கடந்த ஜூன் 4ஆம் தேதி பள்ளி கல்வித் துறையின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இருப்பினும், கட்டடம் கட்ட, நாற்காலி வாங்க, புதிய ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, துப்புரவுப் பணிக்காக, 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி குரூப் மாற்றித்தர எனப் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று ஏழை எளிய மாணவர்களிடம் கட்டாயக் கட்டணக் கொள்ளை தொடர்கின்றது.
சென்னைகுரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் 7ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 11ஆம் வகுப்புக்கு ரூ. 2,500, அரசு இலவசமாகத் தரும் பாடப்புத்தகங்களுக்கு ரூ.100 என கடந்த ஆண்டில் பல லட்ச ரூபாயை மாணவர்களிடம் கொள்ளையடித்த நிர்வாகம், இவ்வாண்டு வசூல் வேட்டையை நடத்தியது. இதனையறிந்த புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியினர், ""பெற்றோர்ஆசிரியர் கழகம் எனும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்போம்! சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு முடிவு கட்டுவோம்!'' எனும் முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் இப்பகுதியில் விரிவாகப் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக பெற்றோர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டி 17.6.08 அன்று காலை 11 மணியளவில் பள்ளித் தலைமையாசிரியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெருந்திரளாகப் பெற்றோர்களும் மாணவர்களும் சூழ, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தால் அரண்டு போன பள்ளி நிர்வாகமும் பெற்றோர்ஆசிரியர் கழகப் புள்ளிகளும் இனி நன்கொடை ஏதும் வாங்கமாட்டோம்; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்போராட்டச் செய்தியை அறிந்ததும், மறுநாளே அப்பள்ளியில் சோதனை நடத்தி, மாணவர்களிடம் கட்டாயமாகப் பறித்த தொகையை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நன்கொடை எதுவும் மாணவர்களிடம் வாங்கக் கூடாது என்று அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமணா அறிவித்துள்ளார்.
···
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள வெஸ்ட்லி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்தால்தான் மதிப்பெண் சான்றிதழ் தரப்படும் என்று அடாவடித்தனமாகக் கொள்ளையடித்து வந்தது அப்பள்ளி நிர்வாகம். இச்சட்டவிரோதப் பகற்கொள்ளைக்கு எதிராக வையாபுரி என்ற ஒரு மாணவியின் தந்தை, தன்னந்தனியே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் இப்பகற்கொள்ளையை அறிந்த தஞ்சை பு.மா.இ..மு.வினர், ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு கனகராஜின் சட்டவிரோதக் கல்விக் கொள்ளையை மக்களிடம் அம்பலப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதனால் இப்பயிற்சிப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்களே சேரவில்லை. அரண்டுபோன இக்கல்வி வியாபாரி, 10.6.08 அன்று வட்டாட்சியர் முன்னிலையில், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்து, வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திருப்பித் தருவது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார். என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கொக்கரித்த இக்கல்வி வியாபாரியின் கொட்டத்தை ஒடுக்கிய பு.மா.இ.மு., பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டித் தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு எதிராகவும் இலவசக் கல்வி உரிமைக்காகவும் 20.6.08 அன்று அறந்தாங்கியில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
தகவல்: புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி.