Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான். 


 எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது.  இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.


 தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர்.


 கட்சித் தலைமை இதுபற்றி விசாரித்ததில், கோவிந்தசாமியின் புரோக்கர் வேலையும் கையாடலும் நிரூபணமானதால், வேறு வழியின்றி சி.பி.எம். கட்சியின் சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதியை அப்பதவிக்கு நியமித்துள்ளது. சி.பி.எம். கட்சியின் மாநிலக் குழுவிலிருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை கட்சி அணிகளிடமும் மக்களிடமும் விளக்காமல், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கோவிந்தசாமி இப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சி.பி.எம். கட்சித் தலைமை பூசி மெழுகுகிறது.


 இதுதவிர, கைத்தறி விற்பனைக்காக அரசு தரும் ஊக்கத் தொகையில் சுமார் 40 கோடிக்கு மேல் பொய்க்கணக்கு எழுதி தமிழக அமைச்சர் ராஜா சுருட்டியதாகவும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்ப, தனக்குச் சாதகமான தணிக்கையாளரை நியமிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் பேசுமாறு அமைச்சர் ராஜா, கோவிந்தசாமியைத் தூது அனுப்பியதாகவும், இந்த புரோக்கர் வேலைக்காக கோவிந்தசாமிக்கு உரிய கமிஷன் தரப்பட்டதாகவும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.


 திருப்பூரில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளிகளின் அவலத்தைப் போக்க இந்த எம்.எல்.ஏ. அமைச்சரிடம் பேசவில்லை. எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கும் முதலாளிகளின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடவுமில்லை. மாறாக, தனது வர்க்கப் பாசத்தோடு முதலாளிகளின் கோரிக்கைகளுக்காக ""ரேட்'' வைத்து பேரம்  பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்த "காம்ரேடு'.


 திருப்பூர் எம்.எல்.ஏ.வின் யோக்கியதை இப்படியிருக்க, கோவையில் நில மோசடி செய்து அம்பலப்பட்டு வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார் சி.பி.எம். கட்சியின் கவுன்சிலரான பத்மனாபன். இவர் நிலங்களை வாங்கி அவற்றை வீட்டுமனைகளாக்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் லட்சாதிபதி. கோவை வடக்கு மண்டலத் தலைவராக உள்ள இவர், மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  முக்கியப் புள்ளி.


 கோவை அருகே காளப்பட்டியிலுள்ள மருதாசலம் என்பவரது நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றுத் தருவதாகக் கூறி, தன் பெயருக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொண்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி தன் பெயரிலும் தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் கிரய சாசனம் செய்து கொண்டு, மனைகளைப் பல லட்சங்களுக்கு விற்று மருதாசலத்தை மோசடி செய்துள்ளார் பத்மனாமன். இதற்கெதிராக மருதாசலம் வழக்குத் தொடுக்க, பத்மனாபன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரே இப்படி மோசடியில் ஈடுபட்டதைக் கண்டு கோவை நகர மக்களே காறி உமிழ்கின்றனர். ஆனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது, சி.பி.எம். கட்சித் தலைமை.


 சி.பி.எம். கட்சிக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் பத்மனாபன்களும் தலைவர்களாகவும், பிரமுகர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் மீது பாரதூரமாக நடவடிக்கை எடுத்தால் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்று கட்சித் தலைமை அஞ்சுகிறது. எனவேதான், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறுகிறது.


 மே.வங்கம் சிங்கூர்  நந்திகிராமத்தில் மக்கள் மீதே பயங்கரவாத வெறியாட்டம்; சமூக விரோதிகளே கட்சியின் பிரமுகர்கள்; முதலாளிகளும் ஊழல் பெருச்சாளிகளுமே உள்ளூர் தலைவர்கள் என்று சீரழிவில் புதிய பரிமாணத்தை எட்டி மே.வங்க சி.பி.எம். கட்சி "புரட்சி' செய்து கொண்டிருக்கிறது. அதையும் விஞ்சும் வகையில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, தமிழக சி.பி.எம். கட்சி.


· தனபால்