ஏதோ இதை புலியிடம் மட்டும் கோரியதாக கூட சிலர் (திடீர் ஜனநாயகவாதிகள்) திரிக்கின்றனர். யாரெல்லாம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை தீர்க்க முனையவில்லையோ, அதாவது இதை யார் பாதுகாத்து நின்றனரோ, அவர்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டமும் நடந்தது.
பலரும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்ற, பல நூற்றுக்கணக்கானவர்களின் தியாகம் செய்த போராட்டம் இதற்காக நடந்துள்ளது. முதல் பலி இவர்கள் தான். யாரும் அஞ்சலி செலுத்தாத தியாகமாகவே எம்முன் உள்ளது. இதை மக்களுக்கான ஒரு தியாகமாக இன்று வரை மதிக்காத தேசியம் பாசிசமாகவும் மறுபக்கத்தில் ஜனநாயகம் கூலிக்கு மாரடிக்கும் அரச எடுபிடியாகவும் உள்ளது. இதையே தமது போராட்டம் என்கின்றனர்.
இதை மறுத்து நான், நாங்கள் மட்டுமே உரிமையுடன் உரிமை கோருகின்றோம் என்றால், அந்தளவுக்கு இதற்கு எதிராகவே அனைத்து செயல்தளமும் உள்ளது. மக்களுக்கான தியாகத்தை, நாம் மட்டும் போற்றுகின்றோம்.
ஜனநாயகத்தின் பெயரில் அரசுடன் நிற்பவன், தேசியத்தின் பெயரில் புலியுடன் நிற்பவனின் துரோகத்தைத் தான், இன்று தியாகமென்கின்றனர். இது தான் போற்றப்படுகின்றது. மக்களுக்காக போராடியவர் தூற்றப்படுகின்றனர், இவ் இருவருமே, மக்களுக்காக போராடியவர்களை துரோகிகள் என்கின்றனர்.
மக்களுக்காக போராடியதால் புலி மற்றும் புலியெதிர்ப்பு யாரை துரோகி என்கின்றனரோ, அவர்களின் வாரிசுகள் நாங்கள். மக்களை நேசிக்கும் அந்த துரோகத்தை செய்பவர்கள் தான் நாங்கள். அந்தத் துரோகத்தை போற்றுபவர்கள் நாங்கள். அதாவது நான், நாங்கள் மட்டும் தான். இதுதான் இன்றைய எதார்த்தம். மக்களுக்காக உண்மையாக போராட முனைவது, எதார்த்தத்தில் கேலிக்குரிய ஒன்றாக துரோகத்துக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதற்குள் நாம் கேலி செய்யப்படுகின்றோம், தூற்றப்படுகின்றோம், அச்சுறுத்தப்படுகிறோம்.
இயக்கங்கள் சமூக முரண்பாட்டை களைய மறுத்து, யாழ்மேலாதிக்க தேசியமாக, உயர்சாதித் தேசியமாக, ஆணாதிக்க தேசியமாக, சுரண்டும் தேசியமாக, தேசியத்தை அடையாளப்படுத்தி இயக்கமாக ஆயுதமேந்திய போது, இதை அமுல் செய்ய அது தனக்குள் உட்கட்சி ஜனநாயகத்தையே மறுத்தது. அது உட்படுகொலைகளில் மக்கள் விரோத அரசியலைத் தொடங்கியது. இடதுசாரி வேஷம் இதை மட்டுப்படுத்தியது.
இயக்கங்கள் இடதுசாரி வேஷமிட்டபடி, சமூக முரண்பாட்டை தீர்க்கப் போவதாக கூறியபடி, அதற்கு எதிராகவே ஆயுதமேந்தியதால் இயல்பாகவே உட்கட்சி ஜனநாயகத்தை மறுத்தது. மக்களுக்கான போராட்டம், தனது கட்சி ஜனநாயகத்துக்கான போராட்டமாக தொடங்கியது.
அவர்கள் கொண்டிருந்த மக்கள் அரசியலை, தமக்கு எதிரான தேசத் துரோகம் என்றனர். உள் இயக்கத்தில் வைத்து நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். பலர் திட்டமிட்டு முடமாக்கப்பட்டனர். இயக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் வேட்டையாடப்பட்டனர். எல்லா இயக்கத்திலும் இந்த நடைமுறையே அரசியலாக, போராட்டம் பொதுத் தளத்தில் உருவானது. இயக்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் என்பது பொதுக் கோசமாகியது. மக்களுக்கு போராடுவர்களை கடத்துவது, கொல்லுவது, சித்திரவதை செய்வது என்பது, இயக்கங்களின் பொது நடைமுறையாகியது.
ஒன்றல்ல இரண்டல்ல மக்களுக்காக போராடிவர்கள் சில நூறு என்பது ஆயிரமாகுமளவுக்கு, உள்ளியக்க வெளியியக்க படுகொலைகள் தொடர்ந்தன. இதையே அனைத்து இயக்கமும் தேசியமென்றனர். இப்படி உண்மையான நேர்மையான மக்கள் தலைவர்கள் அண்ணளவாக ஆயிரம் பேர் கொல்லபட்ட பின், மக்கள் போராட்டம் நடக்க வாய்;ப்பில்லை. அது தனது தலைமையையும், தனது ஊழியரையும் இழந்துவிட்டது. செய்தவர்கள் புலிகள் மட்டுமல்ல, அனைத்து இயக்கமும் தான்;. உண்மையான தேசப்பற்றாளர்களை கொன்ற பின், தேசியம், ஜனநாயகம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கமுடியும். அதைத்தான் இன்று பார்க்கின்றோம்.
அன்று உண்மையான நேர்மையான சமூக பற்றாளர்கள், தேசியபற்றாளர்கள் தான், உண்மையாக இந்த மக்களுக்காக முதல் களப்பலியானார்கள். ஆனால் இவர்களை யாரும் இன்று வரை போற்றுவது கிடையாது. இவர்களை நான் நாங்கள் மட்டும் தான், போற்றுகின்றோம்;. அவர்களிள் அரசியலை நாம் மட்டும் தான், முன்வைக்கின்றோம். அவர்களின் வாரிசுகள் நாங்கள். இதையும் இன்று சிலர் திரிக்க முனைகின்றனர். பிந்தைய புலியின் இயக்க அழிப்புக்குள், இதையும் சேர்த்து குழைத்து தீத்தவே முனைகின்றனர். புலி மட்டும் தான் அனைத்தும் என்ற கண்கட்டு வித்தையைக் காட்டி, அதுவே வரலாற்று உண்மை என்று காட்ட முனைகின்றனர்.
இப்படி உள்ளியக்க வெளியியக்க படுகொலை என்பது, மக்களுக்காக போராடியவர்கள் மீது தான் இவ்வியக்கங்கள் நடத்தின. இப்படி மக்கள் போராட்டக் கூறுகள் தான், முதலில் இனம் காணப்பட்டு அழிக்கப்பட்டனர். இன்றைய பாசிச அரசியல் (புலி மற்றும் புலியெதிர்ப்பு) எம்மை கேட்கின்றது, எங்கே மக்கள் போராட்டம் என்று! மக்களுக்காக போராடியவர்களை யார் கொன்றனரோ, அவர்களும் அவர்களின் வாரிசுகளும் தான் இப்படி இன்று எம்மிடம் கோருகின்றனர். எம்மைப் பார்த்து எள்ளிநகையாடுகின்றனர். மக்கள் போராட்டம் என்பதே 'புனைவு" என்கின்றனர்.
பாசிட்டுகளின் (புலி முதல் மற்றைய குழுக்கள்) அழித்தொழிப்பில் இருந்து தப்பியவர்கள், உதிரியாகவே தமிழ் பிரதேசத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அவர்களில் கணிசமானவர்கள் புலம்பெயர் நாடு வரை சென்றனர். இந்த முதல் புலம்பெயர்வில் இருந்த அரசியல் உணர்வு மட்டம் தான், புலம்பெயர் இலக்கியத்தின் முதல் பிரதிபலிப்பாக இருந்தது. மக்களின் நலனுடன் அவைப் பின்னிப் பிணைந்ததாக இருந்தது. அனுபவம் குறைந்த ஆனால் மக்களின் நலனை அது உணர்வுபூர்வமாக பிரதிபலிக்கத் தொடங்கியது.
இப்படித் தான் புலம்பெயர் இலக்கியம் மக்களின் நலனுடன் உருவானது. 90 சதவிகிதமான புலம்பெயர் இலக்கியம் மற்றும் அரசியல் முயற்சிகள் இப்படித் தான், உணர்வுபூர்வமாக மக்களுடன் நிற்க முனைந்தது.
இடதுசாரிகள் தேடி அழிக்கப்பட்டதால், எம்மண்ணில் நடந்த முதல் அரசியல் புலம்பெயர்வும் இடதுசாரியமாகவும் இருந்தது. இது எங்கும் பிரதிபலித்தது. இயக்க அழிப்பாக மாறிய போது, அடுத்த அரசியல் புலம்பெயர்வு வலதுசாரியமாகத் தொடங்கியது. இயக்க அழிப்பாக (வெறும் புலிகள் மட்டும் செய்யவில்லை) தொடங்கிய போது தான், வலதுசாரிகளின் புலம்பெயர்வும் நடக்கின்றது. இடதுசாரிய அரசியல், வலதுசாரி அழித்தொழிப்பக்கு எதிராக குரல் கொடுத்தது. அதே தளத்தில் வலதுசாரியம் இடதுசாரியதுக்குள் ஊடுருவியது. புலம்பெயர் இலக்கியம், இப்படி தனது முன்னைய சொந்த அடையாளத்தையே இழந்தது. இயக்க அழிப்பை முதன்மையான அரசியல் கூறாக, இதை முன்னிலைப்;படுத்திய வலதுசாரியம் படிப்படியாக அரசியலாக்கியது. இதற்கு மேலும் ஊக்கமாக இருந்தது, புலம்பெயர் இயக்க ஆதரவாளர்கள் இதற்குள் வந்து சேர்ந்தது தான்;. வலதுசாரிய இயக்கத்துக்காக புலம்பெயர் நாடுகளில் அரசியல் ரீதியாக முன்னிலையில் நின்றவர்கள், இயக்க அழிப்பில் புலி வெற்றிபெற பின் தமது வலதுசாரிய அரசியல் செயல்பாட்டை இழந்தனர். இப்படி முன்னணி அரசியல் பிரமுகர்கள், தமது வாயப்; பந்த இடதுசாரிய வேஷத்துடன், புலம்பெயர் இடதுசாரிய இலக்கியத்தில் நுழைந்தனர்.
மொத்தத்தில் மக்கள் விரோத சக்திகள், பலவழிகளில் புலம்பெயர் இலக்கியத்தில் நுழைந்தனர். இப்படி புலம்பெயர் (கொழும்பு முதல் மேற்கு வரை) இலக்கியம் வலதுசாரியமாக திரிந்து சீரழிந்தது. புலியை எதிர்த்தால் அது முற்போக்கு, இடதுசாரியம் என் அளவுகோல் தான், இதன் தத்துவமாகியது. இப்படி வலதுசாரியம் முற்போக்காகியது. இவர்கள் மீண்டும் பழையபடி இடதுசாரியத்தை கேலிசெய்தனர், திருத்தினர். இப்படி தொடங்கியவர்கள் முடித்தது எப்படி?
அதை புலியெதிப்பாக திரிந்து, ஜனநாயக மீட்பாக காட்டி, அதே அரசு ஆதரவுக் கும்பலாகியது. அரச பாசிசத்தை எதிர்க்காத ஒன்றிணைவு தான், இன்று புலம்பெயர் இலக்கியமாக உள்ளது. அரசுடன் நிற்கின்றவர்களுடன் கூடி இயங்குவது தான், புலம்பெயர் இலக்கியமென்று கூறுமளவுக்கு அது தன்னை சிதைத்து சீரழித்து நிற்கின்றது. இதற்குள் தான் ஜனநாயகம், முற்போக்கு, மார்க்சியம் வரை சிலர் நீட்டிப் பேசுகின்றனர்.
பி.இரயாகரன்
05.07.2008
தொடரும்