இந்திரனின் வாகனமான அய்ராவதம் என்ற வெள்ளை யானை, பூசை செய்ய, தாமரைப் பூவை, கொய்து எடுத்துவர, தடாகத்தில் இறங்கியதாம். அங்கிருந்த முதலை ஒன்று யானையின் காலைக் கவ்வி இருக்க, தப்பிக்க வழியறியாது ஆதிமூலமே என்று பிளிறி, பின் திருமால் வந்து சக்ராயுதத்தை வீசி முதலையைக் கொன்றதாகப் புராணப் புளுகைக் கேட்டிருக்கிறோம். சில வீடுகளில் படங்களாகப் பார்த்தும் இருப்போம்.

இன்னும் சிலரோ ரிஷிமூலம், நதிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். இன்னும் சிலரோ மூல நட்சத்திரம் என்று பிறந்த குழந்தைக்கு சாதகம் கணித்து, ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று ஆதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தை நிறுவவும் பாடுபடுவர். அய்வராதம் யானை ஆதிமூலமே என அழைத்தது அப்பட்டமான கட்டுக்கதை என்றாலும், மருத்துவத் துறையில், ஒரு நோய் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது என்றால், அது மூல நோய் (Haemorrhoids) தான். அதனால் உண்மையான ஆதிமூலம் மூல நோய்தான். அதைப்பற்றிக் காண்போம். மூல நோய், மேல் மலக்குடல் சிரையில் (Superior Rectal Vein) ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோயாகும்.நோய் கூற்றியல் (Pathology) மற்றும் நோய் காரணியம் (Aetiology) மூல நோய் உண்டாக மூன்று காரணங்கள் உள்ளன. நல் மலக்குடலில் உள்ள மேல் மலக்கடல் சிரை (Superior Rectal Vein), மலக்குடலில் உள்ள தளர்ச்சியான சவ்வுப் படலத்தில் படர்ந்துள்ள ஒரு இரத்தக் குழாயாகும். இதைச் சுற்றி கெட்டியான சதைப் பகுதியோ, வேறு உறுப்புகளோ இல்லாத நிலையில், இரத்தம் இக்குழாய் வழியே அதிக அளவு செல்லும் நிலை உண்டாகிறது.

இரண்டாவதாக உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தக் குழாயாதலால் அதனாலும் இரத்தக் குழாய் அதிகம் சென்று குழாய் நிரம்பும் நிலை ஏற்படும்.

மூன்றாவதாக சில நோயாளிகளுக்குப் பரம்பரை நோயாகக் கூட வரும். மலச்சிக்கல் ஏற்படும்பொழுது, முக்கும் சமயத்தில், ஏராளமான இரத்தம் மேல் மலக்கடல் சிரைக்கு வரும் நிலை ஏற்படும். அந்த இரத்தம் சட்டென்று வடியாமல், அங்கேயே சேர்ந்து, மூலமாக உருவாகும். தொடர்ச்சியான நீண்ட நாள்களாக இருந்துவரும் இருமல், புரோஸ்டேட் சுரப்பி சுழற்சியினால் வீங்குவதால் அது மலக்குடலை அழுத்தும் நிலை ஏற்படும்.

அதனால்கூட மூல நோய் ஏற்படலாம். குண்டு உடம்புக்காரர்களுக்கு எளிதாக இந்நோய் ஏற்படக்கூடும். கருவுற்ற தாய்மார்களுக்கு, நிறைமாதங்களில் குழந்தை வளர்ச்சியினால் மலக்குடல் அழுத்தப்படலாம். அந்த நேரத்தில் இரத்தக் குழாய்களும் அழுத்தப்பட்டு சிரையில் இருந்து இரத்தம் வெளியேறாத நிலை உண்டாகி, மூல நோய் உண்டாகலாம். மலக்குடல், அடிவயிறு, பெருங்குடல் போன்ற பகுதிகளில் உண்டாகும் கட்டிகள், புற்றுநோய் கட்டிகள், இரத்தக் குழாய்களில் மாற்றத்தை உண்டாக்கி மூல நோயை உண்டாக்கலாம்.

இப்படி பல காரணங்களால் உண்டாகும் இரத்தத் தேக்கம் (Accumacalation of Blood) சிரையின் மற்ற கிளைகளிலும் பரவி, மலக்குடலில் மூலநோயாக உருவாகிறது. மேல் மலக்குடல் சிரை, இடது, மேல் மலக்குடல் சிரை (Left) வலது முன்பக்கச் சிரை (Reght Anterior Vein), வலது இடப்பக்கச் சிரை (Right Posterior Vein) மூன்று பிரிவுகளாக பிரிகிறது. அவற்றில் நிரையும் இரத்தத்தால், மூன்று மூலமாக உருமாகிறது. இதை மருத்துவர்கள் 3 மணி, 7 மணி, 11 மணி மூலம் என குறிப்பிடுவர்.

கடிகாரத்தின் சின்ன முள் காட்டும் 3, 7, 11 மணிகளில் உள்ளவாறு, குடலைச் சோதிக்கும் பொழுது மூலம் மூன்று இடங்களில் தெரியும். அதனால்தான் இவ்வாறு குறிப்பிடுவர். ஆரம்ப நிலையில் இதனை முதல் நிலை மூலம் (Primary Haemorrhoids) என்று குறிப்பிடுவர். நாளாக நாளாக மூன்று மூலக்கட்டிகள், நான்காக உருவாகும். இதை இரண்டாம் நிலை மூலம் (Secondary Haemorrhoids) எனக் குறிப்பிடுவர். இப்படி உருவாகும்மூலம், நாளடைவில், மலக்குடலை விட்டு வெளியே நீண்டு ஆசன வாயில் தெரியும்.

நோயின் அறிகுறிகளை சரி செய்யாத நிலையில், மேன்மேலும் இரத்தத் தேக்கம் ஏற்படும்பொழுது, மூலம் பெரிதாகி, ஆசன வழி (Anus)யாக வெளியேறி, (Prolapse) பார்க்கும்பொழுதே சாதாரணமாகத் தெரியும். இதை மூன்று நிலையில் குறிப்பிடுவர். முதல் நிலையில், ஆசன வழியே, இரத்தப் போக்கு இருக்கும். ஆனால், மூலம் வெளியே தெரியாது. மலக்குடல் உள்சோதனை மூலமே அறிய முடியும். இரண்டாம் நிலையில், மலம் கழிக்கும்பொழுது மூலம் வெளியே வரும். ஆனால், தானாகவே மலம் கழித்த பின் உள்வாங்கி விடும். மூன்றாம் நிலையிலோ வெளியேறிய மூலம் உள் வாங்காது. இரத்தப் போக்கும் அடிக்கடி உண்டாகும்.

அறிகுறிகள்

இந்நோயின் முதல் அறிகுறி ஆசனவாய் வழியே இரத்தம் கசிவதாகும். ஆரம்ப நிலையில் லேசான இரத்த கசிவு மலம் கழிக்கும்பொழுது உண்டாகும். நாளடைவில் லேசான நோய் முற்றும்பொழுது, அடிக்கடி இரத்தம் ஒழுகத் தொடங்கும். சில நேரங்களில் அதிகளவு இரத்தம் வெளியேறுவதால், ஆடைகளில் நனைந்து வெளியே தெரியும். மலம் கழிக்கும்போது, கழிப்பறைகளில் சொட்டு, சொட்டாக இரத்தம் கொட்டும்.

இந்நிலையை அலட்சியப்படுத்தினால், கடுமையான இரத்தப் போக்கால் ஏற்படும் பின் விளைவாக இரத்த சோகை போன்றவை ஏற்படும். பின்மூலம் பெரிதாகி ஆசனவாய் வழியே வெளியே துருத்திக் (Prolapse) கொண்டு தெரியும். வலியற்ற நிலையில் பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இருக்கும் மூலம், ஆசனவாய் வழியே துரத்திக் கொண்டுள்ள நிலையில், மலம் கழிக்கும்பொழுது வலியை உண்டாக்கவும் கூடும். சரியாக மருத்துவம் செய்யாத நிலையில் நாளடைவில் வெளியே துரத்தி வரும் மூலம், மீண்டும் உள்ளே செல்லாமல், இரத்தக் கட்டியாக மாறும் நிலை ஏற்படும்.

மூலம் உண்டாகும் இரத்தக் குழாயில் அடைப்பு (Thrombosis) ஏற்பட்டு இரத்தக் குழாய் நெரிக்கப்படும் நிலை ஏற்படும். சில நேரங்களில் இந்த கட்டிகளில் நோய் தொற்று, புண்கள் ஏற்படவும் கூடவும். நீண்ட நாள் மூலக்கட்டிகள் புற்றுநோயாக மாறும் நிலையும் உண்டாகலாம்.

மருத்துவம்

மூல நோய் லேசாக தெரியத் தொடங்கும் நிலையில், உணவுக் கட்டுப்பாடு நல்ல பலனைத் தரும். உடல் பருமனைக் குறைத்தல், நல்ல உடற்பயிற்சி, மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், அதிக காரமற்ற, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல், காய்கறி, கீரை, பழ வகைகளை தினமும் உள்கொள்ளுதல் ஆகியவை மூல நோய் முதல் நிலை மூல நோயில், மூலம் சுருங்கச் செய்யும் மருந்துகளை ஊசிமூலம் நேரடியாக மூலத்தில் செலுத்தும் முறை நல்ல பலனைத் தரும்.

இரண்டாம் நிலை மூலம் ஆரம்ப நிலையில்கூட இந்த மருத்துவம் நல்ல பலனைத் தரும். ஆனால், சில நோயாளிகளுக்கு இது தற்காலிக குணமே அளிக்கும். அச்சமயங்களில் மீண்டும், மீண்டும் ஊசி போடுவதன் மூலம், பல வருடங்களுக்கு, நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். அறுவை மருத்துவம் செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகள், உடனடியாக அறுவை மருத்துவம் செய்துகொள்ள முடியாத பொருளாதாரச் சூழல் உடையவர்களுக்கு இவ்வகை மருத்துவம் ஏதுவானதாகும்.

அறுவை மருத்துவம்

மூல நோய்க்கான சரியான மருத்துவம், அறுவை மருத்துவமேயாகும். மூன்றாம் நிலை மூலம், முற்றிய இரண்டாம் நிலை ஆகியவற்றிற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. மூலம் அறுவை மருத்துவம்மூலம் அகற்றப்படுவதற்கு 24 மணிநேரம் முன்பே குடல் கழுவப்படல் (Enema) வேண்டும். அறுவை மருத்துவத்தால் மூலம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, மருந்து வைத்து கட்டி விடுவர். அறுவை மருத்துவத்திற்கு மறுநாள் இக்கட்டு அகற்றப்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் நோயாளிகள் பார்த்துக் கொள்வது அவசியம்.

ஆறாம் நாளிலிருந்து மருத்துவர்கள் விரல்களால் ஆசன வாயை விரித்து விடுவர். (Manual Anal Dialatation) இது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்யாவிட்டால் ஆசனவாய் சுருங்கி விடும் சூழ்நிலை ஏற்படும். இளஞ்சூடான, உப்பு கலந்த நீரில் நோயாளி தினமும் (சுமார் ஒரு வாரம்) சற்று நேரம் உட்கார்ந்து இருத்தல் நலம் பயக்கும். இதனால் அறுவை மருத்துவம் செய்துகொண்ட இடத்தில் வீக்கம், வலி போன்றவை ஏற்படுவதை தவிர்க்கலாம். நூறு சதவிகிதம் குணப்படுத்தக் கூடிய நோய்தான் மூல நோய்.

சென்னை மாநகரின் மின்சார இரயில் நிலையங்களில் சுவர் விளம்பரங்களில் மூலம் நோய்க்கு அறுவை சிகிச்சை இன்றி வைத்தியம் என்று எழுதியுள்ளதை பலரும் பார்த்திருக்கலாம். செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் கூட இவ்வகை விளம்பரங்கள் அடிக்கடி வரும். இதையெல்லாம் நம்பி ஏமாந்து, பொருள் நட்டம், உடல்நலக்கேடு போன்றவை ஏற்பட்டு சங்கடப் படுவதைவிட, நோயின் ஆரம்ப நிலையிலேயே நல்ல அறுவை மருத்துவரிடம் (General Surgeon) ஆலோசனை பெற்று அதை கடைபிடித்தால், இந்நோயை எளிதில் வெற்றி கொள்ளலாம்.
- நோய்கள் இருக்கும் மருத்துவம் (அவற்றை) அழிக்கும்.

மரு.இரா. கவுதமன்,

(நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்)

http://www.keetru.com/medical/general/haemorrhoids.php