Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 மக்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதும், முன்னணியாளர்களைப் பழிவாங்குவதும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களே இதற்கு இரத்த சாட்சியங்களாக உள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட நிர்பந்தத்தால், தற்காலிகமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, போராடிய மக்களை எப்படியெல்லாம் பழிவாங்கி ஒடுக்குவார்கள், போராட்ட ஒற்றுமையை எப்படியெல்லாம் சீர்குலைப்பார்கள் என்பதற்கு தமிழகம் புதிய சாட்சியமாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில், மதுரை மாவட்டம் வலையங்குளம்  எலியார் பத்தி முதலான கிராமங்களில் போலீசும் அதிகார வர்க்கமும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இதை நிரூபித்துக் காட்டுகிறது.


 மதுரை  தூத்துக்குடி நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள  வலையங்குளம், எலியார்பத்தி, பாறைப்பத்தி, சோளங்குருணி ஆகிய கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தி சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய பகுதியாக இக்கிராமங்கள் நீடித்த போதிலும், இக்கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு விவசாயமே வாழ்வுக்கான ஆதாரமாக உள்ளது. நிலக்கடலை, வாழை, காய்கறிகள், தென்னை, சப்போட்டா, நெல்லி முதலானவற்றோடு மல்லிகை இங்கு பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.


 இந்த விளைநிலங்களை தரிசு நிலங்கள் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவத் துடிக்கிறது. நிலங்கள் பறிக்கப்பட்டால் தமது எதிர்கால வாழ்வே இருண்டு விடும் என்பதை உணர்ந்த இவ்வட்டார சிறு விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு போராடத் தொடங்கினர். விவசாயிகளின் போராட்டத்தைத் துச்சமாக மதித்த அரசு, விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான குறிப்பாணைகளை விவசாயிகளுக்கு அனுப்ப ஆரம்பித்தது. வெகுண்டெழுந்த விவசாயிகள் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.


 கடந்த ஆறு மாதங்களாக, நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கும் அரசின் முயற்சிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெறவும், அன்றாடம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல் முதலான போராட்டங்களில் ஈடுபட்டும், பல்வேறு அமைப்புகள்  இயக்கங்களிடம் ஆதரவு திரட்டியும் இக்கிராமங்களின் விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்தி தொடர்ந்து போராடினர்.
 விவசாயிகளின் போராட்ட உறுதியைக் கண்ட மாவட்ட ஆட்சியர், வேறு வழியின்றி 2.5.08 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். விவசாய சங்கப் பிரதிநிதிகளோடு மனித உரிமை பாதுகாப்பு மையம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்களும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறிய மாவட்ட ஆட்சியரான எஸ்.எஸ்.ஜவகர், போராட்டங்களைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று விவசாயிகளை எச்சரித்தார். இக்கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அரசு அறிவித்தது.


 விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால் கிடைத்த இந்த முதற்கட்ட வெற்றியின் மகிழ்ச்சியை இக்கிராம மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்குள்ளாகவே, இடியென இறங்கியது போலீசு அடக்குமுறை. 6.5.08 முதலாக இக்கிராமங்களில் சாதிக் கலவரம் மூண்டு வன்முறை பெருகியதாகவும், அதைத் தடுக்கச் சென்ற போலீசாரை கிராம மக்கள் தாக்கி போலீஸ் ஜீப், மோட்டார் சைக்கிள்களைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், பல போலீசார் படுகாயமடைந்ததாகவும் நாளேடுகள் செய்திகள் வெளியிட்டன.


 அதைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒருவார காலத்துக்கு இக்கிராமங்களைச் சுற்றி வளைத்து போலீசார் வெறியாட்டம் போட்டனர். ஆளுயர தடியுடன் வந்திறங்கிய கூடுதல் போலீசுப்படை வீடுவீடாகப் புகுந்து தாக்கத் தொடங்கியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கூட கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். பள்ளிகல்லூரிகளில் படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்துப் போராடிய விவசாய சங்கத் தலைவர்களைக் குறிவைத்து போலீசுப் படை வீடு வீடாகத் தேட ஆரம்பித்ததால் அவர்கள் தலைமறைவாகித் தப்பியோடினர். அவர்களை ஒப்படைக்கும்படி குடும்பத்தாரை போலீசு வதைத்தது. இரவு நேரங்களில் திடீரென கிராமங்களில் புகுந்து தாக்கி அச்சுறுத்திய போலீசு, கிராம மக்களின் உடமைகளை நாசப்படுத்தி வெறியாட்டம் போட்டது. உண்மை நிலைமை அறிய இக்கிராமங்களுக்கு சென்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் செயல்வீரர்களை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தது.


 சாதி வேறுபாடுகளைக் கடந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய இக்கிராமங்களில் சாதிக் கலவரம் ஏன்? ஏற்கெனவே இக்கிராமங்களில் சாதியப் பகைமையும் மோதல்களும் நடந்துள்ளனவா? இல்லை. இது சாதிக் கலவரமில்லை; சிறு வாய்த் தகராறையே ஊதிப் பெருக்கி சாதிக் கலவரமாகச் சித்தரித்து, போலீசும் அதிகார வர்க்கமும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய மக்களைப் பழிவாங்கவே திட்டமிட்டு இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளன. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) உண்மையறியும் குழுவினர் இக்கிராமங்களுக்கு நேரில் சென்று நடத்திய விசாரணையின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.


 எலியார்பத்தி கிராமத்தில் கடந்த 4.5.08 அன்று டீக்கடை ஒன்றில் போதையில் இருந்த இரண்டு பேருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, அவ்வூர் பெரியவர்களால் சமரசம் செய்து தீர்க்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சிறுபான்மையாகத் தாழ்த்தப்பட்டோரும் பெரும்பான்மையாக வலையர்கள் எனப்படும் பெரும்பிடுகு முத்தரையர் சாதியினரும் உள்ளனர். சாதிய இழிவு நீடித்தபோதிலும், இருதரப்புக்குமிடையே தகராறுகளோ மோதலோ நடந்ததில்லை. டீக்கடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தீர்க்கப்பட்ட போதிலும், முத்தரையர் சாதி சங்கத் தலைவர் இராசு தலைமையில் சில இளைஞர்கள் தலித் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தினர். அவர்கள் மீது சிறுத்தைகள் கட்சியினர் கூடக்கோவில் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க, அதனடிப்படையில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அடாவடிகளும் போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்தலும் தமிழகமெங்கும் தொடர்கின்றன. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்குத்துக்கு மாறாக, எலியார் பத்தியில் அன்றிரவே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


 மறுநாள் காலை, எலியார்பத்தி கிராம நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் உருவம் பொறித்த போர்டுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து எலியார் பத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பாறைப்பத்தி, சோளங்குருணி, நெடுமதுரை, வலையப்பட்டி, வலையங்குளம் கிராமங்களிலும் முத்தரையர்கள் சாலை மறியல் செய்தனர். உடனே மதுரை மாவட்ட போலீசுத் துறை கண்காணிப்பாளர், தென்மண்டல போலீசுத் துறை இயக்குனர், துணை கண்காணிப்பாளர்கள் என போலீசு உயரதிகாரிகளும் பெரும் போலீசுப் படையும் குவிந்தன. முன்னணியாளர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நாடகமாடிக் கொண்டிருந்த போது, மக்களைச் சுற்றி வளைத்துக் கொண்ட போலீசு, காட்டுமிராண்டித்தனமாக தடியடியில் இறங்கியது. தப்பியோடிவர்களை துரத்திச் சென்று தாக்கியதோடு, வீடு புகுந்து பெண்கள்  குழந்தைகளையும் அடித்து நொறுக்கியது.


 முத்தரையர் போர்டுக்கு செருப்பு மாலை போட்டவர்கள் யார்? இந்த போர்டுக்கு முன்பாக சிந்துப்படி போலீசு ஆய்வாளர் தலைமையில் பெரும் படையாக போலீசார் இரவு முழுவதும் காவல் இருந்துள்ளனர். போலீசுக் காவலை மீறி போர்டுக்கு எப்படி செருப்பு மாலை போட்டு அவமதிக்க முடியும்? அப்படியே போட்டாலும் போலீசு ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை?


 உண்மையில், போலீசு கும்பல்தான் செருப்பு மாலை போட்டு முத்தரையர்களை ஆத்திரமூட்டி, அதைச் சாக்காக வைத்து ஒடுக்கவும், சாதிக் கலவரமாகச் சித்தரித்து அடக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கவும் செய்துள்ளது. இதன்படியே, வலையங்குளம் கிராமத்தில் வீடுகள்  கடைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு, கலவரத் தீ பரவுவதாக பீதியூட்டி, மேலும் பெரும்படையைக் குவித்து, வீடுவீடாகப் புகுத்து தாக்கியுள்ளது. பின்னர், ""போலீசாரைத் தாக்கினர்; போலீசு ஜீப்புக்கு தீ வைக்க முயன்ற கலவரக்காரர்களை துப்பாக்கியால் சுட்டு ஒரு போலீசு ஆய்வாளர் விரட்டினார்; வன்முறை பரவுவதைத் தடுக்க போலீசு தீவிர கண்காணிப்பு; வீடு வீடாக சோதனை; பலர் கைது'' என்று போலீசு கும்பலே கதை எழுதி செய்தியாக வெளியிட்டது. அவற்றுக்கு மசாலா சேர்த்து "நடுநிலை' நாளேடுகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டன.


 மே.வங்கம் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது கட்சிக் குண்டர்களை ஏவி ஒடுக்கியது போலி கம்யூனிஸ்ட் சி.பி.எம். அரசு. சட்டிஸ்கரில் சர்வகட்சி ஆதரவுடன் அரசே ""சல்வாஜுடும்'' எனும் ஆயுதமேந்திய குண்டர் படையைக் கட்டியமைத்து, போராடும் மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்கி வருகிறது. இந்த உத்திகள் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ள நிலையில், செயற்கையாக சாதிக் கலவரம் என பீதியூட்டி, போராடிய விவசாயிகளைப் பழிவாங்கி, போராட்ட ஒற்றுமையைச் சீர்குலைத்து அடக்குமுறையை ஏவும் புதிய உத்தியுடன் புறப்பட்டுள்ளது, கருணாநிதி அரசு. அதை விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிக்காமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதையே எலியார்பத்தி  வலையங்குளம் கிராமங்களில் நடந்துள்ள அடக்குமுறை, புதிய படிப்பினையாக உணர்த்துகிறது.


தகவல்களும் படங்களும்:
மனித உரிமை பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), மதுரை கிளை.