Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு இதுவரை காணாத வகையில் பெட்ரோல்டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், இந்த விலையேற்றம் தவிர்க்கவியலாதது என்று கூறி நியாயப்படுத்துகிறது அரசு. தேவையைக் காட்டிலும் 10% உற்பத்தி குறைந்துள்ளது; இப்பற்றாக்குறையின் காரணமாகவே பெட்ரோல்டீசலின் விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது கடைந்தெடுத்த பொய். எண்ணெய் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்.

 பன்னாட்டு நிதி நிறுவனங்களும் வங்கிகளும் சுமார் 504 லட்சம் கோடி ரூபாய்களை ஆன்லைன் வர்த்தகம் எனும் சூதாட்டத்தில் இறக்கியிருக்கின்றன. இந்த நிதிநிறுவனங்கள் எவையும் உண்மையில் கச்சா எண்ணெயை வாங்குபவையோ விற்பவையோ அல்ல. அதை வாங்குவதற்கும் விற்பதற்கும் இவை செய்து கொண்ட ஒப்பந்தங்களைக் கைமாற்றி விற்று, எண்ணெய் விலையை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளன.


 இவையனைத்தையும் விட அநீதியான இன்னொரு பகற்கொள்ளையும் இந்தியாவில் நடந்து வருகிறது. நாட்டின் எண்ணெய்எரிவாயுத் தேவையில் 25 முதல் 30 சதவீதம் வரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திச் செலவு, சுத்திகரிப்புச் செலவு, அவசியமான இலாபம் ஆகியவற்றைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்வதன் மூலம் எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் உலகமயக் கொள்கைப்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் இந்த எண்ணெய்எரிவாயுவும் சர்வதேச விலையில்தான் இங்கு விற்கப்படுகிறது. மேலும், அரசுக்குச் சொந்தமான அரபிக் கடலிலுள்ள பன்னாமுக்தா எண்ணெய் வயல், கிழக்கே கோதாவரி எரிவாயுக் கிணறுகள் ஆகியன தனியார்மயக் கொள்கைப்படி தரகுப் பெருமுதலாளி அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. நம்முடைய பொதுச் சொத்தான எண்ணெய்எரிவாயுவை எடுத்து, உலகச் சந்தையின் விலைக்கு நமக்கே விற்று, பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் ரிலையன்ஸ் அம்பானி கொள்ளையடித்துக் கொள்ள தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இதுவும் போதாதென கலால் வரி, வாட் வரி, விற்பனை வரி, நுழைவு வரி என மத்தியமாநில அரசுகள் வரியாகக் கொள்ளையடிக்கின்றன.


 இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த உண்மைகளை விளக்கி, ""பெட்ரோல் விலை உயர்வு  கொள்ளையடிப்பவர்கள் யார்?'' என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள் வெளியிட்டு தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. ""ரிலையன்ஸ் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களை அரசுடைமையாக்கு! ஆன்லைன் வர்த்தகச் சூதாட்டத்தைத் தடைசெய்! பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்! கார் உற்பத்தியை நிறுத்து! முதலாளிகள் ஓட்டும் சொகுசுக் காருக்கு பெட்ரோல் விலையைக் கூட்டு! தொழிலாளி ஓட்டும் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் விலையைக் குறை! அரசுப் பேருந்து போக்குவரத்தை அதிகமாக்கு!'' எனும் எடுப்பான முழக்கங்களுடன் விலையேற்றத்துக்குக் காரணமான தனியார்மயம்  தாராளமயம்  உலகமயத்தை வீழ்த்த அறைகூவி, பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் தெருமுனைகளிலும் இவ்வமைப்புகள் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.


 9.6.08 அன்று காரைக்குடியிலும், 22.6.08 அன்று சேலம்  தாகாப்பட்டியிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் இவ்வமைப்புகள் பொதுக் கூட்டங்களை நடத்தின. சென்னையில் 23.6.08 அன்று பல்லாரம், பொன்னேரி, சேத்துப்பட்டு, மதுரவாயில் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தின. திருச்சியில் ஜூன் 25,26 தேதிகளில் துவாக்குடி, ""பெல்'' ஆலைவாயில், திருவரம்பூர், காட்டூர் ஆகிய இடங்களில் தொடர் தெருமுனைக் கூட்டங்களை மக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடத்தின. இதர பகுதிகளில் தெருமுனைக் கூட்ட  பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.