தேவையான பொருட்கள்:

அரிசி: 1 கப்


கடலைப்பருப்பு: கால் கப்

பாசிப் பருப்பு : கால் கப்

பால்: ஒன்னரைக் கப்

முந்திரிப்பருப்பு :25 ( மங்களூர் சிவா 18ன்னு சொன்னப்பச் சும்மா இருந்தீங்க?)

உலர்ந்த திராட்சை( சுல்த்தானா): 2 மேசைக் கரண்டி

நெய்: அரைக் கப்

கோல்டன் சிரப்: 1 கப் ( வெல்லப்பாகுதான். டின்லே வருது)

தேங்காய் துருவியது: அரைக் கப்.( நான், டெஸிகேட்டட் தேங்காய்(தான்) போடுவேன்)

ஜாதிக்காய் : பொடிச்சது 1 சிட்டிகை

ஏலக்காய்: 4 ( உரித்தோ உரிக்காமலோ ஒரு தட்டு தட்டி எடுத்துக்கொள்ளணும்)

கிராம்பு : 5

பட்டை: ஒரு துண்டு( ரெண்டு இஞ்சு நீளத்தில்)

பச்சைக் கற்பூரம்: கால் சிட்டிகை

செய்முறை:

வெறும் வாணலியில் கடலைப்பருப்பை வாசனை வரும் வரை கருக்காமல் வறுத்துக்கொள்ளணும். அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு அதே வாணலியில் பாசிப்பருப்பையும் இதே போல மணம் வரும்வரை வறுத்து எடுக்கணும்.

அரிசி, க & பா. பருப்புகளைச் சேர்த்து நன்றாக மூன்று முறை களைந்து எடுத்து( இந்தியர்களுக்கு அடையாளமாம் மூணு முறை கழுவறது)ஒரு குக்கர் பாத்திரத்தில் போட்டுப் பாலும், ரெண்டு கப் தண்ணீரும் சேர்த்து மூணு விசில் வரை அடுப்பில் வச்சு எடுத்துக்கணும்.

கொஞ்சம் பெரிய வாணலியை அடுப்பில் வைத்துக் கொஞ்சம் நெய் ஊற்றி மு. பருப்பு & திராட்சையைப் பொரிச்சு எடுத்துத் தனியா வச்சுக்கணும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துப் பட்டை, கிராம்புகளை லேசாப் பொரிச்சுட்டு, ஜாதிக்காய் தூளைத் தூவணும்.அடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கணும்( இந்த சமயங்களில் அடுப்பு சிம்லே இருக்கணும். தீவட்டியா தீவச்சுக் கருக்கிடாதீங்கப்பு) அடுத்து, வெந்த அரிசி பருப்புக் கலவையை இதில் சேர்த்துக் கிளறிக்கிட்டே அந்த கோல்டன் சிரப்பை ஊத்துங்க.

மீதி இருக்கும் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறனும். நல்லா எல்லாம் ஒண்ணோடொண்ணு சேர்ந்து நிறம் எல்லாம் ஒண்ணுபோல இளம் மஞ்சள்/பிரவுண் ஆனதும் ஏலக்காய், பச்சைக்கற்பூரம் சேர்த்து இளக்கிட்டு, முந்திரி & சுல்த்தானா வையும் சேர்த்துக்கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கலாம்.