யாரை இப்படி அழைக்கின்றோம்? ஏன் இப்படி அழைக்கின்றோம்? இதை ஒரு புதிராக எடு;த்தால் இதற்குள் மனிதம் இருப்பதில்லை. மனிதப் பண்பு இருப்பதில்லை. அறிவு, நேர்மை, உண்மை, சமூகப் பண்பு என எதுவும் இதனிடம் இருப்பதில்லை. இது எதுவாக இருக்கும்? சொல்லுங்கள்.
அது எமது ஊடகவியலும், அதில் கருத்துச் சொல்வோரும் தான். தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தையும் எதிர்க்காதவர்கள் கூடாரம் தான். இது பாசிச சேற்றில் படுத்துப் புரளும் பன்றிகளால் நிறைந்தது. இப்படி இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. ஒன்று புலி மற்றது அரசு. இங்கு அரசு என்றால், அவர்களுடன் உள்ள அனைத்து துரோகக் கூலிக்கும்பலும் தான்.
இந்த இரண்டும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தியும், அவர்களை கொன்று குவித்தும், தமது சொந்த பாசிச அதிகார மையங்களை தமிழ் மக்கள் மேல் நிறுவியுள்ளது. தமிழ்மக்கள் சந்திக்கின்ற அவலங்கள், கொடூரங்கள் எண்ணில் அடங்காதவை. நாள்தோறும் எத்தனை எத்தனை துயரங்கள். இந்த மக்களைப் பற்றி யார் தான் பேசுகின்றனர். உங்களுக்கு ஒரு மனச்சாட்சி இருந்தால், அதைத் தொட்டுச் சொல்லுங்கள். எங்கே அவை, யாரால் எப்படி பேசப்படுகின்றது?
மனிதம் இப்படி செத்துக் கொண்டு இருக்க, ஊடகவியல் என்ன செய்கின்றது. மக்களின் அவலத்தையா அது பிரதிபலிக்கின்றது? இல்லை, மாறாக மக்களை கொன்று போடும் பாசிசத்தை அது ஆதரிக்கின்றது.
இலங்கையில் மக்களுக்கு எதிராக நிலவும் இரண்டு பாசிசத்தை ஒருங்கே எதிர்க்காத ஊடகவியல் முதல் கருத்தாடல்கள் வரை, அனைத்தும் பொய்யும் புரட்டாலும் நிறைந்து காணப்படுகின்றது. இதற்கு வெளியில் தான் உண்மை, நேர்மை, மனிதப் பண்பு, மனித நேயம் காணப்படுகின்றது. எந்த ஊடகம், எந்தக் கருத்தாளன், நேர்மையாக மக்களுக்காக இயங்குகின்றான். சொல்லுங்கள்.
ஊடக சுதந்திரம் முதல் மனித நேர்மை வரை பாசிச சேற்றில் புரளுகின்றது. பாசிசத்தை அனுசரித்தும், அதை நியாயப்படுத்தியுமே, ஊடகவியல் முதல் கருத்துத்தளம் வரை இயங்குகின்றது. இதை இனம் காண்பது, இதை அம்பலப்படுத்துவது இன்று அவசியமாகின்றது. இதன் மூலம் தான் உண்மையான மாற்றுச் செயற்தளத்தை, மக்களுக்காக உருவாக்க முடியும்.
மாற்றுக் கருத்து முதல் விவாதங்கள் வரை, இரண்டு பாசிசத்தையும் எதிர்க்காத வரை, அவை எல்லாம் பாசிசத்தின் கூச்சல்கள் தான்;. இதனால் இதனிடம் உண்மையில் அறிவு, தர்க்கம், நேர்மை எதுவுமற்ற, வரட்டுத்தனமான கொச்சைத்தனமான எதிர்வாதம் வைக்கப்படுகின்றது.
எமது நடைமுறை படுகொலை அரசியலுக்கு ஏற்ப, இருக்கின்ற கருத்து வடிவங்கள் தான் இவை. எமது நடைமுறை அரசியல் என்ன? இரண்டு பாசிசம், அது கொண்டுள்ள படுகொலை அரசியல் தான் பொது நடைமுறை அரசியல். இதை எதிர்த்து கருத்துத்தளத்தில் யார் எப்படி உள்ளனர். உண்மையில் இதில் ஒன்றை ஆதரிப்பதும், அனுசரித்துச் செல்வதும் தான், ஊடாகவியலாகவும் கருத்துத்தளமாகவும் உள்ளது. பானையில் இருந்தால் தான், அகப்பையில் வரும்.
மாற்றுக் கருத்து, விவாதம், விமர்சனம் என எதுவாக இருந்தாலும், இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. விளைவு போராட்டம், தேசியம், விடுதலை, ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம், தனக்குரிய அர்த்தத்தையே இழந்துவிடுகின்றது. இதனால் இவை மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. ஊடகவியல் முதல் கருத்துத் தளங்கள் வரை, இப்படி இதற்குள் புதையுண்டு கிடக்கின்றது.
விளைவு பினாற்றுவது, பீற்றுவது, கொசிப்பது, கொச்சைப்படுத்துவது, வம்பளப்பது, வாய்ப்பந்தல் போடுவது, அரட்டை அடிப்பது, திரிப்பது, சேறடிப்பது, தூற்றுவது என்று விதவிதமாக மக்களுக்கு எதிராக கருத்துத்தளத்தில் பேலுகின்றனர். இதையே இவர்கள் மாற்றுக் கருத்து, விவாதம், விமர்சனம், கருத்துச் சுதந்திரம் என்கின்றனர்.
தேசியம் முதல் ஜனநாயகம் வரை எப்படி தனக்குரிய அர்த்தத்தை இழந்து, அது பாசிசமாக புளுத்துக் கிடக்கின்றதோ, அப்படித்தான் விவாதங்கள் கருத்துத்தளங்களும் காணப்படுகின்றது. மக்களுக்காக எந்த சிந்தனையும், சிந்தனை முறையும் பாசிசத்துக்கு வெளியில் வைக்கப்படுவது கிடையாது. உண்மையில் இங்கு மாற்றுக்கருத்து கிடையாது. பாசிச சிந்தனை முறைதான் எங்கும் எதிலும் உண்டு. பாசிசம் கொண்டுள்ள சமூக பொருளாதார அரசியலுக்கு வெளியில், மக்களுக்கான சமூக பொருளாதார மாற்று அரசியல் எதுவும் கிடையாது. யாரும் அதை வைப்பதும் கிடையாது.
விளைவு இணையத்தில் பொழுதுபோக்குவோர் சற் பண்ணுவது போல், வரிக்கு வரி அதை கற்பழிக்கின்றனர். இதை விவாதம், விமர்சனம் என்று கூறுகின்றனர். இந்தக் கொசிப்பில் ஒரு சமூகப் பார்வை கிடையாது. ஒரு தர்க்கம் கிடையாது. ஒரு நியாயம் கிடையாது, ஒரு நீதி கிடையாது. ஒட்டுமொத்த சமூகப் பார்வை கிடையாது. மாறாக பாசிச லும்பன்தனத்தையே, தனது அறிவாக நம்புகின்ற முட்டாள்தனம் உருவாகின்றது.
இந்த முட்டாள்தனத்தின் பின் இருப்பது எது? சமூக விரோதிகளினதும், பொறுக்கிகளினதும் ஒழுக்கக்கேடு தான். அதாவது இரண்டு பாசிசத்தின் பின், பலவிதத்தில் பிழைக்கின்ற சமூக விரோதக் கூட்டம் தான். பாசிச பாதம் தாங்கிகளின் வக்கிரம் தான் கொட்டுகின்றது.
இது மாறி மாறி திலகமிட்டு, அதாவது தமது சொந்த எதிர்மறை ஒழுக்கக்கேட்டை நேராக்கி ஒழுக்கமாக்குகின்றது. இது ஊடகவியல் முதல் கருத்திடுபவர்களிடையே உள்ள, அடிப்படையான ஒழுக்கப்பண்பாக உள்ளது.
ஒற்றை வரியில் அதை இதுவென்பது இதை அதுவென்பது, கண்ணை மூடி நியாயப்படுத்துவது, கண்ணைப்பொத்தி அடிப்பது, ஒன்றுக்கு பதில் இதுவென்பது, இப்படி தான் ஊடகவியல் முதல் கருத்துத்தளம் வரை, பாசிசம் விதவிதமாக தலைவிரித்தாடுகின்றது. மனிதப் பண்பும், அறிவும், நேர்மையுமற்ற வகையில் கருத்திடுவது, பாசிசத்தின் அளவுகோலாக உள்ளது. ஒற்றை வரியில் மறுப்பது, பாசிசம் கொண்டுள்ள சமூக செல்வாக்கைக் காட்டுகின்றது. இப்படி பாசிசத்தில் ஊடகவியல் முதல் கருத்துத்தளம் வரை, மொத்தத்தில் பாசிசமாகவே மிதக்கின்றது.
பாசிட்டுகள் நிறைந்த ஊடகவியல் பொதுக் கருத்துத்தளமாக, மனித விரோத சிந்தனைகள் விதைக்கப்படுகின்றது. இது மாபியாத் தனமும், சமூக விரோதிகளும்;, பொறுக்கிகளும் நிறைந்து, ஒரு பொது ஊடகவியலாகிவிடுகின்றது. இதற்கு அப்பால் அதனால் சிந்திக்கவும், செயலாற்றவும், வழிகாட்டவும் முடிவதில்லை.
பாசிசத்தை எதிர்க்காது, அதனுடன் அனுசரித்து செல்லுவதே அறிவாகவும், மனித அறமாகவும் கூட கருதுகின்றனர். தாம் இப்படி ஏதோ ஒரு வழியில் ஆதரிக்கும் பாசிசக் கருத்தை, தர்க்க ரீதியாக நியாயப்படுத்த முடியாத போது, படுகொலை அரசியல் வடிவில் கருத்துத்தளத்தை கையாளுகின்றனர். இதற்கு ஏற்ப இணையங்கள், கருத்துத்தளங்கள் உருவாக்கப்படுகின்றது.
மக்களுக்காகப் பேசாத, பேச முடியாத இந்த ஊடகவியல் முதல் கருத்துத்தளங்கள் வரை, அனைத்தும் பாசிசத்தில் படுத்துப் புரளும் பாசிசப் பன்றிகள் நிறைந்த ஒன்றாக உள்ளது. இதை இனம் காண்பதும், இதை அம்பலப்படுத்துவதன் மூலமும் தான், உண்மையான மாற்றுச் செயல்தளத்தை, மக்களுக்காக உருவாக்க முடியும்.
பி.இரயாகரன்
06.07.2008