Language Selection

வே. மதிமாறன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

 

‘‘ஆண் & பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு மிகவும் பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புத்தகம் எத்தகைய குப்பைக் கூளம்!

 

இந்த நூலில், ப்ராய்டின் சித்தாந்தம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அறிவியல் மணம் இருப்பதைக் காட்டி ஏமாற்றவேயாகும், இந்த நூல் ஒரு கேவலமான குப்பையாகவே இருக்கிறது. ப்ராய்டின் சித்தாந்தம், இப்பொழுது ஒரு புது மோகம் போல இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சாணிக்குவியலிலிருந்து இத்தனை செழிப்பாக முளைத்தெழுந்துள்ள - இங்கே குறிப்பிட்ட நூலிலும், இதைப் போன்ற நூல்கள், கட்டுரைகள், அறிவியல் பத்திரிகைகள் இவற்றில் வெளியிடப்பட்டுள்ள ஆண் - பெண் உறவு பற்றிய கொள்கைகள் பற்றியும் எனக்கு நம்பிக்கை இல்லை.

 

இந்தியப் பக்கிரி ஒருவன் தனது தொப்புளைப் பற்றியே தன் சுயநலத்தை நினைத்து கொண்டிருப்பது போல, எப்பொழுது பார்த்தாலும் ஆண் - பெண் உறவு பற்றிய பிரச்சினைகளில் இடைவிடாமல் மூழ்கிக் கிடப்பவர்களையும் நான் நம்பவில்லை. இவ்வாறு ஆண் - பெண் உறவிலேயே அளவுக்கு மீறி அபரிதமாகக் காணும் சித்தாந்தங்கள், பெரும்பாலும் உத்தேசங்கள் மட்டுமே. பெரும்பாலும் எதேச்சதிகாரமான போக்குகளே. இவை எல்லாம் சொந்தத் தேவையிலிருந்து எழுபவையேயாகும். முதலாளித்துவ ஒழுக்க முறையின் முன்னால், தனது அசாதாரணமான அளவு மீறிய ஆண் - பெண் உறவு வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்கும், தன்னோடு பிறர் சகிப்புத் தன்மை காட்ட வேண்டும் என்று கோரியுமே இவற்றை எழுப்புகின்றனர்.

 

ஆண் - பெண் உறவுகள் பற்றிய பிரச்சனைகளில் ஆழ முழுகிக்கிடப்பது எத்தனை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ, அதே போல முதலாளித்துவ ஒழுக்க முறைக்குத் திரைகட்டி மதிப்புக் கொடுக்க முயல்வதும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

 

‘இந்த முயற்சி கலகமயமானது; புரட்சிகரமானது’ என்று வெளித்தோற்றத்தில் மிகையாகக் காணப்பட்டாலும், இறுதியாக இது முற்றிலும் முதலாளித்துவப் போக்கில் செல்வதாகவே அமையும். இந்தப் பொழுது போக்கு வேலையை சிறப்பாக அறிவு ஜீவிகளும் அவர்களது வர்க்கத்தோடு ஒட்டிய உறவுகள் வட்டத்தில் உள்ளவர்களுமே மிகவும் விரும்புகிறார்கள்.

பிரதானமான சமூகப் பிரச்சினையில் ஒரு பகுதியான ஆண் - பெண் உறவு, விவாகம் முதலிய பிரச்சினைகள் என்று மீண்டும் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமையில்தான் இது கொண்டு போய்விடும். இதற்கு மாறாக, மிகப் பெரிய சமூகப் பிரச்சினை ஆண் - பெண் உறவுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகி அதன் அனுபந்தமாகக் கருதப்படும் நிலை ஏற்பட ஏதுவாகும். பிரதானமான பிரச்சனை பின்னணிக்குத் தள்ளப்பட்டு, இரண்டாந்தரப் பிரச்சினையாகிறது. இதனால் இந்தப் பிரச்சினையில் தெளிவு ஏற்படாமல் தவிப்பது மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையையே மூட்டமிட்டு மறைப்பதுடன் தொழிலாளி மற்றும் பெண்களின் வர்க்க பேதத்தையும் ஒளித்து மறைக்கும் நிலை நேருகிறது.

 

மேலும், ஒரு கருத்தை இங்கே குறிப்பிடுவது மிகையாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் உரிய காலமுண்டு என்று அறிவாளியான சாலமன் நமக்குக் கூறியிருக்கிறார். தொழிலாளி மாதக் கணக்கில் ஒரேடியாக காதல் செய்வது எப்படி? காதலிக்கப்படுவது எப்படி? மணக்கக் கேட்பது எப்படி? என்ற விஷயங்களில் மும்முரமாக இறங்கச் செய்வதற்கு இதுதான் நேரமா?

 

முதலாளித்துவ சாயம் பூசிய முட்டைகளிலிருந்து வெளிவரும் மஞ்சள் மூக்கு குஞ்சுகள் மெத்தக் கெட்டிக்காரர்கள்தான். நமது வழிகளைத் திருத்திக் கொள்ளாமல் இந்த நிலைமையை ஏற்க வேண்டியது அவசியமே. ஆண் - பெண் உறவு பற்றிய நவீன விளக்கத்தின் விளைவாகவும், அதில் அளவு மீறிய அக்கறை காட்டியதாலும் இளைஞரியக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இளைஞர்களிடம் துறவியின் புலனடக்கம் பற்றியும், குப்பைத் தனமான முதலாளித்துவ ஒழுக்க முறையின் புனிதத் தன்மையைப் பற்றியும் போதனை செய்வதை விடப் பொய்யான வேலை வேறு எதுவும் இல்லை. என்றாலும், இந்த நாட்கலில் ஆண் - பெண் உறவுப் பிரச்சினைகள் இயற்கையான காரணங்களால் வலுக்கட்டாயமாக முன்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது இளைஞர் மனநிலையின் நடு அம்சமாக ஆகி வருகின்றன. இது நல்லதுதான் என்று ஒருவர் கூறுவது அரிது. இதன் விளைவுகள் சில நேரங்களில் படுநாசகரமானவையாக முடியும்.

 

ஆண் - பெண் வாழ்க்கை உறவு பற்றிய பிரச்சினைகளில் இளைஞர்களின் மாறுபட்ட போக்குகள், கொள்கையின் பேரிலுள்ள கோட்பாடு விஷயத்தை அடிப்படையாக்கியே எழுந்துள்ளன. பலர் தாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைமை ‘புரட்சிகரமானவை’ கம்யூனிஸ் நிலைமை’ என்று கூறுகிறார்கள். இது அப்படித்தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.

 

நான் ஒரு கிழவன். இதை என் மனது ஏற்கவில்லை. நான் எக்காரணம் கொண்டும் ஒரு துக்கம் நிறைந்த துறவியாக இல்லை. என்றாலும், இளைஞர்களின் இந்தப் ‘புதிய ஆண் - பெண் வாழ்க்கை’ என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்த விஷயத்தை, வயது வந்தோரும் அடிக்கடி சுட்டிக்காட்டுவது முற்றிலுமாக முதலாளித்துவப் போக்குள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

 

கம்யூனிஸ்டுகளாகிய நாம் புரிந்து கொண்டுள்ள வகையில் சுதந்திரமான காதலின் சிறு சுவடு கூட இதில் இல்லை. கம்யூனிஸ்ட் சமூகத்தில் ஒருவர் தமது ஆண் - பெண் உறவு இன்பத்தை அனுபவிப்பதும், காதலுக்காக ஏங்குவதும், எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது போல சாதாரணமானது. சில்லறை வேலை என்று பெயர் போன கொள்கை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நமது இளைஞர்கள் இந்த ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கை பற்றியப் பித்தேறி - முழு பித்தேறி அலைகிறார்கள்.

 

இது, பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அழிவைத் தந்திருக்கிறது. இதனை வலியுறுத்துகிறவர்கள், இதுவும் மார்க்சிய சித்தாந்தம் என்று கூறுகின்றனர். சமூகத்திலுள்ள சித்தாந்த ரீதியான சகல போக்குகளையும் மாறுதல்களையும் நேரடியாக தவறவிடாமல், ஒரே ஒரு அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருப்பதாகக் கூறும் அத்தகைய மார்க்சியத்திற்கு நல்லது நடக்கட்டும். இது அத்தனை எளிதான விஷயமல்ல. இந்த உண்மையை, வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் தொடர்பான உண்மையை, நீண்ட நாட்களுக்கு முன்னால் பிரடரிக் ஏங்கெல்ஸ் நிரூபித்திருக்கிறார்.

 

பெயர்போனதான ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை நான் மார்க்சிஸ்ட் கொள்கை என்று கருதவில்லை. மாறாக, அது சமூக விரோதமானது என்று நினைக்கிறேன்.

ஆண் - பெண் வாழ்க்கையில் முக்கியமானது, இயற்கை உதவியுள்ள விஷயங்கள் மட்டுமல்ல, மேல் மட்டத்திலாயினும் சரி கீழ் மட்டத்திலாயினும் சரி, கலாச்சாரத்திலிருந்து வந்த கலவைப் பண்புகளும் முக்கியமானதாகின்றன. ஏங்கெல்ஸ் தனது ‘குடும்பத்தின் தொடக்கம்’ என்ற நூலில், சாதாரணமான ஆண் & பெண் காதலாக வளர்ச்சியடைந்து, உயர்ந்த தரத்தை எய்தியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

 

ஆண் - பெண் இரு சாராரிடையே உள்ள உறவுகள், வெறும் சமூகப் பொருளாதாரத்திற்கும் உடலின் தேவைக்கும் இடையே உள்ள விளையாட்டு மட்டுமல்ல. இந்த உறவுகளில் ஏற்படும் மாறுதல்களை, தத்துவத்துடன் உள்ள தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி சமூகத்தின் பொருளாதார அடிப்படையுடன் மட்டும் பொருத்துவது மார்க்சியமாகாது. அது பகுத்தறிவு வாதமாகும். தாகத்தை தணிக்க வேண்டியதுதான். ஆனால், எளிய மனிதன் சாதாரணமாக உள்ள நிலையில் சாக்கடைக்குள் படுத்து - ஒரு சேற்றுமடைத் தண்ணீரைக் குடிப்பானா? பல எச்சிற்படுத்திக் குடித்த கிளாசிலிருந்து குடிக்க விரும்புவானா?

 

சமூக அம்சம்தான் இதில் மிக மிக முக்கியமானது. தண்ணீர் குடிப்பது என்பது தனி ஒருவரின் விஷயம். ஆனால், காதல் செய்வதில் இரண்டு பேர் பங்கு கொள்கின்றனர். மூன்றாவது புது உயிர் பிறக்கிறது. இங்குதான் சமூக நல உரிமை கூட்டான அமைப்போடு உள்ள கடமை இவை எல்லாம் எழுகின்றன.

 

‘விடுதலை பெற்ற காதல்’ என்ற ஆழமான முத்திரையுடன் காணப்பட்ட பொழுதும் ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நான் விரும்பவில்லை. மேலும் இது புதிதுமல்ல, கம்யூனிசம் அடிப்படையானதுமல்ல.’’

கிளாராஜெட்கினின் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலிலிருந்து. வே.மதிமாறன்

http://mathimaran.wordpress.com/2008/07/30/article102/