்று மருத்தவர்கள் கூறியுள்ளனர்.

 

தற்கால சூழலில் புற்றுநோய்க்கான நிவாரணமாக மருந்துகள் அல்லது கதிரியக்க சிகிச்சைகள் என்று வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியுள்ளது. ஆனால் அறுவைசிகிச்சை செய்ய முடியாத நேயாளர்களையும் இத்தகைய கதிரலை ஆற்றல் சிகிச்சைளை எளிதாக பெறச்செய்ய முடியும் என ஆய்வில் காட்டியுள்ளனர். பிரான்ஸில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் இதை விட மேலதிக நல்ல முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவை இடையீட்டு கதிர்வீச்சியியல் சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய முறையை நடைமுறைபடுத்துவது கடினமா என்று கேட்டால் மிக எளிது என்கிறார் மருத்துவர் டீயூபுய். கதிரலை நிபுணர் உள்ள எந்த மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சை வழங்கப்படலாம் என்று அவர் தெரிவிக்கிறார். நோய் முற்றி இறக்கும் தருவாயில் இருக்கும் நோயாளிகளின் வலியை குறைக்கவும் இம்முறை பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

கதிரலை ஆற்றலை பயன்படுத்தி, புற்று அல்லது கட்டி பகுதிகளை வெப்பமேற்றி கரைய செய்யும் முறைக்கு நேர் எதிராக மருத்துவர் ஜியோஜியாடஸ் என்பவர் அவற்றை குளிராக்கி உறையச்செய்யும் முறையை முயன்றுள்ளார். ஊசி போன்றஅமைப்புடைய கருவியை புற்றுபகுதியில் செலுத்தி கட்டியை பூஜியத்திற்கு கீழ் 150 செல்சியஸ் டிகிரியில் உறைய வைத்து இச்சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறுநீரக புற்று நோயில் அவர் செய்த ஆய்வில் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட கட்டிகளில் 95 விழுக்காடும், 7 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட கட்டிகளில் 90 விழுக்காடும் நீக்கப்பட்டு வெற்றி பெற்றதை எண்பித்துள்ளார்.

 

இத்தகைய புதிய சிகிச்சைகளால் காலப்போக்கில் புற்றுநோயும் சளி, காய்ச்சல் போல் எளிதான நோய்களாகும் காலம் தொலைவிலில்லை.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.