Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரம் நாட்டின் பணவீக்கம் 11.05 சதவிகிதத்தை எட்டிவிட்டது. உணவு தானியம் உட்பட விவசாய விளைப்பொருட்கள், இடு பொருட்கள், இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டே போகின்றன.  இவ்வாறு பணப்புழக்கம் அதிகமாகி அதாவது, பொருட்களின் தேவைகேட்பு மிகமிக அதிகமாகி, அத்தேவைக்கேற்ப உற்பத்தியும், பொருட்களின் வரத்தும் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து விடவில்லை. அதாவது, இப்போது மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உணவு எண்ணெய், காய்கறிகள் மற்றும் சர்க்கரை, சிமெண்ட், கட்டுமான இரும்புக் கம்பிகள் போன்றவற்றின் உற்பத்தி குறைந்து, சந்தையில் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்பட்டு அவற்றின் விலைவாசி தாறுமாறாக எகிறிப் போய் விடவில்லை.

 நமது நாட்டின் பொருளாதாரத்தை உலகச் சந்தைக்குத் திறந்து விடுவதன் மூலம் நமது நாட்டிலேயே அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை  தட்டுப்பாடு ஏற்பட்டால் கூட, நமக்குத் தேவையான, தரமான, மலிவான பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்பதாகத்தான் உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் பரிந்துரைகளை ஏற்று, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டது.


 கொழுத்த வருமானம் பெறக்கூடிய நடுத்தர, மேட்டுக்குடியினர் வாங்கிக் குவிக்கும்பன்னாட்டுத் தொழில் கழகங்கள் ஏகபோகமாகக் கொண்டு வந்து குவிக்கும் ஆடம்பர நுகர்வுப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் ஏறிவிடவில்லை. ஆனால், நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் அடிப்படை அத்தியாவசியப் பொருட்கள் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் சதிமுயற்சிகளுக்கு மாறாக, உற்பத்தியில் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளபோதும், அவற்றின் விலைவாசி மட்டும் ஏறிக் கொண்டே போகிறது. அதாவது, நாட்டின் தரகு முதலாளிகளின் தொழிற்துறை வளர்ச்சி கடந்த நான்காண்டுகளில் 8 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது; அதேகாலத்தில் நிகர உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது என்று இந்த அரசு பீற்றிக் கொள்கிறது; நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரை அதாவது 70 கோடிப்பேரைக் கொண்ட விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 200607 ஆம் ஆண்டில் 3.8 சதவீதத்திலிருந்து 200708 ஆண்டில் 2.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது; ஆனாலும், உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உணவு எண்ணெய் மற்றும் சர்க்கரைக்கான கரும்பு உற்பத்தி குறைந்து விடவில்லை, அதிகரித்துத்தான் இருக்கிறது. இவ்வாறே உற்பத்தி அதிகரித்துள்ளபோதும் பிற அடிப்படை தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறிக் கொண்டே போனது ஏன்?


 உலகப் பொருளதார நெருக்கடிகள், குறிப்பாக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னேற்றம், அமெரிக்க டாலர் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி ஆகியவற்றால் பன்னாட்டு நிதிக் கழகங்கள் பலவும் திவாலாகிப் போய்விட்டன. அவை தொழில் உற்பத்தியில் ஈடுபடுவதைவிட கொழுத்த இலாபம் தரும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் பண்டமாற்று ஊக வர்த்தகச் சூதாட்டத்தில் குதித்து விட்டன. இந்த முன்நோக்குமுன்பேர வர்த்தகம் தான், உணவு தானியங்கள் முதல் காய்கறிகள் வரை அத்தியாவசியப் பொருட்களின் விலையை பெரும் அளவிலான ஊக வணிகத்தின் மூலம் எகிறச் செய்துவிடுகிறது.


 முன்நோக்குமுன்பேர வர்த்தகம் என்பது உண்மையில் கையிருப்பில் வைத்துள்ள பொருட்களை வைத்துக் கொண்டு பேரங்கள் பேசி வாணிபம் செய்வதில்லை. ஒரு மாயையான கையிருப்பைக் காட்டி (கையிருப்பில் உள்ள சரக்கு மற்றும் எதிர்காலத்தில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் சரக்கு மட்டுமல்ல, அவற்றின் மதிப்புகள்  தேவைகள் பற்றிய ஊகங்கள் அடிப்படையில்) நடத்தப்படும் சூதாட்டம்  Virtual trade on the basis of virtual stock. . சான்றாக 20.05.06ஆம் ஆண்டில் கௌர் தானிய உற்பத்தி 6 இலட்சம் டன்கள்தாம். ஆனால், பண்டப்பரிவர்த்தனையில் 1,692.6 இலட்சம் டன்கள் கையிருப்பில் இருப்பதாக ஊகம் செய்து கொண்டு முன்நோக்கு வர்த்தகம் நடத்தப்பட்டது. 10 இலட்சம் டன் உள்நாட்டு உற்பத்தியும் 5 இலட்சம் டன் இறக்குமதியுமாக மொத்தம் 15 இலட்சம் டன் அர்கர் பருப்பை வைத்துக் கொண்டு 137.39 இலட்சம் டன் இருப்பதாக ஊக வணிகம் நடத்தப்பட்டது. இதிலிருந்து ஊக வணிகம் எவ்வாறு விலைவாசி யைத் தாறுமாறாக எகிறச் செய்யும் என்பது புரியும். ஊகவணிகத்தால்தான் சர்வதேச பெட்ரோலிய விலை எகிறியிருக்கிறது. உண்மையில் பெட்ரோலியப் பற்றாக்குறையால் அல்ல என்று இப்போது சிதம்பரம் உட்பட ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.


 இவ்வாறு அந்நிய, உள்நாட்டு தரகு ஏகபோக முதலாளிகள் முன்நோக்குமுன்பேர வணிகம் மூலம் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக ""உணவு தானியங்கள் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கூட அரசு பெருமளவு கொள்முதல் செய்து கொள்ளவும், இருப்பு வைத்துக் கொள்ளவும் கூடாது; அப்படிச் செய்து பொது விநியோகத்தில் ஈடுபடவும் கூடாது; தனியார் பெருமளவில் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்று இந்திய அரசை ஏகாதிபத்தியங்கள் நிர்பந்தித்து சாதித்துக் கொண்டுள்ளன. இந்தியாவில் நடக்கும் இவ்வாறான ஊகவணிகத்தின் மதிப்பு நாளொன்றுக்கு 300 கோடி டாலர் (அதாவது 12,000 கோடி ரூபாய்) ஆகும் என்று இலண்டன் எகனாமிஸ்டு மதிப்பிடுகிறது.


 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் முன்பேர இணையதள வர்த்தகத்திற்கு முழுமையான ஒப்புதல் அளித்து அமலாக்கியது. அந்தக் கொள்கையைத்தான் இப்போது மன்மோகன்  சிதம்பரம்  மான்டேக் சிங் கும்பல் அப்படியே பின்பற்றுகிறது. இப்போது, சர்வதேச ஊக வணிகத்திலிருந்து நமது நாடு தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், பண்டமாற்று வணிகத்தில் செய்யப்பட்டுள்ள தாராளமயப் போக்கை எதிர்திசையில் திருப்பி விடவேண்டும்; அத்தியாவசியப் பொருட்களில் முன்நோக்கு  முன்பேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்; அரசே பெருமளவில் கொள்முதல் செய்து, பொது விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறிப் போராடும் இடதுசாரிகள், இவ்வளவு காலமும் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் கொதித்துப் போயிருக்கும்போது மட்டும் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
·