நம்மை நாம் தொலைத்தோம்...?

விளாமரத்துக் காய்களுக்காய்க்
கல்லடித்த பள்ளி வாழ்வு
மாதாகோயில் படிக்கட்டில் தொலைந்தது தோழமை
தூரத்துக்கு வந்தபின்
தொலைந்தான் சன்னதி தோளோடு நிமிர்ந்து!


கூடித் திரிந்து,குளம்கண்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து நீராடிய பொழுதெல்லாம் தொலைந்திருக்கு.இன்றோ சிறுபகுதி சிறாரிடம் கேம் போயும்,நெற்றோன்டோ டி.எஸ்.சும் மகிமை பெற்றுவிட்டபோது,இந்தப் புவிப்பரப்பில் பெரும் பகுதி மழலைகள் தம்மைத் தொலைத்து உலக விளையாட்டு வீரர்களுக்காக உடை,பாதணி பின்னுகிறார்கள்.தான் பிறந்த குடும்பத்தின் ஒரு நேரக்கஞ்சிக்கு உழைக்கும் மழலை அதே கதியில் தேசத்துக்காகவென்ற கோதாவில் சிறார் இராணுவமாக்கப்பட்டு பலிக்கடாவாக ஆயுதம் தரித்திருக்க,

"எழுதி முடிக்கும்
ஒவ்வொரு வாக்கியத்திலும்
தெறித்திருக்கிறது துயரம்..."

எதைப்பற்றிச் சிந்தித்திருப்பினும்,நாடற்றவர்களின் வாழ்வுக்குள் நிலுவுகின்ற வலியிருக்கிறதே-அது சொல்லி மாளாதது!மழைபொழியலாம்,பறவைகள் பேசலாம்.பாடும் மீன்களும் துள்ளிக்குதிக்கலாம்.ஆனால்,நமது மனம்மட்டும் மெளனத்தால் வருடப்பட்ட வலியைத் தினம் மறப்பதற்காய் இவற்றை இரசிப்பதாகச் சாட்டை செய்யும்.எமது வலிகள் எம்மைத் தினம் பதம்பார்த்திருக்கத் தேசத்தில் எமது சிறார்கள் எவருக்காகவோ-எதுக்காகவோ செத்துமடிகிறார்கள்.இங்கே, இளங்கோவின் கவிதை மனம்மட்டும் எல்லாவகை மெளனத்தையும் மிக நுணுக்கமாக உடைத்துவிட்டு,மரணசாசனம் எழுதப்பட்ட உலகப்பரப்பில் மடிந்துவிடும் சிறார்களைக் காணுவதற்காக-காப்பதற்காகத் தனது உணர்வுகளோடு உறக்கமற்று இருக்கிறது.இந்த மனதின் பிழிவு இயற்கையின் பொழிவோடு உறவாடும் புவிப்பரப்பை நனைத்துவிடும் குருதியாக இனம் காணுகிறது.ஆம்!இன்று மழை பொழிகிறதோ இல்லையோ தினமும் சிறார்கள் குருதி சிந்துகிறார்கள்.அது,தேசத்துக்காகவோ அல்லது தெருவில் படுத்துறங்கும்போது மேட்டுக்குடி வாகனத்தின் சில்லுகளின் திமிர்த்தனத்துக்கோ அல்லது அன்னையின் வயிற்றை நிரப்புவதற்காகவோ குழந்தைகள் குருதி சிந்திக்கொண்டே சாகிறார்கள்.மிக யதார்த்தமாகச் சொல்லுகின்ற இந்த மொழி, கவிதைக்கான புதியவொரு தெரிவைக் கொண்டியங்குகிறது.அது குழந்தைகளின் அழிவை ஒப்புவமைக்குட்படுத்தும்போதே அவர்கள் வாழும் வாழ்விட நிலப்பரப்பை அவர்களது குருதியே கரைப்பதாகச் சொல்லிக் குமுறுகிறது.இது,ஒருவகையில் புதியதொரு அத்தியாயத்தை நமக்குள் திறந்துவிடுகிறது.நாம் தரிசிக்கவேண்டிய மனிதம் குறித்து சொல்லிவிடும் மிக நேர்த்தியான அழகை கீழ்வரும் உணர்வு நறுக்கின் வீச்சில் பொலிந்து மேவுவதைத்தாம் மனிதத்தொடுதல் என்பது.இளங்கோவிடம் காணும் கவிதைக் கருக்களெல்லாம் மிக ஆழமாக நாம் உணரும் மனிதத்தைக் குறித்த தெரிவுகள்(பொதுப்புத்தியகற்றிய மாற்றுச் சிந்தனை)-பரிவுகள்-வாழும் ஆசைகள் என்ற தளத்தில் வைத்துச் சிந்திக்கக்கூடிய உணர்வு நிலைகளாகவே நாம் உணர்கிறோம்.


"மழை பொழிந்து
குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய
நிலப்பரப்பை
குருதியலைகள் மூர்க்கமாய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன..."

சுடுகலம் சுதந்திரத்துக்காகப் பிறந்திருக்கிறதாகவே தாங்கிக்கொள்ளும் தோளும்,மனமும் எண்ணிக்கொண்டிருக்க,இளமையைத் திருடுகிறது ஆயுதவியாபாரம்.அதன் நடுவே நொந்துபோன இனத்தின் விடுதலை சூழ்ச்சிகளோடு பின்னப்பட்டிருக்கிறது.வாழ்வினது ஆதாரமாக இருக்கும் நிலம் உயிரோடு உரிமைகட்டிப் பேசுகிறது.உப்பற்ற உடலுக்கு ஒருவேளை ஆகாரந்தர மறுக்கும் அரசு-அமைப்பு கட்டிவைத்திருக்கும்"பொதுப் புத்தியில்"குருதி அலைகள் வாழும் அத்தனை ஆதாரங்களையும் மூழ்கடிக்கிறது.மனம் நொந்துவிடுவதல்ல இந்தக் குறிப்புக்குள்.ஏனெனில்,

"ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை."

மனித மனம் சுகத்துக்காக ஏங்கியிருப்பதும்,தன்னைக் குறித்தான பாதுகாப்பு உணர்வினாலும் தினமும் சாகா வரம் வேண்டிக் கொள்கிறது.இது இயல்பு.என்றபோதும்,இயற்கையின் விதிகளுக்கு மாறாக மரணத்தைக்காவிவரும் புறவுலகத்துப் பொதுத் தேவையானது எப்பவும் பொருளுலகத்தின் புதியபாணிக் கவர்ச்சி வாதத்தோடு"தேசம்-தியாகம்"பற்றிக் கதைவிடுகிறது.இறுதியில் இழக்கப்படும் மனித இருத்தலோ எந்த மகத்துவம் வேண்டிக் குருதி சிந்துகிறதோ அது வர்த்தகத்தினது வியூகத்தின் மகிமையாகிறது.பொல்லாத வாழ்வு.சின்னஞ்சிறாரைக்கூட வேட்டையாடும் ஒரு உலகை இந்தப் புவிப்பரப்புக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த இடர்விட்டு இடம் தேடியலைந்து உயிர்த்திருக்க இந்தச் சிறார்களால் முடிவதில்லை.திறந்த வெளிச் சிறையில் கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஆயுதம் தரிக்கப்பட்டு பலிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சூழலிலும் இந்தச் சிறார்களின் மனது, வலசைபோய் தகுந்த இடம் தேடும் பறவைகளைக்கண்டு ஏங்குகிறது!ஒரு கட்டத்தில் பசுமையான புவிப்பரப்பு என்னைக் கொல்கிறது.இது, எதற்காகப் பசுமையோடு விரிந்து மேவுகிறது?நான் ஆயுததாரியாக்கப்பட்டுக் கட்டாயமாகக் கொல்லப்படும் கணம் வரை எனது மனதில் ஏதோவொரு மூலையில் எல்லைகள் இழந்த புவிப்பரப்பின் இருத்தல் ஏக்கமாகிறது-இது உயிரின்மீதான நேசம்,வாழ்வுமீதான பற்றுப் பாசம்.நான் தடையின்றி எனது உயிர்த்திருப்புக்காக இந்த எல்லைகளை உடைத்தாக வேண்டும்-முடியுமா?


இங்கே,

"பசுமை விரித்த புல்வெளியில்
மஞ்சளாய் பூத்திருக்கிறது
நேசம்
வலசைபோய்
மரங்களில் வந்தமரும் பறவைகளின்
சிறகில் மிதக்கின்றன
எல்லைக் கோடிலில்லா நிலப்பரப்புகள்..."

வாழ்சூழல் பாதிக்கும்போதோ பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் தாண்டுகின்றன,அவைகளைக் கைதுபண்ணிக் கஷ்ரடியில் இட்டுவிடுவதற்கு இந்த மனிதர்களுக்கு எவரும் பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை அவைகளின் வாழும் வலயத்தை.சுதந்திரமாகவே வாழுகின்றன பறவைகள் என்று மனித மனம் எண்ணுகிறது.நினைத்த பொழுதுகளில் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் அவை.அதுபோன்று நானோ அல்லது நீயோ ஆகமுடியாது.கடைக்கோடி யுத்தத்துள் மூழ்கித் தவிக்கும்போதும் உயிரைக்காத்துக்கொள்ளும் மனதுக்கு தேசங்களின் சட்டங்கள்-எல்லைகள் பெரும் மதில்களாகத் தடைகளைப் பிணைத்திருக்க மனிதம் குற்றுயிரோடு ஏங்கிச் சிதைகிறது.ஆப்பரிக்கக் கண்டத்த மனிதர்கள் மகத்துவமான வளங்கள் நிறைந்த தமது பூர்வீக நிலத்தை இழந்து கடல்தாண்டி ஐரோப்பிய நுழைவாயிலான ஸ்பெயினுக்குள் குற்றுயிரோடு கால்பதிக்கக் கடலில் மூழ்கிறார்கள் நேற்றுவரை.மாண்டுபோனவர்கள் கடலோடு அள்ளுபட்டுப்போனபின் ஒருசிலரைக் கைது செய்த எல்லைகள்,எனக்கும்-உனக்கும் சுதந்திரஞ் சொல்கின்றன.இந்த எல்லைக்கோடறியாப் பறவைகளின் சிறகைக் கனவுக்குள் திணித்துவிட்ட இந்தப் பயணம் மனிதர்களுக்கு வசமாவதில்லை.ஒரு புள்ளியில் மனிதம் சிறையுண்டு கிடக்கிறது.இது மனிதர்களே மனிதர்களுக்கான தடைக் கற்களாக இருப்பதற்கு எடுக்கப்பட்ட உடமைகளின் தெரிவில் தோன்றிய வரலாறு.எனினும், வாயினுள் மென்று தொண்டைக்குள் திணிக்கப்படும்வரை சுதந்திரம் இருப்பதென்ற இந்தத் தேசங்களின் வரைவிலக்கணத்தில்தாம் எத்தனைவகையான தடைக்கற்கள்?மனிதம் சிறகுகொண்டு விடுதலைக்காகப் பறந்துவிடுவதில் தோல்விகண்டுவிடுகிறது!

"மதியப் பொழுதில்
பெயரறியா நிலப்பரப்பை
உதிர்க்கும் பறவை
எனக்காய் விட்டுப் போகின்றது
நெடுந்தூரப் பிரிவின்
வாதையை."

நாடுதாண்டி உயிர் தப்பினேன் அல்லவா?எனது வலி நெடியது.அது நெடுந்தூரத்துத்துக்குத் தள்ளப்பட்ட எனது இருப்போடு உறவாடும் தாயகத்தின் மடியில் எனது நீண்ட மனதைக் காவித்திரியும் தென்றலுக்குத் தெரியும்.இந்தப் பெயரறிந்திருக்க முடியாத புதிய நிலப்பரப்பை வந்தடைந்த எனது உயிர்ப்புக்குப் பறவையின் சிறகடிப்பில் உதிர்ந்துபோகிறது காலம்!காலத்தில் தவித்திருக்கும் எனது மனதுக்குக் கூட்டு வாழ்வு மட்டுமே கைகூடவில்லை.சுற்றுஞ் சூழலிழந்தும் சொந்தக் குடிலையிழந்த நெஞ்சுக்குப் பிரிவினது வலி நெடியகதையாகிறது.அதை எனது இயல்புக்கு மாறாக இந்தப் பட்ஷி தனது சிறகு விரிப்பில் வாதையைச் செப்பிச் செல்கிறது.

இங்கே, நான் பாடுகின்றதும் ஒருவிதத்தில் என்னை மீடெடுத்து மறு வார்ப்புச் செய்திடவே.எனது பிரிவின் தொடர்ச்சியான வலி எனது உறவுகளை விடுவதில்லை.அவர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடற்றவர்களாக இருக்கின்ற ஈழத்துப் போர் அரசியலில் எனது ஓலம் ஒரு நாடோடியைப்போல அல்ல-அது நானேதான்,இப்போது இந்த நாடோடியின் இதழ்கள் முணுமுணுக்கின்றன:

"எனக்கான
எல்லாப் பாடல்களும் தீர்ந்துவிட்டன
சிலிர்ப்பூட்டும் இசைக் கோர்வைகளற்று

முதலாம் பக்கம் விரிக்கும் முன்னரே
முடிவை வாசித்துவிடும்
வாசிப்பனுபவமாய் அலுப்புடன் படபடக்கின்றன
வாழ்வின் பக்கங்கள்

எல்லை கடந்த கடல் நீரேரியில்
மண்ணைப்பிரிந்துவிடா வைராக்கியத்துடன்
இறுகப் பற்றிய மண்ணின் மணம்
கரைந்து
மறுகரத்தில் அகப்படாது விழிந்தோடிய
நீரைப்போல ஆயிற்று
இன்று,
ஊரின் நினைவுகள்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எனும் ஒற்றைப்பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்

பிரியமுற்று
காதல் சொல்லத் தயங்கிய
இந்தப் பெண்ணின் விழிகள் பார்த்து
விடைபெறல் இயலாது

அன்பைத் தவிர
எதையும் பிரதிபலிக்கத் தெரியாத அம்மாவுக்கு
எழுப்ப எழுப்ப
நத்தையைப் போலச் சுருண்டுகிடக்கும் போர்வை
ஞாபகப்படுத்தக்கூடும்
எனது இல்லாமையை

தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன்
எனது மரணத்தை."

பிரிவு-தொலைவு,இல்லாமை-வெறுமை.இத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நாம்.ஓரத்தில் உழன்று வாழ்வு நாறிப்போகிறது!

சவக்கிடங்குகள் நிரம்பி வழியும் தேசத்தில் இல்லாமை என்பது இருவகைப்பட்டது.

ஒன்று உயிரற்றுப் போய் இருப்பிழத்தல் மற்றது முகம் தொலைத்துப்போன திசையில் சவங்களாக வாழ்வைத் தேடுவது.

இந்த இரண்டும் சாரத்தில் ஒன்றெனினும் செத்தவர்கள் செத்தவர்களே.

சாவதற்காக அதைத் தினம் தேடுவதில்தாம் சாவினது வலி அதிகமாகிறது.

இந்தப் பூமிக்கு நான் வரக் காரணமாகவிருந்தவளுக்கு எனது இல்லாமை போர்வையின்வழி ஞாபகப்படுத்தும் நான் உண்மையில் அன்பையும்,அரவணைப்பையும் மீளப்பெறும் எதிர்பார்ப்பில் தவிப்பதன் தொடர்ச்சியாகவே அங்ஙனம் முணுமுணுக்கிறேன்.அன்னையின் அகத்துக்குள் நான் இருக்கிறேன்.அவள் வாழ்வின் பெரும்பகுதி எனக்குள்ளே விரிகிறது.

ஒருவகையில் நான் அவளை மனதில் காதலியாகச் சுமக்கிறேன்.
அவளைப் பிரியும்போது என்னால் விழிகளோடு வழிகள் பொருத்த முடியவில்லை.நான் இந்த வலிக்காக நொந்து தொலைகிறபோது எனது மரணங்குறித்து எந்தத் தடயமும் இருக்கக்கூடாது.இது எனது நிலைத்த இருப்பை இல்லாதாக்கும் கயவர்களை நோக்கியே நான் பாடுகிறேன்.நான் இருப்பதாகவே அன்னை எண்ணிக்கொண்டாகவேண்டும்.

எனது அழிவில் திணறும் பெத்தமனம் என்னை வருத்தும்.அவளது பூரிப்புக்கு எனது மரணம் குறுக்கே நிற்பதை நான் ஒருபோதும் அனுமதியேன்!

நான் வாழ்வினது எல்லாப் பக்கங்களையும் வாசிக்கிறேன்.அது இயல்பான எனது சுயத்துக்குச் சுகமான சங்கீதமாகிறது.எனினும்,இந்த வாழ்வு அலுப்பூட்டுகிறது.போர்,அழிவு,தேசம் தொலைத்தல்,குண்டடிபட்ட குருதி சிந்தும் உடலம்,ஊனம் மிக்க தேசத்தின் ஓழுங்கின்மீதான எனது விருப்பு எள்ளளவும் விட்டுப்போகாத திசையில் நான் மரணிக்கின்றதைத் தவிர வேறு வழி எனக்கில்லை.


(தொடரும்.)
ப.வி.ஸ்ரீரங்கன்
12.07.2008