தமிழ் மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கும், தமக்கிடையில்  ஐக்கியப்படுவதற்கும் எதிராகத்தான், இயக்கங்கள் ஆயுதமேந்தின. இதுவே உட்படுகொலைகளில் தொடங்கி இயக்க அழிப்புவரை முன்னேறி, அதுவே துரோகமாகவும், ஒற்றைச் சர்வாதிகாரமுமாகியது. புலிச் சர்வாதிகாரத்தை எதிர்த்தோர், அரச கூலிப் படைகளாகியுள்ளனர். மக்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புரட்சியை நியாயப்படுத்தத் தான், தேசியம் ஜனநாயகம் என்ற வார்த்தைகளை; இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 

இவர்கள் ஆயுதத்தை வைத்திருப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்த ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிளவையும், சிதைவையும், அழிப்பையும் தான் மக்களுக்கு பரிசளிக்கின்றனர். இப்படிப் பேரினவாதத்துக்கு துணையாகவே, தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.   

 
இப்படி இவர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்புரட்சியை மூடிமறைக்கவே, அனைத்துத் தரப்பும் முனைகின்றனர். இதனால் தான் மக்களுக்காக நடந்த போராட்ட வரலாற்றை மறுக்கின்றனர். மக்களுக்காக போராடியவர்களை கொன்று போட்டபடி, தாம் அந்த மக்களுக்காகத் தான் போராடுவதாக கூற முனைகின்றனர். மறுபக்கத்தில் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர். இப்படி விதம் விதமாக படம் காட்டுவது, ஒரு திட்டமிட்ட சதிகார அரசியலாகும்.

 

இதன் மூலம் இவர்கள் மறுப்பது, மக்களுக்கான ஒரு போராட்டத்தைத் தான். இதைத்தான் புலியும் புலியல்லாத புலியெதிர்ப்புக் குழுக்களும் செய்கின்றன. இது மட்டுமல்ல, தமது சொந்த எதிர்ப்புரட்சிகர அரசியலையும் மூடிமறைக்க தேசியம் ஜனநாயகம் என்று முகமூடி போடுகின்றனர்.  அடிக்கடி எப்போதும் புது வேஷம் போடுகின்றனர்.

 

புலி, புலியெதிர்ப்பு முதல், ஏன் இதைச் சுற்றி இயங்குபவர்கள் அனைவரும், கடந்தகால போராட்டத்தை மறுப்பதில் இருந்து தான் தமது எதிர்ப்புரட்சியைத் தொடங்குகின்றனர். மக்களுக்காக போராடி மடிந்த மனித வரலாற்றின் மீதே, திட்டமிட்டு ஒரு இருட்டடிப்பைச் செய்கின்றனர். மக்களுக்காக நடந்த கடந்தகால போராட்ட அரசியல் அடிப்படைகளை மறுப்பதே, இவர்களின் முதல் அரசியல் நகர்வாகின்றது. இவர்கள் திடீர் திடீரென எதைப் பற்றிப் பேசுகின்றனரோ, அதையொட்டிய மக்கள் போராட்ட மரபும் வரலாறும் ஒன்று உண்டு. ஆனால் இதை எப்போதும் இல்லாத ஒன்றாக, இட்டுக்கட்ட முனைகின்றனர்.

 

மக்களுக்கான போராட்டத்துக்கான தியாகங்கள் என்பது, மக்கள் போராட்டம் அழிக்கப்பட்ட வரலாறாகும். மக்களுக்காக மரணித்தவர்களுக்கு இன்றுவரை அஞ்சலிகள் இல்லை. மக்களின் எதிரிகளான துரோகிகளுக்குத் தான் அஞ்சலிகள். இது தேசியத்தின் பெயரிலும், ஜனநாயகத்தின் பெயரிலும் அரங்கேறுகின்றது.

 

மக்களுக்காக போராடியவர்களை அன்றும் இன்றும் கொன்றவனின்; அரசியல் நோக்கத்துடன், இன்றைய அரசியல் போக்குகள் பொருந்திப் போகின்றது. அன்று மக்களுக்காக போராடியவர்களை வேட்டையாடியவர்கள் தான், இன்றும் மக்கள் போராட்டமோ நடைமுறை சாத்தியமில்லை என்கின்றனர். இவர்களின் அரசியல் அன்றும் இன்றும் மாறவில்லை, மாறவிடவில்லை. 

 

மக்களுக்காக போராடியதால் கொல்லப்பட்டவர்கள் முதல் இன்று போராடுபவர்கள் வரை, அன்றும் இன்றும் ஒரேவிதமாக தூற்றப்படுகின்றனர். மக்கள் போராட்டத்தையே திட்டமிட்ட வகையில், இவர்கள் இருட்டடிப்பு செய்கின்றனர்.

 

இந்த நிலையில் தான், நான், நாங்கள் மட்டும் அந்த தியாகிகளிள் அரசியலை முன்னிறுத்துகின்றோம். அவர்களின் தியாகங்களை நான், நாங்கள் மட்டுமே போற்றுகின்றோம். இதைத்தான் நான், நாங்கள் என்ற அரசியல் முன்மொழிவூடாக மிகத் தெளிவாக  முன்வைக்கின்றோம். வரலாற்றில் இதை நான் நாம் உரிமை கோருவது என்பது, இதிலும் செய்ய முனையும் புதிய திரிப்பைத் தடுப்பதற்காகத் தான். 

 

இதற்குள்ளும் திரிபை செய்ய முனைகின்ற புதிய அபாயங்கள், பல கோணத்தில் தோன்றியுள்ளது. ஏற்பட்டு வரும் அரசியல் வெற்றிடத்தில், மக்கள் விரோத  புல்லுருவிகள் பல வேஷத்தில் தோன்றுகின்றனர். அவர்கள், நான், நாங்கள் உரிமை கோரும் போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்தபடி தான், புதிதாக மக்களின் பெயரில் நிலைக்க முனைகின்றனர். தாம் மக்களுக்காக போராடப் போவதாகக் காட்ட முனைகின்றனர்.    

 

இந்த வகையில் புலி மற்றும் அரசுடன் நிற்பவர்கள் மட்டுமல்ல. இன்று திடீர் திடீரென மூன்றாவது பாதை பேசுகின்றவர்களும், திடீர் மக்கள் விடுதலை பேசுகின்றவர்களும், திட்டமிட்ட வகையில், கடந்தகால நிகழ்கால போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்தபடி தான், அரங்கில் நுழைகின்றனர். இதுவே இயல்பாக, இதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியைக் காட்டுகின்றது. நேர்மையற்ற அவர்களின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இன்று புலி, புலியெதிர்ப்பு, மற்றும் இதற்கு வெளியில் இது அவதாரம் பெறுகின்றது. 

 

புலி, புலியெதிர்ப்பு மற்றும் திடீர் மூன்றாவது பாதைக்காரர்களை ஆதரிக்கும் தேசப் புல்லுருவிகளோ, மக்கள் போராட்டம் என்பதே இரயாகரனின் 'புனைவு" என்றனர். மக்கள் போராட்டத்தை 'புனைவு" என்றவர்கள் தான், மக்கள் பற்றியும் பேசுகின்றனர். இங்கு புலி, புலியெதிர்ப்பு மற்றும் மூன்றாவது பாதையின் வேஷங்கள் வெறும் சொற்களில் வேறுபடுகின்றது. மக்கள் போராட்டம் என்பது வெறும் 'புனைவு" என்பவர்கள், தேசத்தில், கன்னை பிரித்து விளையாடுகின்றனர். இதுதான் எங்குமுள்ள பொதுவான அரசியல் நிலை. 

 

இந்த மக்கள் போராட்டம் என் பெயராலேயே இன்று இனம் காணப்பட்டு இருக்கின்றது. இதற்காக கடந்த 10, 20, 30 என ஒவ்வொரு பத்தாண்டிலும், நான், நாங்கள் நீண்ட ஒரு விடாப்பிடியான ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். இன்று இதை மறுத்து, இதை விழுங்கிவிட எதிர்புரட்சிக் கும்பல்கள்  முனைகின்றது. கடந்தகால, நிகழ்காலப் போராட்டத்தைக் கண்டும் காணாது இருக்கவும், அதைப் பற்றி அபிப்பிராயமின்றி வேஷம் போட்டு நடிக்க முனைகின்றனர்.

 

இப்படிப்பட்டவர்கள் யாரும், இந்த அரசியல் வழிக்காக உண்மையாக இருக்கவும், போராடவும் கூட முடியாது. கடந்த கால போராட்டத்தையும் நிகழ்கால போராட்டத்தையும் கண்டும் காணாத மாதிரி நடித்தபடி, தாம் இதற்காக போராடுவதாக கூறுவதே ஒரு திட்டமிட்ட சதி அரசியலாகும்.

 

உண்மையில் மனிதர்களின் போராட்ட வரலாற்றை மறுப்பதன் மூலமும், மறைப்பதன் மூலமும்,  அவர்கள் தாம் அரசியலில் நேர்மையற்றவர்கள் என்பதை சொல்ல முனைகின்றனர். அவர்களின் அரசியல் நோக்கத்தில் உண்மையில்லை என்பதையும், தாமும் போலிகள் தான் என்பதையே, இதன் மூலம் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். 

 

மனிதனுக்காக போராடிய வரலாற்றை மறுக்கும் போது தான், ஜனநாயக கோசம் மீள மீள திரிபுறுகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, அந்த மக்களின் சமூக பொருளாதார விடுதலையை அடிப்படையாக கொண்டே எழுந்தது. இது தனக்குள்ளான சகல சமூக முரண்பாடுகளையும் களைந்த, ஒரு ஐக்கியப்பட்ட மனித விடுதலைக்கான போராட்டத்தைக் கோரியது. ஆனால் அன்று முதல் இன்று வரை, அனைத்துத் தரப்பும் இதை மறுத்தனர், மறுக்கின்றனர் என்பதே எதார்த்த உண்மை. நான், நாங்கள் மட்டும் தான், சகல சமூக முரண்பாட்டையும் களைந்த, ஒரு ஐக்கியப்பட்ட மனித விடுதலையைக் கோருகின்றோம்.

 

முரண்பாடுகளைக் களைந்த, ஒரு ஐக்கியத்துக்கான மக்கள் அரசியலை முன்னிறுத்துகின்றோம். ஒரு தொடர்ச்சியான இடைவிடாத இந்தப் போராட்டத்தில், எமக்கு வெளியில் யாரும் கிடையாது. மாறாக எங்கும் எதிர்ப்புரட்சி அரசியல் தான், அரங்கில் பல்வேறு கோசத்துடன் இயங்கின. ஏன் இன்றும் இயங்குகின்றது. இந்த வரலாற்றை நாம் திரும்பிப்  பார்ப்பதன் மூலம் தான், புதிய வேஷதாரிகளை இனம் காணவுதவும்.

 

பி.இரயாகரன்
05.07.2008

 

தொடரும்