Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலியின் பாசிசத்தை எதிர்க்கின்ற வலதுசாரியத்தின் பின்னால் தான், இடதுசாரி மக்கள் போராட்டம் மறுபடியும் மறுப்புக்குள்ளானது. இதை நான், நாங்கள் இனம் கண்டு போராட முற்பட்ட காலகட்டத்தில், இதை அம்பலப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை. இடதுசாரிய வேஷம் கலைந்து போகாத சூழல்.

 

ஆனால் அவர்கள் மார்க்கியசத்தை எதிர்த்தும், திரித்தும் வந்தனர். இந்தத் தளத்தில் தான், நான் நாங்கள் முதல் எதிர்தாக்குதலை தொடங்கினோம். கிட்டத்தட்ட தனித்து, நான் மட்டும் இதை எதிர்கொண்டேன்.

 

கடந்தகாலத்தில் என்ன செய்தனர் என்று தெரியாத இனம்தெரியா பலர், மார்க்சிசத்துக்கு எதிரான தத்துவங்களுடன் எம்மை முட்டி மோதினர். புதிய மார்க்சிய எதிர்ப்புக் கருத்துகளை மேற்கில் இருந்து கொண்டு வந்தனர். நான் இதை எதிர்கொண்டேன். இதற்காகவே நிறையக் கற்றேன்.

 

இப்படி அவர்களின் மொத்த வாதங்கள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. நான் இந்த புலம்பெயர் வலதுசாரிய இலக்கியத்துக்கு எதிரான, ஒரு இடதுசாரிய வில்லனாக சித்தரிக்கப்பட்டே தூற்றப்பட்டேன். 

 

ஆரம்ப புலம்பெயர் இலக்கியம் மக்களின் நலனை உயர்த்தியது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அது படிப்படியாக மக்களுக்கு எதிராகவே மாறத் தொடங்கியது. புதிய சொத்துடைய மத்தியதர வர்க்கமாகவும், முதலில் சொந்தமாக பணத்தை கொண்டு வாழத் தொடங்கிய சூழல்களும், இந்த சூழலுக்கு ஏற்ப வலதுசாரிய பூர்சுவா குடும்பங்கள் உருவானது. இவர்கள் முன் மக்கள் நலன்சார் அரசியல் என்பது, தமது புதிய பூர்சுவா வாழ்வியல் இருப்புக்கு எதிரானதாக கருதியது. இதனால் மக்கள் நலன் அரசியலை எதிர்ப்பது, இவர்களுக்கு அவசியமாகியது. 

 

இப்படி மக்கள் விரோத கோட்பாடுகள், கருத்துக்களே எங்கும் குடிபுகுந்தது. நான், நாங்கள் மட்டும் தனித்து நின்றோம். மறுபக்கத்தில் இடது கலந்த வலதுசாரியம் புலி எதிர்ப்பை அளவுகோலாகக் கொண்டு, மக்கள் அரசியலைத் திரித்து அதில் மிதக்க முனைந்தது.

 

இதை நான், நாங்கள் மட்டுமே கடுமையாக எதிர்த்து நின்றோம். மக்கள் அரசியலை இதற்கு எதிராக உயர்த்தினோம். இயல்பாகவே நாம் இவர்களின் முதல் எதிரிகளானோம். இவர்கள் தமது செயல்பாட்டுக்கு எதிர்ப்பைச் சந்தித்தது, எம்மிடம் இருந்துதான். எமது எதிர்ப்பு என்பது அரசியல் தளத்தில் இருந்ததால், இது தனி;ப்பட்ட முரண்பாடாகா வண்ணம் எமது கடுமையான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தோம். இதை தனிப்பட்ட முரண்பாடாக்க முனைந்த போதெல்லாம், அதை நாம் தோற்கடித்தோம்.

 

இந்த நீண்ட நெடிய போராட்டம் மூலம், மக்களுக்கான ஒரே குரலாக நான் நாங்கள் மட்டும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டோம். புலியல்லாத தளத்தில், இலங்கை முதல் புலம்பெயர் வரை, நான் நாங்கள் மட்டும் தான், மக்களுக்கான ஒரு அரசியலை முன்வைத்து போராட்டத்தை நடத்தியுள்ளோம். சமகால நிகழ்ச்சிகள் மீது மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டு கொண்ட ஒரு விமர்சனத்தை நான் நாங்கள் மட்டுமே செய்தோம். 

 

இன்று இதைக் கூட மறுதலிக்கின்ற நாடகங்கள், காட்சிகள். புலம்பெயர் இலக்கியம் மக்களுக்க எதிராக சீரழிந்து சிதைந்து வந்த வரலாற்றில், மக்களுக்கான போராட்ட அரசியலை உயர்த்தியதை மறுத்துக் கொண்டு சிலர் காட்சியளிக்க முனைகின்றனர். இக் காலகட்டத்தில் தான், மூன்றாவது பாதை உருவாக்கப்பட்டதும் பின் கூடி கலைக்கப்பட்டதும் கூட நடந்தது. சரிநிகரில் இருந்த சிலரின் முன் முயற்சியால் உருவான இந்த அமைப்பு, தனக்கான ஒரு திட்டமொன்றையும் கூட வெளியிட்டது. இதுவெல்லாம் இன்று இருட்டடிப்பு செய்த படி தான், மூன்றாவது பாதையின் பெயரில் கூட சிலர் வேஷம் போடுகின்றனர். பல வேஷத்தில் எதிர்புரட்சிக் கும்பல்கள் கூட்டுத் தன்மை, அதன் பலம், அதன் விளம்பர உத்தி, அதன் திரிபு, இதை மீறி மக்களுக்காக நான் நாங்கள் போராடுவது என்பது அதன் வரலாற்றின் தொடர்ச்சியில் தான். துரோக திரிபு வரலாறு எப்படிப்பட்ட எதிர்ப்புரட்சி என்பதை தெரிந்து கொள்ள, அடுத்து வந்த 'ஜனநாயக" கோசத்திலும் தெரிந்து கொள்ளமுடியும். 

 

அடுத்து வந்த ஜனநாயகம் எதை மறுத்தது, நாம் எதைக் கோரினோம்?


அரசு புலி சமாதானம் வேஷம் போடத் தொடங்கியவுடன், ஜனநாயகம் பேசிய போக்கு புலிக்கு மாற்றாக முன்னுக்கு வந்தது. முன்னைய இலக்கிய சந்திப்பில் எஞ்சிய கழிசடைகளும், அரச கூலிக் கும்பலாக இயங்கும் இயக்கங்களின் உறுப்பினர்களும், சில முன்னாள் இயக்க உறுப்பினர்களும், பதவி வேட்டைக்காரர்களும், புலியால் ஓதுக்கப்பட்டவர்களும் என்ற பலர், இந்த புதிய அரசியல் கதம்பத்தில் சேர்ந்து எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப 'ஜனநாயகம்" பேசினர்.

 

இது இன்று போல் ஆரம்பத்தில் அரசை ஆதரிக்கவில்லை. இயக்க சார்பை வெளிப்படுத்தவில்;லை. தன்னை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டது. மாறாக புலியை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டது. ஆனால் புலி அரசியலை எதிர்க்க மறுத்தது. இது ஒரு அரசியல் அலையாக, மாற்றுக் கருத்தாக புது வேஷமிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் புலியெதிர்ப்பை வைத்ததே ஒழிய, மாற்று அரசியலை வைக்கவில்லை. மக்களைச் சார்ந்த மாற்றுத் தீர்வை வைக்கவில்லை. மாறாக புலியின் அதே அரசியலையே தானும் கொண்டிருந்தது. புலிக்கு மாற்று அரசியல் என்பது, மக்கள் அரசியலை வைப்பது தான்;. இதை வைப்பதை இவர்கள் மறுத்தனர். மாறாக புலி அதே அரசியலைக் கொண்டு, புலி எதிர்ப்பை வைத்தனர். இது படிப்படியாக அரசை ஆதரிக்கவும், அரசின் அரசியலையும் தனதாக்கியது. 

 

இதற்கு எதிராக நான், நாங்கள் மட்டும் தான், கடுமையான அரசியல் ரீதியான எதிர்ப் போராட்டத்தை நடத்தினோம். புலியெதிர்ப்பு அரசியலை தெளிவாக அடையாளப்படுத்தி முழுமையான அம்பலப்படுத்தலை செய்தோம். இதன் மூலம் மக்கள் அரசியலை உயர்த்தினோம். சமூகம் பற்றிய தேடுதலில் ஈடுபட்டவர்கள் மீது, கணிசமாக செல்வாக்கு செலுத்தினோம். புதிய இளம் தலைமுறையிலும், சமூகம் பற்றிய அவர்களின் சொந்த அக்கறையில், நாம் பாதிப்பை ஏற்படுத்தினோம்.

 

நிலமையில் ஏற்படும் வெற்றிடம், மாற்றம், இதில் எமது கருத்து எற்படுத்தும் செல்வாக்கு அதிகமானது. இந்த சூழல் தான், புதிய திரிபுகளை இதற்குள்ளும் உருவாக்க தீவிரமாக முனைகின்றது. இது தனக்கு முந்தைய மக்கள் போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது. இதை ஏதோ புதிதான ஒன்றாகவும், இப்போதே தொடங்குவதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. 

 

முந்தைய போராட்ட தொடர்ச்சியை தெரிந்து கொள்ளாத வகையில் அதை வைத்து இருப்பதன் மூலம் தான், மக்கள் விரோத அரசியலை மக்கள் பெயரில் செய்ய முடியும்;. இதைத் தான், இன்று சிலர் மக்கள் அரசியல் பெயரில் செய்ய முனைகின்றனர். 

 

அரசியல் ரீதியாக எந்த தொடர்ச்சியுமற்ற இவர்கள், கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்று தெரியாத ஒரு மர்மத்துடன் தான், புதிதாக அரங்கில் நுழைகின்றனர். இப்படி நுழையும் போது மர்மமான தமது கடந்தகாலம் போல், கடந்தகால அரசியல் போக்கையும் கூட மர்மமாக்கிவிடுகின்றனர். மக்களுக்கான போராட்டம், மக்களுக்கு எதிரான போக்குகளையும் இவர்கள் அடையாளப்படுத்த தவறியபடி தான், ஒரு சதிகாரக் கும்பலாக அரசியல் அரங்கில் நுழைகின்றனர். புலி எதிர்ப்பை அடிப்படையாக கொண்டபடி, புலியெதிர்ப்புக் கும்பலுடன் அரசியல் விபச்சாரம் செய்தபடி தான், இவர்களும் மக்கள் என்கின்றனர். அரச – புலிப் பாசிசத்தை எதிர்க்காத, அவர்களுடன் அரசியல் உறவு கொண்ட அனைவரையும் அம்பலப்படுத்திப் போராடாத சமரசவாதங்களுடன், புதிய எதிர்புரட்சி அரசியல் போக்குகள் தலை காட்டுகின்றது.

 

இன்று பகிரங்கமாக இரண்டு பாசிசத்தை எதிர்க்காத எந்தக் கருத்துகள், கூட்டங்களும், சந்திப்புகளும், உரையாடல்களும், உறவாடல்களும், இவை எதுவாக இருந்தாலும் அவை எதிர்புரட்சிகரமானவை. இதை இனம் கண்டு போராடவே வரலாறு உங்களை அழைக்கின்றது. நான் நாங்கள் மட்டுமாக தொடர்வதா அல்லது நீங்களும் இதில் பங்குகொண்டு போராடுவீர்களா என்பதை மீளவும் வரலாறு பதிவு செய்யவுள்ளது.

 

பி.இரயாகரன்
05.07.2008