Wed04012020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!

பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!

  • PDF

 பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.  இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.

 

 எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது.


 "உழைப்புச் சக்தி உள்ளிட்ட எல்லாப் பண்டங்களின் பணமதிப்பும் (விலையும்) உயருதல்'இதுதான் பணவீக்கம் என்ற சொல்லுக்கு முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் நாம் காணும் உண்மை நிலைமை என்ன? அரிசி முதல் பெட்ரோல் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் ஊதியம் உயரவில்லை. எனவே இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பதற்காக உணவு உள்ளிட்ட தமது நுகர்வுகளை மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள்; அல்லது வருமானத்தைக் கூட்டுவதற்காக உழைப்பு நேரத்தை அதிகரித்திருக்கிறார்கள். "உழைப்பை அதிகரிப்பது அல்லது நுகர்வைக் குறைப்பது'  இரண்டின் பொருளும் ஒன்றுதான். பணவீக்கத்தின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருப்பது பணத்தின் மதிப்பு அல்ல; உழைப்புச் சக்தியின் மதிப்பு. இது உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்களின் மீதும் உலக முதலாளித்துவம் ஏவியிருக்கும் மறைமுக ஊதிய வெட்டு!


 இந்தப் "பண வீக்கத்தின்' மூலம் பிழிந்தெடுக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்புதான், கொள்ளை இலாபமாகக் குவிந்து கொண்டிருக்கின்றது. விலை உயர்வைச் சமாளிக்க நீங்கள் குறைத்துக் கொண்ட ஒரு வேளைச் சோறு, நிறுத்தப்பட்ட உங்களது மகனின் படிப்பு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பணம் .. இவைதான் தங்கக் காசுகளாக மாறி அம்பானி, டாடாக்களின் பணப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எனவேதான் நிதி மூலதனக் கொள்ளையர்கள், பன்னாட்டு முதலாளிகளின் இலாபம் வீங்கிக்கொண்டே போகிறது.


 பணவீக்கம்விலைவாசி உயர்வு ஆகியவை குறித்த பொருளாதாரச் சொற்சிலம்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படியொரு எளிமையான கேள்வியை எழுப்பிப் பாருங்கள். கச்சாப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவும் அதிகரிக்காத போது, இரும்பின் விலையும் சிமெண்டின் விலையும் பிற பொருட்களின் விலையும் ஏன் உயர வேண்டும்? அவற்றின் விலைக்கு அரசாங்கம் ஏன் ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்கக் கூடாது? ""முடியாது. சந்தையின் சுதந்திரத்தில் அவ்வாறு தலையிட முடியாது'' என்று இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சிதம்பரம். "பணவீக்கத்தை அரசியலாக்காதீர்கள்'' என்கிறார் மன்மோகன் சிங்.


 ஒரு குடிமகனின் உயிர் வாழும் உரிமையைக் காட்டிலும், ஒரு மனிதனின் உணவுக்கான உரிமையைக் காட்டிலும், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான முதலாளிகளின் உரிமைதான் மேன்மையானதாம்! ""எனினும் இது ஒரு பொருளாதாரக் கொள்கை மட்டுமே. இதனை அரசியலாக்காதீர்கள்'' என்கிறார் பிரதமர். இதனைப் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமே நாம் ஒப்புக் கொள்வோமானால் அந்தக் கொள்கை வழங்கும் தீர்வான பட்டினிச்சாவையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.


 மாறாக, உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற தீர்வை, பட்டினிச் சாவையும் வறுமையையும் ஒழிக்கின்ற வகையிலான பொருளாதாரத் தீர்வை நாம் தேடுவோமாயின், "நாம் உயிர் வாழ வேண்டுமானால், உலக முதலாளித்துவம் உயிர்வாழக் கூடாது' என்ற தீர்வே நமக்கு விடையாகக் கிடைக்கிறது.  இதனைப் "பொருளாதாரத் தீர்வு' என்று ஆளும் வர்க்கம் ஒப்புக் கொள்வதில்லை. இதைத்தான் "அரசியல்' என்கிறார் மன்மோகன் சிங்.                                                                                                     · 

Last Updated on Tuesday, 29 July 2008 05:54