ன்றைய ஈழத்து அரசியல் வாழ்வில் ஒடுக்கப்படும் தமிழ்மக்கள்-சாதிகளாகப் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் அரசியற்றளத்தில் பல தரப்பட்ட கேள்விகளைக் கொண்டிருக்கிறது. அந்தக் கேள்வியானது எப்பவும் நிலவப் போகும் அரசியற்றளத்தைப் பற்றியதாகும். அதாவது, அதிகாரத்தைக் கைப்பற்றியபின்-அல்லது அதிகாரப் பகிர்வுக்குப் பின் எத்தகைய அரசியல் சமுதாய அமைப்பின் கீழ் எத்தகைய சமூகவாழ்வை அமைத்துக்கொள்ளப் போகிறோம் எனும் எதிர்பார்ப்பே முழு மொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒரே குடையின்கீழ் திரட்டுவதற்கான வாய்ப்பில் உச்சமடையும். ஆனால், இன்றைய அரசியல் யதார்த்தமானது தனித் தமிழீழம் என்ற கருவ+லத்தை மெல்ல மறந்து மாற்று எண்ணக் கருத்தின்பால் தாழ்த்தப்பட்ட மக்களைக் கவனங்கொள்ள வைக்கிறது. பல நுற்றாண்டுகளாகத் தாழ்தப்பட்டு அடிமை குடிமை சாதிகளாக் கிடந்துழலும் தமிழ் பேசும் மக்களில் கணிசமானவர்கள் தமிழீழம் என்பதை அன்றைக்கே சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்தார்கள்-விமர்சித்தார்கள். இத்தகைய கருத்துக்களைப் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் நாம் காணுமிடத்திலும் தமிழீழம் சார்ந்த இந்த அச்சமென்பது வெறுமனவே பொருளாதார நலன்களுடனான தொடர்பாக எழவில்லை. மாறாகத் தமக்குள் முட்டிமோதிய வரலாற்று முரண்களால் அவாகள் அங்ஙனம் நோக்கும் நிலைமைக்கு அன்றைய ஓட்டுக்கட்சிகள் தமது வலுக்கரத்தால் உந்தித் தள்ளின. இதுள் அடங்காத் தமிழன் எனும் வேளாளச் சாதிவெறியன் சி.சுந்தரலிங்கம் முதன்மையான ஓட்டுக்கட்சிச் சாதி காப்பாளனாகும். இந்த மனிதரின் சுயம் எதுவென்பதைப்பார்க்க மாவை ஆலயப் பிரவேசப்போராட்டத்தில் தாழ்தப்பட்டவர்களுக்காக வந்த அரசாங்க அதிபரை வழிமறிக்க முனைந்த இவரது அழியாத வடுவிலிருந்து உய்துணர முடியும். இதற்கு உடந்தையாக இருந்தவர் இன்று தந்தையென்று அழைக்கப்படும் செல்வநாயகம் என்றால் இன்றைய இளைய தலைமுறை ஆச்சரியப்படும். ஆனால்,உண்மை அதுதாம்.

 

இத்தகையவொரு நிலையானது எப்பவும் தமிழ்ச் சமுதாயத்துக்குள் மிக விருப்பாக இருத்திவைக்கப்பட்டது.பதவிகளையும், பொருட்களையும் தாம் மட்டுமே அறவிட முடியுமென்று அரசியல் அதகாரத்தைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை மிகக் கேவலமாகச் சாதிகளாகப் பிளந்து அரசியல் நடாத்தியவர்களால் இந்த வடு மிக மோசமாக அவர்களைப் பாதித்தது. இத்தகையவொரு பின்னணியில் ஈழத்துத் தமிழ் மக்கள் சமுதாயத்துள்-தமிழர்கள் மத்தியில் அனைத்து முரண்பாடுகளும் முட்டியபோது அதன் பாரிய தாக்கம் வடமாகாணத்துள் நீண்டகாலமாகச் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து செய்தது. இங்கே மக்கள்-தாழ்தப்பட்ட மக்கள்பட்ட வேதனைகளும்-வடுவுமே மக்களின் அபிலாசைகளைத் தீர்மானித்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் தமது எதிர்ப்புக்களைக் காட்டுவதற்காகத் தொடர்ந்து சாதிக் கொடுமைக்கெதிரான போராட்டங்களைச் செய்தார்கள். இதுள் மிக நேர்த்தியாகப் போராடியவர்கள் எல்லோருமே மிகத் தாழ்தப்பட்ட பறையர், நளவர், பள்ளர், அம்பட்டர், வண்ணார் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. எப்பொழுதெல்லாம் சாதிக் கொடுமைக்கெதிராகப் போராட்டங்கள் வெளிகிளம்புகிறதோ அப்போது வேளளரின் குடிமை சாதியான கோவியச் சாதி கைத்தடியாக வந்து இத்தகை போராட்டத்தை நசுக்கி விடும். இங்கே நிகழ்ந்த அடியாள்-ஆண்டான்-அடிமைச் சமுதாய அமைப்புள் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் மக்களிடம் பரஸ்பர நம்பிக்கை இல்லாது போய்விட்டது.

 

கடந்த காலத்தை உதாரணமாகக் கொள்ளும் ஒவ்வொரு தாழ்தப்பட்ட தமிழர்களும் தமக்கு ஏற்பட்ட வரலாற்று வடுவிலிருந்தே இன்றைய"தலித்துவ"ப் பொதுமைப்பட்ட ஒரு சமூக உளவியற் கருத்தாக்கத்தால் இணைவதற்கான முன் நிபந்தனைகளைத்"தலித்துக்கள்"என வலியுறுத்திக் கொள்கிறார்கள். இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே! இதற்கான நல்ல உதாரணங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் வைத்திருக்கிறார்கள். அன்றைக்கு, அதாவது 1967-1968 வரை நடைபெற்ற சாதியக் கலவரத்தில் உயர்சாதிய வேளாளத் தமிழர்கள் கோவியக் குடிமை சாதியை எங்ஙனம் அடியாளாக்கி அப்பாவித் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடியதென்பதை இன்றைய"சோபா சக்திகள்"சொல்லவில்லை-வரலாறு சொல்கிறது.

 

முன்னைய சாதிக்கலவரங்களுக்கும் இதன் பின்பான கைதடி, எழுதுமட்டுவாள், கல்வயல், புளியங்கூடல் போன்ற இடங்களில் நடாத்தி முடிக்கப்பட்ட கலவரங்களுக்கும் அடிப்படையிலுள்ள சமூகவுளவியலானது வேளாளச் சாதிய மேலாதிக்கம் மட்டுமல்ல. அங்கே மாறிவரும் பொருளாதார முன்னேற்றம், தொழில்ரீதியான பண இருப்பும், அதன் வாயிலாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறை மெல்ல விலகுவதைப் பொறுக்கமுடியாத யாழ்பாண மேலாதிக்கம் இவர்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் மீளச் சிதறடித்து அவர்களை மீளவும் ஒடுக்கித் தமக்கு அடிமைகளாக்கியது. இது கொத்தடிமை முறைக்குள் நிலவும் நிலப் பிரபுத்துவ முறைமையோடு மிகவும் தொடர்வுடையது. அதாவது நிலப்பிரபுத்துவ மிச்சசொச்ச எச்சத்தின் இருப்பு மீள நிலைபெற்றதின் வெளிப்பாடாகவே இத்தகைய நிகழ்வுகள் தொடர் நிகழ்வாகத் தாழ்தப்பட்ட மக்களைப் பதம் பார்த்தது. 1967-1968 வரை நிகழ்ந்த சாதியக் கலவரமானது வேளாள அரசியல் வாதிகளால் ஏவிவிடபபட்ட சிங்களப் பொலிசார்களிடமும், கோவியர் சாதிகளிடமும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் பொறுப்பை இவர்களிடம் கையளித்தது. அப்போத நிகழ்ந்த கொடூரத்தைக் கண்டு சிங்கள அரசியல் தலைவர்களே கண்டிக்கும் நிலைக்கு வேளாள அரசியற்றலைவர்கள் உள்ளானார்கள். ஆனால், சிங்களத் தலைவர்களின் கண்டனத்துக்குச் செல்வாவும், அமிரும் அளித்த பதில்கள் இவர்களை இன்னும் பாரிய ஒடுக்குமுறையாளர்கள் என்பதற்கும், யாழ்ப்பாணிய மேலாதிகத்தின் காவலர்கள் இவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தும். அவர்கள் அளித்த பதில்கள் பாரளுமன்றம் கென்சார்ட், மற்றும் அன்றைய சீனக் கம்யுனிசக்கட்சியின் பத்திரிகைகளில் பதிவானது. இது வேளாளச் சாதிய மேலாதிகத்தின் மிகப் பெரும் வடு.

 

அடுத்து, ஈழத் தமிழர்களின் சாதிய அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு என்ன பிரத்தியேகக் காரணிகள் முன் நிபந்தனையாக இருக்கிறதென்று பார்த்தால் அந்தச் சாதியமைப்புக்குள் நிலவும் சமூகப் பலத்தகாரமும் அதை முன் தள்ளிய நிலமானிய உறவுகளும் இந்த உறவை தீர்மானித்த சமூகதோற்றமே முக்கியம் பெறுகிறது.

 

யாழ்பாணச் சமுகத்தின் தோற்றமென்பது நாம் ஈரயாரமாண்டுகள் வரலாறு கொண்டர்வகள் இலங்கையிலென்ற கோதாவிலிறிங்கித் தரவுகளைச் சொல்வதற்கில்லை. சமூக உருவாக்கம் என்பது திடமானவொரு அரசு அமைகின்றபோததெழும் அதன் பலவந்தத்தாலும் ஆதிக்கத்தாலும் தீர்மானித்து உருவாக்கங் கொள்வதாகும். இங்கே, யாழ்ப்பாணச் சமூக உருவாக்கம் என்பது 11ஆம் நூற்றாண்டில்தாம் நிரூபிக்ககூடியவரையில் உருவெடுத்தென்பதும், அது சோழப் படையெடுப்புக்குப் பின் வந்த தென்னிந்தியத் தமிழர்களின் வருகையுடன் ஆரம்பித்தத்தென்பதையும் ஒப்புக்கொள்வது நியாயமாகும். ஏனெனில், இந்த யாழ்ப்பாணத்து ஆதிக்கமானது நிலப்பிரபுத்துவத்தின் நிலமான்ய உறவுகளோடு மிக நெருங்கிய தொடர்புடையது. இத்தகைய நிலப் பிரபுத்தவம் சோழப் படையெடுப்போடு பாரிய வடிவமாக யாழ்பாண இராச்சியத்தின் உருவாக்கத்துக்கு வழி வகுக்கிறது. தமிழர்கள் மத்தியில் நிலவிய முதலியார் பதவிகளின் தோற்றம் இறுதிவரை நிலத்தின் ஏகபோகத்தைத் தீர்மானிப்பதற்கானதாகவே இருந்தது. இதைப் புரிந்துகொள்ளவதற்கான ஆதரமென்பதை நமது யாழ்பாண வடமாராட்சியிலுள்ள நிலப்பரப்பின் குறிச்சிகளை நோக்குமிடத்துப் புரியும். அங்கெல்லாம் சிங்கமாப்பாணர் குறிச்சியும், மணிவீரவாகுத்தேவர் குறிச்சியும் மிகப் பிரபலமாக இன்றும் இருக்கிறது. மலவராயர் குறிச்சியென்பதைக் காணியுறுதிகளில்கூட இன்றும் பார்க்க முடியும். இந்தக் குறிச்சிகளும் இதுள் சுட்டப்பட்டவர்களும் யாரென்றால், இவர்கள்தாம் அன்றைய சமூகத்தை ஆட்டிப்படைத்த நிலப் பிரபுக்கள். எங்கே சாதிய எச்சங்கள் நிலவுகின்றதோ அங்கே நிலப் பிரபுத்தவம் ஏதோவொருவடிவிலிருக்கிறது. இத்தகைய உறுவுகளுக்குள் நிலவும் சாதியத்தின் வேர்கள் மிகவும் வலிய வடிவத்திலிருந்து ஒருவித நெகிழ்வுத்தன்மைக்கு வரும் சூழலை எண்பதுகளுக்குப்பின்பான அரசியல் மாற்றங்கள்-ஆயுதப்போராட்ட இயக்கங்களே தீர்மானிக்கின்றன.

 

இப்போது பண்பாட்டுக்குள் ஒரு சிற கோடு கீறப்படுகிறது. அது வலுகட்டாயமாகத் தாழ்த்தப்பட்டவர்களோடான பழையபாணித்தனமான உறவாடலை வலுவாக உடைக்க முனைகிறது. இது மனிதனை ஓரளவு கௌரவிக்கும்படி வேண்டி நிற்கிறது. இதற்கு சிங்கள இராணுவத்தின் பொதுவான(சாதிபாராத) தாக்குதல் வழியும் விட்டுவைக்கிறது. அகதிவாழ்வு இதை ஓரளவு அநுமதிப்பதில் ஊக்கங் கொடுக்கிறது. இத்தகையவொரு சூழல்தாம் தீவுப்பகுதியிலுள்ள(இங்கே தீவுப்பகுதியென்பதை ஒரு உதாரணத்துக்காக எடுக்கப்படுகிறது.இது நான் வாழ்ந்த பகுதியென்பதால் அநுபவத்துள் வந்த பகுதி.சாதியக்கட்டுமானுத்துள் நிகழ்ந்த இத்தகைய பண்பு மாற்றம் ஈழத்து அனைத்துப் பகுதிக்கும் பொருந்தும்...அப்பாடா!ஆளை விடுங்கோட அப்புமாரே:-(((((( )தாழ்தப்பட்ட மக்களுக்குச் சிரட்டையில் பகிர்ந்த தேனீரைப் போத்தலுக்கு மாற்றியது. பின்பு, அதுவும் பாரிய வெருட்டல்களுக்குப்பின் தனிப்பட்ட மூக்குப் பேணிகளுக்கு மாறியது. அதாவது, தாழ்தப்பட்ட மக்கள் தமது நிலத்தில் கூலிக்குழைக்கும்போது அவர்களுக்கிடும் போசனத்துக்கான குவளை-கோப்பைகளை நாய்க் கொட்டகையிலேயே வைத்திருந்த அவலமான சூழலை நான் நேரடியாக அனுபவித்தவன்.

 

இத்தகைய நிகழ்வுகளை நேடியாக அனுபவித்த தாழ்த்தப்பட்ட மக்களின் தொகை கிட்டத்தட்ட ஏழு இலட்சம் மக்கள். இவர்கள் தமிழ்ப்பிரதேசமெங்கும் கலைந்து எங்கோவொரு சேரிகளுக்குள் அடிமைகளாகக் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய இழி வாழ்வுக்கு நிர்பந்திக்கப்பட்ட மக்களின் அன்றைய-இன்றைய அச்சமெல்லாம் அமையப்போகும் தமிழீழம் அல்லது அமையப்போகும் மாநிலச் சமஷ்ட்டி வகையிலான அதிகாரப்பரவலாக்கலில் தமது நிலை என்ன? தங்களுக்கான தோல்வி மீளவும் இந்த முறைமைகளுக்குள் நிகழுமா என்பதே இன்றைய ஒவ்வொரு தலித்தினதும் கேள்வி. இதுதாம் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் அவநம்பிக்கையோடு எதிர்கொள்கிறது. அமையும் தமிழர் ஆட்சியில் தாம் இன்னும் ஒடுக்கப்படுவோமா என்ற இந்த நியாயமான சமூக அச்சம் இந்தப் போராட்டத்துள் அவநம்பிக்கையையே கொடுத்து வருகிறது. இதன் உள்ளார்ந்த இயங்கு தளத்தை மிகவும் நுணுக்கமாக அறியாதவர்களல்ல இன்றைய போராட்டக்களத்திலுள்ள புலிகள். எனினும்,அவர்களுக்குப் பின்னாலுள்ள யாழ்மேலாதிக்க வேளாள சாதி ஆளும் வர்க்கம் இதையொரு பொருட்டாக எடுக்காது புறந்தள்ளிவிட்டு, ஒரு மொன்னைத்தனமான"தேசிய வாதம்"புரியும்போது இந்த முரண்பாட்டை-அவநம்பிக்கையைச் சரியாக இனங்கண்ட சக்தி இந்தியாவே. இதைத்தாம் இலங்கைச் சிங்களத் தரப்பும் இன்று நுணுக்கமாகப் பயன்படுத்துகிறது.

இணையத்தில் வைக்கப்படும் இன்னொரு கருத்தானது "ஈழத்தில் சாதி ஒடுக்குமுறையானது முன்பு இருந்ததைப்போல் இல்லை. ஆகவே,அதுபற்றி நாம் எதுவும் அலட்டத்தேவையில்லையென்றவாதம். "ஆம்!சாதியமைப்பு-சாதி ஒடுக்குமுறை முன்பிருந்ததைப்போல் இல்லை என்பது உண்மை. ஆனால்,இங்கே கவனிக்க மறுக்கும் இன்னொரு காரணி சமூகம் என்பது முன்னைய நிலையிலிருந்து முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே. முதலாளித்துவத்தின் வளர்ச்சி-யுத்தச் சூழல்,போராடும் இளைஞர்களின் விழிப்புணர்ச்சி இவைகள் மனிதர்களிடம்-தனிப்பட்ட ஒவ்வொரு தனிமனிதரிடமும்(அது தாய் பிள்ளை,தந்தை என விரியும்)தனிமனிதச் சுதந்திரவுணர்வைத் தூண்டியள்ளது. இங்கே, முதலாளியத்தின் மிக நுணுக்கமான இந்தப் பண்பு அதன் உற்பத்தி உறவுகளோடுள்ள தேவையின் நிமித்தம் நிகழும் சந்தர்ப்பம் அதிகமாகிறது. இது தனியே தனது இலக்கை எட்டும்வரைத் தனிநபர்களின் அனைத்துப் பரிணாமங்களிலும் மறைமுகமாகத் தலைபோடும். இதுவே, இன்றைய சாதிய ஒடுக்குமுறைக் காரணிகளை இலங்கைத் தேசிய இனச் சிக்கலுக்குள் மிக வலுவாகக் காய் நகர்த்தும் திட்டத்தோடு அதன் ஒவ்வொரு நியாயப்பாட்டையும் வற்புத்தி ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட தனிமனிதரையும் உசுப்பிவிடுகிறது.இந்த உந்துதலை மிகவும் கவனமாகக் கையாளவேண்டிய பொறுப்பு தலித்துவ முன்னணிகளுக்கு உண்டு.இங்கே, நண்பர்கள் யார், எதிரிகள் யார்? என்ற கேள்வியில் யாழ்ப்பாண மேலாத்திக்க வெள்ளாளனா அல்லது அந்நிய அரசியல்சார நிறுவனங்களா(இவைக்குள் மறைவது இலங்கை-இந்திய மற்றும் மேற்குலக அரசுகள்தாம்)என்ற கேள்வியில் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட ஈழத்துக்குடிமகுனும்-குடிமகளும் அந்நியச் சக்திகளையே மிகத் தோழமையோடு நம்பும் நிலைக்கு நமது கடந்தகால கசப்பான அநுபவங்களே இட்டுச் செல்கிறது. இங்கே, யாரை நோவது?இதுதாம் மிகப் பெரும் அவநம்பிக்கையாக ஈழத் தேசிய விடுதலைப்போரில் ஒரு தலித்தின் சமூக உளவியலாக உருவாகியுள்ளது. இதுவே, தன்னோடு(தலித்துக்களோடு) தோள் சேரும் எவரையும் உடனடியா"நீங்கள் ஒரு தலித்தா"என்று உடனடியாகத் தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தச் சமூக அச்சத்தை அறிவியல் ப+ர்வமாக விளங்காது நமது தமிழ்ச் சமுதாயத்துள் இன்றைய தலித்துக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் துரோகத்தனமென விளித்து, மீண்டும் பாரிய தவறைச் செய்து,இயக்கவாத மாயையில் தூங்கிவிடுகிறோம். இவர்களே தலித்தென்பது "தான் வேளானெச் சொல்வதற்கான வாய்ப்பு" என்றும் எம்மைச் சாடுகிறது.

 

ஆனால், இந்தியாவும், இலங்கையும் இந்த அவநம்பிக்கையை மேல் நிலைக்கு எடுத்து உந்தப்படும்போது கணிசமான தமிழர்கள் தம்மை வேளாளரின் அரசியலோடு பிணைப்பதற்கில்லை. இங்கே, இத்தகைய பிளவு ஏலவே இருந்த காயங்களோடு இன்னும் வலிமையுறுந்தறுவாயில் போராளிகளில் அறுபது வீதமானவர்கள் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகிப் பிரியும் நிலை அல்லது ஆயுதங்களை உதறியெறியும் நிலை புலிகளுக்குள் நிகழ்ந்தே தீரும். இதைக் கூர்மைப்படுத்தும்போது ஒன்றிணைந்த தமிழர்களின் தேசியவாதம் சிதைவுறும் சந்தர்ப்பம் தோன்றும். இங்கே,போராட்டத்திலுள்ள அதிகமான போராளிகள் தாழ்தப்பட்ட சாதித் தட்டிலிந்தே போரட்டத்துக்குள் இணைந்தவர்கள். வேளாளர்களின் பிள்ளைகள் மிகத் திட்டமிட்ட வகையில் மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சூழலில், இது மிகவுமொரு பாதகமான சமூகப் பிளவைக் கொடுக்கும். இங்கேதாம் தமிழ்பேசும் மக்களின்(சாரம்சத்தில் தமிழ் ஆளும் வர்க்கத்தின்)"தேசிய விடுதலை"க் கோசம் நிர்மூலமாகிவிடும் பாரிய திட்டம் இலங்கையால் வலு சாதுரீயமாகச் செயற்படுத்தப்படுகிறது. இதை, இனிமேலும் தொடரும்-தொடரப்போகும் தலித்துக்களின் சந்திப்புக்களுடாகக் காய் நகர்த்தத் தோதான நம்பத்தகு அரசியல்வாதிகள்-ஆய்வாளர்கள் மூலமாகச் செம்மையுறச் செய்யும் இலங்கை-இந்திய ஆர்வங்கள் தலித்து மக்களின் உண்மையான முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கும் இன்றைய இழி நிலைக்கு எவர் காரணம்? அமைதியாகச் சிந்தித்தால் விடை கிடைக்கும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

13.10.2007