இருப்புக்காக எதையாவது சொல்லியாகவேண்டும் என்று ஆகியபிறகு எதைச்சொன்னால் என்ன. இந்த நிலையில் தான் இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அடிக்கடி கொசோவோவை உதாரணம் காட்டி சர்வதேச சமூகம் இதே நடைமுறை மூலம் இந்தியாவின் உதவியுடன் உதவவேண்டும் என்ற ஓலம் இன்னமும் ஒய்ந்தபாடில்லை.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை அறிவித்த நேரத்தில் எழுதிய ஒரு பதிவை பகிர்ந்து கொள்ள விரும்பி.....


(தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை உடனேயே தெரிவித்தது. ஆனால் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்லும்; இந்தக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?)

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டவுடன் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில்
"உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளட்டும். தமிழ் மக்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க இவர்கள் யார்? தமிழ் மொழியின் பெயரால் ஒரு மரபுக் கூட்டம் பிழைப்பு நடத்த தமிழ் மக்களின் பெயரால் இன்னொரு கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில்: "ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

"ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப் பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் கையேந்திக் கையேந்திப் பிச்சை எடுத்துப் பழகிய கூட்டமைப்பினருக்கு செய்யக் கூடியதெல்லாம் பிச்சை இடுவார்கள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் போற்றுவது மட்டுமே. இவர்களால் தமிழ் மக்களுக்கு பயனெதுவும் விளையப் போவதில்லை. அண்டிப் பிழைக்கும் அரசியலை அன்றி வேறெதையும் அறியாதவர்கள் இவ் வகையான பயனற்ற வீர வசனங்களைப் பேசி பிழைப்பு நடத்துவதை விட வேறெதைச் செய்ய முடியும்.

இனி என்ன....
இந்த வாழ்த்துச் செய்தியின் ஆங்கில மொழியாக்கம் கொழும்பில் உள்ள மேற்குலக தூதரலாயங்களுக்கு அனுப்பப் படும். தூதராலய அதிகாரிகளுடன் கூட்டங்களுக்கு செல்லும் போது இந்த வாழ்த்துச் செய்தியை கையோடு எடுத்துச் சென்று தமிழ் மக்கள் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறார்கள் என தமிழ் மக்களின் பெயரால் பிச்சையெடுக்க வேண்டியதுதான்.

இதற்கிடையில் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?

இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்பவர்கள் இந்த விடயத்தில் யார் பக்கம் நிற்கிறார்கள்?

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எண்பது வயது மூதாட்டி சொன்னார். "1948 இல் பார்த்த மாதிரியே இருக்கு".

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள ரஷ்யா, சீனா ஆகியன கொசோவோ தனி நாட்டுப் பிரகடனத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அதே வேளை ஐ.நாவின் 1244 வது தீர்மானத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன. ஸ்பெயின் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்ததோடு அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் இதை ஆதரிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளது. கிரேக்கமும் அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

அந்த மூதாட்டி சொன்னது போல இன்னுமொரு இலங்கைக்கான தொடக்க விழா அரங்கேறியுள்ளது. போராடிப் பெறாத சுதந்திரத்திற்கு மாற்றாக மன்றாடிப் பெற்ற சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு கொசோவோ ஒரு பாடமாக அமையும்.

http://tamilgarden.blogspot.com/2008/07/blog-post_28.html