இன்றைய உலகப் பொது நிலவரப்படி இலங்கையில் நடந்தேறும் அரசியல் இலங்கையின்-இலங்கை மக்களின் நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது எல்லோராலும் ஏற்கத்தக்வொரு உண்மைதாம். இந்தவொரு மையமான உண்மையிலிருந்து வெளிப்படும் செயற்பாடுகள் தற்போதைய அரசியலில் இலங்கைச் சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமானவொரு முன்னெடுப்பாகக் கட்சி அரசியலுக்குள் வேரூன்றியுள்ளது. ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தத்தமது மக்களை ஏமாற்றியபடி அந்நிய அரசுகளுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொண்டே அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவது. இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள் இலங்கையை ஆளும் கட்சிகளாகவும், எதிர்கட்சிகளாகவும் இருக்கின்றன. இந்த இலங்கைக்குள் நிலவும் இனமுரண்பாடானது சாரம்சத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார முரண்பாடுகளாகவே இருக்கின்றன. அவைகொண்டிருக்கும் இலக்குகளுக்காக அத்தகைய முரண்பாட்டின் பக்க விளைவாக மொழிசார்ந்தும் இன அடையாளம் சார்ந்தும் முரண்பாடுகள் தோற்றமுறும்போது, அவற்றைத் தாரளமாக அந்நிய அரசியல் எதிர்பார்ப்புகள் தூண்டிக்கொண்டிருக்கின்றன.

 

இங்கே, மிக இலாவகமாகக் காரியமாற்றும் இந்த இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிகத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தரணங்களை அவை மீள் உருவாக்கத்துள் மலினப்படுத்தும் செயலூக்கத்தோடு சம்பந்தப்படுத்தி, இலங்கை அரசியலில் எந்தவிதமான முடிவெடுக்கும் நிலையை இழந்து வந்துள்ளன. இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலை இந்தக் கட்சிகளிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரக்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே. இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே கொண்டிருக்கவில்லை. இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வருவதில் நமது போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருக்கிறது.

தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில், அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. இதற்குத் தோதாகச் சொல்லப்படும்"அரசியல் தீர்வு-சமஷ்டி-மாகணசபை-அரசியல் யாப்பு"என்பதெல்லாம் சேர்ந்த கலவையாகச் சர்வப்பொதுத் தீர்வுப் பொதியாக மயக்கமுறும் ஒரு அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி "சர்வகட்சிக் கூட்டுக்கள்" முன்வைக்கும் நிலைக்கு அரசியல் வியூகம் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது, சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும், உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன. இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது, அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே. இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்கு நிகரான இன்னொரு அரசஜந்திரத்தை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிசத் தன்மையிலானவொரு புலிகள் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்கித் தள்ளியது.

பெரும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள். இதனாலின்று முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது. அவர்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தரணங்கள் இன்று அவர்களை நோக்கி, நெருங்கி வருகிறது. புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது. எனினும, புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து, அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை. இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே. இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கிப் பாகிஸ்தான் பாணியிலானவொரு ஆட்சியலகை நிலைப்படுத்துவதே. இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம், தொழிற்சங்கவுரிமை, வேலைநிறுத்தம், சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு. இதற்கு மிகத் தோதாகப் புலிகளின் இன்றைய இழிநிலை-குறுகிவரும் படைப்பலம் மக்களின் உரிமைகளை வெல்லுமொரு புரட்சிகரச் சக்தியாக அவர்களைத் தோன்றாதிருக்கும்படி புலிகளின் கட்டமைப்புக்குள் தனிநபர் வாதத்தையும், குடும்ப அரசியல் எண்ணவோட்டத்தையும் உருவாக்கியபடி அந்த அமைப்பின் இருப்பை அசைக்கும் புறநிலையை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தமிழ் மக்களின் எந்தவுரிமையையும் துடைத்தெறியும் என்பது சர்வப்பொதுவுண்மையாகும்.

இந்தவொரு அரசியலை மையப்படுத்தாமல் இலங்கையை ஆளும் கட்சிகளையும்-அரச வடிவத்தையும், போராடும் இயக்கங்களையும் வெறும் கபடத்தனத்தோடு மனோரஞ்சன்கள்"ஐ.ஆர்.சி"மட்டத்துக்கு ஒதுக்கிக் குறுக்கி, அந்நிய ஏவல்படைகளை அவர்களின் இருப்பை வெறும் கிரிமனல் மட்டத்துக்குள் திணிப்பது அவரது மற்றுமொரு துரோகமாகப் பார்ப்பதற்கு நமக்கு வெகு நேரமெடுக்காது. இலங்கைக்குள் பிரச்சனைகளை முடக்கிவிடுவது திட்டமிட்ட அந்நிய நலனின் தூண்டுதல்கள்தாமென்பதை இன்றைய இளையர்களே புரிந்தொதுக்க முடியும். இவரது கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும், ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும். இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும், தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து எந்த ஏஜமானர்களுக்காக மனோரஞ்சன் வாலாட்டுகிறார்?

 

"இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்" தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே. இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம். திருவாளர் ஆனந்தசங்கரிப் பூசாரியால் பாடப்படும் மேற்காணும் தேவாரத்துக்குத் தமிழ் மக்கள் பலியாகுவதற்கு ஏற்றவாறு புலிகளால் அவர்கள் முடமாக்கப்பட்டு உரிய முறையில் ஊனமாகப்பட்டபின்பே இந்தப் பூசாரி ஜனநாயக்காவலராக நியமிக்கப்பட்டு, யுனேஸ்கோ விருது வழங்கப்பட்டது. இவையெல்லாம் காட்டும் உண்மை என்னவென்றால் மக்களின் உரிமையை மக்களே போராடிப் பெறவேண்டும் என்பதையே. இந்த மக்கள் சுயமாக எழிச்சியடையும் வலுவும் அந்த வலுவினு}டாகப் புரட்சிகரமான படையணியை சுய பலத்துடன் அமைப்பதற்கும், கட்சி கட்டுவதற்குமானவொரு சூழலைப் பாதுகாப்பதே இன்றைய அவசியமானதாகும். இங்கேதாம் இந்தப் பூசாரிகளும் அவர்களது எஜமானர்களும், புலிகளும் குறுக்கே நிற்கிறார்கள்.

 

இலங்கையை ஆளும் கட்சிகளும், போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு, இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை. இதைவிட்ட குறுகிய "தீர்வுகள்"எப்பவுமே இலங்கை மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச் சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும். இதைத்தாம் இன்றுவரையான எமது போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது. இங்கே, புலிகளோ அல்லச் சிங்கங்களோ நமக்கு எந்த விடிவையும் தரும் தகமையுடையவர்கள் இல்லை! இலங்கையை ஆளும் கட்சிகள் சுயாதிபத்தியமுடைய தேசியக் கட்சிகளோ அல்லது முற்றிலும் பொதுவான மக்கள் கட்சிகளோ அல்ல. அவை அங்ஙனம் இருக்கும் தரணத்தில் மட்டுமே இந்த மனோரஞ்சனது கூற்று உண்மையாக இருக்கமுடியும், அங்ஙனம் அவை இருக்கும் தரணத்தில் இலங்கையில் யுத்த வாழ்வும், படுகொலையும் நடப்பதற்கான ஆட்சி முறை இருப்பதற்கில்லை. இதைவிட்டு இன்றைய அரசியற் சூழலை"ஐ. ஆர். சி."அரசியலென்று இலங்கைக்குள் பழியைப்போட்டு எந்த அந்நிய நலனையும் இலங்கைக்குள் மீள நிலைப்படுத்தும் போக்கு நமக்கு நாமே சாவு மணியடிப்பதுதாம். இதையே தேனீ இணையத் தளமும் செய்து தன் எஜமான விசுவாசத்தை உறுதிப்படுத்தி வாலாட்டி வருகிறது. தூ...கேடுகெட்ட பிழைப்பு.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
02.09.2007