"இன்றைய ஈழமக்களின் சாபக்கேட்டிலும்,தலைமையின் அதிகாரத்துக்கான போராட்டமாக உருப்பெற்றிருக்கும் இந்த"ஈழப்போராட்டம்"தொடர்கிறதோ இல்லையோ,தலைமையின்(அந்நியச் சக்திகளின் பொம்மை) கட்டளையை நம்பித் தங்கள் உயிர்களை துச்சமென மதித்தித்து,மண்ணுக்காய் மரித்த-மரிக்கும் புலி இயக்க அடிமட்டப் போராளிகளுக்கு மட்டுமல்ல,ஈழத்தில் தோன்றியழிந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்கும் இவர்களால் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளிய ஈழ மக்களுக்கும்-இலங்கைச் சிங்கள இராணுவத்தால் கொல்லப் பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்துப் பாலகர்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் நாம் வீரவணக்கம் சொல்லிக்கொள்ளக் கடப்பாடுடையவர்கள்."

 

இந் நிலையில் நாம் தொடர்ந்தெழுதும் கருத்துக்களும் அதன் எதிர்பார்ப்புகளும் வெறுமனவே புலியெதிர்ப்பு/ (தர) இலங்கை அரச ஆதரவெனப் புரியப்படுவது என்ற தளத்தைவிட்டு,மக்களின் நலன்களைத் தூக்கிப் பிடித்தலெனும் கோணத்தில் சிந்திப்பதே இன்றைய சூழலிற் பொருத்தப்பாடாக இருக்கும்.

புலிகளின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமல்ல இன்றைய காலத்து அரசியற் போக்கில் நாம் அனைத்து ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்களினதும் அரசியலையும் அத்தகைய அமைப்புக்களின் தலைவர்களையும் விமர்சனத்துக்குள்ளும், ஒரு புற நிலையான மதிப்பீட்டுக்கும் உட்படுத்தியும்-வந்துகொள்ளத்தக்கதாகவும் அவசியமான குறிப்புகள் எழுதியாக வேண்டும்.அன்றே, நாம் வரையறுத்தவற்றை மீளக் குறித்துக்கொள்வதற்கானவொரு சூழல் இப்போதும் உருவாகியுள்ளது.அத்தகைய சூழலையுருவாக்கும் இந்தியாமீதான விசுவாசம் எமது மக்களுக்குத் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதற்குச் சமம் என்ற எமது நோக்கால் இதை எழுதுவது மிகவும் பயனுடையதாகவிருக்குமென்று கருதுகிறோம்.

இன்றைக்குப் புலிகளெனும் இயகத்தின் இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இந்தியாவின் மிக நெருங்கிய இலங்கைமீதான அபிலாசைகளில் பிரதிபலிக்கத் தக்கதாகும்.இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய ஈழத்து நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்தகட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் அமிழ்ந்துள்ளது.இதற்கான முன் தயாரிப்பாக அது இலங்கையில் தொடந்தும் இனவாதத்தையும்,ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்துவதும்அதன் வாயிலாக உறுதியான இனவாத்தைத் தூண்டி மக்களைப் படு குழியில் தள்ளிச் செல்லும் அரசியலைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது.இது இனவொருமைப்பாட்டையும், வர்க்க எழிச்சியையும் ஏற்படவிடாமல் தடுத்தாளத்தக்க ஒரு தலைமையாகப் புலிகளை வரையறை செய்வதில் அதன் நோக்கம் புலி இருப்பாக விரிகிறது."புலி இல்லையேல் வர்க்க எழிச்சி-புரட்சி உண்டு"என்பதாகப் புரிந்தபோது மக்களின் தீராத இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான உண்மையான நோக்கத்தை விட்டுப் புலிகளைத் தொடர்ந்து பாசிசச் சக்தியாக வளர்ப்பதில் இந்தியப் புலனாய்வுத்துறைக்கு இந்திய ஆளும் வர்க்கம் வற்புறுத்தியே வருகிறது.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகள் போன்ற அமைப்பை எங்ஙனம் மதிப்பிடுவதென்று எவரும் சிந்திக்க முனையுந் தறுவாயில்:

1)புலிகள் தரகு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பவர்கள்

2)குட்டி முதலாளித்துவக் குறுந்தேசிய வாதிகள்

3)தேசிய முதலாளித்துவத்தின் எதிரிகள்

4)குழு நலனுக்காகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தைப் பேசுபவர்கள்

5)தமது இருப்புக்காகவும்,அதிகாரத்துக்காவும் எந்த அந்நியச் சக்தியின் தயவையும் நாடுபவர்கள்

6)அந்நிய நலனுக்காகத் தமிழ் பேசும் மக்களின் நலன்களைத் தமது இயக்க நலனின் திசைவழியில் பேசித் தொடர்ந்து தமக்கு எதிரான சக்திகளைத் துரோகியாக்கிச் சுட்டுத் தள்பவர்கள்

7)மாற்றுச் சக்திகளை அந்நியச் சக்திகளின் கால்களில் விழுவதற்கான முறைமையில் பாசிசச் சர்வதிகாரத்தையும்,ஏகப் பிரதிநித்துவத்தையும் தூக்கி நிறுத்தி மக்களின் அடிப்படை ஜனநாயகவுரிமையைப் பறித்துக்கொ(ல்)ள்பவர்கள்

8)இலங்கைத் தேசத்தின் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிக்கு-இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு எதிரானவர்கள்.

இத்தகைய மதிப்பீட்டுக்கு நாம் வந்து, தற்போது இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த மதிப்பீடு அவசியமானதுங்கூட.என்றபோதும்,சமூக நலன்மீது அக்கறையுடைய சக்திகள் எவருமே புலிகளின் மிகத்தெளிவான பக்கத்தை அடையாளம் காண்பதில் எவ்விதத் தடுமாற்றத்தையும் கொண்டிருக்க முடியாதென்றே கருதுகிறோம்.இந்தத் தெளிவான பக்கம் எதுவென்ற வினாவுக்கு அவர்களின் பாசிசத் தன்மையிலான சக இயக்கப் படுகொலைகளே சாட்சி பகிர்பவை.இத்தகைய படுகொலைகள் திட்டமிட்ட இந்திய உளவுப்படையின் ஆலோசனைப்படியே புலிகள் செய்து முடித்தார்கள் என்பதை அநுராதபுரப் படுகொலைகளில் உரைத்துப்பார்க்கவும்.தங்களைத் தவிர மக்களின் போராட்டப்பாதையில் பிரவேசிக்கின்ற எந்த மாற்றுச் சக்திகளையும் புலிகள் மூர்க்கமாக அழித்தொழித்தவரலாறுதாம் "இந்தியப் பிராந்திய நலனுக்கு நாம் எதிரிகள் அல்ல" என்ற புலிகளின் தாரக மந்திரமாகும்.தென்கிழக்காசியாவின் புரட்சிகரத் தீபம் ஈழத் தேசிய இனத்தின் விடுதலையோடு மிக வேகமாகச் சுடர் பரப்பி எழும் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாய் உணரத்தக்க வரலாறு இலங்கைக்குச் சொந்தமாகவே இருந்தது.அதற்கு அன்றைய இலங்கைப் படிப்பனைகள் இவர்களுக்குத் துணைபுரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.


இங்கே எவர் வேண்டுமானாலும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம்.தேசியச் சக்தியாகவோ,ஐயக்கிய முன்னணி அமைக்கத்தகு அமைப்பாகவோ அன்றிப் புரட்சிகரச் சக்தியாகவோ மதிப்பிடலாம்.ஆனால்,விடுதலைப் புலிகள் அமைப்பின் வரையறை ஒன்றேயொன்றென்பதை அவர்கள் மிக இலகுவாக உணர்த்தி வருபவர்கள்.தங்களைத் தவிரப் போராட்டப்பாதையில் எவர் பிரவேசிக்கிறாரோ அவரைப் பூண்டோடு "துரோகி" சொல்லி ஒழித்துக்கட்டுவதே அது.அந்த மிகத் தெளிவான வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இத்தகைய போக்கைத் திட்டமிட்டு நடாத்தும் புலிகளின் தலைமை இன்றுவரை தனது இயகத் தலைமைக்குள்ளேயே பற்பல முரண்பாடுகளைத் தோற்றுவித்து பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொன்று தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயப் போரை இந்தியாவுக்கு ஏற்ற திசையில் வளர்த்துச் சென்று வருகிறது.இதுவே "இந்தியப் பிராந்திய நலுனுக்கு நாம் எதிரிகள் அல்ல" என்று இவர்களைத் தொடர்ந்து பாடவைப்பது.புலிகளால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மெல்ல அழிக்கப்பட்டுவருவதற்கு ஏற்ற வகைகளில் அந்த அமைப்பின் தலைமை மிகத் தாழ்ந்த புத்தியுடையவொரு மனிதரின் ஒளிவட்டத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டு, நமது இனத்தின் புரட்சியாளர்கள்-அறிவுஜீவிகள் ஓரங்கட்டப்பட்டும்,கொல்லப்பட்டும் விடுதலையின் உயிர் ஊசலாட வைக்கப்பட்டு வருகிறது.இதுவே, இலங்கை அரசினதும் புலியினதும் வெற்றி-இருப்புக்கான மூல ஊற்றாகும்.இத்தகைய புலிகளால் நமது தேசத்தின் விடுதலையை நாம் ஒருபோதும் கனவுகாண முடியாது.எமது எல்லைகளை இவர்கள் அந்நிய நலன்களுள் கரைக்கும்போது அங்கே தேசத்தினதோ அன்றித் தேசிய அலகுகளின் இறைமையோ இருப்பதற்கில்லை.

நாம் இதுவரை ஏமாற்றப்பட்டு வரும் தரணத்தில் புலிகளை ஆயுதக் குழுவாகவும்,மாற்றுச் சக்திகளை ஜனநாயகச் சக்திகளாகவும் இந்தியாவும்-மேற்குலகமும் மிக நெருக்கமாக வளர்த்தெடுத்துள்ளது.இங்கே நடாத்தப்படும் அரசியற் சாணாக்கியத்துக்கு இந்த இருவகையான இயக்கக் கட்சி வடிவமும் தேவைப்படுகிறதே- அதுதாம் இந்தியா.இந்தவொரு நுணுக்கமான இந்தியச் சதி எம்மைப் போண்டியாக்கி வரும்பொழுது,இங்கே சில சிறுபிள்ளைகள்"புலிகள் இந்தியப் பிராந்திய நலுனுக்கு என்றுமே எதிரிகள் அல்ல"என்று பெருமை-உரிமை கோருவதில் தமிழ் பேசும் மக்களின் சாவுகளே நமக்கு விரிகின்றன.அது இருக்கட்டும்.

அதென்ன இந்தியப் பிராந்திய நலன்?

இந்தியத் தரகு முதலாளியத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதும்,அவர்களின் சந்தையைத் தீர்மானிக்கும் அவர்களின் அரசியல் ஆதிக்கத்துக்கும்,தென்கிழக்காசியாவில் தொடர்ந்து மூல வளங்களைத் தமது உற்பத்திக்குட்படுத்துவதற்கும், அந்த உற்பத்திப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படும் பலகோடி ஏழைத் தொழிலாளர்களைத் திட்டமிட்டு நசித்துப் பிழிவதற்குமானதுதானே இந்தப் பிராந்தியத்தின் நலன்.அங்கே, இந்தியாவின் பாதுகாப்பு என்ற கரடி இந்த நுணுக்கத்துள் அடங்கும் முகமூடிதாம்.இதைத்தாம் பாசிசப் புலிகளின் இருப்போடும் அதன் படுகொலைகளுடாகவும் மேற்குலகமும் இந்தியாவும் செய்து முடிக்கிறது.இதைத்தாம் புலிகள் அடிக்கடி சுட்டிக்காட்டி "நாம் இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிரானவர்களில்லை"என்ற பேரத்தின்படி தமக்குச் சேரவேண்டிய அரசியல் தளத்தைத் தரும்படி இந்தியாவின் காலில் வீழ்வதும்,திணறுவதாகவும்-நாய்க்குரிய விசுவாசத்தோடு போராடி வருகிறார்கள்.இதையும் சிலர் பெருமையாக எடுத்துக்கொள்வது அவர்களது இயக்க மாயைதாம் காரணமாகும்.

இந்த நிலைமைகளில்தாம் நாம் புலிகளின் அழித்தொழிப்புகளை எங்ஙனம் முறியடிப்பதென்று சிந்திக்கிறோம்.


புலிகளின் பின்னே ஒழிந்திருக்கும் இந்திய மற்றும் மேற்குலகச் சதிகள் நமது புரட்சியாளர்களையும்,மக்களையும் அழித்து வருகின்றன.புத்தியுடையவர்களை மெல்ல அழித்த வரலாறு வெறும் தற்செயல் நிகழ்வல்ல.

இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்.இந்த வரையறையிலிருந்து-மதிப்பீட்டிலிருந்து நாம் அவர்களின் ஜனநாயக விரோதப்போக்கை-பாசிசச் சேட்டைகளை அளவிடுவதென்பதே இவ்வளவு காலமும் நிகழ்ந்து வருகிறது.இது தவறானபாதை.ஏனெனில்,இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப் போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு அவர்களை குறித்தும்,பாசிசச் செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது.இது நல்லதொரு படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச் சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும்,சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள்.இங்கே, புலிகள் செய்வது தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவூன்றுவதற்கே. இந்தக் கோலத்தில் புலிகள் பின்வாங்குவதென்பது இதுவும் அவர்களது எஜமானர்கள் இட்டவொரு எல்லையைச் சென்றடைந்து, தமிழ் பேசும் மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைத் திசை திருப்புவதற்கான அரசியல் சாணாக்கியமே.

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது(மாற்றுப் போராட்டச் சக்திகளை அழித்தொழித்தது)எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தரணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சுந்தரத்தின் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது.எமது கண்கள் முன்னாலேயே சரிந்த சுந்தரத்தின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது.ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் ,இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த இந்தியா இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நின்றது.இங்கே, புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.

இது இப்படியிருந்தபோதும், நாம் தனிநபர் பயங்கரவாதம் குறித்தே எமது கவனத்தை அன்று குவித்திருந்தபோது இந்தியா நமது மீட்பனாகவே உணரப்பட்டது.அதன் தொடர்ச்சிதாம் "இந்தியாவின் பிராந்திய நலனுக்கு நாம் எதிரிகள் அல்ல"என்ற புலிகளின் வார்த்தையை நம்பி ஏமாறும் தமிழர்கள் இந்தியாவே புலிகள் சொல்வதுமாதிரி நேச நாடு எனக் கனவு காண்கிறார்கள்.கோடிக் கணக்கான மனிதர்களைச் சாதி சொல்லிப் பிரித்து வீதியோரத்தில் படுத்தொழும்பவிட்ட இந்திய ஆளும் வர்க்கமா ஈழத்து மக்களுக்கு விடிவுதரத்தக்க முறைமைகளில் நடந்து கொள்ளும்?நேற்று முன் தினம் 09.08.2007 அன்று சற்.டி.எப்.(Z.D.F.) தொலைக் காட்சிச் சேவையால் ஒளி பரப்பப்பட்ட மும்பாய்க் காட்சிகளைக் கண்ட ஜேர்மனியர்கள் நம் முகத்தில் காறித் துப்பாததுதாம் பாக்கி."இந்தியா 25 வீதப் பொருளாதார வளர்ச்சியென்று பீற்றும் உங்கள் மக்கள் தெருவில் படுத்துத் துப்பிச் சாப்பிட்டு வாழும் நிலை வாந்தியை வரவழைக்கிறது.அங்கிருந்து தின்ன வழியின்றி வந்த நீங்கள் இங்கே பென்ஸ் கார் கேட்கிறீங்க." என்று எம்மைக் கேவலமாகச் சொல்லும் ஜேர்மனியர்கள் இந்த இந்தியாவின் வன் கொடுமையை எங்களுக்கு முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.இந்த இந்தியாவின் பிற்போக்கு ஒடுக்கு முறைக்குக் குடை பிடிக்கும் புலிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசிய மக்களின் விடுதலைக்கு உழைக்க முடியாது.அங்ஙனம் அவர்கள் சொல்லும் சந்தர்பங்கள் யாவும் செயற்கையாகச் சொல்லிக் கொள்ளும் தந்திரமாகும்.தமது இயக்கத்தை தொடர்ந்து நிலைப்படுத்தவும்,அதன் வாயிலாகத் தலைமையின் அர்ப்பத் தனங்களைக் காப்பதற்கும் எடுக்கும் முயற்சியே இந்தச் செயற்பாடுகள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.2007