பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கு தகுந்த அளவு இடமளிக்காதும் மார்புக் கச்சுக்களை (bra) அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.


உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால் மார்பக இணையங்கள் இழுபட்டு நாளடைவில் அவை சிதைவடைய வழி உண்டாகின்றது என்று கண்டறிந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அன்றாட வாழ்விலும் பெண்கள் தங்களின் மார்பக அளவுக்கு ஏற்ப சரியான மார்புக் கச்சுக்களை தெரிந்து அணிவதில் அக்கறை காட்டுவதும் குறைவு என்று சொல்லப்படுகிறது. பொதுவாக தங்கள் மார்பகங்களை குறிப்பிட்ட அளவில் காண்பிக்க என்றே பெண்கள் அதிகம் மார்புக் கச்சுக்களை தெரிவு செய்கின்றனர். இதனால் மார்பக நோவு மற்றும் அசெளகரிய உணர்வு என்பன ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்நாளில் காலத்துக்கு காலம் மார்பகத்தின் பருமனில் ஏற்படும் அளவு மாற்றத்துக்கு ஏற்ப சரியான மார்ப்புக் கச்சுகளை தேர்வு செய்து அணியும் பழக்கத்தைப் பல பெண்கள் கொண்டிருப்பதில்லை என்றும் ஒரே அளவான மார்புக் கச்சையே எப்போதும் பாவிக்க முற்படுகின்றனர் என்றும் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள், இது ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக பாலூட்டும் பெண்கள் மற்றும் மாதவிடாய் நிரந்தரமாக தடைப்பட்ட (menopause) நிலையில் வாழும் பெண்கள் இவற்றில் அதிகம் அக்கறை செய்தல் வேண்டும். பெண்களின் மார்பகம் மாதந்தோறும் நிகழும் மாதவிடாய் சக்கர நிகழ்வின் போது ஓமோன்களின் செல்வாக்கால் பருமன் மாற்றத்துக்கு இலக்காகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://kuruvikal.blogspot.com/2008/07/blog-post_1960.html