"feindliche Politik gegenüber dem kurdischen Volk und der PKK" beenden, verlangten die Rebellen am Donnerstag.-Bericht:Spiegel .

 

"கூர்தீஸ் அமைப்புக்கும் அந்த மக்களுக்கும் எதிரான ஜேர்மனிய அரசியல் நிறுத்தப்படவேண்டும்." என்பதற்காக கூர்தீஸ் விடுதலை அமைப்பான பீ.கே.கே.கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஜேர்மனியர்கள் மூவரை தென் துருக்கியிலுள்ள அரார்ற் மலைத்(;(Berg Ararat: Legendäre Bergsteigerregion im Osten der Türkei)


தொடரில்வைத்துக் கடத்தியுள்ளது.கடத்தப்பட்ட ஜேர்மனியர் மூவரும் மலை ஏறும் குழுவினராகும்.கடந்த 19.06.2008 அன்று ஜேர்மனிய அரசால் இடை நிறுத்தப்பட்ட கூர்தீஸ் அமைப்பின் தொலைக்காட்சி சேவையான ரோஜ்(Roj TV) தொலைக்காட்சிமீதான தடைக்கு எதிராகவும், அத்தகைய நிகழ்வைத் தொடர்ந்து அனுமதிக்கப்போவதில்லை என்பதற்காகவும் ஆட்கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட பீ.கே.கே அமைப்பானது தன்னையும் கூர்தீஸ் மக்களையும் இன்னும் சர்வதேசத்திடமிருந்து அந்நியப்படுத்தும் அரசியலுக்குள் வீழ்த்தியுள்ளது.


இது, மிகவும் வருந்தத்தக்கது!


டென்மார்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ரோஜ் தொலைக்காட்சியானது ஐரோப்பிய வலயத்துக்கான சேவையையே நிறுத்தியிருக்கிறது இப்போது.கிழக்கு ஈராக் மற்றும் அரேபிய வலயத்துக்கான சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.துருக்கிக்கும் டென்மார்க் அரசுக்குமான அரசியலில் விரிவை ஏற்படுத்திய இந்தத் தொலைகாட்சிச் சேவை வழங்கலால் 2005ஆம் ஆண்டு டென்மார்க் விஜயத்தைத் துருக்கிய அதிபர் தவிர்துத் தனது விசனத்தைத் தெரிவித்திருந்தபின் அவர்களுக்கிடையிலான பேச்சுவார்தை, இன்று ரோஜ் தொலைக்காட்சியின் தடைக்கு வித்திட்டுள்ளது.


"மக்கள் சுதந்திரமாகக் கருத்துச் சொல்லுதல்" என்னும் ஜனநாயகப் பண்பை தமது அரசு கடைப்பிடிப்பதாகச் சொல்லி நவ நாசிகளை இயங்க அனுமதிக்கும் டென்மார் அரசோ இத்தகைய தடையை எந்த நலனினின் அடிப்படையில்-ஜனநாயத்தின்படி செய்தார்களோ அதே ஜனநாயமானது வெறும் பித்தலாட்டம் என்று நாம் சொல்வதை இத்தகைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.உலகம் தமது அதிகாரத்துக்கு எதிரான எந்தச் சிறு பொறியையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை இத்தகைய நடாத்தைகள் கற்பிக்கின்றன.தமிழ் தேசியத்துக்கு-சிங்கள இனவெறிக்கு எதிரான ஊடகவியலாளருக்கு இலங்கையில் நடக்கும் இத்தகைய அரசியலை நாம் ஏலவே அறிவோம் இல்லையா?


பீ.கே.கே.யின் இன்றைய பண்பானது விடுதலை அமைப்புக்குள் உட்புகுந்த குட்டி முதலாளிய சக்திகளின் நலன் மேலோங்கிவருவதையே இந்த "ஆட்கடத்தல்"நாடகம் உறுதிப்படுத்துகிறது.சரிந்துவிழும் அதன் அரசியலிலிருந்து அந்த அமைப்பு தன்னை விடுவிக்கப் புலிப்பாணியிலானவொரு அரசியலைத் தேர்ந்தெடுத்திருப்பது உலகத்தில் ஒடுக்குமுறைகளுக்காகப் போராடும் விடுதலை அமைப்புகளுக்கு மேலுமொரு சரிவையே இட்டுச் செல்கிறது.

 

இத்தகையவொரு விவேகமற்ற அரசியலை பீ.கே.கே.செய்திருக்கமுடியுமாவென்று சிந்தித்திருந்தவேளையில்,பீ.கே.கே.யின் ஆட்கடத்தலுக்கான காரணமும் அதன் வேண்டுகோளும் தற்போது ஜேர்மனிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.


ஜேர்மனிய ஊடகங்கள் இத்தகைய நடாத்தையை மிகவும் முக்கியத்துவம்கொடுத்துப் பிரசுரிப்பதோடு நின்றுவிடாது, ஜேர்மனிய மக்களிடம் கூர்தீஸ் மக்களின் நியாயமான போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரிப்பதற்கான காரணிகளை பீ.கே.கே.செய்துமுடித்துள்ளது.பித்தலாட்டத்தனமான இந்த அரசியல் வியூகம் அந்த அமைப்பை ஏலவே,1993 இல் ஜேர்மனியில் தடைப்படுத்தும் அரசியலாகவே தொடர்ந்தது.இதற்கான அகக் காரணங்கள் ஐரோப்பிய மற்றும் துருக்கிய அரசிய நலன்களோடான எதிர்பார்ப்பிலிருந்து கணிக்கத் தக்கது என்பது மறுபகுதி உண்மை.


ஒரு விடுதலை அமைப்பானது இன்றைய உலக நடப்புகளில் எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்வதில் அதன் வியூகம் இழுத்துவிடப்படுகிறது.இன்றைய உலகத்தின் அரசியல்-பொருளியல் நகர்வுகள் அனைத்தும் பொதுவாக மக்களின் நலனுக்கானதாகச் சொல்லப்பட்டு அது யுத்த்தின் மூலமாகவோ அன்றி ஒரு நாட்டைப் பொருளாதாரரீதியாகவோ தாக்கித் தமது நலன்களை முதன்மைப்படுத்தப்படும் அரசியலாக இருக்கும்போது இந்தப் பீ.கே.கே. போன்ற அமைப்புகளின் அரசியலோ அத்தகைய மக்கள்விரோத அரசியலை நியாயப்படுத்தும் செயலாகவே விரிகிறது.


சர்வதேச மக்களின் தார்மீக ஆதரவைப் பெறவேண்டிய ஒடுக்கப்படும் இனங்கள் தத்தமது தலைமையாக ஏற்றிருக்கும் அமைப்புகளின் குட்டி முதலாளிய நலன்களால் தமது எதிர்காலத்தைப் பறிகொடுக்கும் இந்த வகை அரசியலை ஆர்ப்பாட்டம்,ஊர்வலமெனச் செய்து அங்கீகரிக்கும் இழி நிலைக்குள்ளிருந்து விடுதலை பெறுவது அவசியமானது.


இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நலன்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானதுதாம்.எனினும்,சர்வதேச மக்களின் மிகத் தோதான தார்மீக ஆதரவானது எப்பவும் இந்தத் தேச அரசுகளின் நலன்களுக்குக் குறுக்காகவே இயங்குகிறது.இதையும் உடைத்தெறிந்து தத்தமது மக்களின் அரசியல் எதிர்காலத்தையே நாசப்படுத்தும் மிக இழிந்த"ஆட்கடத்தல்"அரசியலை இந்த அமைப்புகள் செய்வது தமது பிரச்சனைகளை சர்வதேச அரங்குக் எடுத்துவருவதைவிட ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப்போராட்டத்தைப் பயங்கர வாதப்போராட்டமாக வர்ணிப்பதற்கும்,அதையே நியாயமற்ற யுத்தமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் ஏதுவாகவே போய்முடிகிறது!


கூர்தீஸ் அமைப்பினது அரசியலை மிகவேகமாக உள்வாங்குவது கடினமானதாகும்.அந்த அமைப்பின் அரசியல் நடாத்தையானது ஒருவகையில்-கட்டத்தில் சரியானதாகவும் காலவோட்டத்தில் மிக விவேகமற்ற அரசியலாகவும் இருக்கிறது.அந்த அமைப்பின் தலைவர் ஒச்சுலானின் கைதோடு அந்த அமைப்பின் அரசியலை மிக நேர்த்தியாக விளங்கிக்கொண்டாலும் அந்த மக்களின் நியாயமான விடுதலையை இத்தகைய குட்டிமுதலாளிய அமைப்புகள் சிதறடிப்பதை எண்ணிய நாம் நொந்துகொண்டோம்.


இன்று நமது விடுதலை என்பதை நரவேட்டையாகக் குறுக்கிய "ஈழவிடுதலை"அமைப்புகள் எங்ஙனம் நம்மை நடாற்றில் தள்ளிச் சர்வதேசத்தில் நமது விடுதலையைப் பயங்கரவாதமாகப் பிரகடனப்படுத்தினார்களோ அதே பாணியில்தாம் பீ.கே.கே.யினது அரசியல் நகர்வும் நடந்தேறுகிறது.மக்களின் கால்களில்தங்கித் தமது மக்களைக்கொண்டே போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அமைப்புகள், வெளி நாடுகளுக்கு இடம்-புலம்பெயர்ந்த தத்தமது மக்களின் நிதிப்பங்களிப்பைப் பெறுவதற்கான அரசியலை முன்னெடுக்கும்போது இத்தகைய தொலைக்காட்சி-வானொலிச் சேவைகளையே தங்கியிருக்கின்றன.இத்தகைய ஊடகங்களின் தந்திரமான பிரச்சாரங்கள் கோடி கோடியாகப் பணத்தைச் சம்பாதிப்பதற்கும் அத்தகைய பணத்தைக்கொண்டு ஊடகங்களை உரிமையாக்கி வர்த்தகஞ் செய்வதற்குமானவொரு அரசியலை "விடுதலை"அமைப்புகளுக்கு அவசியமாகிறது.இது புலிகளுக்கோ அல்ல பீ.கே.கே.போன்ற அமைப்புக்கோ விதிவிலக்கற்ற தேவையாகிறதென்றால் இவர்களின் அரசியலானது குட்டிமுதலாளிய நலன்களோடு பிணைந்திருப்பதென்றேகொள்ளத்தக்கது.


"Außenminister Frank-Walter Steinmeier wies alle Forderungen umgehend zurück: "Die Bundesrepublik lässt sich nicht erpressen." Steinmeier forderte die sofortige und bedingungslose Freilassung der Geiseln."-Steinmeier in Spiegel.ஜேர்மனிய வெளிநாட்டமைச்சர் ஸ்ரையின் மாயர் கூறுவது தற்செயலான வார்த்தைப் பிரயோகமல்ல.அது ஜேர்மனிய அரசு உலகத்துக்குக் கூறும் வாக்கியம்தாம்"தம்மை எவரும் மிரட்டுவதற்கோ அன்றி வற்புறுத்துவதற்கோ தகுதியற்றவர்கள்"என்பதே ஜேர்மனியர்களின் அரசியல் உளவியல்.


இந்த ஜேர்மனிய அரசோ"எம்மை எவரும் கட்டாயப்படுத்தித் தமது பயங்கரவாத அரசியலை நியாயப்படுத்த முடியாது."என்கிறது.ஆட்களைக் கடத்தி அதற்காகத் தண்டப்பணத்தைக் கோராதுபோயினும் பீ.கே.கே.யின் கோரிக்கை என்பது நகைப்புக்கிடமானதாகும்.ஒரு அரசு தத்தமது நலன்களைக ;கடந்து ஒருபோது செயலாற்றமுடியாது.அத்தகைய அரசுகளை மக்களுக்கு அண்மித்த நலன்களைக்கொள்ளும்படி வற்புறுத்திக்கொள்வதற்கு மாறாக அந்தந்த அரசுகளின்கீழ் வாழும் மக்களை அண்மித்த அரசியலை ஊக்கப்படுத்தியாகவேண்டும்.சர்வதேச மக்களை அண்மித்து அவர்களை நமது தேசங்களின் விடிவுக்காக வென்றெடுக்கும் அரசியலை ஆட்கடத்தலூடாக வற்புறுத்திச் செய்துமுடிப்பதன்பது வெறும் மாபியாத்தனமான அரசியலற்ற குட்டிமுதலாளிய அமைப்புகளின் செலாகவே இருக்கும்.


கடந்த பல தசாப்தமாகக் கூர்தீஸ் இனமக்கள் ஐரோப்பாவினதும்,அமெரிக்காவினதும் காற்பந்தாகவே கிடந்து அடிவேண்டுகிறார்கள்.


இத்தகைய அரசியல் நடாத்தையினால் அந்த மக்களைக் கொன்றுகுவிக்கும் துருக்கியப் பயங்கரவாத அரசியலும் அந்த நாட்டின் இராணுவமும் மிக மோசமாக கூர்தீஸ் மக்களை அழித்தொழித்தபோது கணிசமான மக்கள் ஐரோப்பியக் கண்டத்துக்குள் அகதிகளாக(நம்மைப்போல்)புலம் பெயர்ந்துள்ளார்கள்.அவர்களின் கிட்டத்தட்ட150.000.பேர்கள் ஜேர்மனுக்குள் வாழ்கிறார்கள்.இந்த மக்களின் தார்மீகப் போராட்டங்களைக்கூட இனிவரும்காலங்களில் ஜேர்மனிய மக்களால் உதாசீனப்படுத்தப்படும்.ஆட்கடத்தல் நாடகத்தால் அழிந்துபோகும் மக்களின் எந்தவுரிமையையும் வென்றெடுத்ததாக வரலாறில்லை.சரியான தெரிவுகளுடாகச் செய்து முடிக்கப்படும் அரசியலை இழந்த அமைப்புகள் தமது இயக்க நலனுக்காகச் செய்யும் எந்தப் போராட்டமும் வெற்றியளிக்காதென்பதற்குத் தமிழர்களாகிய நமக்குப் புலிகளின் அழிவே சாட்சியாக இருக்கிறது.இந்த அரசியலையே மேன்மேலும் குட்டிமுதலாளிய அமைப்புள் செய்துகொள்ளும் என்பதற்குப் பீ.கே.கே.யின் ஆட்கடத்தல் அரசியலும் சாட்சி பகிர்கிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
11.07.2008