Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்; பல்வேறுவிதமான பொருளாதாரப் பின்னணி கொண்ட உழைக்கும் மக்களைத் தற்பொழுது அச்சுறுத்தி வரும் பிரச்சினை, விலைவாசி உயர்வு. நாட்டை அச்சுறுத்துவதாகச் சொல்லப்படும் முசுலீம் தீவிரவாதம், நக்சல் பயங்கரவாதம் போன்ற ""பூதங்களை''விட, விலைவாசி உயர்வைத்தான், பொதுமக்கள் அபாயகரமானதாகப் பார்க்கிறார்கள்.

 

 அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருவதை எதிர்த்துப் பல நாடுகளில் கலகங்கள் நடைபெறுகின்றன. ஆனால், தமிழகமோ ""அமைதிப் பூங்கா''வாக இருக்கிறது. இந்த அமைதி, தமிழக மக்கள் ""விதிப் பயன்'' என்ற மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப வாழ்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. உணவு, உடை போன்ற அத்தியாவசிய செலவுகளைச் சுருக்கிக் கொண்டு, விலைவாசி உயர்வு என்ற இந்த ""ஏழரை நாட்டுச் சனியனை''ச் சமாளித்துவிட முயலுகிறார்கள், தமிழக மக்கள்.


 மதுரை  அண்ணாநகர் காலனியில் வசித்துவரும் கூலித் தொழிலாளி ரவிக்கு, மாதத்தில் 10 நாட்களுக்கு வேலை கிடைத்தாலே அதிருஷ்டம்தான். வேலை கிடைக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் வேலை தேடிச் செய்வதற்காக, அவர் தனது போக்குவரத்துச் செலவிற்கு இருபது ரூபாயை ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ரவியின் மனைவி ராமத்தாய் பூ வியாபாரம் செய்வதன் மூலம், நான்கு பேர் கொண்ட குடும்பத்தை இழுத்துப் பிடித்து ஓட்டுகிறார்.


 அரிசிச் சோறும், பருப்பில்லாத புளிக் குழம்பும்தான் அவர்களது அன்றாட உணவு. பால், பருப்பு, எண்ணெய் விலைகள் உயர்ந்துவிட்டதால், அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டதாகக் கூறுகிறார் ராமத்தாய்.


 அதே பகுதியில் வசித்துவரும் தனியார் பேருந்து நடத்துனரான கிருஷ்ணனின் தினக்கூலி எழுபத்தைந்து ரூபாய்தான். ""மாதாந்திர செலவுகளைச் சமாளிக்கப் பல நேரங்களில் தனது மனைவியின் நகைகளை அடகு வைப்பதாக''க் கூறுகிறார், அவர்.


 தேனி மாவட்டம், கருநாகமுத்தன் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான பாண்டியனுக்கு மாதத்தில் இருபது நாட்கள்தான் வேலை கிடைக்கும்; அதன் மூலம் ரூ. 2,000/ வருமானம் கிடைத்தாலும், மூன்று பேரப் பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியிருப்பதால், பல நேரங்களில் குடும்பச் செலவைச் சமாளிக்க கந்து வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியிருப்பதாகக் கூறுகிறார், அவர்.


 மற்ற உணவுப் பொருட்களின் விலைகள் எல்லாம் உயர்ந்துவிட்டதால், ரேஷனில் போடப்படும் மலிவு விலை அரிசித் திட்டத்தால் பெரிய பயனேதும் இல்லை என்கிறார், பாண்டியனின் மனைவி புஷ்பம். ரேஷனில் போடப்படும் 20 கிலோ அரிசியைக் கொண்டு மாதத்தில் பாதி நாட்களை ஓட்டும் பாண்டியனின் குடும்பம், மேலும் 20 கிலோ அரிசியை வெளிச் சந்தையில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பேரக் குழந்தைகளுக்காக மிகவும் மலிவான காய்கறிகளை வாங்குவதாகக் கூறும் பாண்டியன், குடும்பச் செலவைக் குறைக்க பால், புதுத் துணிமணிகள் வாங்குவதை ஒதுக்கி வைத்து விட்டார்.


 அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மணி, கட்டிடத் தொழிலாளி இளங்கோவன் ஆகிய இருவரின் வாழ்க்கையும், பாண்டியனின் நிலைமை போலவே இருக்கிறது. தனது குடும்பத்தின் பால் தேவையை 200 மில்லி லிட்டருக்கு குறைத்து விட்டதாகக் கூறும் இளங்கோவன், ""காய்கறி போட்டு குழம்பு வைப்பதற்குப் பதிலாக, வெறும் ரசத்தோடு தங்களின் உணவை முடித்துக் கொள்வதாக''க் குறிப்பிடுகிறார்.


 ""தாழ்த்தப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரை, இரவு உணவு மட்டும்தான் வயிறாறப் பசியைப் போக்குவதாக இருக்கும். இந்த விலைவாசி உயர்வினால், அந்த இரவு உணவைக் கூடக் குறைத்துக் கொள்ள வேண்டிய மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக''க் குறிப்பிடுகிறார், தஞ்சாவூர் மாவட்டம் கரம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி முத்தரசன்.


 நான்கைந்து பேர் கொண்ட சிறிய குடும்பம் கூட, ரேசனில் போடப்படும் 20 கிலோ அரிசியை மட்டுமே வைத்துக் கொண்டு மாதம் முழுவதையும் ஓட்டிவிட முடியாது. தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களைப் பொறுத்தவரை மாதம் முழுவதும் உணவு என்பதே பெரும் போராட்டமாகி விட்டதால், பல குடும்பங்கள் உணவுத் தேவையைச் சமாளிக்கவே கந்து வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைமை காவேரிப் பாசனப் பகுதிகளில் ஏற்பட்டு வருவதாகவும் முத்தரசன் குறிப்பிடுகிறார்.


 ரேசனில் போடப்படும் மலிவு விலை அரிசியும் அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாக, கிராமத்தை விட்டு வெளியேறி வேலை தேடி நகரத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள்; தெருவோரங்களில் வசிக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கு இந்தச் ""சலுகை''க் கிடைப்பதேயில்லை. ""முகவரி அற்றவர்கள்'' என்ற காரணத்தை முகத்தில் அடித்தாற்போலக் கூறி, பல இலட்சம் தொழிலாளர்களுக்கு இந்த உரிமையை மறுத்து வருகிறது, அதிகார வர்க்கம்.


 சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து வெளியேறி, சென்னையில் மேம்பாலம் கட்டும் ""வளர்ச்சி''ப் பணியில் ஈடுபட்டுள்ள சுனதர்கேசரி தம்பதியினர், ""அரிசி இரண்டு ரூபாயா?'' என ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். ""முகவரி அற்ற'' வெளி மாநிலத் தொழிலாளர்கள், தனித்தனியாகச் சமைப்பதை ஒதுக்கிவிட்டு, கூட்டாகச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் விலைவாசி உயர்வைச் சமாளிக்கிறார்கள்.


 இந்தத் தொழிலாளர்கள், கிடைக்கும் கூலியில் தங்களின் உணவுத் தேவையைச் சமாளிப்பதோடு, ஊரில் இருக்கும் குடும்பத்திற்கும் பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தனது அம்மாவின் பராமரிப்பில், தனது மகளையும், மகனையும் விட்டுவிட்டு, சென்னையில் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை பார்க்கும் நடராஜன்தங்கம்மா தம்பதியினர், ""விலைவாசி உயர்வுக்கு ஏற்பத் தங்களின் கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும்'' எனக் கோருகிறார்கள். ஆனால், ரியல் எஸ்டேட் முதலாளிகளோ, சிமெண்ட் விலை உயர்வைக் காரணமாகக் காட்டி, தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.


 ""தெருவோரம் உள்ள தட்டு வண்டிக் கடைகளில் கூட, இட்லி வாங்கிச் சாப்பிட முடியாத அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருவதாக'' சென்னையில் நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் உதிரித் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.


 வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதால், வீட்டில் ஒரு குந்துமணி நகையைக் கூட சேமிப்பாக வைத்திருக்க முடிவதில்லை. தனது நகையை அடமானம் வைத்துத்தான் இந்த மாத வீட்டு வாடகையைக் கட்டியதாகக் குறிப்பிடுகிறார், சென்னை  சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரசுவதி.


 வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை செய்து வரும் பொன்னி, ""உணவுச் செலவைச் சமாளிக்க, கழித்துக் கட்டப்படும் காய்கறிகளை மட்டுமே வாங்குவதாகவும்; குழந்தைகளுக்குப் போதிய உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தான் அரை வயிறு மட்டுமே சாப்பிடுவதாக''வும் கூறுகிறார்.


 ""மாதாந்திர அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்கத் தனது வேலை நேரத்தைக் கூட்டிக் கொண்டதாக''க் கூறுகி றார், சென்னை பாண்டிபஜாரில் தரைக் கடை நடத்தும் முகம்மது இப்ராகிம். காலையில் 8 மணிக்குக் கடையைத் திறந்து இரவு 11 மணி வரை வியாபாரம் பார்த்தாலும், கிடைக்கும் வருமானம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட குறைவாகவே இருப்பதாகவும்; பெரிய கடைகளின் போட்டி, கொள்முதல் விலை உயர்வினால், தரைக்கடை வியாபாரிகளுக்குக் கிடைக்கும் இலாபம் குறைந்து கொண்டே போவதாகவும் முகம்மது இப்ராகிம் சுட்டிக் காட்டுகிறார்.


 உணவுப் பொருட்களின் விலை உயர்வோடு, கல்விச் செலவும் சேர்ந்து பெரும் சுமையாக மாறி நிற்கிறது. ""நாங்கள் குடும்ப நகைகள் அனைத்தையும் அடகு வைத்து விட்டோம்; கல்விக் கட்டணத்தை எப்படிக் கட்டப் போகிறோம் என்பது தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறோம். பள்ளிக்கூட நிர்வாகமோ, இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் இரண்டாயிரம் ரூபாய் கூட்டி விட்டது. குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றுவதும் முடியாத காரியம்'' எனப் புலம்புகிறார், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரமிளா.


 உணவு விடுதிகளில் சாப்பிட்டுக் கொண்டு, வேலைக்குப் போய்வரும் இளைஞர்கள், தங்களின் மாதாந்திர உணவுக் கட்டணம் ஆயிரம் ரூபாய் அளவிற்கு அதிகரித்து விட்டதால், குடும்பத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் திணறுவதாகக் கூறுகிறார்கள்.


···


 விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் தமிழக மக்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இது. ஆனால், உழைக்கும் மக்கள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம், இந்தப் பாரதூரமான நிலைமையை எத்தனை நாளைக்குச் சமாளிக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் ""மலிவாக உணவுப் பொருட்கள் கிடைத்து வந்த காலம் மலையேறி விட்டதாக''ப் பொருளாதார வல்லுநர்கள் பயமுறுத்துகிறார்கள். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் இருநூறு அமெரிக்க டாலரைத் தொட்டுவிடும் என அச்சமூட்டும் விதத்தில் செய்திகள் வெளிவருகின்றன.


 உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் திணறுவதை விடப் பரிதாபகரமானது, விலைவாசி உயர்வைச் சகித்துக் கொண்டு வாழும் மனோபாவம்தான். ஏனென்றால், இந்தச் சகிப்புத் தன்மை, அவர்களைச் சுய அழிவை நோக்கி அல்லவா தள்ளிச் செல்கிறது.


 கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?


 உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது.


 இந்தப் பொருளாதார வளர்ச்சி உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது. அதேசமயம், கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கும் அம்பானிக்கு, 200506இல் கிடைத்த 5,195 கோடி ரூபாய் இலாபத்தை 200607இல் ரூ. 10,372 கோடியாக வாரி வழங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நடுத்தர வர்க்கம் கூட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடும் பொழுது, முகேஷ் அம்பானியோ 4,000 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர அரண்மனையைக் கட்டி வருகிறார்.


 இப்படிப்பட்ட மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கொண்ட பொருளாதார வளர்ச்சி அருவெறுக்கத்தக்கது. இதனை எதிர்த்துப் போராடினால், இருக்கின்ற வாழ்க்கையும் அழிந்து போய் விடுமோ என்ற அச்சம் உழைக்கும் மக்களை ஆட்டிப் படைக்கலாம். ஆனால், போராடாமல் சகித்துக் கொண்டு வாழ்ந்தால், இன்று இருப்பதைவிட மோசமான வாழ்க்கையை அல்லவா நாளை நாம் வாழ வேண்டியிருக்கும்?


· செல்வம்