வியாபார தோல்வி எதிரொலி, தொழிலதிபர் தற்கொலை. கடன் சுமை தாங்க முடியாமல் குடும்பமே நச்சுண்டு சாவு என்ற செய்தியேட்டு தலைப்புகள் நமக்கு புதிதல்ல. தங்களது உயிரை மாய்த்து கொள்வது என்பது ஒருவரின் வாழ்வில் ஏற்படும் வெறுப்பின் உச்சக்கட்டம். தற்கொலை என்பது கோழைத்தனம், மடத்தனம் என்றும், அவ்வாறு வாழ்வை முடித்து கொள்கிறவர்கள் வாழ்வை வருவது போல் சந்திக்கும் திறனற்றவர்கள் என்றெல்லாம் கருத்துக்கள் நிலவிய காலங்கள் உண்டு. ஆனால் இத்தகைய விரக்தியான முடிவுகளுக்கு இட்டு செல்லப்படுவது உளநலம் தொடர்புடைய நோயின் அறிகுறி, உடனடியாக கவனம் செலுத்திவிட்டால் அவர்களை நிச்சயம் காப்பாற்றி விடலாம் என்ற கருத்துக்கள் அண்மையில் தோன்றிய முன்னேற்றங்களே. தற்கொலை எண்ணம் என்பது உளநலத்தோடு தொடர்புடையதால் அத்தகைய எண்ணம் கொண்டோரை கண்டுபிடித்து உளநல சிகிச்சை அளிப்பது அரிது என்றாலும் மிக முக்கியமானது. பொருளாதார நிலைமையில் வீழ்ச்சி, ஏமாற்றம், வருத்தம், இயலாமை, தோல்வி ஆகிய நிலைமைகள் இந்த எண்ணத்தை ஒருவருடைய மனதில் எழ செய்யலாம்.

 

விவாசாயத்தை நம்பிவாழும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்ட பின்னரும் நலிவுறும்போது தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைகளுக்கு தள்ளப்பட்ட சூழ்நிலைகளை அறியவரும் பல்வேறு நாடுகள், அதனை மாற்ற அவசர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இத்தகைய முயற்சிகள் வெறும் பொருளாதார உதவிகளோடு முடிந்து விடுபவையல்ல. உளநலம் தொடர்புடைய பல்வேறு உத்திகளும் கையாளப்பட வேண்டும். மதங்களை காப்பாற்ற மதத்தலைவர்கள் இருக்கிறார்கள். நாட்டை காப்பாற்ற படைவீரர்கள் இருக்கிறார்கள். நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கிறோம். எல்லாம் சரி... அந்த மருத்துவர்களை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? என்று கேட்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. காஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்.... அந்த நதியே காஞ்சி போயிட்டா...? என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது மருத்துவரை நமது உயிரை காப்பாற்றுகிறவராக தான் பார்த்து கொண்டிருக்கிறோம். அவர்களுடைய உயிரை அமைதியாக மாய்த்துக்கொள்ளவும் அத்தொழில் வழி செய்கிறது என்ற செய்தி மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது. பொது மக்களிடம் காணப்படும் தற்கொலை விகிதத்ததை விட மருத்துவர்கள் மத்தியில் அதிக அளவு இருப்பது தெரியவந்துள்ளது.

 

இன்ப துன்பத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் மருத்துவர்களை மிகவும் பலமிக்கவர்களாக நாம் எண்ணிக்கொள்ளும் நிலையில், மருத்துவருக்கே உளநல சிக்கல் என்றால் அவர் சரியான பைத்தியம் என்று யாரும் அவரை அணுகமாட்டார்கள். இது அவர்களுடைய தொழிலையே அழித்து வாழ்வை இருள்சூழ வைத்துவிடும். அதனால் தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார் என்பதை போல அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் யாருக்கும் தெரியாமல் தனிமையில் துன்புறுகிறார்கள். அதிகமான வலியை அல்லது துக்கத்தை அடையும்போது பிற மருத்துவரின் ஆலோசனை அவர்களுக்கு தேவையில்லை. மருத்துவ அறிவால், தங்களது உடல் நிலையை தெரிந்து, தங்களை மாய்த்து கொள்ள தேவைப்படும் நச்சு அல்லது தூக்கமருந்தின் அளவையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அமெரிக்க மருத்துவ சங்கம் இத்தகைய செயல்களை தடுப்பதற்கான நடைமுறைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது.

 

மருத்துவர்களின் இறப்புக்கு மாரடைப்பு என்ற போலி காரணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் தற்கொலை பற்றிய தெளிவான கணக்கெடுப்பு நடத்தப்பட இயலாமல் போகிறது. அமெரிக்க உளநல மருத்துவ கல்லூரியின் ஆய்வுபடி ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 400 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். மருத்துவர் லூசி ஆன்ட்ரூ என்பவர் அமெரிக்க மருத்துவ செய்தி இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் ஆண்டுக்கு 250 மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பொது மக்களில் ஒரு இலட்சம் பேரில் 23 ஆண்களும் 6 பெண்களும் தற்கொலை செய்து கொள்வதாக அறியபடுகின்றது. ஆண் பெண் மருத்துவர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் பொதுவாக சம அளவில் காணப்படுகிறது. ஆனால் 1984 முதல் 95 வரை அமெரிக்காவின் 28 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பொது மக்களைவிட மருத்துவர்களில் ஆண்கள் 76 விழுக்காடும் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாகவும் தற்கொலை செய்து கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.