எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

 

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

 

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.


2. தமிழ் மக்களின் கடந்தகால அவலங்களுக்கு காரணமானவர்களை தெளிவுபடுத்திய ஒரு கூட்ட அழைப்பைக் கோரினோம்.


3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்.

 

இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இப்படி அரச ஆதரவு கும்பல் இன்றி, மக்களுக்காக தனித்துவமாக போராட மறுக்கின்ற புலம்பெயர் நடத்தைகளும் நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில், அந்த மக்களை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கின்ற தொடர்ச்சியான வழமையான சடங்குத்தனமான முயற்சிகள் தான் இவை.

 

இந்த அடிப்படையில் இதை தெளிவுபடுத்தி கூட்ட ஏற்பாட்டளர்களுக்கு நாம் முன்வைத்தவற்றை, சில திருத்தத்துடன் முன் வைக்கின்றோம்.

 

25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்

 

25 ஆண்டுகளுக்கு முன் சிங்களப் பேரினவாதம், தமிழ் மக்களுக்கு எதிரான தனது சொந்த இனவெறி மூலம் தேசத்தையே சுடுகாடாக்கியது. இதற்கு எதிராக எழுந்த எழுச்சியோ, குறுகிய தமிழ் இனவாதமாகி, தமிழ் இனத்தையே சுடுகாடாக்கியுள்ளது. தமிழ் இனம் இப்படியாக சந்தித்த வரலாற்றுத் துயரத்தை நாம் எப்படி, யாருடன், எதற்காக ஏன், பகிர்ந்துகொள்ள முனைகின்றோம், எமது அரசியல் நோக்கம் தான் என்ன?

 

25 வருடத்தில் மனித அவலங்கள் ஆறாகி ஓடுகின்றது. மனிதம் நடுநடுங்க, பயங்கரமே வாழ்வாக, அவை பல முகத்துடன் புகுத்தப்படுகின்றது. தமிழ்-சிங்கள பாசிசக் குண்டர் குழுக்களுக்கு இடையில் சிக்கிய தமிழ் இனம், இன்று அடிமையாக்கப்பட்டுள்ளது. இதை இனம் காணாத புலம்பல்கள் அர்த்தமற்றவை. மாறாக அவற்றுக்கு துணை போகின்றவை தான்.

 

இன்று தமிழ் மக்கள் தமக்கு எதிரான, இரண்டு பாசிசங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

 

1. அரச பாசிசம். இந்த அரச பாசிசத்துடன் புலியல்லாத தமிழ் குழுக்களும் ஒன்று சேர்ந்து காணப்படுகின்றது.


2. புலிப் பாசிசம்

 

இவ்விரண்டும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இன்று உள்ளது. இவர்களால் தமிழ் மக்கள் நிம்மதியிழந்து, நாள் தோறும் கண்ணீரும், கதறலும், ஓலங்களுமின்றி அவர்கள் வாழ்வு விடிந்ததுமில்லை, விடிவதுமில்லை. பயம், பீதி, அச்சம் கடந்த எந்த ஒரு மனித வாழ்வையும், தமிழ்மக்கள் அன்றும் இன்றும் எதார்த்தத்தில் வாழ்ந்துவிடவில்லை. இப்படி உளவியல் ரீதியாக அவர்களைச் சாகடித்துவிட்டு, தேசியம் ஜனநாயகம் பற்றி வாய் நிரம்ப குதப்பிய பின் மக்களின் முகத்தில் காறித் துப்புகின்றனர். அப்படிப்பட்டவர்களைக் கொண்டும், அப்படியான ஒரு கூட்டத்தையுமா நடத்தப் போகின்றீர்கள்!

 

கடந்த 25 வருடத்தில் தமிழ் இனம் சந்தித்த அவலங்கள் எவை? தமிழ் மக்கள் பெற்றது தான் என்ன? தமிழ்மக்கள் பெறப் போவது தான் என்ன? இதை யார் தான் நேர்மையாக பேசுகின்றனர்? பேச முடிந்த புலம்பெயர் பிரிவுகள், எதைத் தான் பேசினார்கள்? சொல்லுங்கள்.

 

மனிதம் பற்றிப் பேசாத, ஒரு இருண்ட சகாப்தத்தில் தான் மனிதம் புதைக்கப்படுகின்றது. இரத்தமும் கண்ணீரும் வற்றாத நதியாக ஓட, தேசியமும் ஜனநாயகமும் இதில் மூழ்கி எழுகின்றது.

 

இரத்தமும் கண்ணீரும் கொண்ட இந்த மனித வரலாறு, ஏன் பேசும் பொருளாகவில்லை!?

 

இதைப் பற்றி அக்கறையற்ற கூட்டங்கள், நினைவுகள் எல்லாம் தமது இருப்பையும் பிரமையையும் அரங்கேற்றும் நாடகங்கள் தான். புலி – அரச பாசிசமே எம் சமூகத்தை இன்று அழிக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் கூட, அதை எதிர்க்காது அவர்களுடன் கூடிக் கும்மாளமடிக்கின்றனர். பாசிச பேரினவாத அரசுடன் சேர்ந்து இயங்கும் நபர்கள் இன்றி, கூட்டம் போடக் கூட தயாரற்றவர்கள், எப்படித் தான் மனிதம் பற்றி பேசமுடியும். சொல்லுங்கள்.

 

கடந்தகால நினைவுகளை எதிர்நிலை அம்சத்தில் இருந்து அணுக வேண்டும். மக்களின் அவலங்களில் இருந்து அதைப் பார்க்க வேண்டும். இதற்கு காரணமான அனைவரையும் எதிர்த்து, குரல் கொடுக்க வேண்டும். அதையா நாம் செய்கின்றோம். சொல்லுங்கள்.

 

அன்று யூலைப் படுகொலையை தமிழ் இனத்துக்கு எதிராக அரங்கேற்றிய போது, தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமும் கூடவே எழுச்சி பெற்றது. இந்த நினைவுகள் கூட, இன்று அதனடிப்படையில் தான் நினைவு கூரப்படுகின்றது. அது ஏற்படுத்திய மனித அவலங்களில் இருந்தல்ல. 25 வருடத்தில் நடந்தது தான் என்ன?

 

நினைவு கூரல்கள் என்பது வெறும் சடங்காகி விடுகின்றது. அவன் அவன் நடத்துகின்ற மனித விரோத செயலுக்கு ஏற்பவே, அவன் அவனால் நினைவு கூரப்படுகின்து. இதில் இரண்டு பிரதான போக்கு உண்டு.

 

1. அனைத்து இயக்கத்தையும், சமூகத்தின் உயிர்த் துடிப்பான அனைத்து சமூக நடவடிக்கைகளையும் அழித்த புலிகள், யூலைப் படுகொலைகளை இதற்கு ஏற்ப நினைவு கூருகின்றனர்.

 

2. மக்களுக்கு எதிரான இந்திய மற்றும் பேரினவாத அரசுடன் சேர்ந்து நிற்கின்ற அனைத்து தமிழ் குழுக்களும் கூட, தமது இந்த வரையறைக்குள் யூலை படுகொலைகளை நினைவு கூருகின்றனர்.

 

இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள். இதற்குள் தான் அவர்கள் கொசிக்கவும், வம்பளக்கவும் முடிகின்றது என்ற உண்மை மட்டும், எப்படித்தான் பொய்யாக முடியும். இதற்கு மாற்றாக என்ன தான், உங்களிடம் உள்ளது.

 

ஒருபுறம் புலிகள், மறுபுறம் அரசுடன் நிற்பவர்கள் என்று இரண்டு தளத்தில், யூலைப் படுகொலை நினைவு கூரப்படுகின்றது. இதற்குள், இதற்கு ஏற்ப ஒரு வரலாற்றைத் தர முனைகின்றனர். இதுவா யூலைப்படுகொலையும், அதற்கு பிந்தைய மனித வரலாறும்!?

 

நாம் இல்லை என்கின்றோம். மனித அவலங்கள் விதம் விதமாக எம்முன் அரங்கேற்றப்பட்டது. நாம் எங்கே அவற்றை எல்லாம் நினைவு கூர்ந்து, அவற்றை மனித வரலாறாக்கினோம்?

 

நாம் இயக்கத்தை சுற்றிச் சுற்றி வந்தோம், வருகின்றோம். இன்று இயக்கத்துக்கு ஆதரவாக அல்லது தொடர்புகளையும் நட்புகளையும் பேணிக் கொண்டு, எம்மை நாமே சமரசவாதியாக்கிக் கொண்டு உண்மைகளை மூடிமறைக்கும் பச்சை சந்தர்ப்பவாதியாகினோம். எமக்கு அன்று தெரிந்த கதைகளைப் பற்றி வம்பளந்து, அதையே அறிவாகவும் புத்திஜிவித்தனமாக பேசிக்கொள்கின்றோமே, இதுவா தமிழ் மக்களின் துயரங்கள். நாமும் கூட மனித அவலங்களைக் கண்டு கொள்ளாது இருக்க வாழப் பழகிவிடுவதையே, எம் நினைவு என்று நாம் போற்ற முனைகின்றோம்.

 

யூலைப் படுகொலையை நாம் இன்று, எப்படி புரிந்து கொள்வது? எப்படி இதை மதிப்பிடுவது? இதற்கு முன் எம்மை, நாம் எப்படி மதிப்பிடுவது? நாங்கள் என்ன செய்தோம்? எதைச் செய்கின்றோம்? பொதுவாக பழைய கதை சொல்வதும், கொசிப்பதையும் கடந்து, மக்களுக்காக நாம் சிந்திக்கின்றோமா? எப்படி? எந்த வகையில்? எந்த முகத்துடன்? எந்த அரசியலுடன்?

 

சமூகப்பற்றுடன், சமூகநோக்குடன், சமூகத்தை நேசிக்கின்ற போதுதான், மக்களின் அவலத்தை அடிப்படையாக கொண்ட வரலாற்றை நாம் இனம் காணமுடியும். சமூகப்பற்றுடன், சமூகநோக்குடன், சமூகத்தை நேசிக்கின்ற போராட்டம் சாத்தியமற்ற ஒன்று என்று, புலியும் புலியல்லாத தரப்பும் கூறுகின்றது. இவர்கள் எப்படித் தான் மனிதத்தைப் பேசமுடியும்? எமது நிலையோ மக்களைச் சார்ந்தது.

 

யூலைப் படுகொலையும் அதற்கு பிந்தைய வரலாற்றிலும், மக்கள் எதை எப்படி தமது வாழ்வாக அனுபவித்தனரோ, எதை எப்படி அவர்கள் தமது வாழ்வாக உணர்கின்றனரோ, அதன் ஊடாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தல் அவசியமானது.

 

இந்த வகையில் தமிழ் மக்களின் துயரம் மலையளவானது. காணமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள், சிறைகளில் சிதைக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சொத்தை இழந்தவர்கள், குடும்பத்தில் இருந்து பிரிந்தவர்கள், பாலியல் தேவை மறுக்கப்பட்டவர்கள், தம் குழந்தைகளை பறிகொடுத்தவர்கள், விதவையானவர்கள், கற்பழிக்கபட்டவர்களும் இதனால் சிதைக்கப்பட்டவர்களும், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள், உண்ணவும் உடுக்கவும் முடியாது கையேந்தியவர்கள், தொழிலை இழந்தவர்கள், வாழ்வின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் இழந்தவர்கள், உளவியலால் பாதிக்கப்பட்டவர்கள், என்ற இப்படி பல முகமிழந்த மனித துயரங்கள். இதற்குள் எத்தனை ஆயிரம் ஆயிரம் கதைகளும், வரலாறும் உண்டு. இதையா நாம் பிரதிபலிக்கின்றோம்!? சொல்லுங்கள் எப்படி என்று.

 

மறுபக்கத்தில் எம் மக்கள் சந்தித்த பொதுத் துயரமோ மலையளவானது. யாழ் மேலாதிக்கத்தால் எம் சமூகம் கீறப்படவில்லையா? சாதி ஒடுக்குமுiறால் எம் தேசம் கற்பழிக்கப்படவில்லையா? ஆணாதிக்க திமிரால் எம் தேசம் அச்சுறுத்தப்படவில்லையா? பிதேசவாத உணர்வால் எம்தேசம் அடிமைப்படுத்தப்படவில்லையா? முஸ்லீம் என்பதால் தேசியத்தின் பெயரில் அவர்கள் தூற்றப்படவும் கொல்லப்படவும் இல்லையா? சிங்கள தமிழ் தேசியத்தின் பெயரில், தேசியப் பொருளாதாரம் நலமடிக்கப்படவில்லையா? எத்தனை எத்தனை விதங்களில் மனிதவிரோதத்தை அரங்கேற்றிய எம் சமூகத்தின் பிரதிநிதிகளான நாங்கள், இதையா பேசுகின்றோம்? எப்படி? இதற்கு நாங்களும் உடந்தையாக இருப்பது புரியவில்iயா?

 

இவை எல்லாம் எந்த வரலாற்றின் ஊடாக அரங்கேறின. அதை சரியாக நாம் கற்றுக்கொண்டு எதிர்வினையாற்றுகின்றோமா சொல்லுங்கள்.

 

1. யூலைப் படுகொலை ஏற்படுத்திய மனித அவலங்கள் என்ன? அவை எப்படி, யாரால், ஏன் அரங்கேற்றப்பட்டது?

 

2. யூலைப் படுகொலை ஊடாக பேரினவாத அரசு, தமிழ் மக்களுக்கு சொன்ன செய்தி என்ன?

 

3. தமிழ் மக்கள் இதை எப்படி எதிர்கொண்டனர்?

 

4. யூலைப் படுகொலையைத் தொடர்ந்து எழுச்சி பெற்ற விடுதலைப் போராட்டம், எப்படி குறுந்தேசிய இனவாதமானது?

 

5. பேரினவாத அரசுக்கு எதிரான இயக்கங்கள், வீங்கி வெம்பியது எப்படி? இதன் அரசியல் பின்னணி என்ன? இந்த அரசியல் இலக்கு என்ன?

 

6. இந்தியத் தலையீடும், சர்வதேச தலையீடுகளும் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டத்தை மாற்றி அமைத்தது? அதன் அரசியல் நோக்கம் என்ன?

 

7. உள் இயக்கப் படுகொலைகள் ஏன்? எதற்காக? யாரால் எப்படி நடத்தப்பட்டன? கொல்லப்பட்டவர்கள் விபரங்கள் என்ன?

 

8. உள்ளியக்க படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள், எந்த அரசியலை யாருக்காக, எப்படி முன்வைத்தனர்?

 

9. இயக்க அழிப்பு வெறும் புலிகளின் பண்பாக இருந்ததா அல்லது இயக்கங்களின் பண்பாக இருந்ததா? புலிகளின் படுகொலை அரசியல் மூலம் அழிக்கப்பட்டவர்கள் யார்? அதற்குள் உள்ள அரசியல் வேறுபாடுகள் என்ன?

 

10. புலிகள் உள்ளிட்ட பெரிய இயக்கங்களின் அரசியல் என்ன? அரசியல் வேறுபாடுகள் என்ன? புலிக்கு மாற்றாகவும், இவர்கள் தமக்குள் எதை வேறுபட முன்வைத்தனர், முன்வைக்கின்றனர்.

 

11.இயக்கங்களை புலிகள் முற்றாக அழிக்க முன், இந்த இயக்கங்கள் மக்களை எப்படி அணுகினர்?

 

12. 1987க்கு முன் இயக்கங்களுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் எவை? அவை எதற்காக எந்த சூழலில் எப்படி எந்த அரசியல் கோசத்துடன் நடந்தது?

 

13. இந்திய நேரடி ஆக்கிரமிப்பு மக்களுக்கு ஏற்படுத்திய அவலங்கள் தான் என்ன? இதற்கு எப்படி யார் துணை போனார்கள்? அவர்களின் அரசியல் தான் என்ன?

 

14.இந்தியத் தலையீட்டிலான அரசியல் நோக்கம் என்ன?

 

15. இயக்க அழிப்புக்கு பிந்தைய காலத்தில், புலிகள் அழித்த இயக்கங்களின் வரலாறு என்ன? அவை எதை மக்களுக்காக முன்வைத்தனர்? எதைத்தான் மக்களுக்கு கொடுத்தனர்?

 

16. புலம்பெயர் இலக்கியம் மக்களுக்காக என்ன செய்தது? என்ன செய்கின்றது?

 

17. புலியெதிர்ப்பு பேசும் ஜனநாயகம் என்ன? அது எதை எப்படிக் கோருகின்றது?

 

18. மக்களுக்கான அரசியல் என்ன? எப்படி அது இருக்க முடியும்?

 

19. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள், கட்டாயப்படுத்தப்பட்ட அவர்களின் வாழ்வியல் என்ன?

 

20. அரச பகுதியல் வாழ்கின்ற மக்களின் வாழ்வியல் என்ன?

 

21. அரச சார்பு நபர்கள் யார்?, அவர்களின் அரசியல் என்ன? இவர்கள் மக்களின் நண்பர்களா?

 

இப்படி கடந்த 25 ஆண்டுகளின் மனித அவலங்களை உருவாக்கிய பல விடையங்களை, நாம் இனம் காணமுடியும். இதை மக்கள் நிலையில் இருந்து, அந்த மக்களுக்காக பேசுவது தான், மக்கள் அரசியல். இதை யார் செய்கின்றனர். எங்கே? எப்படி? நீ, நீங்கள் செய்வது அதையா! சொல்லுங்கள்!

 

மக்களை விட்டுவிட்டு, மக்களின் பெயரில் புலி - அரசு என்று அங்கும் இங்குமாக நக்குவாத அரசியல். புலிப்பாசிசம் எப்படியோ, அப்படித்தான் அரசு பாசிசமும். அரசுடன் சேர்ந்து நிற்கின்ற குழுக்கள், அரச பாசிசத்தை பலப்படுத்தி நிற்பவர்கள் தான்.

 

மொத்தத்தில் இவர்கள் ஊடாக தமிழ் மக்கள் எந்த விமோசனத்தையும் பெறமுடியாது என்பது, வெளிப்படையான உண்மை. இந்த உண்மையையும், இந்த வரலாற்றையும், நாம் யூலை படுகொலை நினைவுகளுடாக, கற்றுக்கொள்வோம். இதை மறுப்பவனை இனம் காண்போம். இந்த வகையில் யூலை நினைவுகளை மையப்படுத்தி, போராடக் கோருகின்றோம்.

 

பி.இரயாகரன்
04.07.2008