Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள உத்தப்புரத்தில் கொடிக்கால் பிள்ளை எனும் சிறுபான்மை ஆதிக்க சாதியினர், ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகக் கட்டி இருந்த சுவர், கடந்த 18 ஆண்டுகளாக ஆதிக்க சாதித் திமிரின் அடையாளமாய் இருந்து வந்தது. 


 தலித் விடுதலையை முன்னிறுத்தி டஜன் கணக்கில் கட்சிகளும் இயக்கங்களும் இயங்கி வந்தபோதும், அச்சுவரினை இடித்துத் தள்ள எவரும் முன்கை எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின் இளைய தலைமுறையினர், இந்த அவமானச் சுவரை வீழ்த்தியே தீருவது என்பதில் உறுதியாய் நின்றனர். இப்பிரச்சினையைக் கையில் எடுத்த சி.பி.எம். கட்சி ""தீண்டாமைச் சுவரை இடிப்போம்'' எனும் முழக்கத்தின் கீழ் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை உத்தப்புரத்திற்கு வரவழைத்தது. இதனால் பிரச்சினையின் தீவிரம் ஊடகங்கள் வழியே இந்தியா முழுவதும் பேசும் பொருளாகி விட்டதால், அரசு தலையிட்டு, 300 அடி சுவற்றில் வெறும் 15 அடிக்கு மட்டும் இடித்தது. உத்தப்புரத்தை உத்தமபுரமாக்கி விட்டதாக அரசு அறிவித்தும் விட்டது. சி.பி.எம். கட்சியும் இதனை மாபெரும் சாதனை என்றும், தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினையில் தங்களுக்குத்தான் பெரிதும் அக்கறை உள்ளதென்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.


 இப்பிரச்சினை மனித உரிமைக் கமிசன் வரை சென்றுவிட்டதால்தான் அரசு சுவரை இடிக்க முன்வந்தது. இதே அரசுதான் தீண்டாமையின் சாட்சியமாக இன்னமும் நீடித்து வரும் இரட்டைக் குவளைகளை அடித்து நொறுக்கிய பெரியார் தி.க.வினரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.


 தாழ்த்தப்பட்டோர் கடவுளான கருப்பசாமியை வழிபடக் கரகம் எடுக்கும் முன், அவர்களின் முன்னோர்கள் நட்டுவைத்த அரச மரத்தை வணங்கி வருவது உத்தப்புரத்தில் நீண்ட நெடுங்காலமாய் இருந்து வந்த மரபு. கொடிக்கால் பிள்ளை சாதியினரின் குலதெய்வமான முத்தாலம்மன் கோயிலுக்கு நேர் எதிரில் இருக்கும் இந்த அரச மரத்தை வணங்க வரும் தாழ்த்தப்பட்டோரால் தங்கள் சாமியே தீட்டுப்பட்டு விடுகிறது என்று 1989ஆம் ஆண்டில் இவ்வழக்கத்தை எதிர்த்து சாதிவெறியர்கள் தகராறை ஆரம்பித்தனர். இதுதரப்பிலும் மாறி மாறி நடந்த தகராறு, கட்டைப் பஞ்சாயத்து மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோரை மிரட்டி போலீசுத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 23 பேர்கள் சாட்சியாக ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அரச மரம் இருக்கும் பகுதிக்குள் தாழ்த்தப்பட்டோர் வரவே கூடாது என்றும் மரத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டுவதென்றும், இன்னும் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் பல அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டோர்  மூவரை மிரட்டிக் கையெழுத்து வாங்கினர். அதே 1989ஆம் ஆண்டில்தான் தீண்டாமைக்கெதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தீண்டாமையை ஆதரிக்கும் ஒப்பந்தத்தினை உருவாக்கிய அதிகாரிகள் அத்தனை பேரையும் கம்பி எண்ண வைத்திருக்க முடியும். ஆனால், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியே போலீசு நிலையத்தில்தான் வைக்கப்பட்டிருந்தது!


 அதே ஆண்டு பேருந்து விட்டு இறங்கிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், தனது தெருவுக்குச் செல்ல அரச மரம் இருக்கும் பிள்ளைமார் தெருவழியாக நடந்து சென்றபோது, பிள்ளைமார் சாதி வெறியர்களால் கல்லால் அடித்து விரட்டப்பட்டார். அதுவரை அடிவாங்கியே அடங்கிக் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இம்முறை திருப்பித் தாக்கினர். இருதரப்பிலும் அடுத்தடுத்து கொலைகள் விழுந்தன. போலீசோ தாழ்த்தப்பட்டோர் மீது மட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இருவர் உயிரிழந்தனர். இருப்பினும், தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறிக் கொண்ட பிள்ளைமார் சாதியினர் மாவட்ட கலெக்டர், தாசில்தார், ஆர்டிஓ அனுமதியின் பேரில் தங்கள் குடியிருக்கும் தெருக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழையக்கூடாது என்று சுவர் எழுப்பி பொதுப் பாதையை மறித்தனர். அதில் அண்மையில் மின்சார வேலியையும் அமைத்தனர்.


 ""இந்து'' பத்திரிக்கையில் மின்வேலி அமைக்கப்பட்ட செய்தி வெளியானவுடன், சட்டசபையில் சி.பி.எம். கட்சி உரிமைப் பிரச்சினையை எழுப்பியது. உடனே அமைச்சர் ""மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது'' என்று பதிலளித்து, ஏதோ இது மின்சாரத் திருட்டு விவகாரம் போலப் பூசி மெழுகினார். கருணாநிதியோ ""பாதையும் விடுகிறோம். பாதுகாப்பும் தருகிறோம்'' என்று இருதரப்பினரின் ஓட்டுக்களையும் கணக்குப் போட்டபடி பேசினார்.


 சட்ட வரம்புக்கு உட்பட்டு அரசு நிலத்தில் அமைந்திருக்கும் 15 அடி சுவரை மட்டும் இடித்து விடுவதென அரசு முடிவெடுத்து இருதரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தியது. பிள்ளைமாரோ, தீண்டாமைச் சுவரை இடித்தால் தங்களது ரேசன் கார்டுகளை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு மலைப்பகுதிக்குக் குடியேறி விடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறு சாதித் திமிரோடு பேசியவர்களைத் தண்டிக்க வேண்டிய அரசு, அவர்களிடம் கெஞ்சியது.


 சுவரை இடித்தவுடன், குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போல உத்தப்புரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவிலுள்ள தாழையூத்து மலைக்குச் சென்று பிள்ளைமார் சாதியினர் தங்கிக் கொண்டனர். உத்தப்புரத்து ஒடுக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் காடு திருத்தி உருவாக்கியிருந்த தோட்டம்துரவுகளை அழித்தனர். அவர்களின் ஆடுகோழிகளைத் திருடித் தின்றனர். பத்திரிக்கைகளோ, பிள்ளைமார்களின் குழந்தைகள் குளிரில் வாடுவதாகவும், காய்ச்சல் கண்டு அவதியுறுவதாகவும் "நெஞ்சை உருக்கும்' செய்திகளை வெளியிட்டன. பிற்படுத்தப்பட்ட சகல ஆதிக்க சாதியினரும் பிள்ளைமாருக்கு ஆதரவாகத் திரண்டனர். மதுப்புட்டி, கறி விருந்துடன் நடந்த இக்கேளிக்கைக்கு டாக்டர். சேதுராமனின் "அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்' அரிசி, விறகு போன்றவற்றை அன்பளிப்பாக அளித்தது. மதுரை, தேனி மாவட்டங்களில் இருக்கும் "மகாஜன' சங்கங்கள் பணம் வசூலித்து, உத்தப்புரத்திலிருந்து கோபித்துக் கொண்டு போன காட்டுமிராண்டிகளுக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரை ""மொய்'' எழுதின. தி.மு.க., காங்கிரசு முதல் நேற்று முளைத்த விஜயகாந்த் கட்சி வரை அனைத்து ஓட்டு கட்சிகளும் ரகசியமாய் பிள்ளைமார்கள் சங்கத்துக்குத் தூது விட்டன.


 சுவர் இடிக்கப்பட்டவுடன் உத்தப்புரத்தைச் சுற்றி இருக்கும் ஊர்களைச் சேர்ந்த பிற ஆதிக்க சாதியினருக்குப் பொறுக்கவில்லை. திட்டமிட்டு அவர்களே தேவர் சிலையை அவமதித்துக் கலவரத்தைத் தூண்ட முயன்றனர். கோடங்கி நாயக்கன்பட்டியில் தேவர் சிலையில் சாணியைக் கரைத்து ஊற்றியவர்களே சாலைமறியல் செய்து தாழ்த்தப்பட்டோரைக் கைது செய்யக் கோரினர். மோப்ப நாய் வருகிறது என்ற செய்தி அறிந்ததும் அவசர அவசரமாக சிலையைக் கழுவி விட்டுப் பூசை நடத்தத் தொடங்கிவிட்டனர்.


 ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன் தொழு கிராமத்தில் தேவர் உருவப்படம் அவமரியாதை செய்யப்பட்டு விட்டதென்று குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சாலைமறியல் செய்தார்கள். அதிகாரிகள் வந்து சாமாதானம் செய்ய முயன்றபோது தேவர் சாதி வெறியர்கள், "பொதுச் சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரின் பிணத்தை எரிக்க அனுமதிக்கக் கூடாது', "அவர்களுக்குத் தனியாகச் சுடுகாடு ஏற்படுத்த வேண்டும்' என்றும் "திருவிழா, திருமணங்களில் தாழ்த்தப்பட்டோர் வெடி வெடிக்கக் கூடாது' என்றும் புதிய கோரிக்கைகளை வைத்தார்கள். தீண்டாமையை ஆதரிக்கும் இக்கோரிக்கைகளுக்கு அதிகாரிகளும் ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.


 அரசுதான் இப்படியென்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி டாக்டர் கிருஷ்ணசாமியோ "தென் தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கவும் அதில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பலிகடா ஆக்கவும் தொடர்ந்து சாதியச் சகதிக்குள் சிக்க வைக்கவும், அதன் மூலம் நிரந்தரமாக அவர்களைத் தனிமைப்படுத்தவும் சில சுயநல அரசியல் சக்திகள் செய்யும் சதியாகும்' என்று அறிக்கைவிட்டார். அதே கிருஷ்ணசாமியின் மகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் முக்குலத்தோர் சாதிப் பிரமுகர்களாக அறியப்படும் நடிகர் கார்த்திக்கும், (சசிகலா) நடராசனும் கலந்து கொண்டு, உ.பி. பாணியில் அனைத்து சாதிக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் கனவில் மிதந்து கொண்டிருந்தனர். பதவிக் கணக்கில் மிதக்கும் கிருஷ்ணசாமியின் "சாதி இழிவை ஒழிக்கும் போராட்டப்பாதை' இதுதான்.


 பாரதத்தின் அவமானச் சின்னம் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்த இந்துமதவெறிக் கட்சிகளின் கண்ணில், உத்தப்புரத்துச் சுவர் உறுத்தவே இல்லை. இந்துக்களின் ஒற்றுமை பேசும் இல.கணேசனோ, ராம.கோபாலனோ இதனைக் கண்டித்து வாயைத் திறக்கவேயில்லை.


 உத்தப்புரத்தில் சட்டவிரோத ஒப்பந்தத்தை 1989இல் உருவாக்கியவர்களை "பெரிய மனிதர்கள்' என்று சொல்லி புளகாங்கிதம் அடையும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பழைய செய்தித்தாள்களை எல்லாம் ஒன்றுவிடாமல் தேடி, எங்குமே தீண்டாமை பற்றி எழுதப்படவே இல்லை என்று சொல்லி இருக்கிறார். ""ஏன் சி.பி.ஐ. இந்த விசயத்தில் போராடவில்லை?'' எனக் கேட்பவர்களுக்கு ""நான் அசைவன் எனக் காட்டிக் கொள்ள எலும்புகளைத் தொகுத்து மாலை போட்டு ஆட வேண்டிய தேவையில்லை'' எனத் தெனாவட்டாகக் கட்டுரை எழுதுகிறார். மேலும் அவ்வூரில் உண்மையைக் கண்டறியக் குழு அமைத்து, அங்கு நில வுவது "ஆன்மீகப் பிரச்சினை' என்ற மாபெரும் கண்டுபிடிப்பை அறிவித்திருக்கிறார். "அமைதி'யாக இருந்த ஊரில் அதே அமைதி தொடர வேண்டும் என்பதற்காக உத்தப்புரத்திற்கு ஒருமுறை பயணமும் செய்தார்.


 தா.பாண்டியன் விரும்பும் அதே அமைதியைத்தான் பிள்ளைமார் சங்கத் தலைவர் முருகேசனும் விரும்புகிறார். ""பல அப்பாவி தலித்துகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் சகோதர சகோதரர்களாகத்தான் வாழ விரும்புகிறார்கள். சில சமூக விரோதிகள்தான் தலித்துகளைத் தூண்டி விடுகின்றனர்'' என்று கூறும் முருகேசனின் விருப்பமெல்லாம் என்றென்றைக்கும் தலித்துகள் அப்பாவிகளாகவே இருக்க வேண்டும் என்பதே. அவர்கள் அப்பாவிகளாக இருக்கும் வரை "அமைதி' இருக்கும். இந்த அமைதியைத்தான் வலது கம்யூனிஸ்டு  தா.பாண்டியனும் விரும்புகிறார்.


 சாதி ஒழிப்பிற்காகவே இயக்கம் கண்ட திராவிடர் கழகம், சாதித்திமிர் பிடித்த பிள்ளைமார்களைச் செல்லமாகக் கண்டித்து தலையங்கம் எழுதியது. அச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளாத தி.க., ""சுவரை ஏதோ கோபத்தில் எழுப்பி இருக்கக் கூடும்'' என விளக்கம் கொடுத்தது. ரேசன் கார்டுகளை ஒப்படைத்துவிட்ட பிள்ளைமார்களுக்கு புத்திமதி சொல்லித் திருத்த ""பிள்ளைமார் சமூகத்தில் படித்தவர்கள், அதிகாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்கள் கடமையினைச் செய்ய முன்வரவேண்டும்'' என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் உத்தியைச் செயல்படுத்த பிள்ளைமாரில் முற்போக்காளர்களைத் தேடி அலைந்து அலுத்துப்போனது.


 சி.பி.எம். மட்டும் இந்தப் பிரச்சினையில் கறாராக இருக்கிறதா?


 சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், மலைக்குப் போன சாதிவெறியர்களுக்கு முதுகில் மயிலிறகால் வருடி விட்டபடி ""அரசின் முடிவு புத்திசாலித்தனமானது. அதை சாதி இந்துக்கள் வரவேற்கணும். இப்போதைக்கு மனக் கிலேசம் இருந்தாலும் நாளடைவில் அது சரியாகிவிடும். அவர்கள் திரும்பி வரவேண்டும். சுமுக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்'' என அன்பு கட்டளை இட்டு இரண்டு பேருக்கும் நல்லபிள்ளையாகப் பேர் எடுக்க முயன்றார். உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு ஆதரவாகக் கடப்பாரையைக் கையில் எடுத்த அன்னாரின் தலைமையோ, பசும்பொன்னில் தேவர் சமாதியில் வைக்க மலர்வளையத்தைக் கையில் எடுத்தது. மதுரையில் தேவர் நூற்றாண்டு விழாவில் பா.ஜ.க.வின் திருநாவுக்கரசருடன் சி.பி.எம்.இன் "முற்போக்கு' எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மேடை ஏறினார். இவர்களின் இந்தப் பித்தலாட்டத்தை உத்தப்புரம் பிள்ளைமார்களே ""இரட்டை டம்ளர் முறையை தென்னாடு முழுக்கக் கடைப்பிடிக்கும் முக்குலத்தோருக்கு எதிராக சி.பி.எம். கட்சி இயக்கம் எடுக்க முடியுமா?'' எனக் கேட்டுத் தோலுரிக்கின்றனர்.


 தடி நோகாமல் பாம்படிக்கும் வித்தையை சி.பி.எம்.மிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.


 தமிழகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடூரத்துக்கு இன்னுமொரு சாட்சியம்தான் உத்தப்புரம். அது அம்பலத்திற்கு வந்த பின்னரும் இத்தீண்டாமைக் குற்றத்திற்காக ஒரு ஆதிக்க சாதிவெறியனைக் கூட கைது செய்யாமல், கைகட்டி நின்று கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டு தனது ஆதிக்க சாதி விசுவாசத்தைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது தமிழக அரசு. தீண்டாமைக்கெதிராக சவடால் அடிக்கும் ஓட்டுக் கட்சிகளோ வெளிப்படையாகவே ஆதிக்க சாதிவெறியர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்றன; மவுனம் சாதிக்கின்றன; அல்லது பாதிக் கிணறு தாண்டிவிட்டு பதுங்கிக் கொள்கின்றன.


 இத்தகைய பிழைப்பவாத ஓட்டுக் கட்சிகளையும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் அரசையும் அம்பலப்படுத்தி வீழ்த்தாமல், தீண்டாமைக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவே முடியாது என்பதை தமிழகத்துக்கு உணர்த்திக் கொண்டு நிற்கிறது, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்.


·  சம்புகன்